Thursday, September 09, 2010

ஆசிய கடற்கரை விளையாட்டு-மஸ்கட்.

எல்லோர் வாழ்வில் இப்படி ஒரு முறையாவது நடந்திருக்கும் அல்லது நடக்கும்.என்னுடைய வாழ்விலும் இது சில முறை நடந்திருக்கு. நினைப்பதெல்லாம் நடக்குபோது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மோசமான எண்ணங்களும் நடந்திடுமோ என்று தோன்றும்,அதாங்க நீங்க ஏதாவது நினைத்திக்கொண்டு இருப்பீங்க அது உடனே நடப்பதற்கான சாத்திய கூருகள் நடக்க ஆரம்பித்துவிடும்.ஆங்கிலத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”என்பதை ”டெலிபதி”என்று சொல்வார்கள் ஆனால் இந்த மாதிரி நினைப்பு நடப்பதை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.


ஒரு முறை என் அம்மாவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்று விசேஷமான நாள் முடிந்தால் கோவிலுக்கு போய்விட்டு வா- என்றார்.இங்கு என்ன கோவில் நடந்து போகக்கூடிய தூரத்திலா இருக்கு என்று நினைத்துக்கொண்டு,கம்பெனி வண்டி ஃபிரியாக இருந்தால் போகிறேன் இல்லை யாராவது நண்பர்கள் வண்டி கொண்டுவந்தால் அவர்களிடம் கேட்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.இது நடந்தது காலை மணி 7. நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு,என்ன Program இன்று என்று கேட்டார்.வழக்கம் போல் ஒன்றும் இல்லை வீட்டில் தான் இருக்கேன் என்றேன்.சரி ஒரு 10 மணி போல் வருகிறேன் கிருஷ்ணன் கோவிலுக்கு போகலாமா என்றார்??!! ஆச்சரியம். அவன் தயவில் அன்று கோவில் தரிசனம் கிடைத்தது.

என்னுடைய ஒப்பந்த நாள் வரும் 14ம் தேதியோடு முடிவதால் ஒரேடியாக ஊருக்கு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யும் போது இவ்வளவு நாள் இங்கிருந்தோம் கூடியவரை பல இடங்களை பார்த்திருந்தாலும் ஒரு கட்டுமான இடத்துக்கு உள்ளே போய் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.25 வருடங்களுக்கு பிறகு சந்தித்த நண்பன் அதே வேலையில் இருந்தாலும் அவனிடம் கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.கிளம்புவதற்கு முதல் வாரம் வேண்டுமென்றால் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்.
L&T-ECC நிறுவனம் என்னுடைய தாய் நிறுவனம் மாதிரி,நான் இங்கு கற்றது இன்று வரை எனக்கு சோறு போடுகிறது.புதிய புதிய தொழிற்நுட்பங்கள்,வித்தியாசமான வேலைகள் என்று அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தீனி போடும் செமத்தியான இடம் அது.என்ன தான் மலேசியா/சிங்கப்பூர்/துபாய்/மஸ்கட் என்று பல ஊர்களில் கட்டுமான தொழிற்நுட்பங்களை பார்த்திருந்தாலும் 15 வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் நிறுவனத்தில் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க ஆவலாக இருந்தது.சில வேலைகள் வெளி ஆட்களுக்கு நுழைய தடை இருக்கும் அந்த வகையில் இந்த வேலை இருந்தால் என்னால் உள்ளே போக வேண்டுகோள் கூட வைக்கமுடியாது.இப்படி எண்ணங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

என்னதான் Gtalk யில் அவன் பெயரில் Available என்று வந்தாலும் அவசியமில்லாமல் அவனும் கூப்பிடமாட்டான் நானும் கூப்பிடமாட்டேன்.இரண்டு வாரங்களுக்கு முன்பு கூப்பிட்டு இந்த வார கடைசியில் முடிந்தால் சந்திக்கலாம் என்றான்.சரி என்றேன் ஆனால் அந்த வாரம் அவனுக்கு வேலை வர அவனால் வரமுடியவில்லை.மறுவாரம் கூப்பிட்டு என்னுடைய வேலை நிலவரங்களை கேட்டுவிட்டு வியாழன் இரவு ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கு கொஞ்சம் வேலை இருக்கு அங்கு தங்கிவிட்டு மறுநாள் site ஐ சுற்றிப்பார்க்கலாம் என்றார்.ஆச்ச்சரியமோ ஆச்சரியம் நான் கேட்கமாலே நான் நினைத்தது நடக்கவிருந்தது.

வியாழன் இரவு சுமார் 7 மணிக்கு வந்தான் இருவரும் கிளம்பி Seeb (Airport) வழியாக President Palace இருக்கும் இடத்தையும் கடந்து போய்கொண்டிருந்தோம்.Mussanah என்ற இடம் வந்தது அது வரை வண்டி 100 ~ 110 கி.மீ வேகத்தில் வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட 105 கி.மீ வந்தவுடன் ஒரு சிறிய கிராமம் போல் இருந்த இடத்தில் ஒரு வில்லாவில் இவர்களுக்காக இடம் ஒதுக்கியிருந்தார்கள் அங்கு தங்கினோம்.ECC முறைப்படி ஒரு Mess ம் இருந்தது.பழைய கதைகளை பேசிவிட்டு சுமார் 11 மணிக்கு படுத்தோம்.காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி Site க்கு போனோம். தங்கியிருக்கும் இடத்துக்கும் Site க்கும் சிறிது தூரம் தான் இருந்தாலும் மகிழுந்துவில் தான் போகனும்.நடுநடுவே சில இடங்களில் வீடுகள் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது மற்ற படி பொட்டக்காடு தான்.ஒரு துருக்கிஸ் நிறுவனம் தன்னுடைய பேச்சிங் பிளாண்ட் மற்றும் 400 டிப்பர் வகை வாகனங்களை அங்கு நிறுத்திவைத்திருந்தது.ஒரு வேளை வரப்போகும் வேலைக்காக இப்போதே அடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற யோசனையில் இதற்கான Over Heads என்னவாகும் என்ற நினைப்பும் வந்தது.துபாய் விழுந்ததில் வந்தவையாக கூட இருக்கலாம்.

ECC யில் ஒரு காலத்தில் ஆதாவது நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் காலத்தில் சிறிய பெரிய விபத்துகள் நிகழத்தொடங்கிய காலம்(1982) அதனால் விபத்துக்கு இழப்பீடு செய்யும் போது காப்பீடு நிறுவனம் இதே நிலை தொடர்ந்தால் அதிக சந்தா கட்டவேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தது அதனால் இவர்களுக்கு சந்தா அதிகமாக கட்டாமல் இருக்கவும் மார்க்கட்டில் கம்பெனி பெயர் நிலை நிருத்தவும் பாதுகாப்புக்கு செலவு செய்வது என்று முடிவெடுத்தார்கள்.என்னுடைய முதல் வேலை இடத்தில் 60 பேருக்கு மேல் இருந்தால் Site இல் 20 ஹெல்மட் தான் இருக்கும்.பெரிய தலைகள் கட்டாயமாக போட்டிருப்பார்கள்.கட்டிடங்கள் அதிக உயரம் எழும்ப எழும்ப சின்ன சின்ன கற்கள் மூலம் காயம் ஏற்படுவதை கண்டு எல்லோருக்கும் ஹெல்மட் கிடைத்தது.வேலையாட்கள் வரை அதை கொண்டு வர பல ஆண்டுகள் பிடித்தது.சித்தாள்கள் தலையில் திண்டு வைப்பதால் ஹெல்மட் என்பது அவர்களுக்கு ஒத்துவராதது என்று ஒதுக்கிவிட்டார்கள்.அப்போதெல்லாம் விபத்து என்று வரும் கேஸ்கள் காலில் ஆணி குத்திவிடுவது தான் அதிகம்.இப்படியெல்லாம் இருந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நுழைவாயிலில் மாட்டியிருக்கும் பலகை உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று சொல்லி நச் என்று அனைவரது மண்டையில் ஏற்றியிருக்கிறார்கள்.இப்படி நச் என்ற பலகை மாட்டினால் வேலை செய்யும் இடம் பாதுகாப்பாகிவிடுமா? நிச்சயம் முடியாது.வேலை செய்பவர்கள் மற்றும் வேலை வாங்குபவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்தால் விபத்தே நிகழாமல் ஒரு வேலையை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியது மற்றொரு அறிவிப்பு பலகை,அது தான் அவர்களின் 10 மில்லியன் வேலை நேரம்.இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.நிஜமாக பாதுகாப்புக்காக இவர்கள் உழைக்கிறார்களா? அதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.இதையெல்லாம் நான் பார்க்கிறேன் எனபதை நான் என் நண்பனிடம் சொல்லவில்லை இப்படி இங்கு எழுதி அவர்கள் அனைவரையும் பாராட்டிவிடலாம் என்று விட்டுவிட்டேன்.நான் பார்த்த வரை

1.ஒழுங்கான வேலை Platform.ஏறுவதற்கு ஏணி,நின்று வேலை பார்ப்பதற்கு சரியான பலகை,கைப்பிடி பைப்புகள்(சரியான உயரத்துக்கு),Toe Board(சாமான்கள் கீழே விழாமல் இருக்க) & மிக முக்கியமாக அந்த Platform வேலை செய்ய ஏற்றது தான் என்ற சான்றிதழ் வழங்கி அதை அதில் மாட்டியும் வைத்துள்ளார்கள்.
2.தற்காலிக ஓட்டைகளை சுற்று கைப்பிடி போட்டு அதன் மேல் பாகத்தை கனமான மூடி போட்டு மூடி வைத்துள்ளார்கள்.3.ஏணி படிகளில் உள்ள தற்காலிக கைப்பிடி பைபுகளின் முனையில் பிளாஸ்டிக் குப்பி போட்டு மூடி வைத்துள்ளார்கள் இதன் மூலம் கூர்மையான பாகத்தால கையில் அடிபடாமல் இருக்கும்.
சொல்ல வேண்டுமென்றால் இது போல் பலவற்றை சொல்லலாம்.இதைப்படிக்கும் கட்டுமானத்துறை நண்பர்கள் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சேர வேண்டிய நிறுவனம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் இருக்கும் இடம் தான் ஆசியன் கடற்கரை விளையாட்டுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்கள்.

மற்றவை அடுத்த பதிவில்.

7 comments:

 1. இந்த எல்&டி சைட்லதான் என்னோட ப்ரெண்ட் இருக்காரு
  புராஜெக்ட் மேனேஜ்மெண்ட்ல :)

  ReplyDelete
 2. ஓ! அப்படியா ஆயில்யன்.அவர் பெயர் என்ன?
  விடுமுறை என்பதால் யாரையும் சந்திக்க முடியலை.

  ReplyDelete
 3. எல் & டி யில்தான் மச்சினர் பையனுக்கு வேலை கிடைச்சுருக்கு இங்கே பெங்களுரில்.

  பாதுகாப்புகளைச் செஞ்சுக்கிட்டாவே விபத்துக்கள் நடக்காது இல்லையா?

  நியூஸியில் கோபாலின் தொழிற்சாலையில் 100 நாள் விபத்து இல்லாம இருந்துச்சுன்னா விசேஷ நிகழ்ச்ச்சியா அந்தப்பிரிவில் எல்லோருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்துடுவாங்க.

  திரும்பத்திரும்ப எல்லோருக்கும் ட்ரெய்னிங் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. மேலிடம் இதுலே கவனம் காட்டுது.

  தப்பித்தவறி எதாவது ஆச்சுன்னா அரசாங்கத்துக்கு பதில் சொல்லி மாளாது. ஹெச் ஆர்க்கு தலையிடிதான்.

  ReplyDelete
 4. வாங்க துளசி,கட்டுமானத்துறையும் பாதுகாப்பும் மற்றும் விபத்தும் இணைபிரியா சகோதரர்கள்.விபத்துக்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
  சிங்கையில் மனித உயிரிழப்பு இரண்டுக்கு மேல் என்றால் அவர்களால் அடுத்த ஒருவருடத்துக்கு டெண்டர் போட முடியாது!!இம்முறையில் ஒபயாசி நிறுவனம் ஒரு தடவை மாட்டியது.நியீசியில் HR ஏன் வருகிறது?
  ஓ! மச்சினர் பையனுக்கு பெங்களூரில் வேலையா? அறிந்து கொள்ளும் ஆற்றல்/விருப்பம் இருந்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

  ReplyDelete
 5. தொழிற்சாலை விபத்துன்னா காம்பன்சேஷன், லீவு மத்த விஷயம் எல்லாம் அவுங்கதானே பார்க்கணும்

  ReplyDelete
 6. இங்கு அவுஸ்திரெலியாவில் எல்லா வேலைகளிலும் முடிந்தவரை விபத்துக்கள் வராதபடி Health and Safetyயினை நடைமுறைப் படுத்துகிறார்கள்

  ReplyDelete
 7. வாங்க அரவிந்தன் -- தற்போது பல நாடுகளில் இது கட்டாயப்படுத்தபடுகிறது.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?