Monday, September 10, 2018

Amplify TV Speakers

தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரியமாக உள்ளது.ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் ஒன்று வாங்கி அதை தூக்கி எரிய வேண்டிய நிலையில் இருந்த வானொலி ஒலிப்பானுடன் இணைத்து இன்றுவரை மடிக்கனினிக்காக உபயோகித்து வருகிறேன்.சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் கவலைப்படும் அளவுக்கு இல்லாததால், ஓடிக்கொண்டு இருக்கிறது.

அந்த Audio Amplifier இது தான். PAM 8403. இதன் விலை ரூ 90.

மின்னணுவியல் தெரிந்தவர்களுக்கு இதில் கொடுக்க வேண்டிய இணைப்புகள் ஜுஜுபி வேலை.அதாவது கிழே வலது புறத்தில் 5 வோல்ட் மின்சாரம் கொடுக்க வேண்டும்.இடது புறம் ஆடியோ பிளஸ்,கிரவுண்ட் மற்றும் மைனஸ்.மேற்புறத்தில் ஸ்பீக்கருக்கான இணைப்புகள்.அதிகபட்சமாக 3W ஸ்பீக்கர் வரை வேலை செய்யுமாம்.

எங்க வீட்டு தொலைகாட்சிக்கு முன்னாடி ஒரு கண்ணாடி கதவு இருக்கு. இது கொஞ்சம் பழைய மாடல் என்றாலும் நிறைய தூசி உள்ளே போகாமல் இருக்கும் என்பதால் அதை கழற்றாமல் விட்டுவிட்டோம்.ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வேறு பிரச்சனை வராமலா இருக்கும்? விட்டுக்கார அம்மணி, சில சேனல்களில் வரும் சத்தம் சரியாகவே இல்லை என்றும்,ஏதாவது வழி இருக்கா என்று பார்க்குமாறு சொல்லியிருந்தார்.ஒரே வழி, கண்ணாடி கதவை தூக்கவேண்டியது தான் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.அதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் அப்படியே ஓடிக்கொண்டு இருந்தது.இதற்கிடையில் பல நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்த Hi-Fi கண்ணை உறுத்திக்கொண்டு இருந்தது.ஓரளவு மனதில் ஓடிய எண்ணங்களை வைத்து வேலையை ஆரம்பித்தேன்.

டிவி யில் இருந்து ஆடியோ வெளியேறும் வழியில் இருந்து ஆடியோ சமிக்கைகளை எடுக்க வேண்டியது அதை இந்த Module  வழியாக பெருக்கி ஸ்பீக்கருக்கு கொடுக்கணும். ஸ்பீக்கரை வெளியில் வைத்துவிடவேண்டும், அவ்வளவு தான்.5 வோல்ட்க்கு ஏதாவது ஒரு கைப்பேசி அடாப்டரை உபயோகித்துக்கொள்ளவேண்டும். முடிந்தது.



முதலில் RCA port இல் இருந்து சமிக்கைகளை எடுத்து ஸ்பீக்கருக்கு கொடுத்து பார்த்தபோது வெறும் "டூர் " என்ற சப்தம் மட்டுமே வந்தது.ஒவ்வொன்றையும் சரி பார்த்த பொது கேபிள் இணைப்பில் ஏதோ பிரச்சனை என்பது புரிந்தது.சரி இதை இப்போது டிவியில் இணைக்கவேண்டாம், முதலில் கைப்பேசியில் இணைப்போம் என்று முடிவு செய்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்தேன்.கைப்பேசியில் போட்ட பாட்டு அட்டகாசமாக ஓடியது.RCA  கேபிளின் இணைப்புகளை இணையத்தில் தேடி படித்த பொது நான் செய்த தவறு தெரிந்தது.கிழே உள்ள படத்தில் இருக்கும் கேபிள் என்னிடம் இருந்ததால் வேலை சுலபமாக முடிந்தது.

இந்த பெட்டி சும்மாக கிடந்ததால் அதனுள் Module ஐ வைத்து மூடிவிட்டேன்.வெப்பம் வரக்கூடிய சாத்திய கூறுகள் இல்லாததால் பெட்டி ஒரு பிரச்சனையாக இருக்காது.

எல்லாம் முடிந்து இணைப்புகளை கொடுத்து டிவி செட்டிங்கில் ஆடியோவை வெளி கனெக்ஷனுக்கு மாற்றிவிட்டால் முடிந்தது வேலை.

ஆடியோ இப்போது சும்மா "கும்" என்று இருக்கு.

Saturday, August 25, 2018

அஜந்தா கடிகாரம்.

ஏற்கனவே, மின்னணு துறையில் ஏற்பட்ட விருப்பத்தால் சில பல முயற்சிகளும் அதனால் கிடைத்த வெற்றி தோல்விகளை சொல்லியிருந்தேன். அந்த வரிசையில் இந்த அஜந்தா கடிகாரமும் ஒன்று.என்னிடம் வந்த போது அதில் நேரம் காண்பித்தாலும் அதை சரியான நேரத்துக்கு மாற்ற முடியவில்லை.பிரச்சனை அது மட்டுமே. சரியான நேரத்துக்கு மாற்ற முடியாவிட்டால் கடிகாரம் இருந்து என்ன பிரயோஜனம்?உரிமையாளர் என் மீது நம்பிக்கை வைத்து பார்க்கச்சொன்னார்.

ஏற்கனவே இதே மாதிரி ஒரு கடிகாரத்தில் கையை வைத்திருந்த அனுபவம் இருந்ததால் இதை பிரிப்பதில் பிரச்சனை ஒன்றும் இல்லாதிருந்தது.மேம்போக்காக PCB ஐ நோட்டமிட்டபோது பெரிதாக எதுவும் கண்ணில் படவில்லை.வரக்கூடிய மின்சாரம் அதன் அளவில் வந்துகொண்டிருந்தது.வேறு ஏதாவது தெரிகிறதா என்று பார்த்த போது முன்று கரும்புகை வீச்சு தெரிந்தது.படம் கிழே.


கரும்புகை பிரச்சனையின் விளிம்பை காண்பித்தது ஆனால் இது தான் காரணமா என்பது முழுவதுமாக சொல்லமுடியாது என்பதால் உரிமையாளருக்கு பொதுத் துறப்பு ஒன்று போட்டேன். இதை மாற்றினால் ஒருவேளை கடிகாரம் உயிர்த்தெழ்லாம் என்றேன்.

வெறும் 1500 ரூ கடிகாரத்தை சந்தையில் ரிப்பேருக்கு கொடுத்தால் பெரிதாக எதுவும் பார்த்துவிட முடியாது, அதனாலேயே பலரும் இதை செய்ய மாட்டார்கள்.

"சும்மா தானே கிடக்குது முயலுங்கள் வந்தால் வரட்டும்" என்று அனுமதி கிடைத்தது.வடபழனி மெர்சி கடை தான் எங்களுகெல்லாம் அடைக்கலம். நல்ல வேளை கேட்ட Voltage Regulator 78L05 கிடைத்தது. எனக்கு வேண்டியது என்னவோ  3 தான் ஆனால் 5 ஆக வாங்கினேன். ரூ 5 / ஒன்று.


இது பழையது.

PCB யில் இருந்து பழையதை எடுத்து போட்டுவிட்டு புதியதை நிறுவினேன். மின்சாரம் கொடுக்கும் வரை பதபதைப்பு தான்.சரியாக வேலை செய்யுமா அல்லது புஸ் என்று புகை காக்குமா என்று தெரியாது அல்லவா?

வேலை முடிந்ததும் கரும்புகையை அகற்றிவிட்டு..



மின்சாரத்தை கொடுத்தேன்.நல்ல வேளை வேறு எதுவும் பிரச்சனை கொடுக்காமல் நேரத்தை சரி செய்ய முடிந்தது.உரிமையாளருக்கும் சந்தோஷம்.



Wednesday, January 03, 2018

பிரித்து மேய்வது - கெட்டில்


வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அதற்கு பிறகு குப்பையில் போடுவேன்.
இது குப்பைக்குத் தான் போகப்போகிறது என்று முதல் முறையாக வந்தபோது நினைத்தேன்.

இதற்கு முன்பு இதை பிரித்ததில்லை  அதனால் அதன் வேலைப்பாடு தெரியாமல் இருந்தது.இதை கொடுத்தவர்கள் வேலை செய்கிறது ஆனால் சுவிச்சு தானாக off  ஆகமாட்டேன் என்கிறது என்கிறார்கள்.ஒவ்வொரு பாகமாக பிரித்து போட்டு சுவிட்சு பக்கம் வந்தேன்.வேலைப்பாடு புரிந்தவுடன் அதன் பிரச்னை என்னவென்று கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமானது .ஆதாவது தண்ணீர் கொதிநிலையில் வரும் ஆவி மேலெழும்பி சுவிச்சுவில் உள்ள trigger  மூலம் off  ஆகிறது .இதில் சுவிட்சும் அதன் மேல் இருக்கும் நெகிழி குப்பியும் சரியாக இணையவில்லை அதோடு வெகு நாள் பயன்பாட்டால் தேய்ந்து இனி ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருந்தது .திரும்ப கொடுத்துவிட்டேன்.

இரண்டு வாரம் கழித்து  ஏதோ தோன்றியது மறுபடியும் கேட்டு வாங்கி வந்தேன்.குறுக்கு வழியில் அந்த சுவிச்சையும் அதன் மேல் உள்ள நெகிழி யையும் இணைத்துவிட்டால் வேலை முடிந்துவிடும் என்று நினைத்து சுவிட்சு இணையும் இடத்தில் ஓட்டை போட்டு ஒரு சிறிய நெகிழியை இணைக்க முயற்சித்தேன் .Quick  Fix  போடும் போது அது சுவிச்சுக்கு உள்ளே இறங்கி பாழாக்கிவிட்டது .சரி, வேறு சுவிட்சு கிடைக்குமா என்று அலைந்ததில் அலைச்சல் தான் மிஞ்சியது .எங்கெங்கோ தேடிய பிறகு கடைசியாக Parrys இல் கேட்டுப்பார்க்கலாம் என்று போனேன்.இங்கு ஏதாவது ஒரு கடையில் ஒரு விவரம் வேண்டுமென்றால் அங்கு கிடைக்கும் என்ற விவரம் சொல்லமாட்டார்கள்.(தெரிந்தாலும்).நான் போன கடையில் இதை பார்த்தவுடன், இப்படியே ஒரு 15 கடை தள்ளி போய் கேட்டுப்பாருங்கள் என்றார் .அப்படியே போய் கடையை கண்டுபிடித்து கேட்டேன் ,சிறிது நேரத்திலேயே எடுத்து கொடுத்தார் .ரூ  150 எனவும், உத்திரவாதம் எதுவும் கிடையாது ,திரும்ப பெற்றுக்கொள்ளப்படாது என்று சொல்லிக்கொடுத்தார்.

எல்லாம் சரியாக அமைந்து குப்பை தொட்டிக்கு போக வேண்டிய கெட்டில் இப்போது உயிர்பிழைத்துள்ளது.