Saturday, July 30, 2011

என்ன செய்கிறார்கள் இவர்கள்?

படத்தை பாருங்கள்...ஏதோ கான்கிரீட்டை உடைக்கிறார்கள் அவ்வளவு தான் என்று இத்துறையில் இல்லாதவர்களுக்கு தெரியும், ஆனால் இதனுள் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கு.



கட்டிடம் தாங்கும் திறனை அதிகரிக்க Pile எனப்படும் கான்கிரீட் தூண்களில் வரும் பலவகைகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு Driven Pile என்னும் முறையைப்பற்றி சொல்லியிருந்தேன் அது போல் போடப்பட்டது தான் இது.இம்முறையில் போடும் போது சாதாரன நிலையில் இருக்கும் இடத்தின் மீது இவ்வியந்திரத்தை நிறுத்தி செய்வார்கள். வேலை முடிந்ததும் தேவையான அளவுக்கு இந்த Pile ஐ உடைத்துவிட்டு அஸ்திவாரத்துக்கு தேவையான கம்பி கட்டி கான்கிரீட் போடுவார்கள்.

தேவையான் அளவுக்கு உடைத்து...இந்த வேலை தான் மேல் உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.இந்த வேலையில் இவர்கள் செய்வது துளிகூட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் செய்துவருகிறார்கள்.அவர்களிடம் சிறிது நேரம் பேச்சுக்கொடுத்த போது...

ஏம்பா! இப்படி கண்ணுக்கு பாதுகாப்பு கண்ணாடி போட வேலை செய்கிறீர்கள்?

சார்,கண்ணாடி போடலாம் ஆனால் வேலை செய்யும் போது வியர்வை வழிந்து என் பார்வையை மறைக்கும் நான் உளி மீது அடிக்கவேண்டிய அடி தவறுதலாக கீழே உள்ளவர் மீது விழலாம். இது சம்மட்டி வைத்திருப்பவர் சொன்னது.

அப்படி என்றால் கீழே நிற்பவர் கண்ணாடி போடலாமே?

பதில் இல்லை.

கண் எவ்வளவு முக்கியமானது இவ்வளவு தூரத்தில் நிற்கும் நானே பல முறை யோசித்து தான் நிற்கிறேன் நீங்கள் இப்படி கவனம் இல்லாமல் வேலை செய்கிறீர்களே என்றேன்.

சார்,(இந்த சாரை எப்பத்தான் விட போகிறார்களோ!!) இதெல்லாம் எங்களுக்கும் புரிகிறது ஆனால் அதெல்லாம் வேலக்காகாது என்று முடித்துவிட்டு அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள். தலைக்கவசம் போட வேண்டும் என்று தெரியும் ஆனால் இப்படி குனிந்து சம்மட்டி அடிக்கும் போது அது தலையில் இருந்து நழுவும் வாய்ப்பு உள்ளதால் எங்கள் நிலை தடுமாற வாய்ப்பு உள்ளது என்றார்கள்.

இந்த வேலையை பாதுகாப்பாக செய்ய பல முறைகள் இருந்தாலும் முழுமையாக மனித வளம் கொண்டு இவ்வேலையை செய்யும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.குத்தகைகாரர்கள் இயந்திரங்களை வைத்து வேலைபார்பதற்கு ஆகும் செலவை கணக்கிட்டு மனித வளத்தை நாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

மேலே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி பார்த்தால் இவர்களின் தொழிற் திறமை தெரியும். முதலில் Pile ஐ சுற்றி இருக்கும் சுழற்கம்பியை எடுத்துவிட்டு பிறகு நேர் கம்பிகளை வெளியே எடுத்துவிட்டு எந்த இடத்தில் Pile ஐ உடைக்கவேண்டுமோ அங்கு சிறிது உடைத்துவிட்டு மேலே தட்டினால் கேக் மாதிரி விழுந்துவிடும்.