Saturday, February 23, 2013

தன் கையே தனக்கு உதவி (DIY)

சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெய்யில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.இந்த வருடம் சென்னையில் எனக்கு 3வது வருடம். போன இரண்டு வருடங்கள் எப்படி சமாளித்தனோ அதே போல் இந்த வருடமும் சமாளிக்க வேண்டும்.மின்சார வினியோகம் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.

இப்போது நான் இருக்கும் வீடு மொட்டை மாடிக்கு அருகில் என்றாலும் சுற்றிலும் திறந்த இடைவெளியுடன் கூடிய மரங்கள் இருப்பதால் வெப்பம் அவ்வளவாக தெரியாது ஆனால் பெற்றோர்கள் இருக்கும் இடம் அப்படியே நேர் எதிர்.இடவாகோ அல்லது சிமிண்ட் சாலையோ தெரியாது,இரவில் வீட்டின் உள்ளே தகிக்கும்.மின் விசிறி ஓடினாலும் உள்ளே படுக்கமுடியாது.பல முறை சொல்லிச்சொல்லி இப்போது தான் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் ஏதாவது பயன் இருக்குமா என்று தெரியவில்லை.அழுத்தமில்லாத மின்சாரத்தை மும்முனையில் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? வினியோக பணம் குறைவாக வசூலிக்கப்போவதில்லை.சரி அந்த இடத்தை விட்டு வேறு இடம் போகலாம் என்றால் வங்கி,அஞ்சல் நிலைய கணக்கு,பொது வினியோக முறை மாற்று விலாசம்,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஒரு பெரிய பிரச்சனை போன்ற எண்ணம் மூலம் தள்ளிப்போட்டுக் கொண்டு போனது.ஒரு நிலையில் இதெல்லாம் சரிபடாது அவர்கள் இருக்கும் இடத்தையே ஓரளவுக்கு குளுமைபடுத்தலாம் என்று முடிவுக்கு வந்தேன்.

முதலில் இந்த False Ceiling - இது வெப்பத்தை மாடியில் இருந்து கடத்தாமல் இருக்க போட்டது ஆனால் அதைவிட அது மின்விசிறி மூலம் எழுப்பும் சத்தம் வாசலில் யாராவது நின்று கதவை தட்டினால் காதில் விழாத அளவுக்கு இருந்தது.இதன் சத்தம் எங்கிருந்து வருகிறது அதன் காரணமும் பிடிபட்ட பின் அதை நிவர்த்தி செய்ய பல செய்முறைகளை யோசித்து வைத்திருந்தேன்.கடைசியாக மின்விறிக்கும் அந்த False Ceiling க்கும் இடைப்பட்ட தூரத்தை அதிகப்படுத்தினால் காற்று சுழற்சி நன்றாக இருக்கும் அதனால் காற்றால் வரும் அதிர்வு False Ceiling Frame ஐ பாதிக்காது என்று முடிவு செய்து அதோடு அதை நானே செய்துவிடலாம் என்று எண்ணினேன்.

மேலே சொன்ன வேலையை குத்தகைக்காரரிடம் கொடுத்திருக்கலாம்,நான் செலவு செய்ததை விட 10 மடங்காவது கூலி கேட்டிருப்பார் ஏனென்றால் சிறிய வேலை முதல் பல காரணங்கள் சொல்லப்படும்.போன நவம்பர் மாதம் வரை அலுவலக வேலை அதிகமாக இருந்ததால் எப்போது செய்யலாம் என்று யோசித்தே பார்க்கவில்லை. வெறும் 3 மணி நேரம் கொடுத்து நாளையில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிய நிருவனத்துக்கு “மிக்க நன்றி” சொல்லிவிட்டு இந்த வேலையை ஆரம்பித்துவிட்டேன்.மகனை உதவிக்கு வைத்துக்கொண்டு மொத்த Frame ஐ இரண்டு நாட்களுக்குள் ஒரு 3 அங்குலம் உயர்த்திவிட்டேன் அதோடு மின்விசிறி சுற்றும் இடத்துக்கு பக்கத்தில் கொஞ்சம் தண்ணீர் நிரப்பிய பாட்டிலை நான்கு பக்கமும் வைத்து அதிராமல் பார்த்துக்கொண்டேன்.இப்போது முதலில் இருந்த சத்தம் இல்லை.

அடுத்து,வீட்டுக்குள் வெப்பம் வரும் வழி மேற்கு நோக்கி இருக்கும் ஒரு பக்க சுவர்.இரண்டு படுக்கை அறை,சமையல் அறை மற்றும் குளியலறை எல்லா அறைகளுக்கும் இச்சுவர் மூலம் வெப்பம் பரவுகிறது என்று நினைத்து அதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்று பட்டியலிட்டேன் அதில் ஒரு வழியை தேர்ந்தெடுத்து அதற்கான வேலையில் இறங்கினேன்.

இது தான் மேற்கு பக்கம் பார்த்த சுவர்.மதியம் முதல் மாலை வரை வெய்யில் சூட்டை வாங்கி இரவு முழுவதும் வீட்டுக்குள் விடுகிறது.


கீழே உள்ள கைப்பிடி சுவரில் இந்த மாதிரி Anchor Bolt ஐ 10 MM dia Bolt ஐ நிறுவினேன்.இந்த போல்ட் ரூ 10/No.ஆனால் தரமானதாக தெரியவில்லை.இதற்கு பதிலாக ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஹூக் எவ்வளவோ தேவலை என்று நினைக்கிறேன்.இவ்வித போல்டுகளை 1 மீட்டர் இடைவெளியில் நிறுவிக்கொண்டேன்.



அடுத்து Shade Net என்ற வலை பல கடைகளில் கிடைக்கிறது. 50x3 Meter, 50x5,50x6 என்ற பல அளவுகளில் கிடைக்கிறது.சென்னை சென்ரல் பக்கத்தில் இருக்கும் சாலையில் சுமார் 1 கி.மீ உள்ளே சென்றால் வால்டேக்ஸ் சாலையில் டார்பாலின் விற்கும் கடைகளில் கிடைக்கிறது.சில கடைகளில் மொத்தமாகத்தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.முதல் தடவை வாங்கியதால் நான் கொடுத்தது தான் சரியான விலையா என்று தெரியவில்லை ஏனென்றால் சுமார் 30% சொன்ன விலையில் தள்ளுபடி செய்து கொடுத்தார்கள்.

இந்த வலை மெல்லியதாக இருப்பதால் தொங்கவிடும் போது கிழிந்துவிடும் அபாயம் இருக்கும் அதற்கு ஏற்றாற் போல் தொங்கவிடும் பகுதியை மடித்து அதனுள் கொடிகட்டும் கம்பியை நுழைத்தேன்.

எல்லாம் முடிந்த பிறகு வலையை வெளிப்பக்கம் தொங்கவிட்டேன்.இப்போது சுவர் முழுவதும் மதிய மாலை வெய்யிலில் இருந்து தப்பிக்க கூடும்.மே/ஜூன் மாதங்களில் இதன் பலன் தெரியக்கூடும்.செலவு விபரங்கள் கீழே கொடுத்துள்ளேன்.
வலை - 25x3 Meter - Rs 1500 (நான் உபயோகப்படுத்தியது இதில் பாதி தான்) போல்ட் -15x10 -       Rs 150
கொடிக் கயறு          Rs 60
மடிச்சு தைக்க-ஒயர் Rs 30
தொழிலாளர் கூலி எல்லாம் நானும் எங்கப்பாவும் பகிந்துகொண்டோம்.வண்டிச்சத்தம் இதில் அடங்கவில்லை. :-)
இந்த வலையில் 75%, 50% சூரிய வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் என்ற வகையில் கிடைக்கிறது, உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.