Monday, November 29, 2010

இது சாயுமா?

நேற்று போரூர் பக்கம் போய்விட்டு அப்படியே மனப்பாக்கம் வழியே கட்டுமான பொருட்காட்சி பார்க்க போகலாம் என்று விரைவுச்சாலை உபயோகித்துக்கொண்டிருந்தேன்.



தவறுகளை கண்டுபிடித்தே கண்களுக்கு பழக்கமாகிப்போனதால் இக்கட்டிடம் நின்ற நிலை தடாலடியாக நிற்கவைத்து அப்படியே புகைப்படம் எடுக்க வைத்தது.இப்பதிவை போடுவதற்கு முன்பு ஒரு சந்தேகம்,என்னுடைய கணிப்பு சரியா? போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு படத்தை Zoom செய்த போது ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் வழிந்து கறை உள்ளதை பார்த்தது இதுவும் பைசா கோபுரம் போல் சாய்ந்துகொண்டிருப்பது உறுதியானது. யாராவது தூக்கு குண்டு போட்டுப்பார்த்து தகுந்த அதிகாரிகளிடம் சொன்னால் பொது ஜனத்தை காப்பாற்றலாம்.

படத்தை Zoom செய்து பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

Sunday, November 28, 2010

சென்னை விமான நிலையம்.

விமான நிலையத்துக்கு போகிறவர்கள்/வருபவர்களுக்கு இக்கட்டுமானப்பணி கண்ணில் படாமல் தப்பிப்பது முடியாத காரியம்.இருக்கிற நிலயத்தை மேம்படுத்தும் பணிகளுடன் புதிய வரவேற்று மற்றும் புறப்படும் நிலையங்கள் புதுப்பொலிவு பெற வேலைகள் நடந்துவருகின்றன.இன்றைக்கு இருக்கும் இந்த நிலையை பார்க்கும் போது வேலை முடிய இன்னும் 1 வருட காலம் காத்திருக்க வேண்டும் போல் தோனுகிறது.இரு விமான முனையங்களை இணைக்கும் ஒரு பாலம் பணியும் நடந்துவருகிறது இதன் மூலம் மகிழுந்துகள் விமான நிலைய வாசலுக்கே வரமுடியும் போல் தோனுகிறது.
நேற்று அங்கு போக நேர்ந்த போது கண்ணில் பட்ட சில காட்சிகள் கீழே.

உள்நாட்டு முனையம்


வெளி நாட்டு முனையம்.



சாலை போன்று இணைக்கும் பாலத்தின் Beam ஐ தூக்கி பொருத்துகிறார்கள்.





படமெல்லாம் இருக்கட்டும்...எப்ப முடியும்? நான் கேட்கலை பையன் கேட்கிறான்.

Wednesday, November 17, 2010

அரசாங்க வருவாயை எப்படி பெருக்குவது?

மழை பெய்த பிறகும் தலைப்பில் உள்ள எண்ணம் மழை நீர் போல் பெருக்கெடுத்து அப்படியே ஓடிவிடாமல் நம்மூர் சாலை போல் அப்படியே தேக்கிவைத்துவிட்டது.
டாஸ்மார்க் மூலம் அரசாங்கத்துக்கு 12000 கோடிக்கு மேல் வருமானம் வருவதாக கூகிள் சொல்கிறார்.இவ்வளவு வருவாயை எந்த அரசாங்கமும் இப்போதும் எப்போதும் இழக்கப்போவதில்லை என்பது திண்ணம்.விருகம்பாக்கம் மார்க்கெட்டுக்கு பக்கத்தில் ஒரு நாளிரவு மழை பெய்து சுற்றிலும் தண்ணீர் இருக்கும் இடத்தில் சாலை நடுவே ஒரு பொது ஜனம் போதையில் சுற்றிலும் நடப்பது ஏதும் அறியாமல் உட்கார்ந்து இருந்தார்,வேகத்துடன் வரும் பைக் எப்போது வழிமோதப்படுவார் என்ற நிலையில் இருந்தார்.திறந்துவிட்ட தண்ணீரின் பாதிப்பு இது.இதே மாதிரி பல கதைகள் இந்தியாவை சுற்றி எல்லா இடத்திலும் நடக்கும் நடந்துகொண்டிருக்கும்.இப்படி திறந்துவிட்டு தான் அரசாங்கம் சம்பாதிக்க வேண்டுமா? தேவையே இல்லை என்பது என் கருத்து.
நான் பைக்கில் பிரயாணிக்கும் 9 கி.மீட்டர் தூரத்தில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் தண்டனை போட்டு அதே போல் பல இடங்களில் வசூலித்தால் போதும், டாஸ்மார்க் வருமானம் எல்லாம் ஜுஜூபி.

வீட்டில் இருந்து கிளம்புகிறேன்..போகும் வழி எதிர் திசையில் பயணிக்க வேண்டும் என்பதால் போக்குவரத்து விதியை மீறி அப்படியே சாலை கடக்கிறேன். போடு அபராதம் ரூபாய் 50.

போகும் போது நிறைய வாகனங்கள் இருந்தால் எதிர் திசையில் வரும் "வாகனத்துக்கான வழி" என்பதை கூட யோசிக்காமல் எதிர் வழியையும் அடைத்துக்கொண்டு ஓட்டி அவ்வழியையும் அடைத்துவிடுவேன். போடு அபராதம் ரூபாய் 50.

தேவையில்லாமல் பள்ளிகள்/மருத்துவனமனைகள் அருகே ஹாரனை உபயோகப்படுத்துவதால் போடு அபராதம் ரூபாய் 15. குறைந்த அளவு 10 முறையாவது இருக்கும் என்பதால் அதிலிருந்து 150 கிடைக்கும்.

திரும்பும் போதெல்லாம் ஒளிப்பான் மூலம் சமிக்கை செய்யாத்தாற்கு ரூபாய் 10 - 5 முறைக்கு 50 ரூபாய்.

சிக்னலை மதிக்காமல் செல்வதற்காக ரூபாய் 200.

இரவு நேரங்களில் ஒருவழிச்சாலை என்பதை மதித்து Full Headlight ஐ போட்டுக்கொண்டு வரும் நபர்களுக்காக ஒரு 100 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

இடது /வலது புறம் Free Turn இல்லாத இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டியதற்கு ரூபாய் 200.

இப்படியே போய்கொண்டிருக்கலாம் ஆனால் போரடித்துவிடும் இதுவே ஒரு வழிக்கு 800 ரூபாய் ஆகிறது திருமப் வரும் போது கொஞ்சம் பட்டறிவு வரும் என்பதால் ரூபாய் 500 வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 800+500=1300 ரூபாய்க்கு மேல் டாஸ்மார்க்கில் செலவு செய்பவர்கள் என்றால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

இப்படியெல்லாம் தண்டனை கொடுக்க கேமிராவுக்கு பதில் ஆட்களை வேலைக்கு அமர்த்தினால் வேலையில்லா பிரச்சனையை ஓரளவு சமாளிக்கலாம்.போட்ட உடனே கொடுத்துவிட நம் ஆட்கள் அவ்வளவு ஏமாந்தவர்களா என்ன? அதை வசூலிக்க ஒரு படையை அமர்த்தி வசூலித்த காசில் இருந்தே அவர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆரம்பித்தால் பல வேலைகளை உருவாக்க முடியும்
.
என்ன இந்த யோஜனை கிறுக்கு தனமாக இருக்கா? இல்லை என்றே எனக்கு தோனுது.எததனை நாட்களுக்கு இப்படி பலர் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.ஒரு முறை தண்டம் அழுதபிறகு ஜாக்கிரதையாக இருந்து தண்டனையில் இருந்து தப்பிக்கவே முயற்சிப்போம் அல்லவா?அப்போது இவ்வளவு வசூல் இருக்காதே அதற்கு என்ன பண்ணுவது?இதற்காக வேலையில் சேர்த்தவர்களை பிறகு என்ன செய்வது? கவலையே வேண்டும் தினமும் புது புது ஆட்கள் சாலையில் இறங்குகிறார்கள் அவர்களை கண்ணம் வைத்தாலே போதும்.ஆட்டோ இருக்கும் போது இந்த கவலையே வேண்டாம் வசூலிப்பவர்களுக்கு இவர்களுக்கு தான் அட்சயபாத்திரம்.

இதுவரை சொன்னது நாணயத்தின் ஒரு பக்கம், மறுபக்கத்தை பார்க்கலாமா?

இங்கு பைக்கில் இதுவரை 1100 கி.மீட்டருக்கு மேல் ஓட்டிய பிறகு எனக்கு ஒரு ஆசை வந்துள்ளது ஆதாவது நமது சாலைகளை நிர்வகிக்கும் அமைச்சரை முறையே சைக்கிள்,பைக் மற்றும் காரில் ஒரு முறையாவது எங்கள் சாலை வழியே அழைத்துச்செல்ல வேண்டும் என்று.நடத்தி அழைத்து போக முடியுமா என்று தெரியவில்லை ஏனென்றால் நடப்பவர்களுக்கு மரியாதையும் இல்லை அவர்களை நடக்கவும் விடுவதில்லை நாங்கள்.

நம் சாலைகளைப்பற்றி இதுவரை பலர் எழுதியுள்ளார்கள் அதிலும் ஜாக்கி சேகர் பதிவுகளில் சமூக அக்கறையுடன் மெலிதான கிண்டலும் இருக்கும்.

இவ்வளவு தவறுகள் செய்ய நாம் மட்டும் தான் காரணமா? கொஞ்சம் அலசலாமா?

முதல் காரணத்தில் "சாலையை குறுக்கே கடப்பது" - நான் இப்படி தவறாக நடக்கமாட்டேன் என்று சொல்லி வண்டியை போகும் பாதையில் விட்டு ஒரு U அடிக்க இடம் தேடினால் அது மற்றொரு சந்து முடியும் இடமாக இருக்கும் அதிலும் அவ்வளவு சுலபமாக அடிக்க முடியாது.எதிர்திசையில் வரும் வாகனங்கள் ஹாரன் அடித்தே காதை செவிடாக்கிவிடுவார்கள்.இதெல்லாம் யோசிக்காமல் அப்படியே கிராஸ் செய்வது தான் உத்தமம் என்ற நிலைக்கு நம் சாலைகள் நம்மை தள்ளுகின்றன.

எதிர் திசையில் வரும் வாகனவழியை அடைப்பது.இதில் நம் ஆட்களின் பொது அறிவு எப்படி யோசித்தாலும் வியக்கவைக்கிறது.அனுபவித்தால இதை முழுவதும் உணரமுடியும்.

சும்மா போனா கூட ஹாரன் அடித்துக்கொண்டு போகும் Culture எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை அதுவும் முன்னால் பெரிய பெரிய வண்டி சிக்னலுக்காக நின்றாலும் அதன் பின்னாலும் ஹாரன் அடிப்பது எதற்கு என்று புரியவில்லை.சரி இது இருசக்கர வாகனங்களின் பழக்கமென்றால் அது இப்போது 4 சக்கரவாகனத்துக்கும் வந்துவிட்டது ஏனென்றால் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் காருக்கு மாறிவிட்டார்கள் போலும்...பழக்கத்தை விடமுடியவில்லை.அரசாங்கம் இந்த பிரச்சனையை உணர்ந்து அடுத்த தேர்தலில் காதுக்கான சோதனை மற்றும் செலவை இலவசமாக கொடுப்போம் என்ற உறுதிமொழியை கொடுக்கவேண்டும்.

வலது/இடது பக்கம் திரும்பனும் என்றால் எந்த கவலையும் பட தேவையில்லை,விளக்கு சமிக்கை இருந்தாலும் அதை உபயோகப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாத ஆட்களை தினசரி சந்திக்கலாம். இப்படி ஒரு கொடுமை இருந்தால் விளக்கு சமிக்கை இருக்கும் இடத்தில் free left/right அறிவிப்பு இருக்காது,எதிரே தெரியும் விளக்குகளின் அமைப்பை பார்த்து இடது/வலது பக்க விளக்கு இல்லை என்றால் அங்கு அது Free என்று புரிந்துகொள்ளவேண்டும்.கொஞ்ச நாள் சென்னையில் ஓட்டினால் தன்னால் புரிந்துகொள்வீர்கள்.அப்படி இருக்கும் பட்சத்திலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் போகும் வண்டிகளும் இருக்கும்.பொது விதியை கடைப்பிடிக்கவேண்டும் என்றாலும் பின்னால் ஹாரன் அடித்து நம்மை துரத்துவார்கள்.பல முறை ஆட்டோ மற்றும் பைக்காரர்களால் துரத்தப்பட்டிருக்கேன்.இதெல்லாம் விட சமிக்கைகள் எப்போது வேலை செய்யும் என்பது யாராலும் சொல்ல முடியாத புதிர்.வடபழனி சிக்னலில் இந்த கொடுமை அதிகம்.

இந்த ஒருவழிச்சாலையில் விளக்குகளை போட்டுக்கொண்டு எதிர்திசையில் வரும் வண்டிகள்- இவர்கள் இருவிதம்,சுற்றுவழியில் போனால் பெட்ரோல் விரயம் மற்றவர்கள் சோம்பேறிகளின் மறு அவதாரம்.

இதெல்லாம் விட மகா கொடுமை, சாலைகள் மூலம் மழை நீர் சேகரிக்கும் திட்டம்.திருமதி ஜெயலலிதா வீடுகளில் செய்யச்சொன்ன திட்டத்தால் நில நீர்மட்டம் உயர்ந்தது சந்தோசஷம் தான் ஆனால் அதையே சாலைகளிலும் செய்த ஆர்வக்கோளாறு ஆசாமிகளை என்னவென்று சொல்வது??

சாலை மத்தியில் திடிரென்று ஒரு குன்று வரும்....ஹி ஹி Manhole Clean பண்ணி போட்ட மண் எடுக்க மறந்துவிட்டதால் வந்தது.

Manhole கவர் போய்விட்டால் யாராவது புண்ணியவான் அதில் ஒரு குச்சியை நட்டு வரப்போகும் ஆபத்தை மற்றவர்களுக்கு உணர்த்துவார்கள்.

மிகச்சிறந்த சாலை போட்டவர்கள் என்ற கின்னஸ் சாதனை யாருக்காவது கொடுக்கனும் என்றால் சென்னை தான் முதலிடதில் இருக்கும் சந்தேகம் இருந்தால் கோயம்பேடு - விருகம்பாக்கம் சாலையை முன்னுரைக்கலாம்.இச்சாலைகளில் பயணிப்பதால் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முதுகு வலி நிச்சயம் அதற்கான இலவச பேகேஜ் தேவைப்படும் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். :-))

Wednesday, November 10, 2010

இது நிஜமானால்!!

கோயம்பேடு சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நெருங்கும் சமயத்தில் வேகமாக போய்கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்து இப்படத்தை பார்த்தால் நிஜமாகவே கட்டிய வீடுதான் இந்த நிலையில் இருக்கிறது என்ற எண்ணத்தோனும்.முதல் முறை கையில் கேமிரா இல்லாததால் எடுக்கமுடியவில்லை ஆனால் மறுமுறை போகும் போது நின்று படம் எடுத்த போது தான் சினிமா செட்டிங்காக போடப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.தூரத்தில் இருக்கும் பார்க்கும் போது கட்டினவனை திட்டுகிற அளவுக்கு தத்ரூபமாக செய்திருப்பவர்களை பாராட்டவேண்டும்.