Wednesday, February 25, 2009

அடுத்த இடம்?

போகிற போக்கைப் பார்த்தால் கீழே உள்ள இடத்தை நோக்கித்தான் போகனும் போல் இருக்கு அதில் ஜபேல் அலி என்பது Free Trade Zone மற்றது ஐக்கிய எமிரேட்டின் தலைநகரம். இவ்விடம் உலக நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் நிலையில் இருந்துவருவதாகவும் அதனால் பலரும் இந்த பக்கம் பார்ப்பதாக சொல்கிறார்கள்.

உள்நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாத நிலையில் பலர் திரிசங்கு நிலையில் இருந்துகொண்டிருக்க வேலையிழந்த பலர் கத்தார் நோக்கிப் போவதாக பிலிபைன்ஸ் நண்பன் சொன்னான்.



நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்?வருவதை எதிர்கொள்வோம்.

அலுவலகத்தில் ரொம்ப நேரம் உட்கார பிடிக்காமல் கொஞ்சம் வெளியில் போய்வரலாம் என்று போன போது எடுத்த படம்.

Monday, February 16, 2009

திரு.சுகி சிவத்தின் சிங்கை பேச்சு.

இவர் எனக்கு தொலைக்காட்சி மூலம் அறிமுகமானவர் .எப்பவாவது நேரம் கிடைக்கும் போது இவர் பேச்சுக்களை கேட்பேன்.அவ்வளவு பிரமாதம் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.

ஒரு சமயம் நாகை "முகுந்தன்" கலைமாமணி பட்டம் கிடைத்த போது அவருக்கு வாழ்த்து சொன்னது சக கலைஞரை எப்படி மதிக்கவேண்டும் என்று பலருக்கும் சொல்லாமல் சொன்னது புரிந்தது.

சிங்கையில், 2000 வருட வாக்கில் இமயங்கள் மூன்று, சிகரங்கள் மூன்று என்று பல நிகழ்சிகளில் நடத்திய போது அதில் ஒரு நிகழ்ச்சியில் இவரையும் பேச கூப்பிட்டிருந்தார்கள்.அதில் பேசும் போது உள் நாட்டு வழக்கான "நீங்க ஊர் காரங்களா?" என்ற சொற்றொடரை தொட்டு கொஞ்சம் உள் நாட்டு மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் இருந்து கொஞ்ச நாள் அங்ஞான வாசம் இருந்து மீண்டும் சமீபத்தில் சிங்கை வந்ததாக கேள்விப்பட்டேன்.

சிங்கையில் 2002 ம் ஆண்டு "உன்னை அறிந்தால்" என்னும் நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சின் நகர்படம் இரண்டு பாகங்களாக "இங்கு" கிடைத்தது,பார்த்து முடித்ததும் அந்த அனுபவத்தை நமது சொந்தம் பந்தங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே என்று தரவிறக்கினேன்.தரவிறக்கியது .wmv கோப்பாக இருந்ததால் பென் டிரைவில் போட்டுக்கொடுத்து கணினி மூலம் பார்க்கட்டுமே என்று ஒரு தம்பதிக்கு கொடுத்தேன்.இதில் உள்ள ஒரு பாகம் (கீழே உள்ள நகர் படம்) அவர்களுக்கு பெரிதும் பொருந்தி வருவதால் இதை பார்த்தாவது திருந்தமாட்டார்களா? என்ற நப்பாசை தான்.

பென் டிரைவில் போட்டுக்கொடுத்தாலும் குடும்பத்தலைவன் பார்த்தாக தெரியவில்லை,தலைவிக்கு கணினியில் அவ்வளவு பரிட்சயம் இல்லை போல் இருக்கு, யாராவது வட்டில் போட்டுக்கொடுத்தால் அதை தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம் என்றிருந்தார் போலும்.கொஞ்ச நாள் காத்திருந்துவிட்டு எனக்கே பொருக்காமல் ஏதேதோ மென் பொருளை உபயோகித்து VCD யாக மாற்றிக்கொடுத்தேன்.

எதேச்சயாக ஒரு நாள் சாயங்காலம் வீடு திரும்பிய தலைவி ஏதாவது படம் பார்க்கலாமே என்றவுடன் இந்த VCD ஐ பற்றி சொன்னேன்.போடுங்களேன் பார்க்கலாம் என்றார்.சுமார் 1 மணி நேரம் ஓடக்கூடிய நிகழ்சியை ஓடவிட்டேன்.சுமார் 40 நிமிடங்கள் ஓடிய பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி வந்தவுடன், "இன்னும் எவ்வளவு நேரம் ஓடும்?" என்றார்,அவரின் ஆர்வம் வேறொங்கோ இருப்பதை புரிந்துகொண்டு,பிறகு பார்ப்பதென்றால் நிறுத்திவிடுகளேன் என்றேன்.மகனிடம் சொல்லி அதை "Pause" செய்யச்சொல்லிவிட்டு,சன் சேனலில் "அரசி" பார்க்க ஆரம்பித்துவிட்டார்.அந்த "Pause" மூன்று நாட்களாக அப்படியே இருந்தது. நீங்களாவது இந்த சலனப்படத்தை(பகுதி மட்டும்) பாருங்கள்.
(பி.கு:மற்றொரு நாள் முழுவதுமாக பார்த்துவிட்டார்)




நவீனக் கால தம்பதிகளுக்கு வேண்டிய அறிவுரை.

160 - 138 தானா?

என்னுடைய மடிக்கணினி கொஞ்சம் பழசு தான்,ஆதாவது 4~5 வருடங்கள் இருக்கும்.5 வருடங்களுக்குள் பழசு என்று தூக்கிப்போட மனசு வராது தான் ஆனால் அதில் உள்ள பொருட்கள் தினறும் போது மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் போது தான் பிரச்சனை உருவாகும்.

சமீபத்தில் என்னுடைய கணினியின் வேகம் குறைய ஆரம்பித்தது அதோடு ஆரம்பிக்கும்/முடிக்கும் நேரமும் முன்பு போல் இல்லாமல் வெகு நேரமானது.இதோடில்லாமல் சில மென்பொருளை இயக்கும் போது வன்பொருளில் இருந்து டிக் டிக் டிக் என்று சத்தமும் வர ஆரம்பித்ததால் வேறு வன்பொருளை தேட ஆரம்பித்தேன்.என்னுடைய தேவைக்கு 160 GB இருந்தால் போதும் என்று முடிவெடுத்திருந்தேன்.வின்டோசுக்கும் லினக்ஸுக்கும் பாதி பாதி.

இப்போது வரும் வன்பொருட்கள் எல்லாம் SATA என்ற முறையில் அதிக கொள்ளலவுடன் வருகிறது ஆனால் எனக்கு வேண்டியதோ IDE.நான் வேலை செய்யும் இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் சிட்டி சென்டரில் பார்த்த போது எல்லாமே வெளிசேமிப்பு முறையில் உள்ள வன்பொருட்களாகவே இருந்தது.மேலும் சிலரிடம் பேசிய போது கம்ப்யூடர் பிளாசா என்ற இடத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள்.எங்களுக்காக வேலை செய்யும் பாக்கிஸ்தானிய ஓட்டுனரிடம் இதைப்பற்றி கேட்ட போது அன்றே சாயங்காலம் வீடு திரும்பும் போது அதற்கு அருகில் இறக்கிவிட்டு வழியும் சொல்லிவிட்டு சென்றார்.

வெகு சில கடைகளே உள்ள இதற்கு கம்ப்யூடர் பிளாசா என்ற பெயர் பொருத்தமாகவே இல்லை.சில கடைகளில் நான் கேட்ட வன்பொருள் இல்லை ஒரே ஒரு கடையில் மட்டும் சாம்சங் டிஸ்க் இருப்பதாகவும் அது 190 திராமுக்கு தருவதாகவும் சொன்னார்கள்.160 GB வன்பொருளை வாங்கிவந்தேன்.

வன்பொருளை மடிக்கணினியில் பொருத்தி தேவையான பார்டீசன் டூல் மூலம் துண்டாடலாம் என்று பார்த்தால் 160 Gb உள்ள வந்தட்டின் கொள்ளலவு 138 காண்பித்தது.இது கணினியில் மதர்போர்டில் உள்ள BIOS சிப்பின் வேலை என்பதை முன்னமே அறிந்திருந்ததால் அதை மேம்படுத்த ஏதாவது அப்டேட் அவர்கள் (மடிக்கணினி) வலைத்தளத்தில் இருக்கா என்று பார்த்தால்,எதுவும் இல்லை அதோடு அவர்கள் பழைய BIOS இல் USB க்கான பூட் ம் இல்லை.கணினியில் 3 USB கொடுத்துட்டு அதன் வழியாக பூட் செய்ய BIOS இல் இடம்கொடுக்காமல் இருக்கிறார்கள்,என்னவென்று சொல்வது? வாங்கியது நம் தலையெழுத்து என்று நொந்துக்கொண்டு ஆகிற வேலையை பார்ப்போம் என்று வந்தட்டை பார்டிஷியன் செய்ய ஆரம்பித்தேன்.வின்டோசுக்கு 80 Gb & லினக்சுக்கு மீதி என்று முடித்தேன்.

முதலில் வின்டோஸ் நிறுவலாம் என்று மடிக்கணினியுடன் வரும் தட்டை போட்டு நிறுவினால் கடைசியில் "பார்டிஷியனை காணவில்லை" என்ற பிழைச்செய்தியுடன் நின்றது.என்ன காரணமக இருக்கும் என்று தேடித் தேடி களைத்த போது நண்பர் ஒருவர் Format செய்து பிறகு நிறுவிப்பார் என்றார்.பழைய WINXP எல்லாம் அதுவாகவே format செய்துக்கொள்ளுமே இதில் அப்படியில்லையா? என்ற போது,2.5" வந்தட்டு எல்லாம் Low Level Formatting டோடத் தான் வரும்,முழு Formatting நாம் தான் செய்யனும் என்றார்.சரி என்று அதைச் செய்த பிறகு நிறுவினாலும் அதே பிழைதான் வந்தது.என்ன செய்வது என்று தெரியாமல் கணினியை மூடி வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டேன்.

வேறு வழிகளை ஆராய்ந்துவிட்டு கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன்.புதியதாக WINXP ஐ வேறு வட்டு மூலம் நிறுவி பிறகு Product ID ஐ கணினி இருக்கும் எண் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்று புதிய வட்டை போட்டு துவக்கினேன்.ஆச்சரியம் வின் எக்ஸ் பியின் முகப்புத் திரை புதிய வன்பொருளில் இருந்து வந்தது.என்ன நடந்தது என்று தெரியவில்லை,ஆனால் புதிய தாக எல்லாமே நிறுவப்பட்டு இருந்தது.அதன் பிறகு உபுண்டு லினக்ஸ் நிறுவினேன் - இதில் ஒன்றும் பிரச்சனையில்லை.

தலைப்பு பிரச்சனைக்கு வருகிறேன்,அப்ப 160GB தட்டு 138 GB மாத்திரம் காண்பிக்கிறது மீதியை எப்படி உபயோகப்படுத்துவது?இது மண்டையை குடைந்துகொண்டிருந்தது.கணினி BIOS யில் இருந்து Boot ஆகனும் ஆனா அந்த Bios, 138GB க்கு மேல் காட்டாது,என்ன செய்வது என்று கூகிலிடம் தேடிய போது இம்முறை பற்றி சொல்லியிருந்தாகள்.இதை நான் ஒரு முறை உபயோகப்படுத்தியிருக்கேன் ஆனால் நடுவில் மறந்துவிட்டதால் ஞாபகம் வரவில்லை.

அது தான் DISK OVERLAY.

இது BIOS யில் இருக்கும் இக்குறைபாட்டை நீக்கி உங்கள் வன்பொருளின் முழுஅளவை உபயோகிக்கும் படி செயல்படுத்த முடியும்.இது ஒரே ஒரு Operating System உள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.பல இயங்குதளம் உள்ளவர்கள் MBR மூலம் பிரச்சனை சந்திக்கக்கூடும்.

இந்த DISK OVERLAY, dos வழியாக வேலைசெய்து உங்கள் வன்பொருளை நீங்கள் எந்த இயங்குதளம் நிறுவப்போகிறீர்களோ அதற்குத்தகுந்த முறையில் தயார்படுத்திவிட்டு MBR வருவதற்கு முன்பு இந்த மென்பொருள் வரும்படி எழுதிவிடும்.320GB வாங்கிவிட்டு அதில் 138Gb மாத்திரம் உபயோகிப்பவர்களுக்கு இம்முறை ஒரு வரப்பிராசாதம்.

Sunday, February 15, 2009

ஆச்சியின் கைப்பதம்

இங்கு (துபாய்) வந்த நாள் முதலாக நான் சிங்கையில் என் உணவு வழக்கங்களை எப்படி வைத்திருந்தேனோ அப்படியே இருக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன்.ஒரு சில பொருட்கள் அங்கு கிடைத்தது இங்கு கிடைக்காமல் இருந்தது,இதனாலே இச்சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக்கொண்டு வந்தேன்,இருந்தாலும் தேடலை மட்டும் விடவில்லை.

போன வெள்ளியன்று பர் துபாய் போயிருந்த போது அங்கு சில இந்திய கடைகள் கோவிலுக்கு பக்கத்திலேயே இருந்தன.இக்கடைகளுக்கு இங்கு வந்த புதிதில் போனதால் அவ்வளவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளலாமல் உள்ளே போய் வந்தேன்.இம்முறை போன போது நிறைய அவகாசம் இருந்ததால் நிதானமாக பார்த்த போது நான் தேடிக்கொண்டிருந்த பல பொருட்கள் இந்த கடைகளில் கிடைத்தது.உ-ம்: புளியோதரை மிக்ஸ் மற்றும் வத்தக்குழம்பு மிக்ஸ.



சிங்கை- வத்தக்குழம்பு மிக்ஸை வென்னீரில் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துகொதிக்க விடவேண்டும் ஆனால் இங்கு கிடைக்கும் ஆச்சி மிக்ஸ் அப்படியே சாதத்தில் கலந்து சாப்பிடமுடியும்.

இன்று மதியம் (சற்று முன்) பக்கத்து கடையில் வெறும் சாதம் மட்டும் (4 திராம்) வாங்கிக்கொண்டேன்.விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் அளவில் அதிகமாக இருந்தது.
இந்த ஆச்சி மிக்ஸை போட்டு கலந்து சாப்பிட்டேன்,அட்டகாசமாக இருந்தது.இங்கு தனியே என்னைப்போல் யாராவது சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டால் இதை உபயோகிக்கலாம்.



சாதத்தில் ஒரு பாதி வத்தக்குழம்புக்கும் மறு பாதி தயிர்சாதமாகவும் சாப்பிட்டேன் அதனால் தூக்கம் வருகிற மாதிரி இருக்கு.....வரே...

என்ன அறிவு!

சும்மா இந்த பக்கம் போய் பார்த்த போது கிடைத்த சலனப்படம்.

இருமல்.

பட உதவி:மிஸஸ் ஜோன்ஸ் ரூம்

வாய் மூடா ஜலதரங்க இருமல்
கொண்டு வந்தது
அனு உலையை வீட்டிற்குள்.

என்னத்த சொல்வது! ... படிச்ச முட்டாளும் இப்படித்தான் செய்கிறார்கள்.

Saturday, February 14, 2009

பர் துபாய்

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இங்கு பொது விடுமுறை.எப்போதும் போல் சிறிது காலதாமதமாக எழுந்திருக்கலாம் என்றாலும் சீக்கிரமே கண் முழித்துவிட்டது.காலை 7 மணிக்குள் தொலைப்பேசினால் கட்டணம் குறைவு என்பதால் பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் பேசி முடித்துவிட்டு, துணி துவைத்து குளித்து முடித்துவிட்டு கணினி பக்கம் வந்தேன்.

பார்க்கவேண்டிய படத்தின் ஒரு பகுதியை பார்த்துவிட்டு,தெய்வத்தின் குரல் - மென்நூலில் சில பக்கங்களை படித்துமுடித்தேன்.சுமார் 4000 பக்கங்களை கொண்ட புத்தகத்தில் தினம் எந்த பக்கத்தில் முடிக்கிறேன் என்பதை மறுமுறை திறக்கும் போது லினக்ஸ் அழகாக ஞாபகம் வைத்துக்கொள்கிறது.வெளியே கிளம்பும் நேரம் என்பதால் ஸ்போர்ஸ் காலனிகளை அணிந்துகொண்டு பக்கத்தில் உள்ள கடைக்கு போய் காலை சிற்றுண்டிக்கு சில கேக் வகைகளை வாங்கிக்கொண்டு அதற்கு பக்கத்தில் உள்ள தேநீர் கடைக்கு போய் 1 திராம் கொடுத்து,தேநீர் வாங்கி பருகினேன்.எப்போதும் போல் அருகில் உள்ள மைதானத்துக்கு போய் கிரிக்கெட்/வாலிபால் விளையாடும் குழுக்களை பார்த்துவிட்டு மதினா பார்க்கில் உட்கார்ந்துவிட்டு வீடு திரும்பினேன்.

வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள உணவருந்தும் இடங்கள் காலை 11 மணிக்கு மூடி மதியம் 1.30 மனிக்கு தான் திறப்பார்கள் எனபதால் என்னுடைய மதிய உணவை 1.30 க்கு தள்ளிப்போட்டேன்.அந்த நேரம் வந்தவுடன் கிளம்பி பக்கத்தில் உள்ள சரவணபவனுக்கு போனேன்.கீழ்தளம் வெறுமையாக இருந்ததை பார்த்து இன்று மதிய உணவு அவ்வளவு தான் போல் என்று நினைத்தேன் ஆனால் நல்ல வேளையாக அது மேல் மாடியில் இருந்தது.அளவு சாப்பாடு இல்லாததால் எல்லோரும் முழுச்சாப்பாட்டை சாப்பிடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.பூரியுடன் ஆரம்பித்து வாழைப்பழமுடன் முடிந்தது.பொறித்த அப்பளத்தில் கவிச்சி வாசம் வந்தது - பொறித்த எண்ணெயில் பிரச்சனை என்று நினைக்கிறேன்.

15+1 திராம் கொடுத்துவிட்டு எழுந்திருந்தால் வயிற்றில் ஒரு இழுப்பு,கையை கூட அலம்ப போகமுடியவில்லை.என்ன பிரச்சனை?காலை சாப்பிட்ட கேக் பிரச்சனையா அல்லது சற்று முன் அளவில்லாமல் சாப்பிட்டதா? புரியாத நிலையில் மெதுவாக வெளியில் வந்து சற்று நேரம் உட்கார்ந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த 3 தமிழ் இளைஞர்கள் அறை வாடகை பிரச்சனையை பற்றி விவாதிக்கொண்டிருந்தார்கள்.ஒரு 15 நிமிடம் உட்கார்ந்தபிறகு அங்கிருந்து கிளம்பினேன் அதற்குள் வலியும் குறைந்திருந்தது.

இன்று போக நினைத்த இடம் பர் துபாய்,இவ்விடத்தை பேருந்து மூலம் அடைய முடியும் என்பதை சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன்,அதுவும் எதேச்சையாக.என்னுடைய மடிக்கணினியின் வன் தட்டில் இருந்து வரும் சத்தம் வித்தியாசமாக இருப்பதை அது சாகப்போவதை சொல்லாமல் சொல்வதாக எடுத்துக்கொண்டு அது கண் மூடும் முன்பு அதில் இருந்து எடுப்பதை எல்லாம் எடுத்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்,அதே சமயத்தில்வேறு புதிய டிஸ்க் வாங்கலாம் என்று முயலும் போது சிங்கையில் இருக்கும் சிம் லிம் ஸ்கொயர் மாதிரி இங்கும் கம்யூடர் பிளாசா என்ற இடம் இருப்பதாக கேள்விப்பட்டு ஒரு நாள் அங்கு சென்ற போது தான் பர் துபாயும் அங்குள்ள கோவில் மற்றும் கிரீக் என்று சொல்லப்டுகிற நீர்வழியையும் கண்டுகொண்டேன்.ஏற்கனவே மகிழுந்து மூலம் ஒரு முறை வந்திருந்தாலும் பேருந்து முறை கண்டுகொண்டதாலும் இன்றைய பொழுதை அங்கு கழிக்கலாம் என்று சென்றேன்.

நான் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து C1 என்ற பேருந்தை எடுத்தால் இங்கு செல்லலாம்.பர் துபாயில் இறங்கி சிறிது தூரம் நடந்தால் கோவிலுக்கு பக்கத்திலேயே இருக்கு இந்த கிரீக்.கிட்டத்தட்ட சிங்கை ஆற்றை ஒட்டி எப்படி இருக்கிறதோ அது போலவே உள்ளது ஆனால் கிரீக்கின் தண்ணீரின் நிறம் பச்சை-நீலம் கலந்து காணப்படுகிறது.இனி படங்களுடன் பயணிப்போம்..

இரண்டு படகையும் இணைத்து ஒரே படகாக.



கடற்பறவைகளின் கூட்டம்.போடுகிற பாப்கார்ணுக்காக அலைபாய்கின்றன.




கரையில் அணைந்திருக்கும் படகு.



போய் வந்துகொண்டிருக்கும் படகுகள்.



எதிர்கரையில் இருக்கும் எமிரேட் வங்கியின் முகப்பில் இருக்கும் தங்கமுலாம் பூச்சின் பிரதிபலிப்பு தண்ணீரில் பட்டு தண்ணீரும் தங்கமாக ஒளிருவதை படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்.



இன்னும் சில படங்கள் உங்கள் பார்வைக்காக.

ஆமாம்,இந்த முக்கோண வடிவ கூரை எதுக்கு?



சீக்கிரம் ஸ்குரோல் பண்ண வசதியாக மேலும் சில படங்கள்.





இவுங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்காங்களாம்.



ஆற்றில் ஓடும் பேருந்தும் படகும்.




இரவு நேர அங்காடி ஆரம்பிக்கும் நேரம் நெருங்குகிறது



சூரியன் விடைபெறுகிறார்.கைத்தொலைப் பேசியை ஓரளவு சாய்வாக பிடிப்பதால் இப்படியும் எடுக்க முடிகிறது.நேராக பிடித்தால் அதிக வெளிச்சமாகி சூரியன் இருப்பதே விழமாட்டேன் என்கிறது.இந்த மசூதியின் வெகு அருகில் சிவா & கிருஷ்ணர் கோவில் இருக்கிறது.



அரபிகளின் கொண்டாடங்களுடன் ஒரு படகு.



இதெல்லாம் நான் தான் எடுத்தேன் என்று எப்படி நிரூபிப்பது? என்னை நானே எடுக்கும் போது.



நேற்றைய மாலை(மட்டும்) பொழுது இனிமையாக கழிந்தது.

Thursday, February 12, 2009

இதை பார்க்கும் போது..கலைஞனுக்கு வலிக்காது?

கலைஞனின் வலி..
இந்த மாதிரி ஒரு படைப்பை செய்வதற்கு அந்த கலைஞனுக்கு எவ்வளவு நாள் பிடித்திருக்கும்?அதை எப்படியெல்லாம் கற்பனை செய்து வடித்திருப்பான்,மெருகேற்றிருப்பான்? அப்படிப்பட்ட ஒரு படைப்பு ஒரு கடிட்டிடத்துக்கு முன்பு பனியிலும்,மழை மற்றும் வெய்யிலும் கேட்பாரற்று கிடக்கிறது.இதை பார்க்கும் போது வியப்பினின் மேலும் வேதனையை தான் கொடுக்கிறது.





இங்கும் கிடைக்கும்.

வீடு வேண்டுமா? அறை மட்டும் போதுமா? ஒரே ஒரு கட்டில் இடம் மட்டும் போதுமா?

துபாயில் இது தான் எளிய வழி.இதை ஒட்டுவதும் அந்த சுவர் சொந்தக்காரர் கடைத்தொகுதியின் ஆள் கிழிப்பதுமாய் ஒரு பனிப்போர் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.



டெலிபோன் எண்ணை கிழித்துக்கொண்டு போகும் முறை கண்ணில் படாமல் இருந்தது இப்போது அதுவும் வந்துவிட்டது.இம்முறை சிங்கையில் பிரபலமானது.





வந்த புதிதில் ஏக்கத்துடன் பார்த்தது போக இப்போது அது போய் வேலை எது வரை இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஏபரல் மாதத்தை எதிர் நோக்கி காத்திருக்கேன்.

விடுமுறை விளையாட்டு

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிட்டி சென்டர் கடைதொகுதி நோக்கி நடந்து போய்கொண்டிருக்கும் போது இந்த விளையாட்டை பார்த்தேன்.விளையாடுபவர்கள் பாக்கிஸ்தான் உழைப்பாளிகள் என்று நினைக்கிறேன்.

விளையாட்டு என்னவோ வாலிபால் போன்று இருந்தாலும் சில வித்தியாசங்கள் கண்ணில் பட்டது.

பந்தின் அளவு சிறியது.

வாலி பாலில் ஒரு பக்கத்தில் பந்து வந்த பிறகு அதிக அளவாக 3 முறை தொடலாம்,இதில் ஒரே முறை தான்.

ரொம்ப நேரம் நின்று கவனிக்காத்தால் முழுவிபரமும் தெரியவில்லை.

வெள்ளித் தட்டு

துபாயில் கால நிலை மட்டும் அல்ல எல்லாவித நிகழ்வுகளும் உடனே ஏற்பட்டுவிடுவது போல் ஒரு பிரம்மை.

சீதோஷ்ண நிலை ஒரு நாளுக்கு ஒரு மாதிரி இருக்கும்.முதல் நாள் குளிரை நினைத்து ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு மறுநாள் வெளியே வந்தால் கொஞ்சம் வெது வெதுன்று இருக்கும்.சரி வெதுவெதுப்பாகத்தான் இருக்கும் என்று அலுவலக வேலை முடிந்து வெளியில் வந்தால் சரியாக பேச்சு கூட வராத அளவு தாடை நடுங்கும்.

நேற்று இல்லாத பனி இன்று காலை அதிகமாகவே இருந்தது.வேலைக்கு நடந்து வரும் போது எப்போதும் கண்ணில் படுகிற சூரிய உதயம் இன்றும் காண நேர்ந்தது.எப்போதும் பார்க்கும் இளஞ்சிவப்பு நிறமில்லாமல் வெள்ளித் தட்டு போல்.கீழே உள்ள படங்களை சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.கை தொலைப்பேசி மூலம் எடுத்தால் தெளிவு குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.




ஒரு நிமிடத்துக்குப் பிறகு



சில நாட்களுக்கு முன்பு பனி அதிகமாக இருக்கும் போது எடுத்த படம்



இப்படியும் இருக்கும்...