Monday, July 31, 2006
டீ பொரை(றை)??
வெங்காய சாம்பார்
மண்லாரி பயணத்தைப்பற்றி போன பதிவில் சொல்லியிருந்தேன்.அப்படி ஒருநாள் நாங்கள் மூவரும் சனிக்கிழமை இரவு செகன்ட் ஷோவுக்கு செங்கல்பட்டுக்கு போனோம்.படம் பெயர் சரியாக ஞாபகம் இல்லை,ஒன்று ஜானியாக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் கைராசிக்காரனாக இருக்கவேண்டும்.
படம் முடிந்து வெளியில் வந்தவுடன் கொஞ்சம் பசிப்பதாக தெரிந்தவுடன் "நடராஜன்" ஒரு டீ கடை பக்கம் அழைத்துப்போய் என்ன சாப்பிடுகிறாய் என்றான்.
நீயே ஆர்டர் பண்ணு என்று சொல்லிவிட்டு எனக்கு பிடித்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.நண்பர்கள் எல்லாம் ஒரு மாதிரி பார்த்தார்கள்.என்னடா இவன் விடியற்காலை 1 மணிக்கு வாழைப்பழம் சாப்பிடுகிறானே என்று?என் பசி எனக்கு, நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
அப்போது தான் நடராஜன் என்னிடம் கேட்டான் "டீ பொரை" சாப்பிடலாமா என்று.
அதற்கு முன்பு இதை நான் கேள்விப்படாததால்,"அது சைவம் தானே என்றேன்.
ஆமாம்.இது ஒன்றும் பெரியவிஷயமில்லை,பன் அல்லது "காஞ்ச ரொட்டியை டீயில் தொட்டுக்கொண்டு சாப்பிடால் அது தான் டீ பொரை" என்றான்.
வாழ் நாளில் முதன் முறையாக சாப்பிட்டு ருசி பார்த்தது அவ்வப்போது இப்பவும் வீட்டில் சிலசமயம் தொடர்கிறது.மனைவி ஒரு மாதிரி பார்ப்பார்கள்.அதற்காக கவலைப்பட முடியுமா?
திரும்ப செங்கல்பட்டுக்கு போவோம்....
சாப்பிட்டு முடித்தபிறகு கடைக்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பும் போது நடராஜன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.பேச்சு அவ்வளவு சுமூகமாக இல்லை என்பது அவர்கள் பேச்சின் தொனியில் தெரிந்தது.ஏதோ பிரச்சனை என்று புரிந்தது.
பக்கத்தில் சென்று அந்த புதியவரிடம் என்ன பிரச்சனை என்று விஜாரித்தேன்.அதற்கு அவர் பதில் சொல்லாமல் என்னைப்பற்றியும் விஜாரித்தார்.
என்னப்பற்றி விஜாரிக்க நீங்கள் முதலில் யார் என்பதை சொல்லுங்கள் என்றேன்.அவருக்கு கோபம் அதிகமாகிவிட்டது.
எங்களையே Enquire செய்கிறாயா?உங்க 3 பேரையும் தூக்கி வேனில் போட்டு கொண்டு போய் விஜாரித்தால் தான் சொல்லுவீர்களோ? என்று கத்த ஆரம்பித்தார்.
இதற்கிடையில் எங்கிருந்தோ ஒரு போலீஸ் அதிகாரி சம்ப இடத்துக்கு வந்தார்.அவர் சீருடையில் இருந்ததால் அவரை கண்டு கொண்டோம் ஆனால் முதலில் பேசியவர் சீருடையில் இல்லததாலும் அவர் யார் என்று சொல்லிக்கொள்ளாததாலும் பிரச்சனை வந்தது.முதலில் பேசியவர் நடராஜனை ஒருமையில் அழைத்ததால் அவர்களிடையே கொஞ்சம் சூடு அதிகமானது.
இரண்டாவதாக வந்த போலீஸ் அதிகாரி விசாரனை தொடங்கினார்.
தொடக்க விசாரணை முடிந்தபிறகு.
சீக்கிரம் பஸ் பிடித்து வீட்டுக்கு போய் சேருங்கள் என்று "மரியாதையாக" சொல்லிவிட்டு வேனில் போய்விட்டார்.ஏடாகூடமாக பேசியிருந்தாலும் நாங்களும் அந்த வேனில் போயிருப்போம்.நல்ல வேளை பிழைத்தோம்.
அடுத்த சந்திப்புக்கு முன்பே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் சந்திக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.அத்துடன் நாங்கள் மூவரும் பிரிய நேரிட்டது.
என்னுடைய அடுத்த Siteம் சென்னையிலேயே அமைந்துவிட்டது.
அது வரும் பதிவுகளில்.
Friday, July 28, 2006
வெங்காய சாம்பார்??
அரிசி மாவு போட்டு சாம்பாரை ...
ஒரு அரை மணிநேரம் கொதித்த பிறகு மொத்த சமையலும் ஹாலுக்கு வந்தது.பசியும் அதிகமாக இருந்ததால் இன்று ஒரு பிடிபிடிக்கவேண்டும் என்று இருந்தோம்.
தட்டில் சாதம்,கரமேது போட்டு வண்டிகாரர் மாதிரி சாத்து நடுவில் குழி அமைத்து சாம்பாரை ஊத்தினோம்.
தங்கவேலுக்கு பசி தாங்காது என்பதால் முதலில் சாப்பிட ஆரம்பித்தான், பிறகு நடராஜன் அடுத்தது நான்.தங்கவேலு ஆஹா ஹோஹொ,அருமை என்று சாப்பிட்டுகொண்டு இருந்தான்.ஆனா...நடராஜ் மாத்திரம் என்ன ஒரு மாதிரி புளிப்பாக இருக்கிறது என்றான்.இதுக்கு முன்பு ருசி பார்த்தபோது நல்லாத்தானே இருந்தது அதுக்குள்ளே எப்படி மாறியது? என்று கேள்வி எழுப்பினான்.நானும் ருசித்ததில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
சாப்பிட பிடிக்காமா யோஜனை செய்த போது...
"தங்கவேலு சாம்பாருக்கு அரிசிப்பொடி தானே போட்ட?"
ஆமாம். அது இருந்த இடத்தைச்சொல்லி டப்பா நிறத்தையும் சொன்னான்.
நடராஜனுக்கு உடனே புரிந்து போய்விட்டது.மவனே நீ போட்டது அரிசி மாவு இல்லைடா "பிளீச்சிங் பவுடர்"என்றான்.பக்கத்து பக்கத்தில் இருந்ததால் தெரியாம போட்டுட்டான்.அப்புறம் என்ன வாந்தி எடுக்க வாசப்பக்கம் ஓடினான்.
மொத்த சாம்பாரையும் எடுத்து வாசலில் கொட்டிவிட்டு திரும்ப புதிதாக சாம்பார் பண்ணி சாப்பிட மணி இரவு 10 ஆகிவிட்டது.
இப்படி எங்க சமையல் ஓடிக்கொண்டு இருந்தது.சமயத்தில் மிகவும் போர் அடித்தால் மண் லாரி பிடித்து செங்கல்பட்டு போய் படம் பார்த்துவிட்டு முடிந்தால் சாப்பிட்டு விட்டு வருவோம்.அப்போது பஸ்/ரயில் வசதி அவ்வளவாக இல்லை.அதனால் மண் லாரி தான் செளகரியம்.இதுவும் கரணம் தப்பினால் மரணம் தான்.ஏனென்றால் அவ்வளவு வேகத்தில் ஓட்டுவார்கள்.ஆனால் ஒரு வசதி எந்த நேரத்திலும் இந்த லாரி கிடைக்கும்.
அந்த மாதிரியான சமயத்தில் ஒரு நாள்...
மிச்சத்தை அடுத்த பதிவில் பார்கலாம்.
Thursday, July 27, 2006
மறைமலை நகர் (L&T-ECC)
இந்த முறை சென்னைக்கு பக்கத்தில் இருந்த மறைமலை நகர்.இங்கு நாங்கள் கட்டயிருந்த கட்டிடம் "Butterfly Valve Project".இது அட்கோவிற்காக கட்டப்படயிருந்தது.இது ஒன்றும் அப்படி பெரிய Building இல்லை.ஒரு சாதாரண தொழிற்சாலை தான்.என்னுடைய முந்தைய Siteயின் Planning Engineer தான் இங்கு Resident Engineer.
சின்ன Site என்பதால் ஏதோ பாஸ் நம்மளை பூதக்கண்னாடி வைத்து பார்பது போல இருந்தது.அதுமட்டும் இல்லாமல் சாப்பாட்டுக்கு messயில்லாததால் நாங்கள் 3 பேர்கள் சேர்ந்து சமைக்கத்தொடங்கினோம்.ஒருவர் சமைத்தால் மற்றவர் காய்கறி வாங்கவேண்டும் மற்றவர் பாத்திரம் கழுவவேண்டும்.இப்படியே வாழ்கை ஓடிக்கொண்டிருந்தது.
மற்ற இருவரைப்பற்றி ஒரு சில வரிகள்.
1.திரு.நடராஜன்:இவர் Mechanical Foreman ஆக இருந்தார்.வேலை என்று வந்துவிட்டால் சோறு தண்ணி எதுவும் எதிர்பார்க்கமாட்டார்.கடுமையான உழைப்பாளி.பழகுவதற்கு அன்பான மனிதர்.நாங்கள் தனியாக இருந்து சமைப்பதை கேள்விப்பட்டு அவங்கம்மா வந்து கொஞ்ச நாள் சமைத்து போட்டார்கள்.இப்போது திருநெல்வேலியில் ஒரு பஸ் கம்பெனியில் (திருவள்ளுவர்) Mechanic ஆக இருப்பாதாக கேள்விப்பட்டேன்.
2.திரு.தங்கவேலு:மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து தன் உழைப்பாலும் நேர்மையாலும் முன்னுக்கு வந்தவர்.இன்றும் L&T-ECCயில் Accounts துறையில் ஒரு சிறந்த நிலையில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
சாயங்காலம் வேலைமுடித்துவிட்டு வந்து தான் இரவுக்கு என்ன சாப்பாடு என்று முடிவு செய்வோம்.நாக்கு செத்துப்போனதால் ஒரு நாள் வெங்காய சாம்பார் செய்யலாம் என்று முடிவுசெய்து நானும் நடராஜனும் போய் காய்கறி வாங்கிவந்தோம்.தங்கவேலு தான் சமையல்.
சாதம் வடித்தாகிவிட்டது.சாம்பார் அடுப்பில் வெந்து நல்ல வாசனை மூக்கை துளைத்துக்கொண்டிருந்தது.சரி கொஞ்சம் கிளரலாம் என்று சாம்பாரை பார்த்துவிட்டு "கொஞ்சம் தண்ணீராக இருப்பதாக" சொன்னான்.ஒரு சொட்டு கைய்யில் விட்டு ருசி பார்த்து ஒகே என்று சொன்னான்.
நம்ம வீட்டில் தான் பொம்பளைங்க பேசும் போது சில உதவித்துளிகள் வந்துவிழுமே அப்படி வந்தது தான் இது.சாம்பார் தண்ணீராக இருந்தா கொஞ்சம் அரிசிமாவு கலந்துவிட்டு கொஞ்சம் கொதிக்கவிட்டால் சாம்பார் கெட்டியாகிவிடும் என்று சொன்ன ஞாபகம்.
"தங்கவேலு நம்மட்ட அரிசிமாவு இருக்கா? இது நான்.
2 நாளைக்கு முன்பு தான் வாங்கி அந்த வெள்ளை டப்பாவில் உள்ளது" பதில் நடராஜனிடம் இருந்து வந்தது.
"எவ்வளவு ஸ்பூன்"
"ஒன்றரை ஸ்பூன் தண்ணீரில் கலந்து போடு"
சாப்பிட்டோமா இல்லையா??
வாங்க அடுத்த பதிவுக்கு....பசிக்குது.
Wednesday, July 26, 2006
மனவாடு தெலுகு
(புதியவர்களுக்காக-1982 ஆரம்பத்தில் ஆந்திராவில் உள்ள தாச்சப்பள்ளி என்ற இடத்தில் நடந்தது.)
அதன் கடைசி அனுபவம் தான் இது.
தெலுங்கு கத்துக்கொண்டது.
பல மாதங்களுக்கு, சாமான்கள் வாங்குவதெல்லாம் சைகை பாஷைதான்.இல்லாவிட்டால் பேரங்காடி முறையில் கடைக்கு உள்ளே போய் தேவைப்பட்டதை எடுத்துகொண்டு கொடுப்பது,வாங்கி வருவது என்று போய் கொண்டு இருந்தது.Site யில் அவ்வப்போது வேலை செய்யும் ஆட்களிடம் பேசினாலும் முக்கால்வாசி கெட்ட வார்தைகளே கற்றுக்கொடுக்கப்பட்டது.ஏனென்றால் அவன் அந்த வார்தைகளை உபயோகப்படுத்தினால் அடிக்க போகலாம் அல்லவா?
இவ்வாறு இருந்த சமயத்தில் ஒரு நண்பன் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்துசேர்ந்தான்.அவனது தாய் மொழி தெலுங்கு என்பதால்,கடைத்தெருவுக்கு போகும் போது கூடிய வரை அவனுடனே சுற்றுவேன்.
ஒரு நாள் ஏதோ கடையில் நான் வாங்க தினறுவதைப் பார்த்து,ஏண்டா "நீ ஏன் தெலுங்கு கத்துக்ககூடாது?" என்று கேட்டான்.அவனுக்கு சுமாராக தமிழ் தெரியுமாதலால் ஒரு சின்ன ஒப்பந்தம் போட்டோம்.அவன் எனக்கு தெலுங்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.நான் அவனுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கவேண்டும்.
அவன் பெயர்: திரு N.பார்த்தசாரதி.
எப்படி கத்துக்கொடுத்தான் தெரியுமா?
முதலில் சினிமா Poster மூலம் அதற்கு பிறகு ஒரு வெள்ளை பேப்பரில் ஒவ்வொறு எழுத்தையும் கொஞ்சம் பெரிதாக எழுதி அதற்கு பக்கத்தில் தமிழில் அவன் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டேன்.
அதன் பிறகு தெலுங்கு பத்திரிக்கையை வைத்துக்கொண்டு அதை படிக்கச்சொல்லி திருத்தினான்.
இப்படியே தப்பும் தவறுமாக பேசி ஒரளவுக்கு கற்றுக்கொண்டேன்.கிட்டத்தட்ட 8 வருடகாலம் ஆந்திராவிலேயே கழித்ததால் தெலுங்கு "மனவாடு" ஆனார்.
போன வாரம் சிங்கப்பூரில்-சிரங்கூன் சாலையில் போய்கொண்டு இருக்கும் போது ஒரு தெலுங்கு சினிமா Posterஐ பார்க்கநேர்ந்தபோது,சிறிது நேரம் நின்று
எழுத்துக்கூட்டி படித்து பார்த்தேன்.
பரவாயில்லை!! இன்னும் மறந்து போகவில்லை.
சொல்லிக்கொடுத்த ஆசிரியர் எங்கு இருக்கிராரோ?
எங்கிருந்தாலும் வாழ்க,நண்பனே.
Friday, July 21, 2006
பல இயங்குதள நிறுவி-XOSL
இதைப்பற்றி ஏற்கனவே என்னுடைய "கணிணி அனுபவங்களில்" எழுதியிருந்தேன்.ஆதாவது ஒரே கணிணியில் எப்படி பல இயங்கு தளங்களை இயக்குவது இதன் மூலம் சுலபமாகிறது என்று இப்போது பார்ப்போம்.
உங்கள் கணிணியில் 80GB (ஒரே Disk) உள்ளது அதில் 3 இயங்கு தளங்களை நிறுவப்போவதாக வைத்துக்கொள்வோம்.
1.விண்டோஸ் 98
2.விண்டோஸ் XP
3.லினக்ஸ்
முதலில் உங்கள் வன்பொருளை தயார் படுத்துவோம்.உங்களிடம் உள்ள 80GB துண்டாட வேண்டும்.இதை உங்கள் இஷ்டத்திற்கு விட்டுவிடுகிறேன்.
(உ-ம்)
1.வின்டோஸ் 98-30GB
2.வின்டோஸ் XP-40GB
3.லினக்ஸ்-10GB
இதைத்தவிர நமது XOSL மென்பொருளை நிறுவ ஒரு 24/16 MB இடம் தேவைப்படும்.இது Primary Partition அல்லது Extended Partition யில் இருக்கலாம்.இப்படி துண்டாடுவதற்கு வேண்டிய மென்பொருள் இனையத்தில் இலவசமாக கிடைக்கிறது.அவைகளில் சில
1.Ranish Partition Manager
2.QT Parted
3.Knoppix Live CD.(இது லினக்ஸ்,இதனுள் இருக்கும் QT Parted மூலமும் செய்யலாம்)
4.Ultimate Boot CD.(அகலக்கட்டை இணையம் இருப்பவர்கள் தரவிரக்கம் செய்துகொள்ளலாம்-145MB)ISO image file ஆக கிடைக்கிறது.இதில் பல மென்பொருள்கள் சேர்ந்து கிடைப்பதால் இது மிகவும் உபயோகமாக ஒன்று.
இதை எப்படி துண்டாடுவது என்பதை இங்கு விரிவாக எழுதியுள்ளார்கள்.பாருங்கள்.
ஒன்று
இது முடிந்தவுடன் நமது XOSL யை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 24/16MB (FAT 16) யில் நிறுவ வேண்டும்.XOSL ஒரே ஒரு மென்பொருள் மட்டும் அல்ல அதனுல் மேலும் 2 மென்பொருட்கள் சேர்ந்துள்ளது.அவை Smart Boot Manager & Ranish Partition Manager.நேரடியாக CD boot பண்ண XOSLயில் வசதியில்லை, அதனால் தான் Smart Boot Manager ம் சேர்த்து கொடுத்துள்ளார்கள்.
தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் புதிய வன்பொருளிலோ தங்கள் முக்கியமான கோப்புகள் இல்லாத வன்பொருளில் முயற்சி செய்யதால் நலம்.கணிணி வல்லுனர்களுக்கு இந்த Cylinder,head போன்றவை புரியலாம் ஆனால் என்னை மாதிரி இருப்பவர்களுக்கு கொஞ்சம் புரிவது கஷ்டம் தான்.இருந்தாலும் என்னுடைய கண்ணியை இந்த முறையில் தான் அமைத்துள்ளேன்.என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்.
முயலுங்கள்.
ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள்,தெரிந்த வரை உதவுகிறேன்.
இப்படி சொல்கிறேனே இப்போது நானே ஒரு சிக்கலில் மாட்டியுள்ளேன்.ஆதாவது என்னுடைய இன்னொறு Partitionயில் எக்ஸ் பி போடப்போய் அது சரியாக Boot ஆக மாட்டேன் என்கிறது.அனேகமாக இன்று இரவு அதற்கு விடை கிடைத்துவிடும் என்றிருக்கிறேன்.தெரிந்தவுடன் சொல்கிறேன்.
அதுவரை....XOSL போடுவோமா வேண்டாமா என்று யோசித்துப்பாருங்கள்.
சைவ முட்டையா??
முட்டையின் முதல் பரிசமே ஏதோ பண்ன கொஞ்ச நாட்களுக்கு அந்த பக்கமே தலை வைக்காமல் இருந்தேன்.இருந்தாலும் அவ்வப்போது நான் சாப்பிடும் போது நண்பர்கள் சாப்பிடும் ஆம்லெட் வாசனை (இது என்னை அவ்வளவாக மயக்கவில்லை) அதன் மேல் அவ்வளவாக வெறுப்பு ஏற்பட வாய்பில்லாமல் பண்ணியது.
அன்று நடந்த சம்பவம் Mess உதவியாளர் மூலம் எல்லோருக்கும் சொல்லப்பட்டது.
"ஐய்யரே"என்ன இதுதான் உன் தைரியமா?ஏதோ முட்டை சாப்பிட ஆரம்பிக்கிறேன் என்றாயே?என்று எல்லோர் முன்னிலும் என்னுடைய தைரியத்தை பறைசாற்றினார்கள்.மானம் போனது.இள வயது இந்த மாதிரி சமயங்களில் வருமே "சுர்" என்று கோபம்.எனக்கும் வந்தது.ஆனால் வெளியே காட்டமுடியவில்லை.தவறு என் மீதுதானே.
ஏனென்றால் சொன்னவர் என்னைவிட பெரியவர்.
இந்த புகை உள்ளேயே சில நாட்கள் புகைந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் இன்னொரு நண்பனுடன் காலை மெது ஓட்டத்துக்கு தயாராக இருந்தேன்.அப்போது அவன் "இரு ஒரு முட்டை அடித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி முட்டையை எடுத்துக்கொண்டு வந்தான்.அவன் சாப்பிடுவதை பார்த்துகொண்டு இருந்தேன்.
மேலே சொன்ன புகை மறைந்து நெருப்பு வெளியில் வந்தது.
Mess பையன் உடைத்துக்கொடுக்க ஒரே மடக்கு
புளுக்கு.....
வெல்லத்தை வாயில் அடக்கிக்கொண்டு அன்று கொஞ்சம் வேகமாகவே ஓடினேன்.என்னுடைய உடல்நலம் என்னை அசைவமாக மாற்றிவிட்டது.
இது தவறா?
என்னைப்பொருத்த வரை உயிர் வாழஏதும் வழியில்லாத நிலையில்,கொஞ்சம் வழி முறைகளை மாற்றுவது சரியே.
நான் மாறியதால் இந்த முடிவா?
இல்லங்க! நான் கேள்விப்பட்ட ஒரு புராண கதையில் கூட ஒரு முனிவர் பஞ்ச காலத்தில் நாய் கறி கூட சாப்பிட்டிருக்கார்.நாம் அந்த அளவுக்கு இல்லை என்பதால்...முட்டை பரவாயில்லை என்று தோனுகிறது,எனக்கு.
மதம் சொல்லிகொடுத்த வழிமுறைகளை எப்போதும் தோள் மீது ஏற்றிக்கொண்டு சுமக்காமல்,தேவைப்படும் நேரத்தில் ஏற்றி இறக்கினால் பயணம் சுகமாக இருக்கும்.
அதற்காக கடலை கொள்ளை அடித்து விதம் விதமாக முழுங்குவதும்,நமது காலை நக்கிய மாட்டையும்,செல்லமாக முட்டிய ஆட்டையும் வேட்டையாடுவதும் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.
நீ முட்டையிலே முழுங்குவ நாங்க வளர்ந்த பிறகு சாப்பிட்டா உனக்கு தப்பா தெரியுதா? என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது.
அவரவர் வாழ்கை, அது போகும் முறை, யாரும் யாருக்கு அறிவுரை சொல்லமுடியாது.
நான் முட்டை சாப்பிட்டது என்னுடைய உடம்பை என்னுடைய வேலைக்கு தகுந்த மாதிரி உருவாக்கிக் கொள்ளத்தான்(Survival).ஒரு அளவுக்கு தேறிய பின்பு கடந்த 10 ஆண்டுகளாக அதை தொடக்கூடவில்லை.
இப்படி சொல்லும் போது ஒரு விஷயம் ஞாபகத்து வருகிறது.
சிங்கையில் வேலை செய்யும் போது தினமும் வீட்டு சாப்பாடு தான்.வெளியில் சைவச்சாப்பாட்டுக்கு கொஞ்சம் அலைய வேண்டும்.இதைப்பார்த்த பலர் (சீனர்கள்)ஏன் வெளியில் சாப்பிடமாட்டாய் என்று கேட்பார்கள்.
அதற்கு நான் சைவம்.சைவச்சாப்பாடு வெளியில் கிடைப்பதில்லை என்பேன்.
"நீ எவ்வளவு காலமாக சைவம்" என்பார்கள்.
பிறந்ததிலிருந்து என்பேன்.
"உன் குடும்பத்தில் அவ்வளவு பேருமா"-என்பார்கள்
ஆமாம்.
"நான் கூட 6 மாதமாக சைவம்??" -என்பார்கள்.
சிலர் அசைவம் சாப்பிடாவிட்டால் தெம்பே இல்லாத மாதிரி உணர்வதாக கூறினார்கள்.
இப்போது நான் எவ்வளவு காலமாக சைவம் என்று எனக்கே தெரியவில்லை!!
செந்தழல் ரவி கேட்டிருந்தார்:முட்டை சைவமா அசைவமா?
பதில்:நாம் பிறக்கும் போது சைவமா அசைவமா என்று தெரிந்தால் இதற்கு பதில் சொல்லிவிடலாம்.எனக்கு தெரியவில்லை.
Thursday, July 20, 2006
நாட்டுக்கோழி முட்டை
அதற்குள் முட்டையில் சைவம்/அசைவம் உள்ளது என்றும்.அதனால் மஞ்சக்கருவை தூக்கிப்போட்டுட்டு வெள்ளையை மட்டும் சாப்பிட்டு பழகு-இப்படி ஒரு பெரியவர் விளக்கம் கொடுத்தார்.
Mess உதவியாளர் அவர் பங்குக்கு "சார் நாட்டுக்கோழி முட்டையில் தான் சத்து அதிகம்,நான் வேண்டுமானால் உங்களுக்காக வாங்கி வைக்கிறேன்" என்றார்.
அப்பாடி எவ்வளவு பேர் உதவி செய்கிறார்கள்??
ஒரே குழப்பம் நான் முட்டை சாப்பிடுவதா கூடாதா?வயதில் மூத்தவர் ஒருவர் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரிடம் கேட்டேன் இதே கேள்வியை.அவர் சொன்ன பதிலில் கொஞ்சம் உண்மை இருந்தது போல் இருந்தது.
"இங்க பார், பழைய காலம் போல அல்ல,நீ சாப்பிடுகிற சாப்பாட்டில் அவ்வளவு சத்து இல்லை.அதை சரிப்படுத்த நீ முட்டை சாப்பிட மருத்துவர் சொன்னால் அந்த வழியில் போ.உன்னோட ஆசாரத்தையெல்லம் இப்போது பார்க்காதே.உடம்பு நன்றாக இருந்தால் தான் எதையும் செய்யமுடியும்.அதுவும் கட்டுமான துறை வேலை சற்று உடல் உழைப்பு சார்ந்தது.கொஞ்ச நாட்களுக்கு இந்த எண்ணங்களை தூக்கிப்போட்டு விட்டு உடம்பை தேத்துவதை பாரு இல்லாவிட்டால் திரும்ப ஆஸ்பத்திரி தான் போக வேண்டும்"-என்றார்.
மேலும் "கல்கத்தாவில் பிராமின் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் மீன் சாப்பிடுகிறார்கள்,நீ என்னடா என்றால் முட்டை சாப்பிடுவதற்கு இவ்வளவு யோசிக்கிறாயா"-என்றார்.
முடிவு செய்து விட்டேன்,முட்டை எடுப்பது என்று.ஒரு நல்ல நாளும் பார்த்துவிட்டாகிவிட்டது.அன்று காலை 5 மணி Mess பையன் நாட்டுகோழி முட்டையை கையில் கொடுத்துவிட்டு ஒரு சிறிய வெல்லக்கட்டியை கையில் வைத்திருந்தான்.முட்டை குடித்தவுடன் வாந்தி வராமல் இருக்க போட்டுக்கொள்ள!!
வாங்கினேன் கையில்,உடைத்த முட்டையில் மேல் வெள்ளை கரு தெரிய உள்ளே மஞ்சள் கரு மிதந்து கொண்டு இருந்தது.ஏதோதோ ஞாபகங்கள் வர,தப்பு பண்ணுகிறோமோ என்ற நினைப்பு வர, ஒரே நிமிடத்தில் முட்டையை அவனிடமே திரும்ப கொடுத்துவிட்டு மெது ஓட்டத்திற்கு கிளம்பிவிட்டேன்.
ஹ¥கும் இது இப்படி முடியவில்லை...
இன்னும் இருக்கு,அடுத்த பதிவில்
Wednesday, July 19, 2006
முட்டை
மருத்துவமனையில் இருந்து Quartersக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இன்னும் உடற்பயிற்சி செய்வதற்கான முயற்சி எதுவும்செய்யாமல் இருந்தேன்.
அப்போது சில நண்பர்கள் காலை மெது ஓட்டம் போகலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.இது தான் சமயம் என்று நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஓட ஆரம்பித்தேன்.
முட்டை சாப்பிட்டு தான் உடம்பை ஏத்தவேண்டுமா? அது சாப்பிடாமலே என்னால் ஏத்திகாண்பிக்கமுடியும் என்று அவர்களிடம் விதண்டா வாதம் பண்ணிக்கொண்டு இருப்பேன்.இப்படியே சில மாதங்கள் நழுவின.
இதற்கிடையில் சில நண்பர்கள் மருத்துவர் சொன்ன "முட்டை" விவகாரத்தை வைத்து "அய்யரே!! எப்ப முட்டை சாப்பிடப்போகிறாய்?" என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.இந்த ஐயர் பட்டம் பல சமயங்களில் என்னை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறது என்பதை வேறு சமயத்தில் பார்ப்போம்.
இதற்கிடையில் மற்றொரு நண்பன்(மாறன்) வேறொரு இடத்தில் இருந்து எங்கள் Siteக்கு மாற்றலில் வந்தான்.ஆள் கட்டு மஸ்தானாக இருந்தான்.அவனுக்கு இந்த விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் அவன் மூலம் மேலும் சில Parallel Bar உடற்பயிற்சியில் இறங்கினேன்.கம்பெனி உள்ள இரும்பு Pipeஐ வைத்துக்கொண்டு ஒரு Parallel Bar செய்து அதை நாங்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே வைத்துக்கொண்டோம்.
தினமும் காலை 5 மணிக்கு விழித்து 30 நிமிடங்கள் மெது நடை,அடுத்த 30 நிமிடங்கள் Parallel bar.
ஒரு நாள் பயிற்சியின் போது அந்த நண்பர் சொன்னார்.
"நீ என்னதான் காலையில் கொண்டக்கடலை சாப்பிட்டு பயிற்சி செய்தாலும் அந்த சாப்பாடு எல்லாம் இதற்கு சரிப்பட்டு வராது.உடம்பும் ஏறாது, அதனாலே மருத்துவர் சொன்னபடி முட்டை சாப்பிட ஆரம்பி"-என்றார்.
நானோ ஒன்றும் பதில் சொல்லாமல் பலமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.
எங்கள் Messயில் அசைவம் / சைவம் சேர்ந்தது தான்.வாரத்துக்கு 3 நாட்கள் இரவில் மட்டும் அசைவம்.அதனால் அசைவம் உள்ள நாட்களில் வெறும் தயிர்சாதம் மட்டும் தான்.அசைவம் கலந்திருக்குமோ என்ற சந்தேகம் தான் காரணம். மற்றவர்கள் வருவதற்கு முன்பு முதலில் சாப்பிடுவேன் ஏனென்றால் ஆம்லெட் போடுவதற்கு முன்பு சாப்பிட்டால் முட்டையோடு கலக்காது அல்லவா?
இப்படியிருந்த ஆளை முட்டை சாப்பிடு என்றால் எப்படி??
மீதிக்கு அடுத்த பதிவு..
Monday, July 17, 2006
உடல் நலம்
அப்போதெல்லாம் சென்னையில் அவ்வளவு காற்றுத்தூய்மைக்கேடு இல்லை.அதனால் அங்கிருந்த போது அவ்வளவு பிரச்சனை இல்லை.அங்கிருந்து தாச்சப்பள்ளி (ஆந்திரா)வந்தவுடன் தொந்தரவுகள் ஆரம்பித்தன.முக்கியமாக தூசி பிரச்சனை.கட்டுமான வேலை என்பதால் இதிலிருந்து மொத்தமாக தப்பிக்கமுடியாது.வண்டி போகும் பாதை தார் ரோடு இல்லாததால் ஒவ்வொரு வண்டி போகும் போதும் நிறைய தூசிகளை கிளப்பிவிட்டு போகும்.இதன் ஒவ்வாமை மாதத்தில் சில நாட்கள் என்னை பாடாய்படுத்திவிடும்.மருத்துவ நிலையத்திற்கு போய் Pencilin ஊசி போட்டுக்கொள்வேன்.
இப்படியே சில மாதங்கள் போன சமயத்தில் ஒரு நாள் அதே தூசி ஒவ்வாமையால் குளிர் ஜுரம் வந்தது.இந்த முறை நிலமை சற்று கவலைக்கிடமாக தென்பட்டதால் மருத்துவரே பக்கத்தில் உள்ள மருத்துவமணையில் சேர்க்க சொல்லிவிட்டார்கள்.ஒரு வாரம் அங்கு தங்கநேர்ந்தது.உடல் நலம் ஒருவாறு மேப்பட்டபிறகு Quarters திரும்பும் நாளன்று பெரிய மருத்துவர் வந்து பார்த்துவிட்டு
"தம்பி,உங்கள் உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லை,நீங்கள் சாப்பிடும் சாப்பாடும் அவ்வளவு சத்துள்ளதாக தெரியவில்லை" அதனால் உங்கள் உணவு முறையை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் கூடிய விரைவில் "பிரம்மாவை" பார்க்க நேர்ந்தாலும் நேரக்கூடும் என்றார்.
சரி சார்-நான் எந்த மாதிரி சாப்பாட்டை சாப்பிடவேண்டும்?
"முதலில் உன் உடம்பு சதை போடவேண்டும்-ஊளைச்சதையில்லை!!"
"நிறைய மாமிச உணவுகள்,மீன்,பருப்பு,முட்டை வகைகளை சாப்பிட்டு விட்டு நிறைய உடற்பயிற்சி செய்யவேண்டும்"என்றார்.
(சிவா சிவா-மனதுக்குள்)சார் நான் பிராமின்,மாமிசங்கள் சாப்பிடக்கூடாது.வேறு வழியிருக்கா?என்று கேட்டேன்
சரி,முட்டையாவது சாப்பிடுவாயா?
"இல்லை சார்"
மருத்துவர் கொஞ்சம் இறங்கிவருகிறார் என்று சந்தோஷம் வேறு.
"வேறு வழியில்லை,ஏனென்றால் அசைவத்தில் கிடைக்கக்கூடிய சில புரதங்கள் சைவத்தில் கிடைக்காது அதனால் நீ முட்டையாவது சாப்பிட்டு உடம்பை தேத்து இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டப்படுவாய்" என்று சொல்லி Discharge பண்ணார்.
கட்டுமானத்துறையில் வேலை செய்யவேண்டுமானால் உங்கள் உடல் நலம் எந்த கடுமையான சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி வைத்திருக்கவேண்டும்.மிலிட்டரிகாரர் மாதிரி.ஏனென்றால் நீங்கள் வேலை செய்யும் இடம் சூரியனின் மேற்பார்வையில்.மழை பெய்தால் நனையவும் தயாராக இருக்கவேண்டும்,சேற்றில் நடக்கவேண்டும்,ஏன் சிலசமயம் நீந்தக்கூட வேண்டியிருக்கும்.என்ன 30~40 மீட்டருக்கு மாடி ஏறவேண்டிவரும்.நானே ஒரு முறை 220மீட்டர் உயரம் ஏறியிருக்கிறேன்.அந்த அனுபவம் பிறகு பார்கலாம்.மேலும் ஒரு Site என்பது காடு மாதிரி,எந்த இடத்தில் என்ன இருக்கும் அங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.கண்ணை மூடிக்கொண்டு நடந்தால் அவ்வளவு தான்!!
சரி சரி முட்டை சாப்பிட்டாயா இல்லையா? அதைச்சொல் முதலில்.
வாங்க அடுத்த பதிப்புக்கு....
Thursday, July 13, 2006
துரியன் பழம்
முதன்முதலில் மலேசியா போனபோது ஒரு நாள் இரவு சந்தை பக்கம் போனோம்.ஒரு கும்பலாக இந்த பழத்தை போட்டு 10 ரிங்கட்டுக்கு 3 என்று வித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருவர் ஒரு பழத்தை எடுத்து மூந்து பார்த்துக்கொண்டிருந்தார்.அடுத்தவர் அதை மேலும் கீழும் ஆட்டிப்பார்த்தார்.சிலர் அதன் தோல் நிறத்தை பார்த்து பொறுக்கி வாங்கினார்கள்.
என்னால் அந்த இடத்திலேயே நிற்கமுடியவில்லை அவ்வளவு நாத்தம்.
இந்த நாத்ததிற்காகவே இதை பஸ்,ரயில்களில் எடுத்துப்போக சிங்கையில் தடை.
இந்த நாத்தமே வாசனையானது தான் இந்த பதிவு.
இதன் மேல் தோல் நமது பலா பழம் போல் முள்ளு முள்ளாக இருக்கும்.படத்தை பார்க்க..
ஆனால் அளவில் சிறியதாக இருக்கும்.பழத்தின் கீழ் முனையில் சிறியதாக பிளந்தால் முழு பழத்தையும் திறந்துவிடலாம்.அதை திறப்பவர்கள் கெட்டி கையுறை போட்டுக்கொள்வது நலம்.ஏனென்றால் அதன் முற்கள் மிகவும் கூர்மையாக இருக்கும்.
ஒரு நண்பர் சொன்னார் இந்த பழங்கள் இரவில் மட்டும் தான் மரத்தில் இருந்து விழும் என்று.பகலில் விழுந்து யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இயற்கையின் வரம்?
முதன் முதலில் மலேசியா Mess இதை வாங்கி வந்தார்கள்,திரும்பவும் நாத்தம் தாங்க முடியாமல் ஓடிவிட்டேன்.அதுவும் அதனுடைய சுளையின் அமைப்பு
சொல்லலாமா வேண்டாமா???? ஒரு சின்ன தயக்கம்.துரையன் பிரியர்கள் மன்னிப்பார்களாக.
அப்போது தான் போன S..T மாதிரியிருக்கும்அப்புறம் எப்படி சாப்பிடறது.
மலேசியாவில் இருந்து வெளியேறும் வரை இதன் பக்கமே போகவில்லை.ஆனால் அந்த Smell கொஞ்சம் கொஞ்சமாக
பழக்கமாகிவிட்டது.
சிங்கப்பூர் வந்த கொஞ்ச நாளில் ஒரு நாள் அலுவலகத்தில் யாரோ இதை கொண்டுவந்திருந்தார்கள்.எல்லோரும் முடிந்தவரை சாப்பிட்டார்கள்.அப்போது ஏதோ வேலையாக உள்ளே போன என்னை பிடித்துக்கொண்டார்கள்.
ஏதோதோ சொல்லி "ஒன்று சாப்பிட்டுப்பார்" என்றார்கள்.மலேசியா பழ சுவை வேறு இந்த பழத்தின் சுவை வேறு என்றார்கள்.
விதி யாரை விட்டது.
கையில் பழம் வந்துவிட்டது.கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன்.கொஞ்சம் அபரிதமான சர்க்கரை ருசி இருந்தது.இரண்டாவது சுளையிலேயே இதன் ஈர்ப்பு விசை புரிந்துவிட்டது.அதிலிருந்து சமயம் கிடைக்கும் போது வாங்கிவிடுவேன்.
அப்போதிலிருந்து நாத்தம் வாசனையாகிவிட்டது.
இந்த சமயத்தில் நடந்த வேறு ஒரு சுவாரசியமான விஷயம்:ஒரு நண்பர் இந்த பழத்தின் காம்பை பிடித்துக்கொண்டு,நான் தூக்கிப்போடும் இந்த பழத்தை வெறும் கையால் பிடிப்பவர்களுக்கு அந்த பழமே பரிசு என்றார்.
நான் பிடிக்கிறேன் என்றேன்.
எப்படி பிடித்தேன் தெரியுமா?
வெறும் கையால் தான்.
அவர் எப்படி காம்பை பிடித்து போட்டாரோ அப்படியே அதே காம்பாலே பிடித்தேன்.மனிதர் பேசவேயில்லை.
இந்த பழம் நம்மூரிலும் கிடைக்கிறது ஆனால் ஒரு வருடத்திற்கு 50 பழங்கள் மட்டுமாம்.கொடைக்கானல் பக்கம் என்று எப்போதோ படித்த ஞாபகம்.
பின் குறிப்பு:
இது நிறைய சாப்பிட்டால் சிலருக்கு உடம்பு சூடு அதிகமாகிவிடும்.
தொண்டை கமறும்.
அடுத்த 2 நாட்களுக்கு கொஞ்சம் தூர நின்று பேச வேண்டியிருக்கும்.
குழந்தை பிறப்புக்கு "கிரியா ஊக்கி" என்று ஒரு வதந்தி உலாவுகிறது.
ஒரு நண்பர் சொன்ன மேல் தகவல்கள்.
சுளையை சாப்பிட்ட பிறகு அது இருந்த ஓட்டில் தண்ணீர் ஊற்றிக்குடித்தால் உஷ்ணம் மற்றும் வாய் நாற்றம் இருக்காது என்று.
Wednesday, July 12, 2006
தூசியின் விளையாட்டு
அப்படி இப்படியென்று இந்த Project சுமார் 3 வருட காலங்களில் முடிந்தது.
நான் வெளியே வருவதற்கு முன்பே சிமின்ட் உற்பத்தியாவதையும் பார்த்துவிட்டேன்.நாங்கள் போகும் போது அந்த பொட்டல் காட்டில் இருந்த ஒன்று இரண்டு செடிகளும் இந்த ஆலையில் இருந்து வந்த தூசியில் மொத்தமாக மூடியிருந்தது.பல கிலோமீட்டர் சுற்று வட்டாரத்துக்கு நிலம் அதன் சொந்த நிறத்தையிழந்து அந்த தூசியின் கலருக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆமாம் இது இப்படித்தானா? என்று கேட்டால் பதில் நிச்சயமாக இல்லை.இதற்கு காரணம் அங்கு நிலவிய ஊழல் தான் காரணம்.
சிமின்ட் பிலான்ட் எல்லாவற்றுக்கும் தூசித்தர கட்டுப்பாடு இருக்கு.ஆலையில் இருந்துவரும் தூசியை வெளியில் இவ்வளவு உயரத்துக்கு மேல் தான் விடவேண்டும் என்று.நம்மூர் நெய்வேலி,மேட்டூரில் உள்ள புகைபோக்கிகளை பார்த்திருக்கலாம்.தூசியை பல இடங்களில் போகவைத்து அதில் உள்ள கனமான தூசிகளை கீழேயே பிடிக்க பல வலைகளுடன் கூடிய அமைப்புடன் இருக்கும் ஒரு சாதனத்திற்கு பேர் தான் ESP..அதை கட்டுப்படுத்துவதற்கு என்று அதிகாரிகளும் இருப்பார்கள்.அதிகாரிகளை விட்டுவிடுவோம்.அவர்கள் இந்த ஆலைக்கு எப்போதாவது தானே வருவார்கள்.. அப்போது ESP(Electro Static Preciprater) ஓட்டினால் போதும்.
ஆமாங்க! ESP ஓட்டினால் அவ்வளவு தூசி வெளியே போகாது ஆனால் இது சரியான மின்சார சாப்பாட்டு ராமன்.அதனால் இதை முக்கால்வாசி நேரத்துக்கு ஓட்டமாட்டார்கள்.தூசியை வெளியே விட்டு நாம் பொடிபோட்டுக்காத குறையே இல்லாமல் நமது நுறையீரலுக்குள் நிரப்பிவிடுவார்கள்.இப்படித்தான் அந்த கிராமமும் கொஞ்சம் கொஞ்சமாக களையிழந்தது.இதனால் எவ்வளவு மனிதர்கள் மிருகங்கள் பாதிக்கப்பட்டதோ?ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
நான் பார்த்த அவ்வளவு ஆலைகளும் இப்படித்தான் செயல்பட்டன.
இவர்களை யாராலும் கட்டுப்படுத்தமுடியாதா?
மனித நேயம் உள்ள பலரால் முடியும் ஆனால் அவர்களிடம் Power வேண்டும்.அதை செயல் படுத்தும் துணிச்சலும் வேண்டும்.அதுவரை இப்படித்தான் புலம்பவேண்டும்.
கிருஷ்ணா நதிகரை மேல் விமானத்தில் பறந்தால் இதன் வீச்சு தெரியும்.அப்போது அப்படியிருந்தது இப்போது எப்படி என்று தெரியவில்லை.
Monday, July 10, 2006
வழுக்கும் சாரப்பலகை

"துர்கா சிமின்ட்" இந்த Projectயில் நான் முதன் முதலாகப் பார்த்த தொழிற்நுட்பம் இது தான்.
இதை ஆங்கிலத்தில் "Slip Form" என்று சொல்வார்கள்.
எப்பொதும் நடைபெறுகிற கட்டுமானப்பணிகளில் இந்த சாரம் அடிக்கும் வேலை அடித்து, கயட்டி, அடிப்பதாக இருக்கும்.அதாவது கம்பி கட்டுவது,அதைச்சுற்றி சாரம் அடிப்பது பிறகு கான்கிரீட் போட்டு அது கடினமானவுடன் சாரத்தை பிரித்து மீண்டும் உபயோகப்படுத்துவது.இது ஒரு Cycle.இப்படிதான் நடந்துகொண்டிருக்கும்.

ஆனால் இந்த கட்டிடம் (Silo) 25 மீட்டர் ஆரம் உடையது 64 மீட்டர் உயரம் உடைய ஒரு கிணறு.அதனால் முன்பு சொன்ன மாதிரி செய்துகொண்டிருந்தால் இது கட்டுவதற்கே 2 வருடங்கள் ஆகிவிடும் மற்றும் கட்டுமானச்செலவுகளை தாக்கு பிடிக்க முடியாது.
இந்த சமயத்தில் தான் L&T-ECC இந்த தொழிற்நுட்பத்தை உபயோகபடுத்த நினைத்தது.ஏற்கனவே இதை உபயோகப்படுத்தி Srilankaவில் ஒரு ஹோட்டல் கட்டியதாக சொன்னார்கள்.அதனால் தொழிற்நுட்ப அளவில் பெரிய கஷ்டம் இருக்காது என்று நம்பினார்கள்.
சிலிப் பார்ம்

இதன் தொழிற்நுட்பம் இது தான்.
இந்த கிணற்றின் சுற்று வட்டத்தில் சுமார் ஒவ்வொரு1.2 மீட்டர் இடைவெளியிக்கும் ஒரு Jack இருக்கும்.இந்த Jack க்கு மத்தியில் ஒரு கம்பி இருக்கும்.இது தான் இந்த தொழிற்நுட்பத்திற்கே ஆதாரமான அமைப்பு. இதற்கென்று அமைக்கப்பட்ட பிரொத்தியகமான Pump மூலம் oilஐ செலுத்தினால்,இந்த Pump அந்த கம்பியை பிடித்துக்கொண்டு ஏறும்.அதாவது குரங்கு மரம் ஏறுவது போல.மற்ற அமைப்புகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவைகளும் மேலே ஏறும்.
இதில் கான்கிரீட் போட ஆரம்பித்தால் இரவு பகல் என்று 24 மணி நேரமும் நடக்கும்.64 மீட்டர் உயரமும் முடிந்தபிறகு தான் நிறுத்துவார்கள்.வெளிச்சுவர் மாத்திரம் சுமார் 22 ~ 25 நாட்களுக்குள் முடிந்துவிடும்.
நாளடைவில் இந்த தொழிற்நுட்பத்தை உபயோகப்படுத்தி பல வேலைகள் வந்தவுடன் இதற்கென்று ஒரு குழு சென்னை அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.அதற்கு தலைவராக திரு.S.நடராஜன் உதவியாளராக திரு.முருகேசனும் இருந்தார்கள்.திரு முருகேசன் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிகின் பழைய மாணவர்களில் ஒருவர்.இவர்களை ஏன் இவ்வளவு Special ஆக குறிப்பிடுகிறேன் என்றால் எனது வளர்ச்சிக்கு இவர்கள் பெரிதும் உதவினார்கள்.
இந்த தொழிற்நுட்பம் வளர்ந்து வருவதை முன்னிட்டு அதை பலருக்கும் அறிமுக படுத்தவேண்டி அப்போது இருந்த பல இளைஞர்களை பிடித்து இதற்கு பயிற்சி அளித்தார்கள் அதில் நானும் ஒருவன்.பிற்காலத்தில்,இதன் மூலம் தான் என்னுடைய பேரும் பலருக்கு தெரிய ஆரம்பித்தது.
அதைபற்றி பின்னொரு சமயத்தில் பார்கலாம்.
படங்கள்: நண்றி: faquip.
Friday, July 07, 2006
பிலாஸ்டிக் பையில் கால் (விபத்து)
ஒரு நாள் நான் எங்கள் கட்டடத்தில் நின்று கொண்டு வெளியில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.ஒரே சத்தமாக இருந்தது.அதாவது பாட்டு சத்தம் மாதிரி.
Baba Erectors கம்பெனியின் ஆட்கள் ஏதோ ஒரு பெரிய அதிக எடையுள்ள சாமானை Chain Block வழியாக தூக்கி கொண்டிருந்தார்கள்.வேலைப்பளு தெரியாமல் இருக்க இந்த மாதிரி பாடுவது வழக்கம்.

நான் பார்த்த முதல் கட்டட விபத்து.
சிலருக்கு பலமாக அடிப்பட்டிருப்பது தெரிந்தது.அவர்கள் வண்டி, அவசரம் அவசரமாக ஏற்றிகொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததை பார்க்கமுடிந்தது.
இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தை போய் பார்த்தேன்.சில இடங்களில் ரத்தக்கரை,ஒரு சிலரை மற்றவர்கள் துணையுடன் அழைத்துச்சென்றார்கள்.அப்போது
ஒருவர் கையில் வெறும் Plastic பையுடன் ஓடிவந்தார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை,இந்த இடத்தில் எதற்கு இந்த பை???
விபத்து நடந்த இடத்தின் ஒரு ஓரத்தில் கனுக்காலுக்கு மேல் துண்டுபட்ட காலை எடுத்துபோட்டுகொண்டு,திரும்ப அதை ஒட்டவைக்க முடியுமா என்று பார்க்க மருத்துவமனைக்கு ஓடினார்.
ஆமாம் இந்த விபத்து எப்படி நடந்தது?சின்ன அஜாக்கிரதை தான்.
அதாவது இந்த chain blockயில் இருப்பவர்கள்,தூக்கும் சாமானை சமானமாக தூக்க வேண்டும்.இதை கண்காணிக்கவேண்டியது அந்த மேற்பார்வையாளர்கள் பணி.அன்று ஒரு பக்கம் உள்ளவர்கள் பாட்டு பாடிக்கொண்டு மற்றவர்களை விட தாங்கள் செய்யும் வேலை உயர்ந்தது என்று காட்டிக்கொள்ள அவசரமாக தூக்கிவிட்டனர். அதனால் எதிரில் உள்ள Chain Blockக்கு அதிக Weight போய் அந்த சாமான் அறுந்துவிழுந்துவிட்டது.
சிலர் கை கால்களை இழந்தனர்.
இப்படி பலவித விபத்துக்கள் அவ்வப்போது நடக்கும்.
கட்டுமானத்துறையும் விபத்துகளும் ஒன்றோடு ஒன்று விபரீதமாக பின்னிப்பிணைந்திருக்கும்.
Thursday, July 06, 2006
நெட் மீட்டிங்
MSN Messenger உபயோகப்படுத்துவர்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கும்.வெளிநாடுகளில் உள்ள அனைவருக்கும் மற்றவர்களோடு உரையாடுவதற்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்க்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு மென்பொருள்.இதே பனிகளை செய்யக்கூடிய மேலும் சில மென்பொருட்கள்
யாகூ மெசேஜர்
- அமெடிரிக்கன் ஆன்லயன்:(இதை நான் உபயோகப்படுதியதில்லை)ஐ பால் சாட்.
- யாகூ மெசெஜர்: இதில் Video நன்றாக இருக்கும்.பேச்சுக்குரல் மிகச்சுமார் தான்.
- ஐ பால் சாட்: இதிலும் Video பரவாயில்லை ஆனால் பேசும் குரல் எப்போதும் ஜலதோஷம் பிடித்தமாதிரி இருக்கிறது.சில சமயம் MSN வேலைசெய்யாது போது அதற்கு தகுந்த மாற்று இது.
WinXP இருப்பவர்களிடம் இந்த நெட் மீட்டிங் தேவைப்படாது ஏனென்றால் மெசெஞ்சர் உள்ளேயே Audio & Video இருக்கிறது.இருந்தாலும் நெட் மீட்டிங்கில் கிடைக்கும் பேச்சுத் தெளிவு இதில் கிடைப்பதில்லை.
ஒரு நாள் எனக்கு தெரிந்தவர் இந்த நெட் மீட்டிங் சாமாச்சாரத்தை முயற்சிக்க எண்ணி, நாங்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கணிணியில் இணைந்தோம்.இருவரிடமும் Xp இல்லாததல் மெசெஞ்சர் மூலம் நெட் மீட்டிங் ஆரம்பித்தேன்.
"Hello"
"Hello"
கொஞ்ச நேரத்தில் அவருடைய படம் எனக்கு தெரிய என்னுடைய படமும் அவருக்கு தெரிந்தது.
ஆனால் நான் பேசுவது அவருக்கு கேட்டதே தவிர அவர் பேசுவதை நான் கேட்கமுடியவில்லை.அவருக்கு இந்த "Audio Tuning Wizard" எல்லாம் கொஞ்சம் அலர்ஜி.பலரிடம் இந்த மாதிரி பிரச்சனை வந்து அதனை இணையத்தின் மூலமே சரி செய்த அனுபவத்தில் ஒவ்வொன்றாக சரி பார்க்கச்சொன்னேன்.
எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது அப்புறம் ஏன் எனது பேச்சு கேட்கவில்லை.
ஒரே ஒரு கேள்வி தான் பாக்கியிருந்தது ஆனால் அதை இது வரை யாரிடமும் கேட்டதில்லை.எப்படி கேட்பது???
ஆபத்துக்கு பாபமில்லை.
"Speaker onல இருக்கா??"
"இரு on பண்ணி பார்க்கிறேன்"--பதில் வந்தது.
Wednesday, July 05, 2006
பின்னூட்டம்--தொடர்ச்சி
ஒருவழியாக நான் நினைத்தை திரு வசந்தன் உதவியதன் மூலம் அடையமுடிந்தது.
இந்த மாற்றங்களை செய்ய விழைவோர் வரும் படங்களை பார்க்கவும்.
இத்துடன் எனக்கும் திரு வசந்தனக்கும் நடந்த ஈமெயில் Correspondenceஐ பார்க்கவும்.
எனது சந்தேகங்களும் அவரது விடையும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
வணக்கம் வடுவூர் குமார்.
எந்த முகவரிக்கு மடல் அனுப்பினீர்கள்? //இருந்தாலும், அந்த தமிழ் வார்தைகள் பின்னூட்டும் கட்டத்தில் வரவழைக் கமுடியாதா?// எதைக் கேட்கிறீர்களென்று தெரியவில்லை. நீங்கள் மேலுள்ள பெட்டியில் தட்டும்போது கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுத்துக்கள் தெரியும். நீங்கள் பாமினி எழுத்துரு முறை பாவிப்பதில்லை என்று சொல்லியுள்ளீர்கள். எனவே நீங்கள் மேலுள்ள இரு தெரிவுகளில் 'ஆங்கில உச்சரிப்பு முறையில்' என்பதைத் தெரிவு செய்துபின் தட்டச்சவும். (அந்த முறையில் தட்டச்சித்தான் எனது பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.) சற்று விளக்கமாகச் சொல்வீர்களா?
நான் வேண்டுவதெல்லாம் இதுதான்.பின்னூடம் இடுவதை சுலபமாக்கவேண்டும் அதுவும் 95,98 மற்றும் மில்லேனியம் உபயோகிப்பவர்களுக்கு.உங்கள் வலைப்பூவில் phonetic முறையில் தட்டச்சு செய்யமுடிகிறது.அதுமுடிந்தவுடன் பெயரை பதித்தவுடன் ,"கருத்தை பதியை" சொடுக்கியவுடன் ,நான் தமிழில் தட்டச்சு செய்த விபரங்கள் Comment பெட்டிக்குள் போக வேண்டும். மறுபடியும் வெட்டு/ஒட்டு வேலை இருக்கக்கூடாது. முடியுமா?தங்கள் முயற்சிக்கு நன்றி
நீங்கள் சொன்னபடிதானே நடக்கிறது.கருத்தை அளி என்ற பொத்தானை அழுத்தியதும் பின்னூட்டம் பதிந்துவிடும். பிறகெதற்கு ஒட்டுதல் வெட்டுதல் வேலை?
திரு வசந்தன் உங்கள் வலைபூவில் வேண்டிய பின்னூட்டம் கொடுத்தபிறகு Post Comment என்ற Buttonஐ சொடுக்கியவுடன்,திரும்ப Comment கொடுக்கக்கூடிய Box வருகிறது.அதில் திரும்ப நமது பின்னூடத்தை இட வேண்டியுள்ளது.தெரியவில்லை இப்படி நேருவது எனக்கு மட்டும் தானா? என்று. கருத்தை அளி என்ற பொத்தானை அழுத்தியதும் பின்னூட்டம்-பதியவில்லைஇங்கு தான் ஏதோ பிரச்சனை.
நீங்கள் சொன்னபடிதானே நடக்கிறது.கருத்தை அளி என்ற பொத்தானை அழுத்தியதும் பின்னூட்டம் பதிந்துவிடும். பிறகெதற்கு ஒட்டுதல் வெட்டுதல் வேலை?
வணக்கம் வடுவூர் குமார்.
எந்த முகவரிக்கு மடல் அனுப்பினீர்கள்? ?
//இருந்தாலும், அந்த தமிழ் வார்தைகள் பின்னூட்டும் கட்டத்தில் வரவழைக் கமுடியாதா?// ? எதைக் கேட்கிறீர்களென்று தெரியவில்லை.
நீங்கள் மேலுள்ள பெட்டியில் தட்டும்போது கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுத்துக்கள் தெரியும். நீங்கள் பாமினி எழுத்துரு முறை பாவிப்பதில்லை என்று சொல்லியுள்ளீர்கள். எனவே நீங்கள் மேலுள்ள இரு தெரிவுகளில் 'ஆங்கில உச்சரிப்பு முறையில்' என்பதைத் தெரிவு செய்துபின் தட்டச்சவும். (அந்த முறையில் தட்டச்சித்தான் எனது பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.) ? சற்று விளக்கமாகச் சொல்வீர்களா?
நீங்கள் பொத்தானை அழுத்தியதும் அது தானாகப் பதிந்துவிடும். மீண்டும் பதியத் தேவையில்லை.பின்னூட்டம் வரவில்லையென்று எவ்வாறு சொல்கிறீர்கள்? அது மட்டுறுத்தலுக்காக அல்லவா காத்திருக்கிறது.
Mr Vasanth I attach the screen shot for easy reference refer my pic "vasnth1"whatever my comments is not brought to the comments box automatically when I click post comment on the pic "Vasanth". Despite I don't have any text at the comment box and I didn't log into my blogger account It will not be possible to post,isn't it? Can explain what am I doing wrong. Thanks


இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் blogger கணக்கின் மூலம் பின்னூட்டமளிக்க முடியாது. நீங்கள் கொடுக்கும் பெயர்தான் பின்னூட்டத்தில் 'எழுதிக்கொள்வது: குமார்" என்று சேர்த்து வரும்.நீங்கள் பொத்தானை அழுத்தியதும் அப்பின்னூட்டம் தானாகப் பதிந்துவிடும். அது பின்னூட்டப் பெட்டிக்கு வராது. நீங்கள் அனுப்பிய படத்தில் வருவது போன்றுதான் வரும்.எனக்கு வந்த உங்கள் பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை. அது பதிவுக்குச் சம்பந்தமில்லாதது. இப்போது <http://vasanthanin.blogspot.com/2006/06/blog-post_115088950172171883.html> இந்தப்பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கிறேன். உங்களுக்காக. உங்கள் பின்னூட்டம் போய்ச் சேரவில்லையென்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கும். எனக்கு அவ்வாறு வந்தவற்றை நான் வெளியிடவில்லை, காரணம் அவை பதிவுக்குச் சம்பந்தமில்லாதவை
திரு வசந்தன்,புரிந்துகொண்டேன்.அந்த "Code" கொடுக்கமுடியுமா?நன்றி.
இத்துடன் ஒரு கோப்பை attach பண்ணியிருக்கிறேன்.
அதை word pad இல் திறக்கவும். (வேறு செயலிகளில் திறக்க வேண்டாம்.)உங்கள் வலைப்பதிவின் template க்குச் சென்று, அங்கு <---end post----> என்ற வரியைத் தேடிப்பிடித்துக் கொள்ளுங்கள்.பின் நான் தந்த கோப்பிலுள்ள அனைத்துக் கோடிங்கையும் பிரதி பண்ணி <---end post---> என்ற வரிக்கு மேலாக ஒட்டி விடுங்கள்.பிறகு சேமித்து Publish பண்ணிவிட்டால் சரி. அவ்வளவுதான்.இதில் சற்றுச் சிரமமான காரியம், அந்த வரியைக் கண்டுபிடிப்பது தான். ஏற்கனவே தமிழ்மணப் பட்டை செருகிய அனுபவம் இருப்பதால் உங்களுக்கு அவ்வரியைக் கண்டுபிடிப்பது சிக்கலில்லையென்று நினைக்கிறேன்.செய்து பார்த்துவிட்டு மடல் போடவும்.நன்றி.
Mr Vasanthan I did how you have explained but when I preview my blog all the fonts in place of Tamil are shown as ???????. Even the file you attached also shown as tamil fonts as ????? in word pad. Any suggestion? Thanks
நான் அனுப்பின கோப்பிலுள்ளதை word pad இல் திறக்கும்போது தமிழ் எழுத்துக்கள் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பதிவு அப்படித்தான் தெரியும்.உங்கள் கணிணியில்தான் சிக்கல். எந்தச் செயலியில் உங்களால் யுனிகோட் தமிழை வாசிக்க முடிகிறது? ms word? note pad?அதைச் சொன்னால் நான் அந்தச் செயலிக்குரிய கோப்பாக அனுப்புகிறேன.
இதற்குபிறகு வீட்டுக்கு போய் பாமினி எழுத்துறுவை நிருவிய பிறகு அந்த Code இப்படி தெரிந்தது.அதை நகல்/ஒட்டு மூலம் தேவையான இடத்தில் போட்டு "Republish" செய்தால் ஏதோ "6" Error காண்பித்தது.
அப்படியே விட்டுவிட்டேன்.முயற்சித்து பாருங்கள்.
நன்றி திரு.வசந்தன்.
Tuesday, July 04, 2006
கிருஷ்ணா நதிக்கரையில்..
ஒரு ஞாயிறு காலை காலை சிற்றுண்டியை முடித்துகொண்டு நாங்கள் 25 பேர் கிளம்பினோம்.
எங்கள் கம்பெனி வண்டி அனைவரையும் கிருஷ்ணா நதிக்கரை வரை கொண்டுவிட்டது.அக்கரைக்கு போக 2 நாட்டுப்படகுகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம்.
அடுத்த 25 நிமிடங்களில் ஒரு சுகமான படகு பயணம் முடிந்து அக்கரையில் இறங்கினோம்.அங்கிருந்து எங்களை அழைத்துப்போக வண்டி வந்திருந்ததால் பிரச்சனை ஒன்றும் இல்லை.நண்பர்களை பார்க்கபோகும் முன்பு அந்த வழியில் உள்ள சில கோயில்களை பற்றி நண்பர்கள் சொல்லியிருந்ததால் அதை பார்கலாம் என்று முடிவு செய்து முதல் கோயில் உள்ளே போனோம்.
முதல் கோயில்: இது ஒரு சிவன் கோயில்.கிருஷ்ணா நதிக்கரையிலே உள்ளது.வெள்ளம் வரும் நாட்களிலே கோயிலை மூடிவிடுவதாகச்சொன்னார்கள்.இந்த கோயிலின் விசேஷம் இது தான்.கருவரையில் இருப்பது ஒரு உடைந்த சிவலிங்கம் அதன் மேல் பக்கத்தில் ஒரு குழி அதனுள் தண்ணீர்,அவ்வளவு தான்.இதிலென்ன விசேஷம்?அந்த குழியில் உள்ள தண்ணீரை எடுத்துவிட்டால் திரும்ப அதே பழைய நிலைக்கு வந்துவிடும் ஆனால் வழியாது.இத்தனைக்கும் நான் போன போது அந்த கோயில், நதியின் மட்டத்தில் இருந்து பல மீட்டர் உயரத்தில் இருந்தது.இப்படி பல முறை நீரை எடுத்து காண்பித்தார் அந்த சாஸ்திரிகள்.நம்மையும் தண்ணீரை எடுத்து வெளியே விட்டு பார்க்கச்சொன்னார்.அந்த பகுதி சிறிது வெளிச்சம் குறைவாக இருந்ததால் அவரே தீபாராதனை தட்டில் சூடம் வைத்து நல்ல வெளிச்சத்திலும் காண்பித்தார்.அந்த கோயிலுக்கு ஏதோ தல புராணம் சொன்னார் சரியாக ஞாபகம் இல்லை.
அடுத்தது: இது ஒரு லக்ஷ்மி நரசிம்மன் கோயில்.இதுவும் மிகச்சிறிய கோயில்.இதிலும் ஒரு அதிசயம். இங்குள்ள விளக்கை பெருமாள் பக்கத்தில் கொண்டு போனால் தீபம் ஆட ஆரம்பிக்கும் அதையே வெளியில் கொண்டு வந்தால், தீபம் எப்போதும் போல் ஆடாமல் இருக்கும்.அவரின் ஆக்ரோஷமான இடம் என்பதால் அங்கு தீபம் ஆடுவதாக சொன்னார்கள்.சில தடவை அவரே பண்ணிக்காண்பித்த பிறகு நம்மையும் அழைத்து பண்ணச்சொன்னார். காலை 12 மணிக்கு கோயில்கள் மூடப்படுவதால் அதற்கு முன்பு தரிசனத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டோம்.
மதியம் அவர்கள் Messயில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கடைத்தெருவை சுற்றிக் கொண்டிருந்த போது கண்ணில்பட்டது "கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தில் தெலுங்கு பதிப்பு.தியேட்டர் உள்ளே போய் உட்கார்ந்துவிட்டோம்.படம் OK தான்.சாயங்காலம் வரை பொழுது ஓடிவிட்டது.ஊர் திரும்பும் நேரம் வந்துவிட்டதால் அனைவரும் திரும்ப படகு துறைக்கு வந்தோம்.படகு வருவதற்கு சிறிது நேரம் எடுத்ததால் அங்கேயே உட்கார்ந்து கிருஷ்ணா நதியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் திடிரென்று வானம் இருட்ட ஆரம்பித்து,பலமான மழைக்கு உண்டான அத்தனை அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்தது.இந்த சமயத்தில் படகும் வர ஒருவித துணிச்சலுடன் எல்லோரும் ஏறி உட்கார்ந்தோம்.போகும் போது 2 படகு வரும் போது ஒன்று தான்.கொஞ்சம் பெரிய படகு என்பதால் படகோட்டியும் ஒன்றும் பிரச்சனையில்லை என்ற சான்றிதழ் கொடுத்ததால் கிளம்பினோம்.
பாதி ஆற்றை தாண்டிவிட்டோம்.கொஞ்சம் கொஞ்சமாக காற்று வேகம் எடுக்க ஆரம்பித்தது.மழையும் சிறிது தூரலுடன் அவ்வப்போது லேசாக எங்களை நனைக்க ஆரம்பித்தது.இது போதாது என்று ஆற்றில் சிறிது பெரிதாக அலைகள் வந்துகொண்டு இருந்தது.திடிரென்று பார்த்தால் தண்ணீருக்கும் படகு மேல் மட்டத்திற்கும் வெறும் 2 அங்குலம் மட்டும் தான் இருந்தது.
படகில் இருந்த பாதிபேருக்கு நீச்சல் தெரியாது.அந்த நேரத்திலும் கிண்டலுடன் தான் வந்தோம்.பயத்தை மறைக்க வேண்டுமே!.படகை ஓட்டுவரோ தண்ணீர் வேகம் அதிகமாக இருப்பதை பார்த்து படகை இன்னும் முன்னோக்கி செலுத்த ஆரம்பித்தார் அப்போது தான் சரியாக நாங்கள் இறங்கவேண்டிய இடத்திற்கு வரமுடியும்.இதனால் இன்னும் நேரம் அதிகமானது.தண்ணீரில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கண்டம் தான்.
இந்த நிலயிலேயே நாங்கள் கரைக்கு வந்து சேர்ந்தோம்.மழையும் வரவில்லை,காற்றும் வலுக்கவில்லை.
நல்ல படகோட்டியால் அன்று நாங்கள் பிழைத்தோம்.
துணுக்கு:அங்கு முதலைகள் நடமாட்டம் உண்டாம்.இறங்கிய உடனே சொன்னார்கள்.
Monday, July 03, 2006
திரு.சங்கரராமன் (சிங்கை)

இவரை நான் அறிமுகப்படுத்த எனக்கு வயசு போறாது, இருந்தாலும் சிங்கப்பூரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இத்தனைக்கும் இவர் என் தூரத்து உறவினர்.
என்னுடைய முந்தைய பதிவுகளில் ஒன்றான "கணிணி அனுபவங்களில்" இவரை 65 வயது இளைஞர் என்று குறிப்பிட்டிருந்தேன்.சிங்கப்பூர் சுற்றிப்பார்க்க வந்த காலத்தில் இவர் கொடுத்த ஆலோசனைகள் பெரிதும் கைகொடுத்தது.இத்தனக்கும் அது தான் முதல் தடவை நாங்கள் ஒருவரை ஒருவர் பார்பது.கேட்காமலே எங்களது தேவைக்காக சில்லரை காசுகளை கொடுத்தது (அப்போது பஸ்களில் கடவுச்சீட்டு வாங்க சில்லறை மிகவும் தேவைப்படும்),எப்படி போகவேண்டும்,திரும்பும் போது எப்படி வந்தால் நல்லது என்ற Directions மிகவும் உபயோகமாக இருந்தது.ஒரு புதியவர்களிடம் நடந்துகொள்வது போல நடக்காமல் அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கும் "ஒரு நல்ல மனிதர்".
இவர் சிங்கப்பூர் வந்தது 1951-ஏப்ரல் 24, அதுவும் நாகப்பட்டினத்தில் இருந்து பினாங்கு வரை கப்பலில்.7 நாட்கள் பயணம் அதன் பிறகு ரயிலில் சிங்கப்பூர் வந்தார்.
பலரைப்போல் இவரும் பல இடங்களில் வேலைப்பார்த்து தனது Retirmentயை போலீஸ் துறையில் முடித்தார்.
திரு லீ குவான் யூ (இப்போது மதியுரை அமைச்சர்-சிங்கப்பூரின் சிற்பி) சொன்னது போல் "வாழ்நாள் கல்வி" என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.புதிது புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டும் செய்துகொண்டும் இருப்பவர்.இவர் மூலம் தான் கணிணி என் கை அருகே வந்தது.இவரால் முடிகிறது என்றால் ஏன் நம்மால் முடியாது என்ற எண்ணத்தால் பலதை நானும் கற்றுக்கொண்டேன்.இவருக்கே உரிய முகங்களில் "எழுத்தாளர்" என்பதும் உண்டு.இவருடைய பல கட்டுரைகள் மற்றும் குழந்தைக் கதைகள் உள்ளூர் பத்திரிக்கையான "தமிழ் முரசு"வில் வந்துள்ளது.
கடந்த ஞாயிறு எனது வீட்டுக்கு வந்தபோது "தமிழ்மனம்" மற்றும் "வலைப்பூக்களை" பற்றியும் எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன்.
80 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த இளைஞரை நமது வலைப்பூக்களிலும் எதிர்பார்கலாம்.இவரைப்பற்றி நிறைய எழுதலாம் என்றாலும் அது அவர்மூலமாக வருவதன் மூலம் இளைய சமுதாயத்திற்கு பல நல்ல விஷயங்கள் தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இவரே எனக்கு ஆதர்சமானவர் .
என்னுடைய இந்த நிலமைக்கும் வளர்ச்சிக்கும் இவரும் இவர் குடும்பத்துக்கும் பெரிய பங்கு இருப்பதால்......இந்த பதிவை அவர்களுக்கு சின்ன காணிக்கையாக ஆக்குகிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் "Open Heart Surgery" செய்துகொண்டார், அதையும் நகைச்சுவையுடன் சொல்லும் இவர் தான் இறந்த பிறகு தன் உடலையே தானமாக தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்பது பின்குறிப்பு.