Showing posts with label காகிநாடா. Show all posts
Showing posts with label காகிநாடா. Show all posts

Wednesday, January 24, 2007

ஸ்ரீமான் ஹரிஹர சுப்பிரமணியம்.

போன பதிவில் கட்டுமானத்துறையில் இருக்கும் சில ஓட்டைகளை பற்றி சொன்னேன்.
இந்த ஓட்டை,நேர்மை இல்லாத தலைமை அதிகாரிக்கும் ஓரளவு கணக்காயருக்கும் விளையாட வசதியாக இருக்கும் என்பது கசக்கும் உண்மை.இது ஒரு உதாரணம் தான் இப்படி பல சமயங்களில் விதியை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.பல கட்டுமான கம்பெனிகள் நொடித்துப்போக நேர்மையில்லாத அதிகாரிகளிடம் பொறுப்பைவிட்டு விட்டு முந்திரிபருப்பு சாப்பிட்டுக்கொண்டிப்பதால் ஏற்படுபவை.எப்படி எப்படியெல்லாம் முதலாளியை/கம்பெனியை ஏமாற்றமுடியும் என்று இங்கு சொல்லப்போவதில்லை,அது என் எண்ணமும் கிடையாது.



திரு.ஹரிஹர சுப்பிரமணியத்துடன் நடந்துகொண்டிருந்த பேச்சு வார்த்தை தொடர்ந்தது.
எங்கள் பேச்சு இப்படியே போய் யாரும் விட்டுக்கொடுக்காத நிலையில், சரி சார்,நான் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.தலைமை அதிகாரிக்கு என்மேல் சற்று கோபம் இருந்தாலும் என்னை அவர் வெறுக்கவில்லை.வெகு சில சமயங்களிலேயே அவர் கோபப்பட்டு பார்த்திருக்கேன்.பதிவுசாக நடந்துகொள்பவர்களுக்கு கட்டுமானத்துறை ஒத்துவராது என்ற என் எண்ணத்தை உடைத்தவர் இவர் தான்.அவர் சொல்லநினைப்பதை நகைச்சுவை சேர்த்துசொல்வார்.புரிகிறவர்களுக்கு பட்டென்று புரிந்துவிடும்.ஒரு உதாரணம்.
ஏதோ விஷயமாக என்னை கூப்பிட்டு அவர் அறையில் பேசிக்கொண்டே ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.ஒரு வேலையில், ஒப்பந்தக்காரை ஈடுபடுத்திய வேலை ஆட்கள் விபரம் மற்றும் தேதிகள் உள்ளனவா? என்றார்.



இல்லை என்றேன்.(இது என்னுடைய வேலையில்லை-அப்போது)



பிறகு கொஞ்சம் நேரம் பேசிவிட்டு நான் அறையை விட்டு வெளியே கிளம்பும் போது ஒரு சிறிய பேப்பரை கொடுத்தார்.



அதில் கீழ்கண்ட படத்தை போட்டு அதில் ஒரே ஒரு வரி










"Do Paper Work" என்று அர்த்தம் வரும் தொனியில் நச்சென்று சொல்லியிருந்தார்.அந்த காகிதத்தை எங்கோ சேகரித்து வைத்தேன் இப்போது கண்ணில் படவில்லை.
தலைமை அதிகாரி இப்படியென்றால் என்னுடைய முதல் அதிகாரி திரு.T.S.ஜனார்த்தனன்(மதுரைக்காரர்),மிகவும் சாந்தமாக உரையாடுபவர்.தில்லு முல்லு தெரியாதவர்.இவர் வேகப்பட்டு பேசும் போது அவரது போலியான கோபம் முகத்தில் தேங்கியிருப்பது அப்பட்டமாக தெரியும்.அந்த அளவுக்கு அப்பிரானி மனிதர்.குணவான்.



எனக்கு தூசி உவாமை இருந்த போது அதை எப்படி போக்குவது,யோகா,மூச்சுப்பயிற்சி என்று பல விதங்களை எடுத்துறைத்து ஓரளவு குணப்படுத்த வழிமுறையை காண்பித்தார்.தொடர்ச்சியான ஜலதோஷம் இருக்கும் போது அவர் சொன்ன மருத்துவம் இது தான்.





மெழுகுவர்த்தி அல்லது விளக்கில் ஒரு மிளகை சுடவைத்து அந்த புகையை இழுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது.மற்றொன்று தண்ணீரை நன்கு சுடவைத்து பாத்திரத்தை மூடி வைத்துவிட்டு,போர்வை அல்லது கம்பளி போர்த்திக்கொண்டு பாத்திரத்தின் மூடியை திறந்து அதன் ஆவியை பிடிக்கவேண்டும்.சில மணித்துளிகளில் நல்ல பலன் கிடைக்கும்.எனக்கு கிடைத்தது.தேவையென்றால் யூகலிப்டஸ் அல்லது அமிர்தான்ஜன் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.



இந்த சைட் கடலறுகே இருந்ததால் ஒரு முறை புயலையும் எதிர்கொண்டோம்.விடாமல் 3 நாட்கள் மழை.அப்போது தான் ஒரு கப்பல் இந்த புயலில் சிக்கி இங்கு வந்து தரை தட்டியது.இன்சூரன்ஸ்க்காக விட்டு விட்டார்கள் என்றார்கள்.எவ்வளவு நிஜம் என்பது தெரியவில்லை.கப்பலை பக்கத்தில் சென்று பார்க்கும் வாய்பு கிடைத்தது.யம்மாடி தரையில் நிற்கும் போது எவ்வளவு பெரிதாக இருக்கு.அதில் வேலை செய்யும் மக்கள் கயற்றேனியில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப பக்கத்தில் விடவில்லை.சில நாட்கள் கழித்து டக் போட் மூலம் கடலுக்குள் இழுத்துவிடப்போவதாகவும் சொன்னார்கள்.முடிந்ததா என்று தெரியவில்லை.


கிட்டத்தட்ட இந்த படத்தில் இருந்த மாதிரி தான் இருந்தது.



காகிநாடாவில் இருக்கும் வேலைகள் முடியும் தறுவாயில் ஒவ்வொருவராக மாற்றலாகிக்கொண்டிருந்தார்கள்.


அப்போது பல பெரிய வேலைகள் புட்டர்பர்த்தியில் வரப்போவதாகவும் அங்கு தான் மாற்றல் வரும் என பேசிக்கொண்டிருந்தார்கள்.என்னுடைய முதன் அதிகாரியும் அங்கு தான் போகப்போவதாக சொன்னார்.


புட்டபர்த்தி என்றவுடன் ஞாபகத்துக்கு வரும் சாய்பாபா தான் எங்களுக்கும் வந்தது.அப்போது அவர் செய்யும் பல அதிசியங்கள் (சித்து வேலை?) எனக்கு நம்பிக்கையில்லை.அதனால் பலமாக விமர்சனம் செய்வேன்.கடவுளை அடைய அவர் இந்த மாதிரியான வேலைகளை செய்யவேண்டாம்.இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.அவர் இந்த மாதிரி மக்களை ஏமாற்றக்கூடாது என்று எனக்கு தோன்றிய தத்துவங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்.ஒருவேளை எனக்கு அங்கு மாற்றல் இருக்காது என்ற தைரியமோ என்னவோ தெரியாது.பக்தர்களுக்கு கடவுளைக்காட்ட இது சரியான முறையில்லை என்பது என்னுடைய கருத்து,அப்போது,இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த என் முதன்மை அதிகாரி,வெங்கடேசா,நான் கூட அவர் பக்தர் கிடையாது.ஒருவரைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் ஏதும் சொல்லாதே.நமக்கு தெரியாதது எவ்வளவோ அதில் இதுவும் ஒன்று.


இப்படி சொன்ன முதன்மை அதிகாரிக்கு கிடைத்தது என்ன தெரியுமா?


வாங்க அதை மற்றொரு சமயத்தில் சொல்கிறேன்.


இப்போது புட்டபர்த்தியில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால்,அதைப்பற்றி சிறிது பதிவுகளுக்கு பிறகு எழுதுகிறேன்.

:-))

Thursday, January 18, 2007

கால்குலேட்டர்

திரு பாபுராஜ் வேலைக்கு ஆள் எடுக்க எத்தனிக்கும் போதே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டேன்.இங்கு வேலைக்கு வரும் ஆள் நான் ரிக்கர்/வெல்டர் வேலைதான் பார்ப்பேன் என்று சொல்லக்கூடாது.எல்லா வேலையும் கலந்து பார்க்கவேண்டும்.அதற்கு தயாராக இருந்தால் அழைத்து வா,இல்லாவிட்டால் வேண்டாம் என்றேன்.வேலை 12 மணி நேரம் அதனால் இரண்டு குரூப் வேண்டும் என்றேன்.

புதிதாக ஒரு ஒப்பந்த வேலை கிடைத்த தெம்பு,நாலு காசு பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு அவரை உந்த,தனக்கு தெரிந்த மற்றும் நண்பர்களைக்கொண்டு ஒரு சிறிய குழுவை தயார்படுத்தினார்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்களை தயார்படுத்திய பிறகு கட்டிடம் மேலே போவதைக்கண்ட தலைமை அதிகாரி அந்த சைட் பக்கமே வரவில்லை.எல்லாவற்றையும் அலுவலகத்தில் இருந்தே கண்கானித்துக்கொண்டிருந்தார்.அவர் இப்படி இருந்ததும் எங்களுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாக இருந்தது.எங்கள் வேலையை நாங்கள் பழுதில்லாமல் பார்க்கமுடிந்தது.

இப்படிப்பட்ட ஒரு தலைமை அதிகாரியுடனும் மோத வேண்டிய சமயம் வந்தது.


(இடமிருந்து வலமாக:சம்சுதீன்,நான்,T.S.சங்கர்,ராஜேந்திரன்.)

பல கட்டுமானத்துறை வேலை இடங்கள் அலுவலகங்கள் ஒரு சிறிய அறை இருக்கும் அதற்கு பக்கத்தில் இன்னொரு அறை,தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைப்பதற்கென்று.கதவு என்று ஒன்று இருந்தாலும் வேலை ஆட்களும் நாங்களும் பகிர்ந்துகொள்ளும் மாதிரியே இருக்கும்.அதனால் வாசல் கதவை பூட்டமுடியாது.அதே மாதிரி நாங்கள் வரைப்படம் மற்றும் சில அலுவலக கடிதங்களை வைத்துக்கொள்ள மேஜை இருக்கும் ஆனால் பூட்டி வைக்க ஏதுவாக இருக்காது அதனால் எப்பவுமே திறந்துதான் இருக்கும்.

அன்றாட வேலைகளுக்கு உதவியாக இருக்க கால்குலேட்டர் (கம்பெனி செலவில்) வாங்கி எனது டிராவரில் வைத்திருந்தேன்.பல காலம் அப்படியே தான் இருந்தது.திடிரென்று ஒரு நாள் உபயோகப்படுத்தலாம் என்று தேடியபோது தான் காணாமல் போனது தெரிந்தது.

இப்படி நடப்பது எல்லா இடங்களில் சகஜம்.அதனால் நான் கவலைப்படவில்லை.சைட்டை விட்டு மாறுதல் ஆகி போகும் போது எங்கள் பேரில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

ஆனால் இந்த சைட்டில் பல கால்குலேட்டர்கள் காணாமல் போனதால் மற்றும் புதிதாக வாங்க ஆர்டர் போட வேண்டியிருந்ததால்,யார் யார் கால்குலேட்டர்கள் காணாமல் போயிருக்கிறது என்று கணக்கு எடுத்து,அதில் எவ்வளவு தொலைந்து போய்யிருக்கிறது என்று கணக்கு எடுத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார்கள்.

தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு என்னாயிற்று?? வந்த விபரங்களை பார்த்துவிட்டு ரூல்ஸ் படி என்ன செய்யவேண்டும் என்று சைட்டில் உள்ள கணக்காயருக்கு கடிதம் அனுப்பிவிட்டனர்.ஆதாவது தொலைந்து போன ஒவ்வொரு கால்குலேட்டருக்கும் 50% பணத்தை தொலைத்தவர்களிடம் இருந்து இழப்பீடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அதை அப்படியே கணக்காயர் என்னிடம் சொன்னார்.

நான் கட்டமுடியாது என்று சொன்னேன்.ஒரு சைட்டின் கணக்காயர் வேலை இடத்துக்கு மற்றும் பாதுகாப்புக்கும் தேவையான உபகரணங்களையும் கொடுக்கவேண்டும் அல்லது ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.இங்கு அந்த இரண்டும் செய்யப்படவில்லை.சைட் ஆபீசுக்கு பூட்டு கிடையாது வைத்துக்கொள்ளும் மேஜைக்கும் பூட்டும் வசதி கிடையாது.தவறு உங்களிடம் இருக்கும் போது நான் ஏன் பணம் கட்டவேண்டும்? என்று கேட்டேன்.

இந்த மாதிரி விவகாரங்களை மேல் அலுவலகத்துக்கு எழுதுவதற்கு முன்பு இங்குள்ள தலைமை அதிகாரியிடம் கேட்டு தான் அனுப்புவார்கள்.அதுவும் இங்கு பின்பற்றவில்லை.

இப்படியே இந்த இழு பறி போய்கொண்டிருந்த போது ஆடிட்டிங் வந்ததால் அதை மூட வேண்டிய அவசியம் வந்தது.கணக்காயார் கூப்பிட்டு தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தை காண்பித்து என்னிடம் கொடுத்தார்.

இது மேலும் கோபத்தை வரவழைத்தது.அதை இந்த கையில் வாங்கி அடுத்த சில நாட்களில் எங்கள் ரீஜனல் இன்ஜினியருக்கு(இன்று அவர் தலைமை நிர்வாகி) மேல் சொன்னவற்றையெல்லாம் விளக்கி ஒரு கடிதம் எழுதினேன்.

இப்படிதான் கம்பெனியில் லாபத்தை பெருக்கவேண்டுமென்றால் நான் 50% என்ன? கால்குலேட்டரின் முழுவிலையையும் கொடுக்கிறேன் என்று முடித்திருந்தேன்.அப்படியே முழு தொகையையும் கட்டினேன்.

இந்த கடிதம் அவர் கைக்கு கிடைத்த மறுவாரமே அது எங்கள் சைட்டின் அதிகாரி திரு.ஹரிஹர சுப்பிரமணியத்துக்கு திருப்பி அனுப்பபட்டது.அதைப்பார்த்தவுடன் அவருக்கு கோபம் ஏற்பட்டிற்க வேண்டும்,கூப்பிட்டனுப்பினார்.

ஏன் இந்த மாதிரி பண்ணாய்? என்றார்.

ஏன் சார் உங்களுக்கு நடந்ததே தெரியாதா?

கணக்காயார் என்னிடம் சொல்லவில்லை.ஆனால் நீ இப்படி மேலிடத்துக்கு எழுதுவதற்கு முன்பு என்னிடம் சொல்லியிருக்கலாமே என்றார்.

உங்களுக்கு தெரியாத விஷயமென்றால் உங்களிடம் சொல்லலாம்.தெரிந்த விஷயத்துக்கு எதற்கு உங்களிடம் வரவேண்டும் என்பதால் வரவில்லை என்றேன்.

அதன் பிறகு, கம்பெனி சட்டதிட்டங்கள் ஒரு தனி நபருக்காக மாற்றமுடியாது என்றும்,நீ இப்படி கொடுப்பதால் யாரும் உன்னிடம் வந்து மீதி பணத்தை வாங்கிக்கொள் என்று கெஞ்சப்போவதில்லை என்றார்.இது ஒரு மகா சமுத்திர கம்பெனி இதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்படபோவதில்லை என்றார்.

உண்மை தான்.இருந்தாலும் என் வரையில் சரி என்பதால் முழுவதையும் கட்டி கம்பெனி லாபத்தில் கொஞ்சம் கூட்டினேன்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்,சைட் வேலை என்பதில் ஓரளவு தான் சட்ட திட்டங்களை செயல்படுத்தமுடியும்.மீற வேண்டிய இடத்தில் மீறித்தான் ஆக வேண்டும்.

Tuesday, January 16, 2007

ஒப்பந்தக்காரர்

காக்கிநாடா சிமினியில் வேலை செய்ய சிறிது நாட்களிலேயே புரிந்து போனது அங்குள்ள பல பிரச்சனைகள்.அதை பட்டியல் இடுவதற்கு முன்பு சில விஷயங்கள்.

இந்த மாதிரி பெரிய கம்பெனிகளில் வேலை செய்யும் போது முக்கியமாக மூன்று ஒப்பந்தக்காரர்கள் இருப்பார்கள்

1.கான்கிரீட் போட

2.ஷட்டர் அடிக்க (சாரம் அடிக்க)

3.கம்பி கட்ட

அவரவர் வேலை அவர்களுக்கு நாள் முழுவதும் இருக்கும் அதனால் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்த மாதிரி ரேட் இருக்கும்.அளந்து கணக்கு பண்ணி பணம் கொடுப்பதில் பிரச்சனை இருக்காது.

இந்த சிமினி அப்படியல்ல..

சின்ன இடம்,வேலைகளும் சிறியது

ஒருவர் ஒரு வேலையை முடிக்கும் வரை அடுத்தவர் சும்மாக உட்கார்ந்திருக்க வேண்டும்.இடம் சிறியது,மற்ற வேலைகளுக்கும் அனுப்பமுடியாது.ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை.1.5 வருடம் என்றால், தூங்கிக்கொண்டு இருப்பவனும் எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவான்.

அப்படியென்றால் ஒரு சிறிய தொழிலாளர் கூட்டத்தை வைத்துகொண்டு அவர்களே எல்லா வேலைகளும் செய்ய வைக்கவேண்டும்.அப்படி செய்தால் பணம் பார்க்கலாம்.அது அவ்வளவு சுலபமாக இல்லை அந்த காலத்தில்.கான்கிரீட் போடுபவர்கள் கம்பி வேலை பார்க்கமாட்டார்கள்.அந்த மாதிரியே மற்ற வேலை செய்பவர்களும்.


ஆரம்பித்த சில நாட்களிலேயே புதிய பிரச்சனை உண்டானது.ஏற்கனவே இருந்த குத்தகைக்காரர் கொடுத்த ரேட் மிக மிக அதிகமாக இருந்ததால் அவரை மாற்ற வேண்டும் அல்லது கம்பெனி கொடுக்க முடிந்த ரேட்டுக்கு ஒத்துக்கொள்ள செய்யவேண்டும்.புதிய வேலை என்பதால் ஏற்கனவே செய்யப்பட்ட விலையில் குத்தகையை முடிவுசெய்ய முடியவில்லை.அதனால் சில காலம் வேலை செய்யவிட்டு எவ்வளவு ஆட்கள் வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்கள் லாபத்தையும் போட்டு ரேட் முடிவுசெய்வார்கள்.இந்த மாதிரி சமயங்களில் குத்தைகாரர்கள் வேண்டுமென்றே மெதுவாக செய்து ரேட் முடிவு செய்தபிறகு தங்கள் கைவரிசையை காண்பித்து அதிக லாபம் சம்பாதிப்பார்கள்.

இப்படிப்பட்ட சந்தர்பத்தில் திரு.கிருஸ்ணன்(குத்தைக்காரர்) என்பவர் கொடுத்த விலைப்புள்ளி அதிகமாக இருந்ததாலும்,கம்பெனிக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.நினைத்தவுடன் ஒப்பந்தக்காரர்கள் கிடைப்பதற்கான இடமும் அவ்விடம் இல்லாததால் இன்னும் குழப்பமான நிலைமை உண்டானது.அது வரை பழைய முறையில் வேலை நடந்துகொண்டிருந்தது.

இதில் முடிவு எடுக்க வேண்டியது அந்த சைட்டின் பொறியாளரின் வேலை என்பதால் வாய் மூடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

சில நாட்களில் அந்த ஒப்பந்தக்காரர் சண்டி செய்ய ஆரம்பித்தார்.ரேட் முடிவுசெய்யாமல் வேலை செய்யப்போவதில்லை என்று.

பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் ஒன்றும் இல்லாததால் வேறு வழியில்லாமல் எங்கள் மேலதிகாரி அந்த பொறியாளரிடம் சில ஆட்களை கம்பெனி நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை தொடங்கவும் அதற்கிடையில் நல்ல ஒப்பந்தக்காரர் கிடைத்தால் பார்க்கலாம் என்றார்.

பொறியாளரும் என்னிடம் வந்து அதையே சொல்லிவிட்டு கூடவே ஒரு ஐடியாவும் கொடுத்தார்.

போன சிமினி சைட்டில் வேலை செய்தவர்கள் யாராவது இருந்தால் கூப்பிட்டு அவர்களை வைத்து வேலை வாங்கலாம் என்றார்.

அந்த சமயம் பார்த்து என்னிடம் மேட்டூரில் வேலை பார்த்த "திரு.பாபு ராஜ்" என்ற மலையாளி அங்கு இருந்தார்.இவர் தான் 220 மீட்டர் உயரத்தை வெளிப்புற ஏணிப்படி மூலம் நிற்காமல் ஏறியவர்.பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் சமயோஜிதமாகவும் வேலை செய்யக்கூடியவர்.

கொஞ்சம் வேலை தெரிய ஆரம்பித்தால் இந்த இனத்தவர்கள் பலர் தலை தூக்கி நர்த்தனம் ஆடுபவர்கள்.ஆனால் இவர் அதற்கு மாறுபட்டு மிகவும் நிதானமாக நடந்துகொள்பவர்.அதனாலேயே இவர்மீது எனக்கு ஒரு சாப்ட் கார்னர்.நாம் நம்முடைய ஐடியாவைச்சொன்னால் அதையும் கேட்டு சாதக பாதகங்களை விவாதித்து வேலை செய்பவர்.கடினமான வேலைகளுக்கு அஞசாதவர்கள் மலையாளிகள்,அதே சமயத்தில் சம்பளம் மற்றும் பண விஷயத்தில் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காதவர்கள்.

அப்போது இவர் ஒரு தொழிலாளி மட்டுமே.கொடுக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தார்.

அவரை கூப்பிட்டு தேவையான விபரங்களை சொல்லி,சில ஆட்களை சேர்த்துக்கொண்டு இந்த வேலை செய்.உன்னுடைய லாபத்துக்கு நான் பொறுப்பு என்று சொன்னேன்.

என்மீது இருந்த நம்பிக்கையில் சரி என்று சொல்லி ஆட்களை தேடும் பணியில் இறங்கினார்.

ஒரு தொழிலாளி ஒப்பந்தக்காரர் ஆனார்.

Thursday, January 11, 2007

Jump பார்ம்

இங்கு கட்டப்பட இருந்த சிமினி 120 மீட்டர் உயரம் ஆனால் இதை கட்டவேண்டிய முறை நாங்கள் மேட்டூரில் செய்தது போல் இல்லை.

இங்கு உபயோகித்த முறைக்கு ஜம்ப் பார்ம் என்று பெயர்.

மாதிரி படம் இங்கே.

Photobucket - Video and Image Hosting

நன்றி:Fabquip

சுருக்கமாக..

கீழிருந்து மேலே போகப்போக மத்தியில் ஒரு இரும்பு சாரம் இருக்கும்.இந்த சாரத்தின் ஒரு பகுதியில் ஏணிப்படிக்களுக்கும் மற்றொரு பகுதியில் சாமான்கள் ஏற்றி இறக்க பாரம் தூக்கிக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

மின்தூக்கி நிறுவ தேவையான இடம் உள்ளே இல்லாததால் மேற்பார்வையாளர் முதல் தொழிலாளி முதல் இந்த ஏணிப்படியை தான் உபயோகிக்க வேண்டும்.
ஒரு நாளில் 2 முறை மேல் போய் வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆரம்பத்தில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு கஷ்டம் தெரியாது.

நாங்கள் பண்ண விதம்..

Photobucket - Video and Image Hosting

இந்த வேலை நடந்துகொண்டிருக்கும் இடம் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும் நான் அதிகமாக அங்கு போகமாட்டேன்.எப்போது அரிதாக நேரம் கிடைக்கும் போது அங்கு இருக்கும் பழைய நண்பர்களை பார்த்து அளவளாவதற்கு போவேன் ஆனால் வேலையைப்பற்றி அவ்வளவாக பேச மாட்டேன்.

அந்த சிமினிக்கு அஸ்திவாரம் போட்டு முடித்து சுற்றுச்சுவர் சுமார் 3.5 மீட்டர் எழுப்பியிருந்தார்கள்.அதன்பிறகு மேலே சொன்ன ஜம்ப் பார்ம் சிஸ்டத்தை முடுக்கி சுற்றுச்சுவரை எழுப்பியிருந்தார்கள்.

புதிய சிஸ்டம்,முன் அனுபவம் இல்லாத குத்தையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் என்பதால் ஒரு அடுக்கு போட்டு மறு அடுக்கு கான்கிறீட் போட ஒரு வார காலம் ஆனது.இந்த ரீதியில் போனால் கொடுக்கப்பட்ட குத்தகை காலத்தைப்போல் இரு மடங்கு காலம் வேண்டும்.

இந்த சிமினி வேலையில் ஏதோ சுணக்கம்,தேவையான நேரத்துக்குள் முடிக்கமுடியாத நிலையில் போய்கொண்டிருந்ததை பார்த்த புதிதாக வந்திருந்த கன்ஸ்ரக்ஷன் மேனேஜர், அதை மேற்பார்வை பார்க்கும் இன்ஜினியரை கூப்பிட்டு காரணத்தை விஜாரித்தார்.வேறு யாராவது உதவி செய்ய தேவைப்படுகிறார்களா? என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அந்த இன்ஜினியர் அனுபவம் உள்ள யாராவது இருந்தால் நல்லது என்றிருக்கிறார்,உடனே அந்த மேல் அதிகாரிக்கு என் பெயர் தான் ஞாபகம் வந்திருக்கிறது.இருந்தாலும் எனக்கு கொடுத்த உறுதிமொழியும்(ஆதாவது என்னை திரும்ப சிமினி வேலைக்கு அழைகாமல் இருப்பது) அவரை உறுத்தியிருக்கவேண்டும்.வேலை என்று வந்து தான் உயரதிகாரியாக இருந்து வேலை சுணக்கம் ஏற்படுவதை எந்த உயரதிகாரியாலும் பொறுத்துக்கொள்ள முடியாததால் வேறு வழியின்று என்னை கூப்பிட்டனுப்பினார்.

சிமினியின் இப்போது உள்ள நிலமையையும் என்னுடைய அனுபவுமும் மிக அவசியமாக தேவைப்படுவதால் நீ கட்டாயம் அங்கு போய் தான் ஆக வேண்டும் என்றார்.

என்னை தூக்கிவிட்டவர் மற்றும் நான் வேலை செய்யும் முறை அவருக்கு தெரியும் என்பதால் மறுக்க இயலாமல் போவதற்கு ஒத்துக்கொண்டேன்.

சிமினி சைட்டுக்கு போன முதல் நாளே அந்த இளம் இன்ஜினியரிடம் நான் உனக்கு உதவி செய்யவே வந்துள்ளேன் அதனால் உன்னை மீறி செயல்படுவதாக நினைக்காதே.முதன்மை அதிகாரி சொன்னதால் தான் இங்கு வந்தேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.

நான் விலகி இருக்க வேண்டிய இடம் என்னைவிடமாட்டேன் என்று பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

மீதி வரும் பதிவுகளில்

Monday, January 08, 2007

கடற்கரைக்கு அருகில்

இந்த ரெசிடென்ட் இஞ்சினியர் நம்மிடம் தான் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார் அதுவும் போன சைட்டில் நடந்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்று நினைத்திருந்தேன்.

நண்பர்களிடம் பேசிய பிறகு தான் தெரிந்தது பலரும் இவர் மீது வெறுப்பாக இருப்பது.அதோடில்லாமல் வேறு காரணத்திற்காக இவர் இன்னும் சில மாதங்களில் மற்றொரு இடத்துக்கு மாற்றல் ஆகி போகக்கூடும் என்று மகிழ்சியான செய்தி காதில் விழுந்தது.

அதனால் பொறுமையை கடைப்பிடிக்க தொடங்கினேன்.

இந்த சைட் கடலுக்கு வெகு அருகாமில் இருந்தது.ஒரு சாலையை தாண்டினால் கடல் தான்.அதனால் தண்ணீர் மட்டம் தரையில் இருந்து சற்றே கீழே இருந்தது.இப்படி இருந்தால் தரைக்கு கீழ் பார்க்கும் வேலைகளில் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

தண்ணீர் ஒரு பிரச்சனை என்றால் கடல் மண் தோண்டும் போது சரிந்துகொண்டே இருக்கும்.தேவையான சாரங்கள் அடிக்காமல் ஒரு அளவுக்கு மேல் மண் தோண்டமுடியாது.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேலை செய்யும் இடத்தை சுற்றி ஒரு 10 மீட்டர் ஆழத்துக்கு 1~ 1.5 மீட்டர் இடைவெளிக்கு ஒரு பிளாஸ்டிக் குழாய்களை சொருகி அதை ஒரு பெரிய குழாயுடன் இணைத்துவிடுவார்கள்.இந்த பெரிய குழாயை தண்ணீர் இழுக்கும் இயந்திரத்துடன் இணைத்து 24 மணிநேரமும் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்குமாறு செய்துவிடுவார்கள்.

இப்போதும் நிதி நிலவரம் கேமரா வாங்கும் அளவுக்கு முன்னேராததால் படங்கள் எடுக்க முடியவில்லை.இணையத்திலும் கிடைக்கவில்லை.

அப்போது தான் ஆரம்பித்த ஒரு கட்டிடத்தின் மேற்பார்வை வேலை எனக்கு கொடுக்கப்பட்டது.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




சுமார் 350 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கட்டிடம்.இரண்டு பக்கமும் தாங்கி நிற்க தூண்களும் அதன் மேல் கூரைக்கு தேவையான டிரஸ்ஸ¤ம் அதன் மேல் சிறிய அளவில் முன்னமே போட்டு மேல் வைக்கக்கூடிய விதத்தில் உள்ள சிலாபுகள் இருக்கும்.

45 மீட்டர் அகலம் என்பதால் அந்த டிரஸ் இரண்டு பகுதியாக போட்டு நடுவில் சப்போர்டு வைத்து இணைப்பார்கள்.

இந்த வேலை இப்படி போய்கொண்டிருக்கும் போது வேறு ரெசிடென்ட் இன் ஜினியர் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.அவர் இவர் என்று பலருடய பெயர்கள் அடிபட்டு கடைசியில் நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது இருந்த திரு.ஹரிஹர சுப்பிரமணியன் தான் வரப்போகிறார் என்று கேள்விப்பட்டேன்.நிறைய நிம்மதியாக இருந்தது.நான் மேட்டூரை விட்டு வரும் போதே இவரிடம் ஒன்றே ஒன்று தான் யாசித்தேன். எனது அடுத்த சைட்டில் எனக்கு சிமினி வேலை கொடுக்கக்கூடாது என்று.அப்போது அவரும் ஒத்துக்கொண்டு அனுப்பிவைத்தார்.

அவரும் வந்தார்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்தது.

இந்த சமயத்தில் பல இடங்களில் வேலை மிக ஜரூராக நடந்துகொண்டிருந்தது.சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த 120 மீட்டர் உயரம் உள்ள சிமினி கீழ்தள வேலைகளை முடித்துவிட்டு தரைக்கு மேல் உள்ள வேலை நடக்கதயாராக இருந்தது.அதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் திரு.T.S.ஜனார்த்தனன் (மதுரைக்காரர்-1000 வாசல் வீதி என்று விலாசம் வரும் சரியாக ஞாபகம் இல்லை).இவரைப்பற்றி சுவையான விபரங்கள் பின்னால் வரும்.

இதற்கிடையில் ஒரு புதிய பிரச்சனை ஆரம்பித்தது,ஆனால் அது என்னை பாதிக்கப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியாது.

வாங்க அடுத்த பதிவுக்கு.

Thursday, January 04, 2007

ரெசிடென்ட் இஞ்சினியர்

ரெசிடென்ட் இஞ்சினியர் சைட் உள்ளே இருந்ததால் அவரை பார்க்க கிளம்பினேன்.

வழியில் பல பழைய நண்பர்களை பார்த்து பேசிய போது ரெசிடென்ட் இஞ்சினியர் சைலோ எனப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரம் போடும் இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து அங்கு சென்றேன்.

சைலோ என்பது ஒரு பெரிய கிணற்றை மேல் நோக்கி கட்டினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும்.இதைப்பற்றி இந்த பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.விருப்பம் இருந்தால் போய் பார்க்கவும்.

அந்த அஸ்திவாரம் போடும் இடத்தில் ஒரே கூட்டம் மற்றும் சத்தமும் கூட.மூன்று கான்கிரீட் கலக்கும் இயந்திரங்கள் வேலை செய்துகொண்டிருந்தன.கான்கிரீட் அளவும் அதிகமாக இருந்ததால் 3 மிஷின்கள் போடப்பட்டிருந்தன.இது நடக்கும் கால கட்டம் 1989,அப்போது கூட பேச்சிங் பிளன்ட் மற்றும் கான்கிரீட் வண்டிகள் எட்டிப்பார்க்காத காலம்,அதானாலேயே மிக்ஸர் மிசின் மற்றும் ஆட்கள் மூலம் ஜல்லி , சிமின்ட் மற்றும் மணல் போடும் வேலையை செய்துகொண்டிருந்தோம்.ஒரு மிஷின் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 16 மூட்டைகள் போடும்.

நான் அங்கு போன சமயம் கான்கிரீட்டை அதிரப்படுத்தும் சாதனம் பழுதாகி, வேறு இல்லாத நிலையில் எல்லோரும் அங்கு இங்கு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.அந்த இஞ்சினியர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி ஆனதால் அந்த இடமே ஒரே சத்தமாக இருந்தது.போதாக்குறைக்கு கிளைன்ட் அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு அவ்விடத்தை உஷ்ணப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில்,

அந்த கால கட்டத்தில் இருந்த பல படித்த மற்றும் படிக்காத சில உயரதிகாரிகள் வேலை செய்யும் தொழிலாளர்களை நடத்தும் விதம் மிக மோசமாக இருக்கும்.வேலை செய்பவர்களை சத்தம் போட்டு தான் வேலை வாங்கவேண்டும் என்று எழுதப்படாத விதியாக இருந்தது.அதிலும் மரியாதை இருக்காது

அவர்கள் கால கட்டத்தில் பலர் கட்டுமானத்துறைக்கு போதிய கல்வி அறிவு இல்லாதவர்களாகத்தான் வந்தார்கள் அதனால் இவர்கள் மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகியிருக்குமோ என்னவோ!!ஆனால் இந்த கால கட்டத்தில் கொஞ்சம் படித்தவர்கள் வர ஆரம்பித்தவுடன் பூசல்கள் தோன்ற ஆரம்பித்தது.

"சார் அவரை இங்கு வந்து கத்தச்சொல்லாதீங்க,செய்ய வேண்டியது மட்டும் சொன்னால் போதும், நாங்கள் செய்கிறோம்,வேலை முடிந்த பிறகு வந்து பார்த்து தவறு இருந்தால் சொல்லச்சொல்லுங்கள்" என்பார்கள்.

இது ஒரு Transition டைம்.அதனால் இவர்களாலும் மாற முடியவில்லை, வேலை செய்பவர்களாலும் பொருத்துக்கொள்ள முடியவில்லை.

அந்த உஷ்ணமான நிலையில் அவரருகே சென்று காலை வணக்கம் என்றேன்.
பதில் சொல்வதற்குள் அந்த கான்கிரீட் அதிரப்படுத்தும் சாதனத்தை எடுத்து அவரே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடன் சில காலம் பணிபுரிந்திருந்ததால் அவருடைய குணம் தெரிந்து நானும் சில வேலைகளை அங்கேயே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.முதல் நாள் அன்றே வேலை ஆரம்பித்துவிட்டது.யார் நமது ஆள் யார் குத்தகைகாரரின் ஆள் என்று தெரியாமல் வேலை நடக்காதது பார்த்து அந்த இஞ்சினியருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி என்னைப்பார்த்து "நீ அங்கு போய் ரெஸ்ட் எடு" என்ற தொனியில் சொல்லிவிட்டு அவரே அந்த வேலை செய்ய ஆரம்பித்தார்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்,முதன் முதலில் வரும் ஒருவருக்கு ஒரு சைட் என்பது காடு மாதிரி.எங்கு என்ன இருக்கும் என்று தெரியாது,நமது கம்பெனி ஆள் யார் என்று தெரியாது,அதனால் சில நாட்கள் தேவையான கட்டுமான வரைப்படங்களை கொடுத்து படிக்கச்சொல்வார்கள்.

வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆனவுடன் எங்கு வேலை செய்யப்போகிறோமோ அந்த இஞ்சினியரிடம் ஒப்படைப்பார்கள்.இது ஒவ்வொரு தலைமை இஞ்சினியரின் பொறுப்பு.இப்படி செய்வதால் வேலை செய்யப்போகும் இடம்,மக்கள் பற்றி ஒரு தெளிவு வரும்.எதற்கு யாரை பார்க்கவேண்டும் என்று தோனும்.அது இங்கு நடைபெறவில்லை.

ஆமாம் கான்கிரீட் போடுவது கஷ்டமான வேலையா?இந்த மாதிரி வேலைக்கு தலைமை அதிகாரி தான் இந்த வேலைகளை செய்யவேண்டுமா? என்றால்

நிச்சயமாக இல்லை.

சில பிராஜக்ட் மேனேஜர்கள் பக்கத்திலேயே வரமாட்டார்கள்,ஆனால் வேலை மட்டும் சுலபமாக போய்கொண்டிருக்கும்.அதெப்படி?

இவர்கள் எண்ணம் இப்படி

சைட்டில் வேலை நடக்க உதவி இஞ்சினியர்கள் உள்ளார்கள்,தேவையானவற்றை வைத்துக்கொள்வது மற்றும் வழி நடத்துவது அவர்கள் வேலை,இதில் நான் தலையிடவேண்டிய அவசியம் இல்லை.பிரச்சனை அவர்களால் தீர்க்கமுடியாத அளவில் இருந்தால் நான் வருவேன்.அது வரையில் என்னிடம் வரவேண்டிய அவசியமே இல்லை என்று பட் என்று சொல்லிவிடுவார்.

"ஆதாவது அவரவர் வேலை அவரவர் செய்யவேண்டும்"- இது தான் சாராம்சம்.
எனக்கு தெரிந்த சில தலைமை இஞ்சினியர்கள் இதில்லெல்லாம் தலையிடமாட்டார்கள்.

மீண்டும் இங்கே

ஏற்கனவே நல்லுறவு இல்லை அதுவும் வந்த முதல் நாளே சரியாக அமையவில்லை.இது சரிப்பட்டு வராது என்று நினைத்து மறுநாளே மாற்றல் கேட்கலாம் என்றிருந்தேன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன்,பிரம்மச்சாரிகள் தங்கும் அறையில் ஒரு இடமும் கட்டிலும் கொடுக்கப்பட்டது.

இரவு சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய எண்ணத்தை சொன்னேன்.இந்த ரெசிடென்ட் இஞ்சினியருடன் சரிப்பட்டுவராது நான் டிரான்பர் கேட்கலாம் என்றுள்ளேன்,என்று.

அதற்கு நண்பர்கள் "கவலைப்படாதே நாங்கள் எல்லோரும் பொருத்துக்கொண்டிருக்கிறோம் மற்றும்..??"

வாங்க அடுத்த பதிவுக்கு.

Wednesday, December 27, 2006

காகிநாடா (L&T-ECC )



மேட்டூரில் வேலை முடிந்து சின்ன சின்ன வேலைகளையும் முடித்துவிட்டு அடுத்த இடத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் வந்தது வேலை மாற்றம் "காகிநாடாவிற்கு".

திரும்பவும் ஆந்திரா பக்கம்.

நாங்கள் எந்த புது பிராஜக்ட்க்கு போனாலும் முதலில் யார் அங்கு ரெசிடன்ட் இன்ஜினியர் என்று தான் பார்ப்போம்.ஏனென்றால் சிலர் தலைவலி,திருகுவலி எல்லாம் கொடுப்பவர்கள்.புதியவர்கள் என்றால் திரும்ப நம்மை நிரூபிக்கவேண்டுமே!

இந்த வேலை இடத்தில், அப்போது இருந்தவர் திரு ஞானசேகர் என்பவர்,இப்போதும் ஹைதராபாத் விமானநிலைய சைட்டில் வேலை செய்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.முதன்முதலில் ECC யில் வேலை ஆரம்பிக்கும் போது இவர் தலைமையில் கீழ் வேலை பார்த்தேன் பிறகு மறைமலை நகர் சைட்டிலும் வேலை பார்த்தேன்.மறைமலைநகர் சைட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் அவ்வளவு நல்லுறவு இல்லாததால் எங்கே இங்கேயும் பிரச்சனை வருமோ? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அது நடந்து பல வருடங்கள் ஓடிவிட்டதால் அதெல்லாம் அவர் மனதில் வைத்துக்கொண்டிருக்கமாட்டார் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.அதற்கு பிறகு வருகிறேன்.

காக்கிநாடா என்றவுடனே வீட்டை காலி பண்ண ஆரம்பித்துவிட்டேன்.மனைவி பிறந்தகம் போய்விட்டதால் அவர்களுக்கு தேவையானவை எனக்கு தேவையில்லாதாக தோன்றுபவை அனைத்தையும் வெளியில் கொண்டு போட்டேன்.அப்படி போட்டவற்றில் சில எங்கள் கல்யாணத்திற்கு வந்தவை.அதில் அவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்,அதிலிருந்து வேலை இட மாற்றம் என்றால் வீட்டை காலி பண்ண என்னை விட மாட்டார்கள்.

தேதி குறித்து மேட்டூரிலிருந்து காகிநாடா போக தேவையானவற்றை எடுத்துக்கொண்டு,பெரிய பெட்டிகளை இங்கிருந்து அந்த சைட்டுக்கு போகும் கம்பெனி சாமன்கள் கூட அனுப்பிவிட்டேன்.கட்டுமானத்துறையில் இது ஒரு அனுகூலம்.வெளியிடங்கள் மூலம் அனுப்பினாலும் (ABT பார்சல்.. ) தேவையான பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் கம்பெனி மூலம் அனுப்பும் போது பாதுகாப்பாகவும் விரைவாகவும் மற்றும் சேதமில்லாமலும் போய்விடும்.

போகும் வழியில் மனைவியை பார்த்துவிட்டு சென்னை வந்து அங்கிருந்து காகிநாடா போகும் ஒரே புகைவண்டி "சர்கார் எக்ஸ்பிரஸ்"யில் முன்பதிவு செய்தேன்.காகிநாடாவும் கிட்டத்தட்ட குண்டூர் மாதிரி தான்.மெயின் லயின் பாதையில் இருந்து பிரிந்து கொஞ்சம் உள்ளே போகவேண்டும்.

அவசரமில்லாத பயணம் மற்றும் வேறு வண்டிகளில் முன்பதிவு கிடைக்காத நேரத்தில் சர்காரில் பயணம் செய்யலாம்.நேர விரயம் ஆகும்.அதற்கு பதிலாக பல சமயம் நாங்கள் சென்னையில் இருந்து ராஜமுந்திரி வந்து அங்கிருந்து காகிநாடாவுக்கு 1மணி முப்பது நிமிடங்களுக்குள் பேருந்துவில் வந்துவிடுவோம்.

சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு பல வண்டிகள் இருக்கும்.முடிந்தவரை இரவில் பயணத்தை வைத்துக்கொண்டு காலை வேலைக்கு போய்விடுவோம்.


இந்த பிராஜக்ட் நாகர்சுனா உரத்தொழிற்சாலை கட்ட தேவையான சில கட்டங்களை கட்டவேண்டும்.அதில் இரண்டு சைலோ,ஒரு சிமினி மற்றும் மெக்கானிகல் எரக்ஷன் வேலைகள்.

வந்த முதல் நாள், ராஜமுந்திரி இறங்கி பேருந்து மூலம் காக்கிநாடா வந்து இறங்கினேன்.நகர பஸ் நிலையம் வரை போகாமல் நடுவிலேயே இறங்கி அங்கிருந்து ரிக்ஷா மூலம் எங்கள் குடியிருப்புக்கு போனேன்.முதலில் கண்ணில் பட்டது மெஸ் தான்.அதைச்சுற்றி பல வீடுகளை கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்தது.

மெஸ்ஸில் நான் முதன் முதலில் இந்த கம்பெனியில் வேலை பார்த்தபோது உதவியாளராக சேர்ந்த "திரு.சின்னையா" இப்போது குக் ஆக பதவி உயர்வு பெற்று அங்கு இருந்தார்.இடைப்பட்ட வருடங்களில் நல்ல தேர்ச்சி பெற்று நல்ல பெயருடன் இருந்தார்.ஒரு காலத்தில் சின்ன வயதில் வந்து வேலைக்கு சேர்ந்து பிறகு படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்திருந்தார்.

மெஸ்ஸிலேயே எல்லா சாமான்களை வைத்துவிட்டு குளித்து,சாப்பிட்டுவிட்டு ஜீப்புக்காக காத்திருந்தேன்.வேலை இடம் மெஸ்ஸில் இருந்து 7 KM தள்ளி இருந்தது.

பல பழைய முகங்களை பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் இருந்தாலும்,முதல் நாள் அந்த ரெசிடென்ட் இன்ஜினியரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற கவலையும் வந்தது.ஏனென்றால் மனிதர் அந்த மாதிரி.

சுமார் மதியம் 12 மணிக்கு சைட் உள்ளே போனேன்.அலுவலகத்தில் முகத்தை காண்பித்துவிட்டு ரெசிடென்ட் இன்ஜினியரை பார்க்கலாம் என்று பார்த்தால் அவர் சைட்க்கு போய் இருப்பதாகவும், இன்னும் வரவில்லை என்றார்கள்.

மணி 1 ஆகியும் வரவில்லை,சரி நாமே தேடிப்போய் முகமன் செய்துவிடுவோம் என்று கிளம்பி சைட் உள்ளே போனேன்.

மீதி அடுத்த பதிவில்..