Sunday, August 12, 2012

முகத்தை அழகாக்குங்கள்.

இது Facial செய்வதற்கான குறிப்போ அல்லது செய்முறையோ கிடையாது.

சில நாட்களுக்கு முன்பு வேலை வெட்டி இல்லாத நேரத்தில் ஹாட்மெயிலில் உள்ள பழைய செய்திகளை அழித்துக்கொண்டு வந்தேன் அதில் ஒரு நண்பனின் மெயிலும் இருந்தது அதையும் அழித்துவிடலாம் என்றிருந்தேன் ஏனென்றால் என்னுடைய பழைய மெயிலுக்கு அவனிடம் இருந்து பதில் வராததால் அவனுடைய தொடர்பு போய்விட்டது என்றே நினைத்திருந்தேன்.அவனைப் பற்றிய சிறு குறிப்பு : என்னுடன்  ஒரு வேலையிடத்தில் சிங்கையில் வேலைப்பார்த்தவர்.இலங்கை தமிழர், அவர் பேசும் தமிழ் சில இடங்களில் புரியாமல் இரண்டாம் முறை கேட்டு தெளிவடைவேன்.சில மாதங்கள் மட்டுமே அவருடன் இருந்ததால் வந்த நட்பு வந்தது. சில முறை வாழ்கையில் பக்கங்களை புரட்டும் போது இலங்கை தமிழர்களுடன் ஏற்படுகின்ற நட்பு வெகு எளிதாக ஏற்பட்டு விடுவாக உணர்கிறேன் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போது சாதரணமாக இருந்த நான், சுமாராக மேலே போவதற்கு உதவியாக இருந்தது ஒரு இலங்கை தமிழர் அவர் பெயர் : பிரபாகரன் - உயர்நிலை பள்ளி வரை ஒன்றாக படித்தோம் அதற்கு பிறகு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் நான் கட்டிடவியல் படிக்க அவன் இயந்திரவியல் படிக்க, படிப்பு முடிந்தவுடன் தொடர்பு விட்டுப்போய்விட்டது. அவ்வப்போது நாகை போகும் போது என்னுடைய சக பள்ளி நண்பரிடம் அவனைப் பற்றி தகவல் உண்டா என்று விஜாரிக்கும் போது அவர்கள் குடும்பம் நாசரேத் போய்விட்டதாக சொன்னான். இன்றுவரை அவனை இணையத்தில் தேடிக்கொண்டிருக்கேன். நாசரேத்தில் இருப்பவர்கள் விபரம் தெரிந்தால் சொல்லவும்.

சிங்கையில் ஏற்பட்ட நட்பு அவர்கள் லண்டன் போன பிறகும் சில மினஞ்சல் வரை தொடர்ந்தது அதற்கு பிறகு விட்டுப்போனது.இந்நிலையில் தான் அவனுடைய அஞ்சலை நீக்கிவிடலாம் எண்ணினேன் இருந்தாலும் மனசு கேட்காமல் மற்றொரு முறை அஞ்சல் அனுப்பிப்பார்கலாம் என்று ஒரு மெயிலை அனுப்பினேன். சில நாட்களிலேயே அவனிடம் இருந்து மெயில் வந்தது, அவனும் அவர்கள் குடும்பமும் சென்னை வருவதாகவும் அங்கு சந்திக்கலாம் என்று.ஆச்சரியமாக இருந்தது.

இன்று மதியம் அவர்களை வீட்டு அழைத்துவந்திருந்தேன், கொஞ்சம் கருப்பு போய் லண்டன் சீதோஷ்ணம் அவனை வெளுப்பாக்கியிருந்தது.தலை முடிக்காக சிங்கையில் செலவு பண்ணியது எவ்வித தொந்திரவும் செய்யாமல் வழுக்கையை அப்படியே வைத்திருந்தது.லண்டன் படிப்பு மற்றும் வேலை நிலவரங்களை கேட்டு தெரிந்துகொண்டேன் .அப்போது அவர்கள் சொன்ன சில விஷயங்கள் அவ்வப்போது நாங்கள் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பும் போது பார்த்திருந்தாலும் இது கொஞ்சம் மோசமாக இருந்தது.

சென்னை குடியேற்ற கவுண்டரில் அங்குள்ள ஒரு பெண் அதிகாரி தனது அலைப்பேசியில் தமிழ் பாட்டை பெரிதாக வைத்துக்கொண்டு தான்தோற்றிதனமாக வெளிநாட்டவரை அனுப்பிக்கொண்டிருந்தாராம்.ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் குழந்தையிடம் அதன் பேரை கேட்ட தோரணையை பார்த்து குழந்தையே பதில் சொல்லாமல் இருந்துவிட்டதாம் பிறகு அம்மாவிடம் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று கேட்டதாம்.இந்தியாவின் முகம் அவர்களை வரவேற்பவர்களின் நடைமுறையை வைத்தே மதிப்பிடப்படுகிறது.அது பெரும்பாலும் பல இடங்களில் தவறாகவே கையாளப்படுகிறது.இதே மாதிரியான Ill treatment இங்கு மட்டும் அல்ல பல நாடுகளிலும் காண்பிக்கப்படுகிறது.இதே மாதிரியான ஒரு புகார் சிங்கையில் வந்த போது அதை தீவிர விசாரணை செய்து அதை திருத்தினார்கள்...எப்படி?  சரியான பயிற்சி கொடுத்து அதே சமயம் இந்த மாதிரி இடங்களில் வேலை செய்பவர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தினார்கள்.

மேலே சொன்ன நிகழ்வை சொல்லிவிட்டு நாங்கள் திரும்ப லண்டன் போகும் போது அங்கிருக்கும் அதிகாரி ஊருக்கு போன விபரம் கேட்டு பயணம் எப்படி நடந்தது என்று கேட்டு, குழந்தைகளிடம் சிரித்து பேசி அனுப்பிவைபாராம்.அதையெல்லாம் இங்கு அமல்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது சீர் செய்யவேண்டும் இல்லாவிட்டால் நம் முகம் அசலூர்காரர்களுக்கு மிக அசிங்கமாகவே தெரியும்.

அடுத்து குற்றாளம்,அருவில் தண்ணி குளிக்க வரிசை அதை சரி செய்ய போலீஸ்காரர்கள்.அதில் ஒரு சிலர் பல் துளக்கி அங்கேயே கொப்பளிக்க அவர்கள் துப்பிய கழிவு பக்கத்தில் உள்ளவர்கள் காலில் பட....அதோடில்லாமல் பல்துலக்கிய பிரஸ்ஸை அருவி தண்ணீரில் அலம்பி தங்கள் சுத்தத்தை காப்பாற்றினார்கள்,இன்னும் சிலர் மஞ்சள் பூசி அருவியை மஞ்சளாக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். நம்முடைய பல அருமையான சுற்றுலா தளங்களில் அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் இருக்கும் வசதியை அசிங்கப்படுத்துவது என்பது மிக சுலபமாக செய்துவருகிறோம்.பெரும் பணம் கொழிக்கும் சுற்றுலா துறையை சரியாக மேம்படுத்தாவிட்டால் நம் வருமானத்தை இழப்பதோடில்லாமல் இந்தியாவின் முகமும் பொலிவிழந்து போய்விடும்.