Showing posts with label Conc. Tech. Show all posts
Showing posts with label Conc. Tech. Show all posts

Saturday, August 22, 2009

Winsor Probe சோதனை

இந்த சோதனை,ஏற்கனவே போட்டு முடிந்த கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க நடத்தப்படும் சோதனைகளில் ஒன்று.எளிமையானது மட்டுமில்லாமல் மிக விரைவில் இதன் முடிவை அறிந்துகொள்ளலாம்.பழைய கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க பல சோதனை கருவிகள் இருக்கு அதில் இதுவும் ஒன்று.

சோதனை செய்யப்போகும் கான்கிரீட்டில் Firing Gun (கட்டுமானத்துறைக்கு மட்டும்) உள்ளே ஒரு ஆணியை போட்டு அதை கீழே உள்ள படத்தில் இருக்கும் படி Fire பண்ணுவார்கள்.அந்த ஆணி எவ்வளவு ஆழம் கான்கிரீட்டில் போகிறதோ அதை வைத்து அதன் தரத்தை நிர்ணயம் செய்யப்படும்.



இடத்துக்கு தகுந்த மாதிரி ஒரு ஆணியோ அல்லது மூன்று ஆணிகளோ Fire செய்யப்படும்.மூன்று ஆணிகள் ஆனால் அதை சதவீத அடிப்படையில் கணக்கிடுவார்கள்.இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் துப்பாக்கி மூலம் அதிக விசையுடன் ஏற்றப்படுவதால் அடுத்த பகுதியில் யாரும் இல்லாமல் இருப்பது நல்லது.
பூச்சுடன் இருக்கும் கான்கிரீட்டின் தரத்தை கண்ணால் அளவிட முடியாது என்பதால் இந்த எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது தரையில் உள்ள கான்கிரீட்டை சோதனை செய்வது.



ஆணி அடித்து முடித்தவுடன்..



கான்கிரீட்டின் உள் எவ்வளவு தூரம் போயுள்ளது எனபதை அளக்கிறார்கள்.ஆணியின் அளவு தெரியும் அதனால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் அளவை பார்த்து அதை முழு நீளத்தில் இருந்து கழித்தால் கான்கிரீட் உள்ளே போன நீளம் தெரிந்துவிடும்.



அளவுகளை எடுத்த பிறகு அந்த ஆணியையும் எடுத்துவிடலாம்.ஆணியை எடுத்த இடம்.



கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க மற்றொரு முறையும் இருக்கு அது அடுத்த பதில் போடுகிறேன்.

Tuesday, March 17, 2009

தண்ணீர் கசிவை தடுக்க.

உலகமெங்கும் நிதி நிலவரம் மோசமாக போய்கொண்டிருக்கும் வேளையில் இதனால் பல தொழிலாளர்கள் வேலையிழப்பு அதன் பிறகு பிறந்த தேசத்துக்கே போகவேண்டிய சூழ்நிலை என்ற இறுக்கமான சூழ்நிலை இருந்தாலும் அங்கங்கு சில வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

போன வாரம் வழக்கமாக வீட்டுக்கு நடந்து போகும் வழியை தேர்ந்தெடுக்காமல் வேறு வழியில் போன போது இந்த கட்டுமான வேலை கண்ணில் பட்டது.என்னடா! ஏதோ கருப்பாக இருக்கே என்று எட்டிப்பார்த்த போது அஸ்திவாரத்துக்கு கீழே இருந்து தண்ணீர் ஊற்றெடுக்காமல் இருக்க இந்த மாதிரி தார் அட்டைகளை போட்டு அதன் மீது தாரை உற்றி ஒரு கார்ப்பெட்டே போடுகிறார்கள்.அனேகமாக இதன் மீது மெல்லிய கான்கிரீட் போட்டு அதன் பிறகு அதன் மேல் கம்பி கட்டி அஸ்திவார ஸிலாப் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

என்ன தான் பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் கீழே போகும் போது பக்கத்தில் உள்ள கடல் நீர் தன் வழியை தேடி மேலே வர முயற்சிக்கும்,அதை தடுக்கவே இம்முறை.

பிட்டுமன் அட்டைகள்



தார் உருளைகள்




11 நாட்களில் கண்ட முன்னேற்றம்.




பக்கத்திலேயே இன்னொரு வேலையும் ஆரம்பிக்கிறது.. நம்பிக்கையும் வருகிறது.


Monday, March 16, 2009

கட்டிடத்துக்கு சட்டை.

இந்த Cladding என்று சொல்லப்படுகிற முறை எனக்கு தெரிந்து 1990 வரை அவ்வளவாக பிரபல்யமடையவில்லை அதுவும் இந்தியா முழுவதும் இதன் பயன்பாடு அவ்வளவாக இல்லை.அதற்கு காரணமும் இருந்தது.

1995யில் சிங்கை வந்ததும் இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்களும் சட்டை போட்டிருந்ததும் பிரம்மிப்பாக இருந்தது.முதலில் இதை பார்த்ததும் சும்மா அழகுக்காகத் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன்.பல கட்டிடங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்த போது இதன் தொழிற்நுட்பமும் இதனால் ஏற்படும் விளைவுகளும் புரிந்தது.

அதிக உயரமான கட்டிடங்கள் அதுவும் குளீரட்டப்பட்ட நிலையில் இருக்கும் கட்டிடங்கள் வெளி வெப்பத்தினால் Centralised Air Conditioning System அதிகமாக உழைக்கவேண்டி வந்தது அதனால் மின்சார பயனீடு அதிகமானது.கட்டிடத்தின் சூடு வெளி வெப்பம் மூலம் அதிகமாகமல் இருக்க அதே சமயத்தில் உள்ளுக்குள் இருக்கும் குளிர்/சூடு வெளியில் போகாமல் தடுக்கவும் இம்முறை மிகப்பெரிய பலனை கொடுத்ததால் உலகமெங்கும் இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.அந்த பயன்பாடு மட்டுமில்லாமல் கட்டிடத்துக்கு ஒரு அழகையும் கொடுக்க அதையே மெறுகேற்றி நமக்கு படம் காட்ட ஆரம்பித்தார்கள்.இதை தூசி துடைப்பது எளிது அத்துடன் இது இருக்கும் இடத்தில் ஒரு செங்கல் சுவர் கட்டவேண்டும் என்றால் கால அவகாசம் வேண்டும் அத்தோடு செலவும் அதிகமாகும்.செங்கல் சுவரின் எடையை கணக்கில் எடுத்தால் இதன் எடை மிகவும் குறைவு இதனால் கட்டிடத்தின் மொத்த எடையும் குறையும்.

இந்த முறையை சுலபமாக எப்படி செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள இரு படங்களை பார்த்துதெரிந்துகொள்ளலாம்.நுட்பமான விஷயங்களை சொல்லாமல் விட்டிருக்கேன்.இதில் இவர்கள் செய்யும் முறை அவ்வளவு பாதுகாப்பாக தெரியவில்லை.



சற்று முன் எடுத்தது.



இப்படி செய்கின்ற Cladding க்கு சோதனை முறைகள் இருக்கு.

Pressure Test

Water Test என்று பல.

Sunday, September 07, 2008

எப்படி மூடனும்??

சாலையை தோண்டினால் எப்படி மூடனும், தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்,இந்த மாதிரி உள்ள இயந்தரத்தை பல முறை உபயோகித்து மண்ணை இறுக்கவேண்டும்,அதற்குப்பிறகு சாலை பிட்டுமனை போடவேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையை கடக்க நிறுகும் வேளையில் தொலைப்பேசி வழியாக எடுத்தது.





படத்தின் தரம்.... எடுத்த படி.

Saturday, May 03, 2008

காவிரி கரை மீது (3)

ஆமாம் இந்த பீம் எல்லாம் மேலே வைத்து கான்கிரீட் போடுகிறார்களா? இல்லை என்றால் அதை எப்படி மேலே கொண்டு வருகிறார்கள்?

பார்ப்போமா?

இந்த பால வேலை - Design இடத்துக்கு தகுந்த மாதிரியா அல்லது இந்த டிசைன் தான் வேறு இடத்தில் கடைபிடிக்கப்பட்டு ஒன்றும் பிரச்சனையில்லாத்தால் இங்கும் கடைபிடிக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை.

இன்றைய நிலமையை பார்க்கும் போது கட்டுமான வேலைகள் ஆரம்பித்து 1 வருட காலம் ஓடியிருக்கும் போல் தோனுகிறது.கோடைகாலம் முடியும் வரை ஒப்பந்தக்காரர்களுக்கு பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்,ஏனென்றால் தண்ணீர் வரத்து இருக்காதல்லவா!!

இந்த பீம்களை - precast முறையில் போட்டு Derrick கொண்டு தூக்கி அந்த தூணின் மேல் உள்ள சின்ன மேடைமீது வைக்கிறார்கள்.

முதலில் இந்த Derrick இரு தூண்களின் மீது இப்படி வைக்கிறார்கள்.



இந்த Derrick ஐயும் அடுத்த தூணுக்கு மாற்றுவதற்கு எளிதாக அதையும் சக்கரத்தின் உதவியோடு தண்டவாளத்தின் மீது வைத்துள்ளார்கள்.இது அந்த கான்கிரீட் பீம்களை மேலே தூக்குவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
கான்கிரீட் மீது உட்காரும் இடத்தில் அதை போல்ட் போட்டு இணைத்துவிடுவார்கள்.கீழே பாருங்கள்.



இப்போது இரு முனையிலும் நிலைநிறுத்திவிட்டதால் இதைக்கொண்டு அந்த பீம்களை பாதுகாப்பாக மேலே கொண்டுபோக முடியும்.

அடுத்த அந்த பீம்களை எப்படி தூக்குகிறார்கள் என்று பார்ப்போம்.

இந்த Derrick க்கு பக்கத்தில் (தரையில் பாருங்கள்) இன்னொரு தண்டவாளம் போட்டிருக்கிறார்கள்.அதன் மூலம் தான் தேவையான இடத்துக்கு அந்த பீம்களை கொண்டுவருவார்கள்.



Derrick யின் மேற்பக்கத்தில் ஒரு சிறிய தூண் தெரிகிறதே அது தான் Hydralic Jack,அதன் மூலம் தான் தூக்குவார்கள்.சரியான உயரத்துக்கு வந்ததும் அப்படியே இழுத்து தேவையான இடத்துக்கு கொண்டு செல்வார்கள்.

கீழே உள்ள படம் தான் பீம்கள் கான்கிரீட் போடும் இடம்.



எல்லாம் சரி தான்... இந்த வேலை எப்ப முடியும்??

தண்ணீர் வருவதற்கு முன்பு பீம் வேலைகள் முடிந்தால் சீக்கிரம் முடிய வாய்புள்ளது,இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நாட்கள்ள்ள்ள்ள்ள்ள் ஆகும்.

Thursday, May 01, 2008

காவிரி நதி மீது (2)

இது பால பீம்களை தாங்கும் சப்போர்ட்கள்



இது கான்கிரீட் போட்டுள்ள சப்போர்ட்கள்.



மேலே உள்ள படத்தில் பல பாதுக்காப்புக்குறைகள் உள்ளன.மேலே வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளியே தவறி விழ பல வாய்ப்புகள் உள்ளது.அதே போல் த்ரையில் இருந்து மேலே வர அவ்வளவு நீளமான ஏணி கூட சரியான அனுகுமுறை அல்ல.

கீழே உள்ள படத்தில் உள்ளது,பீமும் அதன் சப்போர்ட்டும் நெருக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.அதென்ன பீமின் கடைசியில் ஓட்டை ஓட்டையாக!!

அது தான் Pre- tension என்று சொல்லப்படுகிற முறை,இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முறை இங்கு சொல்லியுள்ளேன்.சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்...

கான்கிரீட் பீம்களிம் அளவை குறைக்கவும் அதிக நீளத்தில் இருக்கவும் உதவுகிறது.



இந்த Pre-tension கேபிள் போகும் duct ஐ இன்னும் கிட்டக்கப்பார்த்தால் கீழே உள்ள மாதிரி இருக்கும்.



கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கினால் இன்னும் பல விஷயங்கள் தரையில் கொட்டிக்கிடப்பதை பார்க்கலாம்.



இன்னும் பார்க்கலாம்...அடுத்த பதிவில்.

Tuesday, April 29, 2008

காவிரி நதி மீது (1)

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற போது பேருந்தில் பாலத்தை கடக்கும் போது இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்பால பணி கண்ணில்பட்டது,அது உங்கள் பார்வைக்கு....

இப்போது இருக்கும் பாலத்தின் மீது நின்றுகொண்டு காவிரி அழகை காணலாம் என்று நின்றால் ,அங்கு போய் கொண்டு இருக்கும் வண்டிகள் மூலம் பால அதிர்வு இருப்பதை நன்கு உணர முடியும்.

1979 களில் முதன்முறையாக இங்கு சென்ற போது இந்த பாலத்தின் முகப்பில் ஏதோ எச்சரிக்கை அறிவிப்புப் பலகையை பார்த்த ஞாபகம். என்னவென்று சரியாக்க நினைவில்லை ஆனால் அந்த ஆட்டம் மட்டும் நினைவில் இருக்கிறது.



இன்றைய நிலமைக்கு ஈடுகொடுக்க மற்றொரு மேம்பாலம் தேவை என்று நினைத்த அரசாங்கம் இப்போது புதிய பாலம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,அதை எப்படி செய்கிறார்கள்? என்று பார்ப்போமா...

நிறைய படங்கள் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் சொல்கிறேன்.

இந்த பால Design வெகு எளிமையாக செய்யப்பட்டுள்ளது.

பால எடையை தாங்க Piling செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதன் மீது Foundation போட்டிருக்கிறார்ர்கள்.கீழே உள்ள படம் பார்க்க.



அதன் மீது தூண்...



அந்த தூண் மீது பாலம் வர ஏதுவாக இருக்கும் தாங்கும் Beam.

முதலில் சாரப்பணி தொடங்குகிறது...



கான்கிரீட் போட்டு முடிந்தபிறகு..




வெகு அதிசயமான காட்சி அதற்கு Curing என சொல்லப்படுகிற குளிர்வூட்டும் நிகழ்ச்சி.இதை பெரும்பாளானவர்கள் செய்வதில்லை.

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

படம் எடுக்க உதவிய மச்சினருக்கு "நன்றி".

Monday, July 02, 2007

1960 களில்

கட்டுமானத்துறை 1960 களில் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.நடந்தது இங்கு அல்ல,அமெரிக்காவில். கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.நமக்கு நன்கு பரிட்சயமான உலக வர்த்தக மையம்.1970 டிசம்பர் மாதம், கடைசி பீமை வைக்கிறார்கள்.



எவ்வளவு மனிதர்களின் உழைப்பு?? மண்ணானது சில கிறுக்கு புத்தி மனிதர்களால்!!

1970 களில் இவர்கள் உபயோகப்படுத்திய இந்த தொழிற்நுட்பங்கள் ஆசியாவை வந்தடைய சுமார் 10 ஆண்டுகள் ஆயின.ஆனால் நேற்று ஐபோன் அங்கு வந்தால் சில நாட்களில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது.

நிஜமாகவே உலகம் சுருங்கிவிட்டது.

Saturday, March 24, 2007

அலங்கார கட்டுமானம்

கட்டுமானத்துறையில் இது மாதிரி சில வேலைகள் "அட!!" போடவைக்கும்.அதில் இதுவும் ஒன்று.

கீழ் கண்ட படம் எனக்கு தனிமெயில் வந்தது.(நன்றி:ஆர்.பத்மநாபன் - இந்தோனேசியா)


இது டென்மார்க்கையும் ஸ்வீடனையும் இணைக்கிறது.

இது வரை கட்டப்பட்டு வந்த பாலங்கள் நதி/கடலை உபயோகப்படுத்தும் கப்பல்களுக்கு வழி விட கொஞ்சம் தூக்கி கட்டுவார்கள்.
இந்த படத்தில் பாருங்க,எங்க தேவையோ அங்கு அழகாக கடலுக்கு அடியில் Tunnel முறைப்படி கீழே கொண்டு போய்,இரு வழிப்பயணத்தையும் அருமையாக கையாண்டிருக்கிறார்கள்.
பார்பதற்கே எவ்வளவு அழகாக உள்ளது?


அழகாக இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று சொல்வார்கள்.இங்கு என்ன ஆபத்து இருக்கு?
எனக்கு தெரிந்து "சுனாமி மாதிரி ஏதேனும் வந்தால்,Tunnel உள்ளேயே ஜல சமாதி தான்".
பயப்படாதீங்க... இது ஒரு அனுமானம் தான்.

இந்த மாதிரி விஷயங்களையும் ஆராய்ந்து தான் கட்டியிருப்பார்கள்.ஒரு வேளை அந்த நிலப்பரப்பில்,சுனாமி வர வாய்பில்லாமல் இருந்திருக்கும்.

வர வர, எங்கள் துறையும் பேஷன் ஷோ மாதிரி ஆகிவிட்டது.

Tuesday, February 20, 2007

Pre-Cast

10 பக்கங்கள் எழுதுவதை ஒரு படம் போட்டு சொல்லி விடலாம்.அதன்படி Pre-Cast என்னும் தொழிற்நுட்பம் இங்கு எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.கான்டேக்ட் முகவரியில்லாத்தால் அப்படியே சுட்டு திருப்பி போட்டிருக்கேன்.வழக்கம் போல் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,பதில் எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்கிறேன்.
மேல்படத்தின் வலது பக்கம் உள்ளது நெகடிவ் மோல்ட்.இடது பக்கம் உள்ளது கான்கிரீட் போட்டது.
போட்ட கான்கிரீட் கிட்டத்தில்

ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.


இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் பார்க்கலாம்.






போட்ட கான்கிரீட்க்கு முட்டு கொடுத்திருப்பதை கீழே உள்ள படம் காட்டுகிறது.

இந்த பிரி-காஸ்ட் வேலை, ஒரு பாலத்தை ஆஸ்திரேலியாவில் எப்படி செய்கிறார்கள் என்ற படத்தை காண இங்கே சொடுக்குங்கள்.

இந்த பக்கத்தில் பாருங்கள் அதைவிட விபரமாக இருக்கிறது,இது தாய்லாந்தில் கட்டப்படும் ஒரு கட்டுமானத்தில் நடப்பது.

Tuesday, February 06, 2007

தொழிற்நுட்ப மாற்றம்

இதன் முந்தய தொடரில் தண்ணீர் கசிவைப்பற்றி சொல்லியிருந்தேன்.அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்றும் அதற்கு அப்போது அதை தடுக்க என்ன முறையை கையாண்டார்கள் எனபதை எழுதியிருந்தேன்.

அதே தொழிற்நுட்பம் தான் அதை கொஞ்சம் மாற்றி கீழ் கண்டவாறு செய்கிறார்கள்.

அதன்படி சுற்றுச்சுவரின் கீழ் ஏதும் குழாய் பொருத்தமாட்டார்கள்.
அதென்ன அந்த குழாய் பொருத்துவது அவ்வளவு கஷ்டமான வேலையா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.இது ஒரு தனி குத்தகைகாரர் என்பதால் அவரை சரியான நேரத்துக்கு கூப்பிடவேண்டும்.அவர் செய்துவிட்டு போன பிறகு அந்த குழாய் சேதம் அடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதெல்லாம் சின்னஞ்சிறிய பிரச்சனைகள்.அவற்றை களைவதற்கு இப்படி செய்துவிட்டார்கள்.

சுவர் வழியாக தண்ணீர் வரும் வழியை அடையாளம் கண்டபிறகு,அந்த இடத்தில் ஒரு சிறிய ஓட்டை போட்டு





கீழ் காணும் பிளாஸ்டிக்கை பொருத்த வேண்டும்.




பிறகு இந்த கரைசலை தேவையான அளவு இந்த PUMPயில் இட்டு






இந்த மாதிரி தள்ளவேண்டும்.


ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் நிறுத்தினால் கண்ணுக்கு தெரியாத விரிசலுக்குள்ளும் இந்த கரைசல் போய் நிரப்பும்.தண்ணீர் காணப்படும் இடங்களில் அதனுடன் வினைபுரிந்து விரிவாகி விரிசலை அடைக்கும்.
இப்படி போன கரைசல் Foam மாதிரி மாறி தண்ணீர் வரத்தை சுத்தமாக நிறுத்திவிடுகிறது.

இந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதில்லை.அதிக பட்சமாக இருவர்.

தேவைப்படும் உபகரணங்கள்

கரைசலை கலக்க பயண்படும் இயந்திரம்
ஓட்டை போட டிரில்லர்..அவ்வளவு தான்.

தேவைப்படும் உதிரி பாகங்கள்
மேல் காண்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பி.
மற்றும் சிறிய கைச்சாமான்கள்

நான் வேலை செய்த காலங்களில் நம் நாட்டில் பார்க்கவில்லை. ஒருவேளை இப்போது வந்திருக்கலாம்.

கட்டுமானத்துறையில் வியாபாரத்துக்காக நுழையவிரும்பும் மக்கள், சிறிய முதலீட்டுடன் இறங்கி பணம் பார்க்கலாம்.

முயலுங்களேன்.

Monday, January 29, 2007

தண்ணீர் கசிவு

போன பதிவில் கான்கிரீட்டில் தோன்றும் விரிசலும் அதன் மூலம் தண்ணீர் கசிவையும் பற்றி மேலோட்டமாக பார்த்தோம்.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




உதாரணத்துக்கு நிலத்துக்கு கீழே போடப்படும் அஸ்திவாரமும் அதற்கு அடுத்து போடப்போகும் சுற்றுச்சுவரின் குறுக்கு வெட்டுப்படம் கீழே போட்டுள்ளேன்.


அஸ்திவாரம் போடும் போது,வெளிப்புரத்தில் காட்டியபடி ஒரு ரப்பர் டைப்பில் உள்ள ஒரு தட்டை வைத்து கான்கிரீட் போடுவார்கள்.இது பாதி கீழ் கான்கிரீட்டிலும் மீதி சுற்றுச்சுவர் கான்கிரீட்டில் பதியுமாறு பொருத்தப்படும்.இதனால் வெளியில் இருந்து வரும் தண்ணீர் உள்ளே வருவது தடுக்கப்படும்.

இது ஒரு வழி.

மற்றொரு வழி

அஸ்திவாரம் மற்றும் சுற்றுச்சுவர் இடையே உள்ள ஜாயின்ட் இல் கீழ்கண்ட மாதிரி ஒரு குழாயை பொருத்துவார்கள்.அதன் வாய் பக்கம் சுவர் கான்கிரீட்டுக்கு வெளியில் இருக்கும்.



கலர் படங்கள் கீழே




இப்படி பொறுத்தியபிறகு சுவர் கான்கிரீட் போடப்படும்.அந்த குழாய் முற்றிலும் கான்கிரீட் உள்ளே புதைந்துவிடும்.

இப்போது அந்த ஜாயின்ட் மூலம் தண்ணீர் கசிந்தால் மட்டுமே இந்த குழாய் உபயோகப்படும்,இல்லாவிட்டால் அப்படியே விட்டுவிடுவார்கள்.இது ஒரு வருமுன் காக்கும் தற்காப்பு நடவடிக்கை தான்.

சரி தண்ணீர் கசிகிறது என்றால்,இந்த குழாய் பொருத்திய குத்தைகாரர்களே அதற்கான உபகரணங்களுடன் வந்து தேவையான கெமிகல்களை கொண்டு பம்ப் மூலம் அந்த குழாயில் செலுத்துவார்கள்.இந்த ரசாயன கரைசல் தண்ணீருடன் கலந்து விரிய ஆரம்பிக்கும்..இந்த கரைசல் தண்ணீர் இருக்கும் இடங்களில் நன்றாக வேலைசெய்கிறது.இது நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சிங்கையில் பார்த்த தொழிற்நுட்பம்.


இந்த தொழிற்நுட்பத்தை இப்போது எப்படி மாற்றிஅமைத்துள்ளார்கள் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, January 26, 2007

விரிசல்

கான்கிரீட் விரிசல்


கான்கிரீட்டின் பயன்பாடு என்பது கட்டுமானத்துறையில் முதுகெலும்பு போல்.அது இல்லாமல் இப்போது எந்த கட்டிடமும் கட்டப்படுவதில்லை.

ஆந்திரா பக்கம் போனால் இன்னும் சில கிராமங்களில் கிடைக்கும் கடப்பா கற்களை மட்டும் வைத்து அடுக்கி வீடு கட்டியிருப்பார்கள்.இங்கு சிமின்டுக்கு வேலையில்லாமல் போகிறது.ஏன் நம் பக்கம் இன்னும் சில கிராமங்களில் மண் சுவர் தான்,மேலுக்கு கீத்துக்கொட்டகை தான்.

இன்று கான்கிரீட் பல விதங்களில் பல நிறங்களில் கூட வருகிறது.அதன் நிறம் அது ஈரமாக இருக்கும் போது தான் தெரியும்.அதுவும் அது எந்த வகை சிமின்ட் மூலம் கலக்கப்படுகிறதோ அதன் நிறம் தெரியும்.

பெரிய பெரிய கட்டுமானப்பணியில் இப்போது கலவை இயந்திரம் வைத்து ஆட்களைக்கொண்டு ஜல்லி,மணல் மற்றும் சிமின்ட் போடுவதில்லை.அதற்குப்பதிலாக பேட்சிங் பிளான்ட் வைத்து அதன் மூலம் கலந்து ஓடும் கலவை இயந்திரம் மூலம் அந்தந்த இடத்துக்கு அனுப்பிவைப்பார்கள்.இப்படி பல வேலைகளை இயந்திரத்துக்கு மாற்றியதால் தரக்கட்டுப்பாடு 90% வரை அடையமுடிகிறது.

கான்கிரீட் கலக்கும் பேட்சிங் பிளான்ட்

இப்படி தரக்கட்டுப்பாடு அமைந்ததால் போடும் கான்கிரீட்டில் பிரச்சனை இருக்காது என்று பொருளாகாது.

அதுவும் தரைக்கு கீழ் கான்கிரீட் போடும் வேலை என்றால் பல விஷயங்களில் கவனம் வேண்டும்.எல்லாவற்றையும் செய்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் நமக்கு தப்பாமல் தண்ணிகாட்டும் அது தான் "தண்ணீர்".ஆதாவது கான்கிரீட் மூலம் தண்ணீர் ஒழுகுவது.

ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு சில காரணங்கள்..

கான்கிரீட் போடும் போது உபயோகிக்க வேண்டிய அதிர்வு இயந்திரம் (Viberator) சரியாக உபயோகப்படுத்தாது,அல்லது தேவையான அளவு போடாமல் போனாலும் கான்கிரீட் உள்ளேயே சிறிய ஓட்டைகள் உருவாகிவிடும்.இந்த ஓட்டைகள் மூலம் தண்ணீர் கசிய வழிபிறக்கும்.

மற்றது,போட்ட கான்கிரீட்க்கு பக்கவாட்டிலோ,மேலேயோ வரும் பாரம் அதன் மறுபக்கத்தில் சிறு விரிசலைக்கொடுத்து அதன் மூலமும் தண்ணீர் வர வழிவகுக்கும்.

மூன்றாவதாக பழைய மற்றும் புதிய கட்டுமான ஜாய்ன்ட் யில் சரியாக பராமரிக்காமல் போடப்படும் கான்கிரீட் மூலமும் வரும்.

இப்படி பல வழியாக வரும் தண்ணீருக்கு நாம் எப்படி தண்ணி காட்டப்போகிறோம் என்பதைப் பற்றி தான் வரும் பதிவுகளில் எழுதப்போகிறேன்.

முதலில் கான்கிரீட் ஏன் விரிசல் விடுகிறது? இங்கே சொடுக்கவும்



http://www.lmcc.com/news/spring2002/spring2002-7.asp


இன்னும் மேல் விபரங்களுக்கு இங்கும் பார்க்க


http://www.lmcc.com/news/summer2006/summer2006-04.asp