Saturday, December 29, 2012

இதுவும் கண்டுபிடிப்பு தான்.

சில சமயம் பழைய கண்டுபிடிப்புகளை பற்றிய புத்தகங்களை படிக்கும்போது அந்த கண்டுபிடிப்புகளெல்லாம் ஏதோ ஒரு விபத்து தானோ என்ற சந்தேகம் வருவதுண்டு ஆனால் எனக்கு நேர்ந்தது....சத்தியமாக கண்டுபிடிப்பு அல்ல ஆனால் நிச்சயமாக ஒரு விபத்து தான்.

சிங்கையில் இருந்த போது அப்போது தான் வந்த DVD Recorder மீது கண் விழுந்து வாங்கினேன்.சுமார் 549 வெள்ளி என்று நினைக்கிறேன்.நம்ம பழைய கேசட் எல்லாம் Fungus வந்து பள் இளிக்கும் கால கட்டத்தில் இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நம்பி வாங்கினேன்.

சென்னைக்கு வந்த பிறகும் அதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்வுகளை சேமித்து பின் பார்த்துக்கொண்டிருந்தோம்.நடுவில் இந்த Set-up Box வந்ததும்,நிறைய சேனல்கள் வாழ்கையை ஆக்கிரமித்ததும் நேற்றைய நிகழ்வு இன்று Bore அடிக்க ஆரம்பித்ததால் இந்த Recorder க்கு வேலை இல்லாமல் தேமே என்று தூங்கிக்கொண்டிருந்தது.எப்போதோ வருகிற DVD/VCD க்கு பார்பதற்கு வேறு வழி இருந்ததால் இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன்.திடிரென்று ஞானோதோயம் வந்து ஒரு நாள் ஒரு வட்டை போட்டு பார்க்கலாம் என்று On செய்து Eject Button ஐ அழுத்தினால் உள்ளிருக்கும் சிறிய மோட்டார் வேலை செய்யும் சத்தம் கேட்கிறது ஆனால் வட்டு டிரே வெளியே வர மறுத்தது. “Blocked" என்ற பிழையுடன் நின்று போனது.நமது கணினியில் இருக்கும் Tray கீழே இருக்கும் சிறிய துளை இதில் இல்லை அதனால் Tray ஐ வெளியே கொண்டு வர வழியே இல்லாமலிருந்தது.நம் ஆண்டவர் கூகிளில் தேடினால் என்னைப் போல் பலருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரிந்தது.பல வழிகள் சொல்லப்பட்டிருந்தது.அதில் ஒன்று “Tray க்கு கீழே ஒரு Lock இருக்கு அதை பேப்பர் கட்டர் கத்தியை கொண்டு விலக்கிவிட்டால் Tray வந்து விடும்” என்று போட்டிருந்தது. பல தடவை செய்தும்    ப்லன் இல்லை.மற்றொரு நாள் இன்னொரு ஐடியா சொல்லியிருந்ததை செயல்படுத்தினேன்,ஆதாவது Power Button ஐ அழுத்திக்கொண்டு மெயின் Power Switch On செய்வது- இதுவும் பலனளிக்கவில்லை.

இந்த பிரச்சனையை சில நாள் ஆரப்போட்டுவிட்டு Paper Cutter முறையை செயல்படுத்திய போது Tray வெளியே வந்தது.பல முறை Eject - Close- Eject போட்டு முயன்ற பிறகு எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து மூடிவிட்டேன்.ஆனால் சில நாட்களிலேயே அப்பிரச்சனை மீண்டும் வந்தது.Tray Moving Parts களில் கொஞ்சம் எண்ணெய் போட்டு வைத்தேன் அதற்கும் சரியாகவில்லை, சரி பீராய்சுடவேண்டியது தான் என்று Screw Driver மூலம் முயற்சித்தேன் ஆனால் அதில் உள்ள Screws எல்லாம் வேறு மாதிரி இருந்தது.சாதரணமான Star/flat Driver மூலம் கழற்ற முடியாத்தாக இருந்தது.பல கடைகளில் ஏறி இறங்கினாலும் கிடைக்க மறுத்தது.மற்றொரு நாள் வேறொறு Screw Driver மூலம் முயன்ற போது வெற்றி கிடைத்தது ஆனாலும் DVD Tray கழற்றுகிற மாதிரி இல்லாத்தால் அம்முயற்சியை கைவிட்டேன்.

கடைசியாக ஒரு வட்டை Tray உள்ளேயே வைத்து மூடி திறந்த போது Tray சொல் பேச்சை கேட்க ஆரம்பித்தது அதனால் எப்போதும் அதனுள் ஒரு வட்டு இருப்பதை உறுதிபடுத்திவிட்டால்  மூடி திறப்பதில் பிரச்சனை இருக்காது என்று தெரிகிறது.

என்னைப்போல் யாருக்காவது இதே மாதிரி பிரச்ச்னை இருந்தால் சல்லிக்காசு கொடுக்காமல் முயன்று பார்த்து வெற்றி தோல்வியை பகிர்ந்துகொள்ளலாம் அதற்கு பிறகு நான் Patent Register செய்யலாம் என்றுள்ளேன். :-)

Sunday, December 02, 2012

பச்சை மீது ஆசை.

பலருக்கு தோட்டம் துரவு மீது ஒரு ஆர்வம் இருக்கும் ஆனால் இட மற்றும் பண பிரச்சனை போன்றவைகளால் அது கூடாமல் இருக்ககூடும்.எனக்கும் இந்த பசுமை மீது ஆர்வம் இருந்தாலும் மிகப்பெரிய ஈடுபாடு எல்லாம் கிடையாது ஆனால் மனைவிக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு தேடிப்பிடித்து மண்,செடி & உரம் வாங்கி வந்து வளர்ப்பார்கள்.நான் இணையம் மூலம் கிடைக்கும் விபரங்களை கொடுத்து உதவுவேன் மற்றபடி அவ்வப்போது தோட்டக்காரன் வேலையும் கிடைக்கும்.
மிக எளிதாக வளர்க்க கூடியதாக தோன்றிய தக்காளி செடியை வளர்க்கலாம் என்று யோசித்து பல்லாவரம் மேம்பாலத்துக்கு கீழே போட்டுவைத்திருக்கும் நெகிழி பெட்டி இரண்டு ரூபாய் 140 க்கு வாங்கினேன்.செடி வளர்ப்புக்கு ஏற்ற மாதிரி மேற் மூடியை அவர்களே வெட்டி கொடுத்தார்கள்.

மனைவி தக்காளியை சமையலுக்காக வெட்டிய போது கிடைத்த விரைகளை நன்றாக தண்ணீரில் அலசிய பிறகு மண் மீது தூவி அதன் மேல் சிறிது மண் போட்டு மூடினேன்.கொஞ்ச நாளில் செடி முளைத்தது ஆனால் இரண்டு அங்குலம் உயரம் வந்தது வளர்ச்சி சுணங்குவது போல் தோன்றியதால் செடியை பிடிங்கி வேறு தொட்டியில் நட்டு தண்ணீர் விட்டேன்.தொட்டி பெரியதாக இருப்பது போன்று தோனியதால் மேலும் இரண்டு செடிகளை நட்டேன்.கொஞ்ச நாளில் பெரிதாகி இப்போது பூவும் வந்துவிட்டது ஆனால் வேர் மண்ணிற்கு மேல் புறம் தெண்படுவதால் மண் தேவையான அளவு இல்லையோ என்று தோனுகிறது.

இது ஒரு முயற்சி என்பதால் தவறுகளை திருத்தி மேலும் முயலவேண்டும்.
இரண்டாவது தொட்டியில் இப்போதே காய்கறி கழிவுகளை போட்டு தொழு உரம் தயாரிக்க தயார் செய்துவருகிறேன்.மொட்டை மாடியில் வைத்திருப்பதால் மண்,சட்டி எல்லாம் கீழிருந்து கொண்டு வரவேண்டியுள்ளது.



கருதுளசி மற்றும் மல்லிகை செடிகள்.


ரோஜாவும் இருக்கு, இப்போது தான் மொட்டு வருகிறது.


Friday, November 30, 2012

பாதுகாப்பு பாவனை பயிற்சி

கட்டுமானத்துறை இடம் என்றால் புதிதாக ஆட்கள் வந்தவுடன் காலணி,தலைக்கவசம் மற்றும் தேவையான உபகரணங்கள் கொடுப்பதோடு முதலாளிகளின்/குத்தகைக்காரர்களின் வேலை முடிவதில்லை.இப்போதெல்லாம் பல தொழிலாளிகள் வடக்கு மாநிலத்தில் இருந்து வருவதால் இங்குள்ள நிலமை மற்றும் விபத்து அல்லது பேரிடர் ஏற்படும் போது என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் மொழியில் விளக்கவேண்டும், அதோடில்லாமல் அவசரகால தொலைப்பேசி எண்களையும் சொல்லச்சொல்லி அவர்கள் நினைவில் நிறுத்துவார்கள்.

சமீபத்தில் அந்த மாதிரி விளக்க கூட்டம் நடைபெறும் போது எடுத்த படங்கள் கீழே.அதில் ஒருவர் வேலைசெய்யும் இடத்தில் அடிபட்டால் அல்லது கீழே விழுந்துவிட்டால் என்னென்ன செய்யவேண்டும் என்பதை விளக்கி அடிபட்டவரை எப்படி தூக்கவேண்டும்,என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை பாவனை பயிற்சி மூலம் விளக்குவார்கள். இதெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு இல்லாதது.கட்டுமான உரிமையாளர் கொடுக்கும் அழுத்தமும்,ISO தரம் கட்டிக்காக்கவும் மற்றும் காப்பீடு செலவை குறைக்கவும் கட்டாயமாக்கப்பட்டதால் செய்யப்படும் நிகழ்வுகள்.இதெல்லாம் செய்வதால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வருகிறது என்றால் மிகையில்லை.

Sunday, August 12, 2012

முகத்தை அழகாக்குங்கள்.

இது Facial செய்வதற்கான குறிப்போ அல்லது செய்முறையோ கிடையாது.

சில நாட்களுக்கு முன்பு வேலை வெட்டி இல்லாத நேரத்தில் ஹாட்மெயிலில் உள்ள பழைய செய்திகளை அழித்துக்கொண்டு வந்தேன் அதில் ஒரு நண்பனின் மெயிலும் இருந்தது அதையும் அழித்துவிடலாம் என்றிருந்தேன் ஏனென்றால் என்னுடைய பழைய மெயிலுக்கு அவனிடம் இருந்து பதில் வராததால் அவனுடைய தொடர்பு போய்விட்டது என்றே நினைத்திருந்தேன்.அவனைப் பற்றிய சிறு குறிப்பு : என்னுடன்  ஒரு வேலையிடத்தில் சிங்கையில் வேலைப்பார்த்தவர்.இலங்கை தமிழர், அவர் பேசும் தமிழ் சில இடங்களில் புரியாமல் இரண்டாம் முறை கேட்டு தெளிவடைவேன்.சில மாதங்கள் மட்டுமே அவருடன் இருந்ததால் வந்த நட்பு வந்தது. சில முறை வாழ்கையில் பக்கங்களை புரட்டும் போது இலங்கை தமிழர்களுடன் ஏற்படுகின்ற நட்பு வெகு எளிதாக ஏற்பட்டு விடுவாக உணர்கிறேன் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போது சாதரணமாக இருந்த நான், சுமாராக மேலே போவதற்கு உதவியாக இருந்தது ஒரு இலங்கை தமிழர் அவர் பெயர் : பிரபாகரன் - உயர்நிலை பள்ளி வரை ஒன்றாக படித்தோம் அதற்கு பிறகு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் நான் கட்டிடவியல் படிக்க அவன் இயந்திரவியல் படிக்க, படிப்பு முடிந்தவுடன் தொடர்பு விட்டுப்போய்விட்டது. அவ்வப்போது நாகை போகும் போது என்னுடைய சக பள்ளி நண்பரிடம் அவனைப் பற்றி தகவல் உண்டா என்று விஜாரிக்கும் போது அவர்கள் குடும்பம் நாசரேத் போய்விட்டதாக சொன்னான். இன்றுவரை அவனை இணையத்தில் தேடிக்கொண்டிருக்கேன். நாசரேத்தில் இருப்பவர்கள் விபரம் தெரிந்தால் சொல்லவும்.

சிங்கையில் ஏற்பட்ட நட்பு அவர்கள் லண்டன் போன பிறகும் சில மினஞ்சல் வரை தொடர்ந்தது அதற்கு பிறகு விட்டுப்போனது.இந்நிலையில் தான் அவனுடைய அஞ்சலை நீக்கிவிடலாம் எண்ணினேன் இருந்தாலும் மனசு கேட்காமல் மற்றொரு முறை அஞ்சல் அனுப்பிப்பார்கலாம் என்று ஒரு மெயிலை அனுப்பினேன். சில நாட்களிலேயே அவனிடம் இருந்து மெயில் வந்தது, அவனும் அவர்கள் குடும்பமும் சென்னை வருவதாகவும் அங்கு சந்திக்கலாம் என்று.ஆச்சரியமாக இருந்தது.

இன்று மதியம் அவர்களை வீட்டு அழைத்துவந்திருந்தேன், கொஞ்சம் கருப்பு போய் லண்டன் சீதோஷ்ணம் அவனை வெளுப்பாக்கியிருந்தது.தலை முடிக்காக சிங்கையில் செலவு பண்ணியது எவ்வித தொந்திரவும் செய்யாமல் வழுக்கையை அப்படியே வைத்திருந்தது.லண்டன் படிப்பு மற்றும் வேலை நிலவரங்களை கேட்டு தெரிந்துகொண்டேன் .அப்போது அவர்கள் சொன்ன சில விஷயங்கள் அவ்வப்போது நாங்கள் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பும் போது பார்த்திருந்தாலும் இது கொஞ்சம் மோசமாக இருந்தது.

சென்னை குடியேற்ற கவுண்டரில் அங்குள்ள ஒரு பெண் அதிகாரி தனது அலைப்பேசியில் தமிழ் பாட்டை பெரிதாக வைத்துக்கொண்டு தான்தோற்றிதனமாக வெளிநாட்டவரை அனுப்பிக்கொண்டிருந்தாராம்.ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் குழந்தையிடம் அதன் பேரை கேட்ட தோரணையை பார்த்து குழந்தையே பதில் சொல்லாமல் இருந்துவிட்டதாம் பிறகு அம்மாவிடம் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று கேட்டதாம்.இந்தியாவின் முகம் அவர்களை வரவேற்பவர்களின் நடைமுறையை வைத்தே மதிப்பிடப்படுகிறது.அது பெரும்பாலும் பல இடங்களில் தவறாகவே கையாளப்படுகிறது.இதே மாதிரியான Ill treatment இங்கு மட்டும் அல்ல பல நாடுகளிலும் காண்பிக்கப்படுகிறது.இதே மாதிரியான ஒரு புகார் சிங்கையில் வந்த போது அதை தீவிர விசாரணை செய்து அதை திருத்தினார்கள்...எப்படி?  சரியான பயிற்சி கொடுத்து அதே சமயம் இந்த மாதிரி இடங்களில் வேலை செய்பவர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தினார்கள்.

மேலே சொன்ன நிகழ்வை சொல்லிவிட்டு நாங்கள் திரும்ப லண்டன் போகும் போது அங்கிருக்கும் அதிகாரி ஊருக்கு போன விபரம் கேட்டு பயணம் எப்படி நடந்தது என்று கேட்டு, குழந்தைகளிடம் சிரித்து பேசி அனுப்பிவைபாராம்.அதையெல்லாம் இங்கு அமல்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது சீர் செய்யவேண்டும் இல்லாவிட்டால் நம் முகம் அசலூர்காரர்களுக்கு மிக அசிங்கமாகவே தெரியும்.

அடுத்து குற்றாளம்,அருவில் தண்ணி குளிக்க வரிசை அதை சரி செய்ய போலீஸ்காரர்கள்.அதில் ஒரு சிலர் பல் துளக்கி அங்கேயே கொப்பளிக்க அவர்கள் துப்பிய கழிவு பக்கத்தில் உள்ளவர்கள் காலில் பட....அதோடில்லாமல் பல்துலக்கிய பிரஸ்ஸை அருவி தண்ணீரில் அலம்பி தங்கள் சுத்தத்தை காப்பாற்றினார்கள்,இன்னும் சிலர் மஞ்சள் பூசி அருவியை மஞ்சளாக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். நம்முடைய பல அருமையான சுற்றுலா தளங்களில் அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் இருக்கும் வசதியை அசிங்கப்படுத்துவது என்பது மிக சுலபமாக செய்துவருகிறோம்.பெரும் பணம் கொழிக்கும் சுற்றுலா துறையை சரியாக மேம்படுத்தாவிட்டால் நம் வருமானத்தை இழப்பதோடில்லாமல் இந்தியாவின் முகமும் பொலிவிழந்து போய்விடும்.

Sunday, July 22, 2012

ராட்சஷன்.

கட்டிய கட்டிடத்தை இந்த ராட்சஷன் துப்பி எறியும் போது  நரம்புகள் புடைத்தாலும் அந்த தொழிற்நுட்பம் வியக்கவே செய்கிறது .அலுவலகத்துக்கு பக்கத்தில் இருக்கும் இக்கட்டிடம் ஒரு காலத்தில் ஷூட்டிங் கட்டிடமாகவும் பிறகு அச்சுத்தொழில் நடந்ததாகவும் சொல்லப்பட்டது.மெட்ரோ கபளீகரம் செய்யும் சில நிலங்களால் சுற்றுவட்டாரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு வழிவிடும் பல கட்டிடங்களில் இதுவும் ஒன்று.





என்னுடைய கணிப்பில் இக்கட்டிடம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டியதாக இருக்ககூடும் என்பதோடில்லாமல் அவ்வப்போது பல மேம்பாடு பணிகளையும் செய்திருக்ககூடும் என்பதை இடிபாடுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

15 அங்குல சுவர்கள்,உருண்டு கம்பிகள் கொண்ட 3 அங்குல கான்கிரீட் மீது செங்கல் சிலாபுகள் என்று கேள்விப்பட்டிராத தொழிற்நுட்பங்களை காணமுடிந்தது.கீழே உள்ள படம் சிலாபே செங்கல்லில் கட்டியிருப்பதை காட்டுகிறது.


பாதி உடைந்த நிலையில் வசந்த மாளிகை எடுத்த  கட்டிடம்....கீழே.


 

Monday, July 09, 2012

தோட்ட நிலம்

சில வருடங்களுக்கு முன்பு இது பிரபலமாகி பிறகு கொஞ்சம் காலம் பேச்சு இல்லாமல் இப்போது திரும்பியிருக்கு, அது தான் Farm Garden எனப்படும் நில விற்பனை.உள்ளூரில் வீடு/நிலம் பார்த்து அலுத்த வேளையில் தெரிந்தவர் மூலம் இந்த விற்பனை வந்தது,பெரிய நிலப்பகுதி அதில் மா,தென்னை மற்றும் தேக்கு என்று மரங்கள் சுமார் 13 வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்து விற்கிறார்கள்.மாங்காய் என்றால் படுத்துக்கொண்டே கடிக்கலாம், படம் பார்க்க.பல வித ரக மாங்காய்கள் காய்கின்றன, சுவையும் மோசமாக இல்லை.தெரிந்தவர்களுக்கு மட்டுமே சொல்லியதில் இரு தொகுதி மட்டுமே மிச்சம்(வலது பக்க பவுன்ரியில்).அடுத்த தொகுதியும் விற்பனைக்கு வருகிறது அதில் தென்னை அதிகமாக உள்ளது.
நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டுமே என்ற எண்ணத்தில் மட்டுமே இங்கு போடுகிறேன்.இதற்கு நான் முகவர் அல்ல அதனால் தேவையானவர்கள் தொடர்புகொள்ளலாம்.(vaduvurkumar at gmail dot kam)




இடம்: சுங்குவார் சத்திரம் அருகில்.
கோயம்பேடுவில் இருந்து சரியாக 1 மணி நேரப்பயணம்

கூகிள் மேப்பில் இந்த இடத்தில் பார்க்கலாம்.சுலபமாக தூரங்களை கணக்கிடலாம்.



இங்கிருந்து மருதமங்களம் வழியாக காஞ்சிபுரம் போகலாம் மற்றும் 120 என்று போட்டுள்ள சாலை திருவள்ளூருக்கு போகலாம்.அமைதியான சுற்றுப்புறத்துடன் சில காலம் வாழனும் மற்றும் investment என்ற நோக்கத்துடன் வாங்கிப்போடலாம்.

மருதமங்களம் என்ற ஊர் சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது அங்கு 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலும் உள்ளது.படங்கள் கீழே.


ஊரில் உள்ள குளம்.


Thursday, May 31, 2012

நாகை செடில்


 வேண்டுதல்களில் எவ்வளவோ ரகம் அதில் இதுவும் ஒன்று ஆனால் இவ்வகை வேண்டிதல் வேறு எந்த கோவிலிலும் கண்டதில்லை.நாகை மாரியம்மன் கோவிலில் நடந்த செடிலின் நகர்படம் கீழே.

கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி பார்க்கலாம்.

செடில்- மாரியம்மன் கோவில்


 நகர் படம் கொடுத்த பத்ரிக்கு நன்றி.

Sunday, May 27, 2012

Sun Films on Car

சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனத்தில் உள்ள முகப்பு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் ஒளி புகு தண்மையை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது, அதன் மூலம் கண்ணாடிகளின் மீது ஒட்டப்படும் Sun Film க்கு தடைவந்தது.இதன் சாதக பாதகங்கள் Facebook சென்னை மாநகர காவல் பக்கத்தில் அலசப்பட்டது.மீறப்படும் வாகனங்கள் மீது  முதன் முறை 100 ரூபாய் அபராதமும் அதற்கு மேல் 300 ரூபாயும் என்று சொல்லப்பட்டது.

என்னுடைய கண்ணாடியிலும் இவ்வகை Film ஒட்டப்பட்டிருந்ததால் அதை எடுக்க சரியான நேரம் எதிர்பார்த்திருந்தேன்,அதற்கு முன்னால் அதை நாமே எடுக்கமுடியுமா என்று கூகிளில் தேடிய போது இரண்டு மணி நேரம் வெய்யில் காரை வைத்துவிட்டு  அதை எடுத்தால் சுலபமாக இருக்கும் என்றும் Mr Muscle என்ற கண்ணாடி சுத்தப்படுத்த பயண்படும் Solution இருந்தால் இன்னும் வேலை சுலபமாக முடியும் என்று சொல்லப்பட்டது.இன்று காலை அந்த வேலையில் இறங்கினேன் சுமார் 1 மணி நேரத்தில் அவ்வளவும் முடிந்தது.

பிலிம் எடுத்ததும் எடுக்காததும்

சின்ன பிளேட் மூலம் பிலிமின் முனையை நெம்மிவிட்டுக்கொள்ளுங்கள்.
பிரிக்கும் போது Mr Muscle solution ஐ தெளிக்கவும்.
மொத்தமாக எடுத்த பிறகு.

Sunday, April 22, 2012

காரைக்கால்

தமிழ் புது வருட பிறப்புக்கு மறுநாள் விடுமுறை எடுத்தால் தொடந்து 3 நாள் விடுப்பு கிடைக்கும் என்பதால், மகிழுந்துவில் எங்காவது போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம்.முதலில்  வாலாஜாபாத் அருகில் இருக்கும் தன்வந்திரி கோவிலுக்கு போய்விட்டு பிறகு பக்கத்தில் எங்காவது சுற்றிவிட்டு வரலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்தோம், இடையில் மச்சினர் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு, காரைக்கால் அருகே தர்மபுரம் என்ற ஊரில் உள்ள தட்சினாமூர்த்தி கோவிலில் ஒரு வேண்டுதல் இருக்கு போகலாமா? என்றார்கள்.கொஞ்சம் அதிக தூரம் என்பதால் மகிழுந்துவை மாற்றி மாற்றி நானும் மச்சினரும் ஓட்டினால் அலுப்பு இருவருக்குமே தெரியாது என்பதாலும் போவது என்று ஒத்துக்கொண்டோம்.

10.30-12.00 ராகுகாலம் என்பதால் 9.45க்கு வீட்டைவிட்டு கிளம்பி GST சாலை வழியே திண்டிவனம்---பாண்டி---சிதம்பரம்---சீர்காழி வழியாக திருநள்ளாறு போனோம்.மனைவி ஊர் சீர்காழி என்பதால் அங்கு கொஞ்ச நேரம் உலாவிவிட்டு கிளம்பினோம்.பாண்டியில் இருந்து திருநள்ளாறு வரை சாலை இருவழி என்பதால் வேகச்சாலையில் பயணப்பட்ட பிறகு இதில் பயணிப்பதில் கொஞ்சம் சிரமமாக இருந்தது.பல இடங்களில் வளைவுகள் மற்றும் துரப்பண பணிகள் இருந்ததால் வேகமாக போகமுடியவில்லை.திருநள்ளாறில் குளித்துவிட்டு கோவிலுக்கு போய்விட்டு இரவு எங்கு தங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தோம்.பலரும் திருநள்ளாறைவிட காரைக்காலில் தங்குவது நல்லது என்றார்கள். காரைக்கால் -- திருநள்ளாறு சுமார் 6 கி.மீட்டர் என்பதால் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது  என்று தோனியது.மனைவி பக்கம் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது காரைக்கால் பயணம் என்று முடிவானபோதே இரு தனி திட்டங்களை நான் மனதில் கொண்டிருந்தேன் அதை யாரிடமும் சொல்லவில்லை. முதலில் என்னுடன் தொழிற்நுட்ப கல்லூரியில் படித்த நண்பனை சந்திப்பது அடுத்தது நாகைக்கு போவது.
இந்த நண்பனை எப்படி பிடித்தேன் என்பது ஒரு சுவையான கதை.வேலை அவ்வளவாக இல்லாத நேரத்தில் எங்காவது என்னுடைய பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்க முடியுமா என்று net இல் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது காரைக்கால்.Net. அதில் இருக்கும் சில பெயர்களை அவர்கள் போட்டிருக்கும் கமெண்டுகளை பார்த்த போது , சும்மா முயற்சி செய்து பார்ப்போம் என்று என்னுடைய நண்பனின் பெயரை போட்டு அவன் தங்கியிருக்கும் தெருவின் பெயரையும் போட்டு யாராவது முடிந்தால் சொல்லவும் என்று போட்டேன். அதிசியமாக சில வாரங்களுக்கு பிறகு அவனிடன் இருந்து மெயில் வந்தது அதன் மூலம் தொடர்பும் கிடைத்தது.
திருநள்ளாறில் இருந்து அழைத்து வந்த விபரத்தை சொல்லிவிட்டு இப்போது அதிகமாக பசிக்கிறது அதனால் சாப்பிட்டுவிட்டு பிறகு நான் தங்கும் இடத்தை சொல்கிறேன் முடிந்தால் சந்திக்கலாம் என்றேன்.அவன் வீட்டு வசதியை சொல்லி இங்கேயே தங்கலாம் என்றான்.புது இடம் குடும்பத்துடன் எப்படி தங்குவது என்ற யோஜனையும் வந்தது.தங்க அழைத்தவன் அப்படியே சாப்பிட வந்துவிடு என்றான், நான் தான் இரவு சாப்பாட்டை வெளியில் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.திருநள்ளாறில்  இருக்கும் இரண்டு மரக்கறி உணவகத்தை பார்த்ததும் இங்கு சாப்பிடமுடியாது என்ற நிலை தோன்றியது. இன்று இரவு சாப்பாடு காரைக்காலில் தான் என்று முடிவு செய்து மிகக்குறுகிய சாலையில் பயணித்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.

கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு போன அடையாளத்தை வைத்துக்கொண்டு அவன் சொன்ன தகவலையும் கேட்டு அவர்கள் வீட்டை அடைந்தோம்.பெரிதாக இருந்த வீடுகள் சின்னதாக மாறியிருந்தன.கோவில் அதே இடத்தில் இருந்தது அதற்கு பக்கத்தில் ஏதோ பொருட்காட்சி போல் நல்ல வெளிச்சத்தில் பல மக்கள் குழுமியிருந்தார்கள்.மகிழுந்து உள்ளே இருந்ததால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.32 வருடகாலத்தில் ஒரே ஒரு வித்தியாசம்..போக்குவரத்து direction மாறி இருக்கு.இரவே பக்கத்தில் உள்ள நித்ய கல்யாணபெருமாள் கோவிலுக்கு கூட்டிப்போய் தன் நண்பர்களிடன் என்னைப்பற்றி அறிமுகம் செய்துவைத்தான்.கோவிலின் பல விபரங்களை சொல்லிக்கொண்டு வந்துவிட்டு ஒரு கதவை காட்டி இது தான் சொர்க்க வாசல் என்றான் அதனை தொடர்ந்து கோவிலுக்கு பக்கத்தில் உள்ள தெப்பகுளத்துக்கு அழைத்து போனான்.உள்ளே நுழைவதற்கு முன்பே இங்கு அழைத்து வருவதற்கு ஒரு சுய விளம்பரம் தான் காரணம் என்று சொல்லி இவ்விடத்தை புனரமைத்த விபரத்தையும் அதற்கான Design செய்ததையும் அதற்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் மக்களின் ஆதரவையும் ஒரு அருமையான இடத்தை காரைக்கால் நகரவாசிகளுக்கு செய்துகொடுத்துள்ளார்கள். இவ்விடத்தை Design செய்தது என் நண்பன் தான்.

கீழே உள்ள படங்களை பாருங்கள்.






இக்குளத்துக்கு நீர்வரத்து மற்றும் வெளியேறும் வழியை முன்னேற்பாடுடன் செய்து நீர் சுழற்சியை கட்டுபடுத்தியுள்ளார்கள். நிறைய மீன்களும் கண்ணில்பட்டது.

சென்னையில் இருந்து சுமார் 280 கி.மீட்டர் பயணம் செய்த அலுப்பு எல்லோர் கண்ணும் பாதி மூடிய நிலையில் இருந்தது.அவர்கள் 10 மணிக்கு தான் சாப்பிடுவார்கள் என்பதால் மற்ற நிலவரங்களை பற்றி  பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தோம்.வீடு முழுவதும் இசை கருவிகள், அவனுடைய அப்பா & அம்மாவின் படம் போட்டோஷாப் உதவியுடன் பின்புலம் மாற்றப்பட்டிருந்தது.கணினி பற்றிய பேச்சு வந்ததும் என்னுடைய அறிவையும் சவுண்ட் ரெக்கார்டிங் பற்றிய சந்தேகங்களை கேட்டவுடன் அது இசை பற்றிய விளக்கமாக மாற ஒரு சிறு கச்சேரி மாதிரி நடுநிசி 12 மணி வரை போனது. எதிர்பாராமல் கிடைந்த்த ஆனந்த அனுபவும் எங்கள் எல்லோருக்கும்.என்ன தான் புல்லாங்குழலுக்கு மயங்கும் என்றாலும் அருகில் உட்கார்ந்து எங்களுக்கு மட்டும் ஒருவர் வாசிக்கும் போது அதன் ஆனந்தமே அளப்பரியாதது.

கலை தேவதையின் ஆசீர்வாதம் உள்ளதோ என்னவோ படிக்கும் காலங்களிலேயே  அருமையாக படம் போடுவான் மற்றும் நன்றாகவும் பாடுவான்.அதன் தொடர்சியாக இப்போது அவன் கடம் மற்றும் புல்லாங்குழல் கச்சேரி வரை தொடர்கிறது.

ஒவ்வொரு இடமும் நமக்கு ஒவ்வொரு பாடம் கற்றுக்கொடுக்கிறது. கூட படித்தவன் என்ற ஒரே தகுதி அதன் மீது என் நண்பன் காட்டிய விருந்தோம்பல் வெகு சிலருக்கே கை வரக்கூடியது.அதை மிகையில்லாமல் செயற்கையாக இல்லாமல் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன்.

ஜாக்கிரதை: அடுத்த பகுதி இருக்கு.


 

Thursday, March 01, 2012

வாங்கையா...வாங்க.

27 மாடியாம், 50 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளமாம்..சிங்கப்பூர் தரத்தை அப்படியே இங்கு காட்டினால் இந்த மாதிரி வீடுகளை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் ஆனால் விலைதான் 27 மாடிக்கு மேல் யோசிக்கவேண்டும் என்று தோனுகிறது.

 வெற்றி பெற வாழ்த்துக்கள்.
HOME . OASIS . iconic
Archean Design & Development launches Albatross- A Modern Lifestyle Community with Signature amenities at Navaloor, OMR-Chennai. A unique residential development of 537 apartments spread over 8.35 acres. G + 27 floors (97m height) offer 2.5 & 3BHK Air Conditioned apartments.
SIGNATURE AMENITIES
An Oasis Destination with Signature Amenities
• Study center with library & computer bank for   students
• Energy efficient Air Conditioning systems for the   entire apartment
• Orchard with camping site
• Water slides with water falls
• Tai Chi Garden with elder’s area
• Simulated gaming arcade
• Multiple swimming pools with a 50M lap pool   and many more
TEAM
• ARCHITECTS: SRSS, SINGAPORE • STRUCTURE & MEP: MEINHARDT,   SINGAPORE
• FAÇADE: IBA, NEWYORK • LANDCAPE: SITETECTONIX, SINGAPORE
• WIND TUNNEL & ENGINEERING - WINDTECH, SYDNEY

மாக் (Mak) கார்டூன்

சிங்கையில் வேலைக்கு சேர்ந்த (1995) போது அறிமுகமானவர் திரு மாக், நிலவியலில் வேலை,மலேசிய-சீனர். எனக்கு நிலவியலில் சிறிது அறிவு உள்ளது என்பதால் என்னுடன் பழகுவார்.ஒருமுறை மலேசியாவில் வேலை செய்துகொண்டிருக்கும் போது வெடி வைத்து தகர்க்கும் பாறைக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்ததால் ஒரு காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டது ஆனாலும் அவ்வப்போது நான் வேறு யாருடன் பேசும் போது தானும் பதிலலித்து அசத்துவார்.எனக்கு பக்கத்து மேஜை என்பதால் அவ்வப்போது காகிதத்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருப்பதை கவனிக்க நேரிடும். ஒரு நாள் என்ன தான் கிறுக்குகிறார் என்று பார்த்த போது தூரத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கும் முதன்மை அதிகாரியை வரைந்துகொண்டிருந்தார்,அப்படியே தத்ரூபமாக இருந்தது.

அதே கை என்னையும் போட்டுபார்த்தது தான் கீழே.
1996 பிறந்த நாள் போது..

ஏதோ சில விபர காகிதங்களை தேடும் போது இப்படங்கள் கிடைத்தது.

Monday, February 20, 2012

சென்னை வானிலை

சென்னையில் கடந்த சில வருடங்களாகவே வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நன்றாகவே தெரிகிறது. குளிர்காலத்தில் இதுவரை கண்டிராத குளிர் மற்றும் வெய்யில் காலத்தில் மிகுதியான வெப்பத்தை காண்பிக்கிறது. இந்நிலை கிட்டத்தட்ட டெல்லி வானிலையை ஒட்டிவருகிறது.இன்று காலை ஜன்னலை திறந்த போது மிகுதியான பனி மூட்டம் இருந்தது இது மதியம் வரை அவ்வளவாக கலையாமல் இருந்தது. கீழ் உள்ள படம் எனது அலுவலகத்தில் இருந்து எடுத்தது.

1980 களில் நான் கண்டவானிலை இப்போது இல்லை என்றே கூறலாம்.



ஒரு மழைக்காலத்தில் இங்கிருந்து எடுத்த படம் கீழே.



Tuesday, February 14, 2012

சரியான படம்!

இதுவரை 4 கேமிரா வாங்கியிருப்பேன் அதில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுத்திருப்பேன் ஆனால் இது போல் இதுவரை வரவில்லை.

நடு சாலை என்றாலும் என்னை வேடிக்கை பார்த்த ஆட்டோகாரரையும் உதாசீனப்படுத்திவிட்டு நன்றாக சிரித்துவிட்டு வந்தேன்.

அரசாங்க வண்டி “No Parking" க்கு அருகில்!! சாலை ஆக்கிரமிப்பு வேறு.


படத்தின் மேல் சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்து அனுபவியுங்கள்.

இது திநகர் மற்றும் நந்தனம் இருக்கும் ஒரு கிளை சாலையில்(சதுல்லா சாலை) உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் ஒரு சின்ன விவாதம்..

“ஆவிச்சி(விருகம்பாக்கம்) பள்ளி அருகே என்ன தூசி, பாவம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர இதுவே ஒரு காரணமாக அமையும்”

இதுக்கு பொதுமக்களா காரணம்? சாலையை தோண்டிவிட்டு அப்படியே விட்டுவிட்டு போன குத்தகைக்காரரை யார் தண்டிப்பது?

இப்படியே இந்த விவாதம் சுமார் 30 நிமிடங்களையும் கடந்து நம் அரசாங்கத்தின் கையாலாகதனத்தின் விளைவு என்று தான் முடிவுக்கு வரமுடிந்தது.

திருவாளர் சோ.. இந்த ஆண்டு விழாவில் சொன்ன அந்த அரசாங்க  வண்டி இது தானா? இது இன்னும் சில வருடங்கள் இங்கேயே இருந்தால் விஜயகாந்துக்கு ஒரு நல்ல துருப்புச்சீட்டு வாய்ப்பு தன்னாலே கிடைத்த சந்தோஷம் வரும்.

Sunday, February 12, 2012

தலைவலி ஆரம்பம்.

வீடுகளில் மராமத்து வேலைகள் ஆரம்பம் ஆகிறது என்றால் தலைவலி ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம் ஏனென்றால் எப்போது வரும் எப்போது போகும் என்பது தெரியாது.ஒரு வேலை ஆரம்பித்தால் அதன் தொடர்ச்சி எலி வலை போல் எங்கு முடியும் என்று தெரியாது. செலவுக்கு இவ்வளவு தான் என்று முடிவாக ஒதுக்கமுடியாது.

சில வருடங்களுக்கு முன்பு மேற்கூரையில் ஏதோ டொம் டொம்  என்று சத்தம் வந்தவுடனே தெரிந்தது அங்கு பிரச்சனை என்று.
 
கூரையில் முதன் முதலில் விரிசல் ஏற்பட்டவுடன் தெரிந்தவர் மூலம் வந்த பூச்சு வேலைக்காரர் கடையில் கிடைக்கும் துறு நீக்கியை உபயோகித்து கம்பி மேல் இருக்கும் துறுவை நீக்கிவிட்டு கொஞ்சம் அதிக ஸ்ட்ராங்க் உள்ள சிமிண்டை உபயோகித்து  பூசினேன்.அந்த பூச்சு சுமார் 1.5 வருடம் தாங்கியது,அதே இடத்தில் திரும்பவும் டொம் சத்தம் கேட்க நானே அதை உடைக்க சின்ன தாம்பாளம் அளவுக்கு பூசிய கான்கிரீட் வந்தது.உள்ளே இருந்த கம்பி துறுபிடித்து விரிவாக அதன் கீழ் பக்கம் இருக்கும் கான்கிரீட்டை வெளியே தள்ளிவிட்டது. ஒரு ஓரத்தில் கம்பியின் கீழ்பக்கம் வைக்கப்படும் சிறிய கான்கிர்ரீட் துண்டு எவ்வித ஆட்சேபனை இன்றி கையாலேயே எடுக்க முடித்தது. 18 வருடத்துக்கு முன்பு எப்படி கான்கிரீட் போட்டார்கள் என்பதை இது தெளிவாக காட்டியது.


ஒரு சின்ன பகுதி தானே விழுந்திருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது மேலும் சில இடங்களில் வீக்கம் தெரிய வரவேற்பறை முழுவதும் கைவைக்க வேண்டிய நிலை வந்தது.


இம்முறை தெரிந்தவர் ஒருவரே குத்தகைக்காரரை அனுப்பி அவர் செய்யும் வேலையில் உபயோகிக்கும் முறையை அமல்படுத்தினார்.கீழே உள்ள துறு நீக்கியை பிரஸ் கொண்டு கம்பி மீது அடிக்கவேண்டும். இது ஒருவித அமிலம் என்பதால் கம்பி மீது படும் போது சிறிது நுரை வரும்.

இம்முறையில் கம்பி மீது அந்த கெமிகலை அடித்துமுடித்து இரண்டு மணி நேரம் கழித்து கீழே காண்பித்துள்ள Compound ஐ சிமிண்டுடன் கலந்து விரிசல் உள்ள இடங்களில் போடவேண்டும் அதன் பிறகு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அதன் மீது தண்ணீர் தெளித்து அது இருக வழிசெய்ய வேண்டும்.

எல்லாம் செய்து முடிக்க சுமார் 3 நாட்கள் ஆனது. பெயிண்ட் அடிக்க இந்த கான்கிரீட் இருக வேண்டும் என்பதால் காத்திருக்கோம்.


Compound கலக்கும் விதம் மற்றும் விகிதம் அந்த உரிமையாளர்கள் சொல்லியிருக்கும் படி செய்யவேண்டும். எல்லாம் சரி, இனி இப்பிரச்சனை வராதா? என்று கேட்டால் பதில் கிடையாது. ஏனென்றால் மறுபடியும் விரிசல் வர பல காரணிகள் நம் கண்ணுக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.இம்முறை வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.

Monday, January 16, 2012

தரமான கட்டுமானம்- ஸ்ரீராம் சங்கரி

சில வருடங்களாகவே ஒரு வீடு என் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி தேடிக்கொண்டிருக்கிறேன், இது வரை சரியாக அமையவில்லை.வளசரவாக்கம்/வடபழநி/விருகம்பாகம் வீடுகள் சுமார் 6000 முதல் 8000 வரை ஒரு சதுர அடிக்கு கேட்கிறார்கள்.லோக்கல் வீடு கட்டுபவர்கள் செய்யும் வேலை பார்த்து அவர்கள் பக்கம் போவதையே நிறுத்திவிட்டேன்.வீட்டு இடத்துக்குள் இருக்கும் ஆக்கிரமிப்பை தவிர்த்து வீட்டு முன்புறம் வண்டி ஏறுவதற்காக சாலையை ஆக்கிரமிப்பு பணியை நிறைவாகவே செய்கிறார்கள்.இதையெல்லாம் யாராவது கண்காணிக்கிறார்களா அல்லது தெரிந்தே விட்டுவிடுகிறார்களா என்று தெரியவில்லை.ஆக்கிரமிப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பெரிய வால்யூம் புக் போடலாம், அதுவும் சென்னையில்.

பின்புலம் இப்படி இருக்க, அடிக்கடி வானொலியில் இவர்களின் விளம்பரம் கேட்க கேட்க, சரி போய் பார்த்தால் என்ன என்ற முடிவு எடுத்து அதுவும் போன வாரம் தான் போக முடிந்தது.GST சாலையில் பல  துணை சாலைகள் இருந்தாலும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் சாலைக்கு பெயர் எதுவும் கண்ணில் படாததால் சிறிது திணறி பயணித்தோம். சுமார் 4 கி.மீட்டர் பயணிந்த பிறகு இவர்களின் கட்டுமான இடத்தை அடைந்தோம் . G+4 முறையில் அமைந்த 3 கட்டிடங்கள் கான்கிரீட் முடிந்த நிலையில் சுற்றுச்சுவர்கள் வேலை நடந்துவருகிறது.கட்டுமான இடத்திலேயே Batching Plant அமைத்து கான்கிரீட் போடுவதால் குறை எதுவும் கண்ணில் படாமல் அட்டகாசமாக இருந்தது.தாங்கும் தூண்கள் கூட நேர்த்தியாக வரிசையில் இருந்தது.இவ்வளவு நாள் பல கட்டுமான வேலைகளை பார்த்திருந்தாலும் இவர்களின் Finish மிக அருமையாக இருக்கிறது.கட்டுமான வேலைகளை இவர்கள் நேரடியாக மேற்கொள்ளாமல் ஒரு துணை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்கள்.Middle East நிறுவனம் என்று சொன்னதாக ஞாபகம்.

அங்கிருந்த முகவர் எங்கள் விவரங்களை கேட்ட பிறகு மாதிரி வீட்டை காண்பிக்க அமைத்துப்போனார்.ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருந்ததால் எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் போல் எனக்கும் எழுந்தது. மழை காலத்தில் ஏரி தண்ணீர் எங்கு போகும் என்று கேட்டேன். சமீபத்தில் ”தானே” புயல் கொண்டு வந்து கட்டிய மழையில் இதன் விளைவு தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நிலம் மேட்டுப்பகுதியில் இருப்பதாலும் இதன் கீழ் பகுதியில் இன்னொரு ஏரி இருப்பதாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்கள்.

ஒரு Model House, 3 அறை வீடுக்குள் அழைத்துப்போனார்கள்.வெளிவெளிச்சம் நன்றாக நுழையும் அளவுக்கு வீடுகள் இருந்தன.வீட்டு விலையை கேட்ட போது,சதுர அடிக்கு 2150 ரூபாய் என்றும் மற்ற செலவுகளை கூட்டினால் 2500 வரும் என்று சொன்னார்.கூடவே கிளப் ஹவுசும் நீச்சல் குளமும் வரப்போவதாகவும் பிற்காலத்தில் நல்ல தங்கும் இடமாகவும் விளங்கும் என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.தற்போதைக்கு பள்ளிக்கூடமும்,மருத்துவனையும் பக்கத்தில் இல்லை.மக்கள் அதிகம் வந்தால் இவையெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நம்பலாம்.இப்போதைக்கு முதல் Phase ஐ வரும் ஜூன் மாதம் முடியப்போவதாகவும் அடுத்த Phase இரண்டு வருடம் ஆகும் என்றார்கள்.மற்ற விவரங்களுக்கு இங்கு போய் பாருங்கள்.

புது வீடுக்காக 95% விழுக்காடு பணத்தை கட்டிய பிறகும் கடைசி 5% பணத்தை மட்டும் விட்டு வைத்துவிட்டு வீட்டை Handing Over பண்ண வருடக்கணக்காகும் நிலை போய், வீட்டை கட்ட கட்ட நம்மிடம் பணம் கறக்கும் காலமும் போய் கட்டியவீடுகள் பணம் கட்டிய உடன் கிடைக்கும் வீடுகள் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது இப்போது தான். இது கட்டுமானத்துறையின் வீழ்ச்சி என்றாலும் மற்ற நகரங்களை விட சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாவிட்டாலும் விலையை மட்டும் யாரோ தாங்கிப்பிடிக்கிறார்கள்.


கூடுவாஞ்சேரி பக்கத்தில்  இருக்க ஆசைப்படுபவர்கள் இந்த கட்டுமானத்தொகுதியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.

பின்குறிப்பு: நான் இவர்களுக்கு முகவர் அல்ல, அவரவர் தேவையை கருத்தில் கொண்டு முடிவு செய்துகொள்ளவும்.

Monday, January 09, 2012

வேடந்தாங்கல்

என்ன தான் சென்னைக்கு பக்க்கத்தில் இருந்தாலும் இவ்விடத்துக்கு போக நேற்று தான் நேரம் வாய்த்தது.கோயம்பேடில் இருந்து பெங்களூர் நெடுங்சாலையை பிடித்து மதுரவாயல் மேம்பாலம் அருகில் இருக்கும் துணை சாலையை பிடித்தால் சென்னை மேம்பால விரைவுச்சாலை வரும் இதன் மூலம் பெருங்களத்தூரை வெறும் 35 நிமிடத்தில் சென்றடையலாம்.
பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை பலவேறு தடைகளை கடந்தால் அதன் பிறகு வெள்ளோட்டம் தான். மாமண்டூர் தாண்டியபிறகு வலது பக்கத்தில் உத்திரமேரூர் சாலை பிரிவு வரும் அதனையும் தாண்டினால் வேடந்தாங்கல் செல்லும் சாலை வலது பக்கத்தில் பிரியும் அச்சாலையில் சென்றால் 12 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயம். சில இடங்களில் சாலை மேசமாக இருந்தாலும் மிதமான வேகத்தில் சென்றால் அவ்வளவாக பிரச்சனையில்லை. இங்கு போகும் வழியில் திருவையாவூர் என்ற புண்ணியஸ்தலம் மலைமேல் உள்ளது. மகிழுந்தை கோவில் வரை மேலே ஓட்டிச்செல்லலாம்.
வேடந்தாங்கல் ஒரு சிறு ஏரி போல் உள்ள இடத்தில் நிறைய மரங்கள் தண்ணீருக்கு மத்தியில் உள்ளது.பருந்து பார்வை பார்க்க உயரமான கோபுரம் ஒன்றும் வேறு சில பிளாட்ஃர்ம்கள் உள்ளன.என்ன தான் வெறும் கண்ணால் பார்க்கமுடிந்தாலும் பைனாகுலர் மூலம் பார்க்கும் போது இன்னும் நெருக்கமாக பார்க்கமுடிகிறது.

அங்கு எடுத்த சில படங்கள் கீழே. Zoom பண்ணிபார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.






கோயம்பேடுவில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வேடந்தாங்கல்.