Thursday, February 18, 2010

தொப்பை தள்ளுது.

போன வாரம் முழுவதும் அடை சாப்பிடனும் போல உணர்வு அதற்காக அதை தேடி உணவகம் போகவும் அலுப்பு,சரி இட்லி தான் போன பதிவில் போட்டாச்சே அதே மாதிரி தானே இதுவும் இருக்கப்போகிறது என்று கூகிளிடம் தேடினேன்.ஒரு பதிவில் இருந்தது மிக சுலபமாக இருந்தது,ஆதாவது கடலை மாவையும் கோதுமை மாவையும் 2:1 என்ற விகிதத்தில் கலந்து கொஞ்ச நேரம் ஊற வைத்து தேவையான உப சாமான்களை போட்டு செய்திடலாம் என்றிருந்தது.இவ்வளவு சுலபமாக இருக்கே என்று கடை கடையாக கடலை மாவுக்காக தேடிய போது தெரிந்தது இங்கு கடலைமாவாக கிடைக்காது என்று.அரை மனதுடன் அரை கிலோ கடலை பருப்பை வாங்கினேன்.இதையெல்லாம் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன்,அவர்கள் இதைவிட இப்படி செய்து பாருங்கள் இன்னும் நன்றாக வரும் என்று சொன்னார்.

புழுங்கல் அரிசி - 1 பங்கு
கடலை பருப்பு(கொஞ்சம் அதிகமாக இருக்கட்டும்),உளுத்தம் பருப்பு & துவரம் பருப்பு - 0.5 பங்கு

இவை இரண்டையும் தனித்தனியே கொஞ்ச நெரம் ஊற வைத்துவிட்டு கொஞ்சம் காய்ந்த மிளகாயுடன் கிரைண்டரில் அரைத்து தேவையான உப பொடிகளை பொட்டுக்கொள்ளவும்.எப்போது அடை வார்க்க வேண்டுமோ அதற்கு முன்பு சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை & பச்சை மிளகாய் & கொத்தமல்லியை பொடி செய்து போட்டு கலக்கிவிடவும்.மாவுடன் மிக முக்கியமாக கொஞ்சம் நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.புழுங்கல் அரிசியை தேடியபோது தான் தெரிந்தது அது வீட்டில் இலை என்று அதற்காக கவலைப்படாமல் பச்சரிசியை உபயோகித்தேன்.

அவ்வளவு தான்.

இப்படியெல்லாம் செய்து Non-Stick Pan யில் போட்டு கரண்டி கொண்டு திருப்பலாம் என்று பார்க்கும் போது அப்படியே தன்னாலேயே வழுக்கிக்கொண்டு வந்துவிட்டது.எப்படி இருக்கு என்று பார்க்க...



சரி அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

இந்த படத்தை அலைபேசியில் எடுத்துவிட்டு பதிவில் இணைக்கலாம் என்று கணினியுடன் இணைத்த போது Screen அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சாக ஆரம்பித்தது.கணினியில் இருந்து விடுப்பித்து மின்கலத்தை எடுத்து நானும் என்னனென்வோ முயற்சிக்க இயங்க மறுத்தது அலை பேசி.போச்சு போச்சு என்று நினைத்துக்கொண்டு அதை எங்கு கொடுக்கலாம் என்று யோசிக்கும் போது ரூவி தான் ஞாபகம் வந்தது.அங்கு தான் இந்த மாதிரி வேலைகளை செய்ய பல கடைகள் பார்த்த ஞாபகம்.

சாயங்காலம் நடைபயிற்சி போகும் போது அப்படியே இவ்வேலையையும் முடித்துவிடலாம் என்றெண்ணி Qurm Park பக்கம் போனேன்,அங்கு தான் வாடகை மகிழுந்து கிடைக்கும்.வந்த ஓட்டுனரிடம் எவ்வளவு என்று கேட்டேன்,400 பைசா என்றார்,சரி என்று உள்ளே அமர்ந்தேன்.மேலும் சிலரும் நான் போகும் இடத்துக்கு போக ஏறியவர்கள் பேரம் பேசி 300 காசுக்கு பயணித்தார்கள்.

Ruwi இந்த இடம் சிங்கை சிரங்கூன் சாலையோடு ஒப்பிடலாம்.தொழிலாளர் கூட்டம் அதோடு பல விதமான கடைகள் என்று ஓய்வு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இது வரை இங்கு மகிழுந்துவில் மட்டுமே சென்றதால் பல சாலைகளில் உள்ள கடைகள் கண்ணில் படாமல் இருந்தன.சரி வந்த வேலையை பார்ப்போம் என்று சில கடைகளில் அலைபேசியை காண்பித்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன்.ஒரு கடையில் ஹமிரியா(இடம்) சென்றால் முடியும் என்றார்கள்,சிலர் முடியாது என்றார்கள்.சோனி எரிக்‌ஷன் என்றாலே ஒரு மாதிரி விலகிவிடுகிறார்கள்.

ஒரே ஒரு கடையில் மத்திரம் Soft Reset செய்து பார்ப்போம் சரியானால் 3 ரியால் கொடுங்கள் என்றார். சரி என்றேன்.என்னென்வோ முயற்சித்தும் சரியாகவில்லை அலைபேசியை திறந்து பார்த்து தான் முடியுமா?முடியாதா என்று சொல்லமுடியும் என்று சொன்னார்கள்.அதற்கு எவ்வளவு ஆகும் என்றேன்.சரியாக சொல்லமுடியாது எப்படியும் 6 முதல் 7 வரை ஆகலாம் என்றார்.சரி என்று ஒத்துக்கொண்டு அலைபேசியை கொடுத்துவிட்டு வந்தேன்.அதில் வைத்திருந்த கடவு சொல் மற்றும் மேலும் பல விபரங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை எனக்கு கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தாலே பெரிய தொந்தரவு இருக்காது.

நேரம் அதிகமாக இருந்ததால் ரூவியை சுற்ற ஆரம்பித்தேன்.புதிதாக திறந்திருக்கும் Mars என்னும் கடை தொகுதியில் சுற்றிய பிறகு பக்கத்தில் உள்ள KM கடைதொகுதிக்குள் போனேன்.இங்கு ஓரிரு முறை சென்றிருப்பதால் என்னென்ன சாமான்கள் எங்கு இருக்கும் என்பது தெரிந்திருந்தது.புழுங்கல் அரிசியை தேடிய போது தஞ்சை புழுங்கல் இட்லி அரிசி என்று போட்டே விற்கிறார்கள்.இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டேன்.

இந்த கடைத்தொகுதியில் எப்போதுமே பணம் கட்டும் இடத்தில் கூட்டம் நின்று கொண்டிருக்கும்.நபர்கள் குறைவாக இருக்கும் வரிசையை கண்டுபிடித்து நின்றேன்.நின்ற கொஞ்ச நேரத்துக்கெல்ல்லாம் என் பின்னால் ஏதோ உரசுவது போல் இருந்தது.கொஞ்சம் முன்னே போனேன்,இம்முறையும் உரசல் தொடர்ந்தது.திரும்பிப்பார்த்தால் ஒரு இந்தியர் மலையாள சேட்டன் தொப்பை யால் என்னை முட்டிக்கொண்டிருந்தார்.எனக்கு சிறிய கோபம் வந்தாலும் அதையும் மீறி பயங்கர சிரிப்பு தான் வந்தது ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு தான் சிங்கை செய்தித்தாளில் இப்பிரச்சனையை அலசியிருந்தார்கள்,ஆதாவது அங்கு ATM வரிசையில் நிற்கும் போது தேவையான இடவெளி விட்டு சிலர் நிற்பதில்லை என்றும் பக்கத்தில் இருப்பவர்கள் மேல் ஈஷிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் போட்டிருந்தார்கள்.இதில் முதலிடம் பங்களாதேசிகளுக்கும் அடுத்து நம் மக்களும் இருந்தார்கள்.அதுவும் நம் ஊரில் இருந்து வரும் டூரிஸ்டுகள் கூட வரிசையில் நிற்கும் போது இப்படித்தான் இட்டித்துக்கொண்டு நிற்பதை பல முறை பார்த்திருக்கேன்.இதெல்லாம் மனதில் ஓடியதால் என்னை ஒட்டிக்கொண்டு நிற்பவர் மீது கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது.

Thursday, February 11, 2010

இட்லி

சிங்கையில் இருந்தவரை இட்லி/தோசைக்கு அவ்வளவாக பிரச்ச்னையில்லாமல் இருந்தது.மனைவி கூட இருந்த வரை அவர்கள் முறையில் கிரைண்டரில் போட்டு அரைத்து செய்துவிடுவார்கள்.தனி வாழ்கையின் போது ரெடிமேடாக கிடைக்கும் மாவில் தேவையான அளவு உப்பை போட்டு வைத்துவிட்டால் ஒரு வாரத்துக்கு கவலையில்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த மாவில் முதல் இரண்டு நாள் தான் இட்லி வரும் அதன் பிறகு தோசையாகவும்,ஊத்தப்பமாகவும் சாப்பிட்டு தீர்க்கனும்.ரொம்ப அலுத்துப்போச்சு என்றால் இருக்கவே இருக்கு சிரங்கூன் சாலை உணவகங்கள்.

மஸ்கட் வந்த நாள் முதலாக இந்த இட்லி/தோசைக்கு ரூவி(இடப்பெயர்) க்கு தான் போகவேண்டி வரும் அதோடு இங்கு கிரைண்டர் இல்லாமல் இருந்தது.கொஞ்ச நாளில் சில கடைகளில் உள்ள தோசைப்பொடி என்ற மாவை வாங்கி 18 மணி நேரம் ஊரவைத்து போட்டு பார்த்தோம்,சரியாக வரவில்லை அதன் பிறகு Ready to Eat மாதிரியான மாவுகளை வாங்கிப்பார்த்தோம்,வயிற்றில் கேஸ் தான் உருவானது-சுவை கிடைக்கவில்லை.என்னுடன் தங்கி இருக்கும் நண்பர் இந்த மாவுகள் உள்ளூர் சூழ்நிலைக்கு பொங்காததால் தான் இட்லி சரியாக வரமாட்டேன் என்கிறது என்று மாவில் ஈஸ்ட் கலக்க ஆரம்பித்தார்,வந்தது வினை-எனக்கு.ஈஸ்ட் போட்ட மாவு பாத்திரத்தை மறு நாள் திறந்தால் அப்படியே வாந்தி எடுக்கவேண்டிய அளவுக்கு துர்நாற்றம் வந்தது அன்றிலிருந்து அந்த பக்கமே போவதில்லை ஆனால் என் நண்பரோ அந்த பிரச்சனை ஏதுமில்லாமல் தொடர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,அவருக்கு மூக்கில் ஏதும் பிரச்சனையோ என்ற அளவுக்கு சந்தேகம் வந்தது.இதற்கு முன்னால் லிபியாவிலும் இதையே செய்ததாக சொன்னவுடன் சந்தேகம் தீர்ந்தது.வாசம் அவருக்கு பழகிவிட்டது.நம் நண்பருக்கோ காலை இட்லி இல்லாமல் ஒன்றும் முடியாது என்பதால் பழகிவிட்டார் போலும்.

நடுவில் ஊருக்கு சென்று வந்த போது இட்லி மாவு அரைக்க நம் நண்பர் மிக்ஸி ஒன்றை வாங்கி வந்தார் அதன் பிறகு அரிசியை இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்து ஈஸ்ட் போட்டு மூடி வைத்துவிடுவார்.ஒரு முறை என்னிடம் அந்த மாவை வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்காகவும் தான் அரைத்து வைத்துள்ளேன் என்றார்.வேறு வழியில்லாமல் என்னுடைய “வாச” பிரச்சனையை சொல்லி இனி எனக்க்காக சேர்த்து அரைக்கவேண்டாம் என்று பதுவுசாக சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.வெகு நாட்களாக அவர் அரைத்தும் ஏனோ இட்லி சொல்லிக்கொள்ளும் மாதிரி வரவில்லை,தோசையும் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருந்தது.இந்த பிரச்சனைக்கு நம் நண்பருடைய குணாதிசியம் கூட காரணம் ஆதாவது தான் பிடித்திருக்கும் முயலுக்கு 3 கால் என்பது தான்.இதை சில நிகழ்வுகள் மூலம் தெரிந்துகொண்ட நான் பல விஷயங்களில் தலையிடாமல் வேடிக்கை பார்பதுண்டு.பல முறை வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்க போகும் போது இந்த இட்லி பிரச்சனை பற்றி பேச்சு எழும் அதுவும் அரிசி தேர்வு செய்யும் போது. நானும் பல முறை புழுங்கல் அரிசியில் முயலுங்கள் அதில் தான் இட்லி சரியாக வரும் என்று சொல்லியும் எங்கேயோ எப்போதோ தவறாக புரிந்துகொண்டு பச்சரியையை வாங்கி முட்டி மோதிக்கொண்டிருந்தார்.இப்படிப்பட சமயத்தில் ஒருமுறை புழுங்கல் அரிசி வாங்கினார்,எதற்கு என்ற கேட்டபோது அவர் வீட்டில் சொன்னார்களாம் அதில் தான் சரியாக வரும் என்று.வந்தார் வழிக்கு,ஆனால் ஈஸ்டை மட்டும் விடவில்லை.

இந்த மாவு பொங்கும் வழிக்கு என் மனைவி சொன்ன சில வழிமுறைகளை செயல்படுத்த வழியில்லாத்தாலும் சில மனம் இல்லாத்தாலும் ஈஸ்ட் வெற்றிபெற்றுக்கொண்டு வந்தது.ஒரு நாள் என்ன தோனியது என்று தெரியவில்லை எனக்கு,மனைவி சொன்ன கணக்கு படி 4 பங்கு அரிசி ஒரு பங்கு உளுந்து தனித்தனியாக ஊற வைத்திருந்தேன்.அன்றிரவு மனைவியுடன் Chat செய்துகொண்டிருக்கும் போது அவ்விஷயத்தை சொல்லி முதல் முறையாக ஊரப்போட்ட விஷயத்தை சொன்னேன்,அதோடு மறு நாள் காலை அரைத்தால் போதுமா? என்று கேட்டேன்.

ஏங்க என்ன அரிசியை புளிக்கவா வைக்கப்போகிறீர்கள்,ஊரவைக்க 2 மணி நேரம் போதும்,புளிக்கதான் நேரமாகும் என்றார்கள்.இது கூட தெரியாமல் இவ்வளவு நாள் இட்லி சாப்பிட்டிருக்கேன்!! என்று நொந்து கொண்டு அரைத்துவைத்தேன் அதோடு சொன்ன மாதிரி கையால் (இது தான் பாயிண்ட்) நன்றாக இரண்டு மாவையும்,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துவிட்டேன்.

மறு நாள் திறந்து பார்த்த போது ஓரளவு மட்டுமே புளித்து இருந்தது அதோடு அளவாகவும் பொங்கியிருந்தது, அப்படியே மீண்டும் கிளறி விட்டு Fridge உள்ளே வைத்துவிட்டேன்.

எப்போதுமே இரவில் மட்டுமே டிபன் சாப்பிடும் அன்றிரவு நான் செய்த இட்லி சாப்பிட்டேன்.உப்பு சரியாக இருந்தது,பதம் ஓரளவு சுமாராக இருந்தது.உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நான் வெறும் கையால் கலந்ததாலா அல்லது ஈஸ்ட் சேர்க்காத மாவு என்பதால் என்னவோ என் நண்பர் அதை முயற்சித்துக்கூட பார்க்காமல் மறு நாளே ஒரு வாரத்துக்கு தேவையான ஈஸ்ட் கலந்த மாவு அரைத்திருந்தார்.

இந்த வாரத்துக்கு தேவையான செய்முறையை மனைவியிடம் வாங்கிவிட்டேன்,செய்த பிறகு சொல்கிறேன்.நேற்று வரை இந்த மாதிரி சமையல் கலை பற்றி ஒரு பதிவு எழுதுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

Friday, January 29, 2010

படியில் ஒரு நிலா.

வியாழக்கிழமை விடுமுறையை எப்படியோ டிவி மற்றும் கடற்கரைக்கு போய் ஓட்டியாகிவிட்டது.காலை 10 மணிக்கு பார்த்த அதே டெண்டுல்கர் மாலை 4 மணிக்கு வந்து வெறுப்பேத்தினார்.டேப்பை நேரத்து Programme பண்ணிவிட்டு விட்டு போய்விடுவார்கள் போலும்.
மாலை 4.30 மணிக்கு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்து மாறாக அலை அதிகமாக இருந்தது தெரிந்தது அதோடு ஏறு அலையாக இருந்ததால் தண்ணீரும் கரை வரை வரும் போல் இருந்தது.



மறு நாள் வெள்ளி, சாயங்காலம் வரை வீட்டிலேயே பொழுது போக்கிவிட்டு வெளியில் போனால் சூரிய பகவான் இப்படி வரவேற்றார்.



அப்படியே மெதுவாக Qurm பூங்கா வரை போய்விட்டு அங்கிருந்து பார்த்தால் நம் சந்திர பகவான் அழகாக மேலெழும்பி காட்சி தந்தார்.அதை பார்த்ததும் இளையராஜா,வைரமுத்து மற்றும் ரகுமானும் வந்து போனார்கள்.



அப்படியே மேலும் கொஞ்ச தூரம் சுற்றிவிட்டு அங்கிருக்கும் அரங்கத்து படிகளில் ஏறினால் நிலா பெண் இப்படி காட்சி கொடுத்தாள்.நல்ல கேமிராவாக இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

Friday, January 15, 2010

இதுவரை யாருமே போடாத....

கூகிளில் “மஸ்கட்” என்று தட்டச்சு போட்டு தேடினால் பதிவர்கள் ஓரிருவர் மட்டுமே மாட்டினார்கள் அதுவும் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய பதிவுடன்.இதுவரை எவ்வளவோ படம் போட்டிருந்தாலும் எனக்கு தெரிந்த வரை இதை கண்டுபிடித்து வலை ஏற்றியது முதன் முதலாக நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். :-)

உலக நிலையில் வழக்கொழிந்து போய்கொண்டிருக்கும் இப்பெட்டி ஒரு மூலையில் இருந்தது அத்துடன் இது லெட்டர் பாக்ஸ் என்று எழுதியிருந்ததை பார்த்தவுடன் தான் இதை வேறு வேலைக்கும் மக்கள் உபயோகித்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தேடினாலும் கிடைக்காத படம் (இனி கிடைக்கும்)

Qurm பூங்கா

வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா- ரோஸ் கார்டன் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.எப்போது போனாலும் மத்திய பகுதியில் ஏரி மாதிரி இருக்கும் இடத்தை சுற்றி முடிந்ததும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு வந்துவிடுவேன்.போன வாரம் போன போது எப்போது போகும் வழியை விட்டுவிட்டு வெளிப்பக்கம் போகலாம் என்று நினைத்து வழி மாறினேன்.உள்ளழகு ஒரு விதம் என்றால் வெளியழகு வேறு விதம்.பல இடங்களில் புல் வெளிகள் மனதை கொள்ளைகொள்கின்றன.அப்படியே மேலும் கொஞ்ச தூரம் நடந்தால் செயற்கையாக ஒரு அரண் அமைத்து அதிலிருந்து நீர் வீழ்ச்சி மாதிரி அமைத்துள்ளார்கள்.கீழே விழும் தண்ணீரில் பெருமளவு நுரை காணப்பட்டது ஏனென்று தெரியவில்லை.இப்போது கொஞ்சம் குளிர் இருப்பதால் அதற்கேற்றவாறு பல மலர்களை வைத்து மேலும் அழகூட்டியுள்ளார்கள்.

மற்றவைகளை படங்கள் பேசட்டும்.





மஸ்கட்டில் இருந்து யாருமே இல்லையா?

கடந்த 4 ஆண்டுகலாக பல பதிவுகளை பல நாடுகளில் இருந்து எழுதியவர்களை படித்திருக்கேன் ஆனால் இன்று வரை மஸ்கட்டில் இருந்து வந்த எந்த பதிவையும் படித்த ஞாபகம் இல்லை.சரி இங்கு தமிழரே இல்லையோ என்னவோ என்று அபத்தமாக நினைக்கவில்லை.Ruwi பக்கம் போனால் சிங்கை சிரங்கூன் சாலை போல் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும் மற்றபடி எங்காவது கூட்டம் இருந்தால் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும்.

நேற்று பொங்கலுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை.MTR Ready to eat பொங்கல் வேறு அடிக்கடி கண்ணில்பட்டுக் கொண்டிருந்தது இருந்தாலும் அதை பண்ணி சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் இல்லை.எப்படியோ சாயங்காலம் வரை வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துவிட்டு பிறகு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது தண்ணீரும் மேல் எழும்பி வந்துகொண்டிருந்தது.ஒவ்வொரு குடும்பமும் காற்றாடியை வைத்துக்கொண்டு அவற்றை மேலெழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

மஸ்கட்டில் பொங்கல் சிறப்பு கீழே உள்ள படம் தான்.




சூரியன் மறையும் அழகு

Thursday, January 14, 2010

இதெல்லாம் படமா?

என்னுடைய பல பதிவுகளில் மஸ்கட்டின் அழகான கடற்கரையும் சாலைகளையும் படம் பிடித்து போட்டுள்ளேன் ஆனால் ஓமனின் பெரும் பகுதிகள் எப்படி இருக்கும் தெரியுமா?கீழே பாருங்கள்.என்னுடைய நண்பர் ஒருவர் மஸ்கட்டில் இருந்து சலாலா (நம் பதிவர் மின்னல் ) இருக்கும் இடத்துக்கு போகும் வழியில் எடுத்தது.இவ்வளவு இடம் அனாமத்தா கிடைக்கும் போது துபாய் மாதிரி வானத்தை தொடும் அளவுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது இவர்களுக்கு.இன்றும் மஸ்கட்டில் மிக உயரமான மாடி 10 மாடிகள் தான் என்றால் நம்ம முடியுமா?

சிறிய வகை செடிகள் மட்டுமே வளருகிறது.



பெரும்பாலான நிலப்பகுதி இப்படி தான் இருக்கு.



அங்கங்கு தென்படும் “தனிமையான” வீடுகள்.



கடற்கரையில் இருக்கும் Seagulls.



மீனவர் பிடித்து போட்டிருக்கும் துருகை

Wednesday, January 13, 2010

காலை வேளை மஸ்கட்.

பலருக்கு காலை வேளையில் தூங்குவது என்பது பிடித்தமான பழக்கங்களில் ஒன்று ஆனால் எனக்கு அப்படியில்லை.வேலைக்கு என்று வெளியில் வந்தாலும் படித்துக்கொண்டு இருக்கும் காலத்திலும் அப்பாவின் கண்டிப்பில் 6 மணிக்கு எழுந்திருப்பது ஒரு கட்டாய பாடமாக இருந்தது.உடம்பு ஒரு குறிப்பிட்ட நேரத்து பழக்கப்படுத்திவிட்டால் அவ்வளவு தான் மனம்/மூளை சரியாக விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது.வயது ஏற ஏற தூக்கம் வேறு குறைவதால் இன்னும் முன்பே முழிப்பு வந்துவிடுகிறது.இங்கு வார விடுமுறை வியாழன் மற்றும் வெள்ளி என்பதால் இவ்விரு நாட்களும் காலை எழுந்திருக்கும் போதே இன்று வேறு என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று மனது பட்டியல் போட ஆரம்பித்துவிடுகிறது அதில் ஒன்று தான் சுமார் 2-3 கிமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைக்கு போய் வருவது.காலை 8 மணிக்கு கிளம்பினால் திரும்ப வரும் போது மணி 10 ஆகிவிடும்.வீட்டுக்கு வந்து என்ன செய்யப்போகிறோம் என்ற அலுப்பிலேயே பீச்சில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவேன்.இப்போது குளிர் காலம் என்பதால் மதிய வெய்யில் கூட உடம்பில் உறைப்பதில்லை.

சில வாரங்களுக்கு முன்பு அப்படி மெது நடை போன போது எடுத்த சில படங்கள் கீழே.

வாகனங்கள் இல்லாத சாலை.



கிரிக்கெட் விளையாடும் இந்திய/பங்களா மக்கள்.



இந்த சாலையை வாகனங்களே இல்லாமல் இப்போது தான் பார்க்கமுடியும்.



இரானுக்கும் ஓமனுக்கும் இடையில் நிற்கும் சில கப்பல்களும் அலையில்லாத கடலும்.



கடற்கரை

அதது ஊருக்கு தகுந்த மாதிரி

நம்ம கண்ணுக்கு என்று இதெல்லாம் படுது பாருங்க அதை சொல்லனும்.இந்த மாதிரி வலைப்பதிவு இருக்கும் போது என்ன கவலை! பிடிச்சி போட்டா எப்போவாது உபயோகப்படும் பாருங்க.

இங்கு மஸ்கட்டில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு அதிகமாகி வருவதாக உள்ளூர் மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த வாய்கால் முகப்பை பாருங்கள்,வித்தியாசமாக இல்லை?

ஒன்றும் இல்லை! இது மழைக்காலத்துக்கும் வெய்யில் காலத்துக்கும் ஏற்றவாறு இருகிய ரப்பர் கொண்டு மோல்ட் செய்து அப்படியே பொருத்திவிட்டார்கள்.சிமிண்ட் மற்றும் மண் எதுவும் கிடையாது.இப்படி கிடைப்பதன் மூலம் வேலையும் சுலபமாக முடியும் பணமும் மிச்சம் பிடிக்கமுடியும்.மழை தண்ணீர் போக்குவரத்து குறைவாக உள்ள நாடுகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தண்ணீர் மூலம் அதன் அடிப்பகுதியில் அரிப்பு இருக்காது என்பதால் சாலை அமிழும் நிலை வராது.



காலத்துக்கு ஏற்ப மாறுதல் ஏற்பட்டுகொண்டிருக்கும் பல துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்று.

Wednesday, January 06, 2010

என்ன,இப்படி சொல்லிட்டாங்களே!!

சும்மா தானே இருக்கோம் இப்போ என்று நான் முன்பு வேலை செய்த பாலத்தின்(மலேசியாவில்) புதிய படம் ஏதாவது இருக்கா என்று கூகிளிடம் தேடிய போது ஒரு அருமையான படம் கிடைத்தது.

இங்கே

படுபாவி கேமிராமேன் இப்படி ஒரு கமெண்ட் போட்டு என்னவோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி மானத்தை வாங்கிட்டான்.அப்ப அவன் சொன்னது எல்லாம் பொய்யா?

இல்லை.

நிலத்தில் பார்க்கும் போது மண் தோண்டி அவ்வளவாக உபயோகிக்காமல் மனித வளத்தை அதிகமாக உபயோகித்து வேலை பார்த்தோம் அதை பார்த்திருப்பான் போல் இருக்கு அதை பொத்தாம் பொதுவாக சொல்லிட்டு போய்விட்டார்.ஊரில் இருந்து கொண்டு வந்த ஆட்களை சும்மா உட்கார்த்தி வைத்து சம்பளம் கொடுப்பார்களா?

Thursday, December 31, 2009

சிமிண்ட் தேவையில்லை

மஸ்கட்டில் சிறு சிறு குன்றுகளை சமப்படுத்தி அதன் மேல் வீடுகள் கட்டாமல் குன்றின் மேலேயே கட்டி,வீட்டுக்குப்போக சாலையை அதன் போக்கிலே போட்டுவிடுகிறார்கள்.நடப்பதெல்லாம் வீட்டோடு சரி, வெளியில் வந்தால் மகிழுந்து தான் அதனால் அதற்கு ஏற்றாற் போல் சாலையை போட்டுவிட்டால் போதும் வீடு எந்த உயரத்தில் இருந்தாலும் கவலையில்லை.

மேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.



இப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.

முதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.

3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டினேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.

மழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.

அடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது!!!
அங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.

Friday, December 25, 2009

25 வருடம் கழித்து.

என்னுடன் வேலை பார்த்த பழைய நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது மஸ்கட் வரும் வரை.மஸ்கட்டில் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் கிளை இருப்பதை இணையம் மூலம் தெரிந்து இருந்தாலும் எவர் பெயரை சொல்லி தேடுவது என்ற குழப்பத்தில் ஒரு நாள் கூகிள் சாட்டில் வரும் நண்பரிடம் கேட்டேன்.அவர் இருப்பதோ வேறு அரபு நாட்டில் இவரிடம் என்ன விபரம் கிடைக்கும் என்ற சந்தேகத்திலேயே கேட்டேன்.அவரும் ஒருவர் பெயரை சொன்னதும் எனக்கு தெரிந்த பெயராகவும் இருந்ததால் அவர் அலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக்கொண்டேன்.தொடர்பு கொண்டு நான் நினைத்துக்கொண்டிருந்தவரும் இங்கு இருப்பவரும் ஒருவரே என்று தெரிந்தவுடன் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தோம்.மற்ற நண்பர்களை சந்திக்கும் எண்ணத்துடன் ஒரு உணவகத்துக்கு என்னை அழைத்து மற்ற நண்பர்களையும் அறிமுகபடுத்தி வைத்தார்.மதிய உணவே மாலை 4 மணி வரை போனது.அங்கு பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு தெரிந்த மற்றொரு நபரின் பெயர் அடிபட்டவுடன் அவர் அங்க அடையாளங்களை சொல்லி “அவரா?” என்றேன். ஆமாம் அவரே தான் இங்கு தான் சோஹாரில் வேலை செய்கிறார் என்றார்கள்.எண்ணை வாங்கி பேசி மற்றொரு நண்பரை பிடித்தேன்.இப்படியே ஒரு சின்ன வட்டம் உருவானது.

கடைசியாக வாங்கிய எண் மூலம் எனக்கு 25 வருடத்துக்கு முன்பு பழக்கமான நண்பரை தொடர்பு கொண்டேன்.சிறிது நேரம் பேசிய பிறகு இன்று சந்திக்கலாம் என்று சொன்னார்.சொன்னது போல் காலையிலேயே தொலை பேசி Qurm பூங்காவிற்கு அருகில் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார்.

போன கொஞ்ச நேரத்திலேயே வந்த நண்பர் உடல் எடை குறைந்து முன்பை விட இளைத்து இருந்தார்.அவரே கூப்பிட்ட பிறகு தான் எனக்கு அடையாளம் தெரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பூங்கா உள்ளே போய் சுமார் 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம் அவர் மூலம் மேலும் சிலரின் தொடர்புகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.இணையம் மற்றும் சில தொடர்புகள் இல்லாவிட்டால் இவர்களை எல்லாம் திரும்ப சந்தித்து இருக்க முடியுமா? என்று தெரியவில்லை.

மணி ஒன்றானதும் மதிய சாப்பாடுக்கு எங்கு போகலாம் என்றவுடன் Ruwi இல் இருக்கும் சரவண பவன் போகலாம் என்றார்.போகும் போதே ஓட்டுனர் உரிமம் அதை எப்படி முயற்சிக்கனும் எவ்வளவு கால அவகாசம் எடுக்கும் என்ற விபரங்களை சொல்லிக்கொண்டு வந்தார்.சாப்பாடு முடிந்தவுடன் எங்கு போகலாம் என்று கேட்டார்,அப்படி எதுவும் முன் யோஜனையுடன் வரவில்லை என்பதால் “சினிமா” வுக்கு போகலமா என்றேன்.

சரி என்றார்.
முதலில் ஸ்டார் சினிமா போனோம் ஆனால் படம் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை.நாங்கள் எதிர்பார்த்ததோ “அவ்தார்”.அங்கு இல்லை என்றதும் Al Shatti திரை அரங்குக்கு போனோம் அங்கும் அதே தான் ஓடிக்கொண்டிருந்தது.அங்கும் அவதார் இல்லை,பிறகு அவரே சுமார் 40 கிமீட்டர் தள்ளி இருக்கும் Basta கடைதொகுதி கூட இருக்கும் சினிமா அரங்குக்கு கூட்டிப்போனார்,இதிலும் அதே படங்கள்.இத்தொகுதியின் கூரை வித்தியாசமாக இருந்தது.






வரும் வழியில் தென்பட்ட Grand Mosque.



வித்தியாசமான கோணத்தில் Qurm பாலம்.




சினிமா பார்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாத்தால் திரும்ப வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் அலவளாவி விட்டு போனார். வெகு நாள் கழித்து பழைய L&T-ECC கதைகளை பேசி மகிழ்ந்ததில் இன்றைய பொழுது ஓடிவிட்டது.

Thursday, December 24, 2009

மஸ்கட்டுக்கு எப்படி போகனும்?

இப்படி சாலை வழியாகவும் போகலாம் அல்லது அந்த விவர பலகைக்கு மேலே போகும் விமானத்திலும் போகலாம்.:-)



இன்று மதியம் பழசிராஜா படம் போகலாம் என்று நானும் என் நண்பரும் கிளம்பினோம்.நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன்.நம் நண்பருக்கு இப்படி வெளியில் போனால் தான் Non-Veg சாப்பிடமுடியும் அதனால் ஒரு 10 நிமிடம் என்று சொல்லிவிட்டு உணவகம் போய்விட்டார்.வெளியில் வெய்யில் அடித்தாலும் அவ்வளவாக உறைக்காமல் இருந்தது.கொஞ்சம் தூரம் நடையை கட்டிய போது இவ்விளம்பர பலகை கண்ணில் பட்டது.அதன் பிறகு அப்படியே சாலை ஓரத்தில் நின்று போகும் வண்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது சமீபத்தில் சின்மனி வலைப்பதிவில் மஸ்கட்டை பற்றி சொல்லியிருந்தார்.பசுமையே இல்லை என்கிற தொனி பட்டது.மஸ்கட் உள்ளே பல இடங்களில் கீழே உள்ள மாதிரி தான் இருக்கும்.UAE மாதிரியே வேப்ப மரங்கள் எளிதாக வளர்கின்றன.



பழசி ராஜா எனக்கு சுமாராகத்தான் இருந்தது,ஒருவேளை மலையாளத்தில் பார்த்ததால் இருக்குமோ?சரத்குமார் குரல் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால் மலையாள இரவல் குரல் அவ்வளவாக எடுபடவில்லை.

Saturday, December 19, 2009

யோசிக்க வைத்திருக்கார்.

உலகமயமாக்கல்.
அமெரிக்க டாலர் பரிவர்தனை.
அரபுகளில் கையிருப்பு.(சிட்டி பேங்கை முழுங்குதல்)
எண்ணை பரிவர்தனை.
இந்திய பொருளாதாரம்.
அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனை.
இந்திய திட்டமிடல் கமிஷன்.
இந்திய மங்கையரின் சேமிக்கும் பண்பு...இதைப்பற்றி ஒன்றிரண்டு தெரியவில்லை என்றால் பொருமையாக கீழுள்ள நகர் படத்தை பார்க்கவும்.

56 நிமிட நகர் படம் திரு வெங்கடேஷ் அருமையாக சொல்லியுள்ளார்,நேரமானாலும் பார்த்துவிட்டு தான் படுக்கனும் என்று இருந்தேன்,இப்போது தான் முடிந்தது.





நன்றி:Vision India Trust.

இதை பார்க்கும் போது நம் பழைய பதிவர் திரு சிவஞானம் ஜி தான் ஞாபகத்துக்கு வந்தார்.இதை தருமி அவர்கள் பார்த்தாலும் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்.

அகலகட்டை இணைய இணைப்பு இல்லை என்றால் உங்களால் சரியாக பார்க்க முடியாது.

Friday, December 18, 2009

பழசி ராஜா

நேற்று வாரவிடுமுறையை தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு என்னும் போதே கலக்கமாக இருக்கு.இப்படிப்பட்ட மன நிலையில் இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது சக தோழர் Star Cinema வில் பழசிராஜா 2.45 க்கு ஷோவாம் போகலாமா? என்றார்.மலையாள படம் பரவாயில்லையா? என்றும் கேட்டார்.எந்த மொழியாக இருந்தால் திரையில் வரும் காட்சிகளை புரிந்துக்கொள்ள முடியாதா என்ன என்று நினைத்து வருகிறேன் என்று சொன்னேன்.அவரும் மதிய சாப்பாட்டை முன்னதாகவே முடித்துவிட்டு சுமார் 2 மணிக்கு கிளம்பிவிட்டார்.நிறுவன ஓட்டுனர் ஃபிரியாக இருந்ததால் அவருடன் கிளம்பினோம்.தியேட்டர் வாசலில் இறங்கும் போது 2.20.நான் டிக்கெட் வாங்கும் இடத்துக்கு போய் வரிசையில் நின்றிருந்தேன்,என் நிலை வரும் போது சக நண்பர் கூப்பிட்டு ஷோ 2 மணிக்கே ஆரம்பித்துவிட்டது அடுத்த ஷோ 5.45 க்கு தான் என்றார்.3.45 மணி நேரத்தை எப்படி போக்குவது?நண்பர் என்னிடம் வேறெங்காவது போகனுமா? என்றார்.நான் கொஞ்சம் யோசித்துவிட்டு “மத்ரா” பகுதியில் ஒரு கட்டிடம் இருக்கு ஊதுபத்தி ஸ்டேண்ட் மாதிரி இருக்கும் என்றேன்.ஓட்டுனருக்கு அப்பகுதி பழக்கம் என்றதால் போனாம் ஆனால் நுழைவு பகுதி தான் எங்கிருக்கு என்று தெரியாமல் சுற்றி கடற்கரையாவது சுற்றி பார்க்கலாம் என்று கடல் பக்கம் வந்தோம்.26 டிகிரி வெய்யில் குளுமையாக இருந்தது.மீதியெல்லாம் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.திரும்பவும் நாளை 2 மணி ஷோவுக்கு போகலாம் என்றுள்ளோம்.

திரையரங்குக்கு முன்னால் இருக்கும் மலைப்பகுதி




பேரீச்சை மரங்களுக்கு இடையில் இருக்கும் பஸ் நிறுத்தம்.



மத்ரா கடல் பகுதி



இது தான் அந்த ஊதுபத்தி ஸ்டேண்ட் கட்டிடம்.



மேலும் சில கடல் படங்கள்.









இதெல்லாம் நான் தான் எடுத்தேங்க...

அருமையான நகர்படம்

ஸ்டுரோக் வந்த பெண்ணின் அனுபவத்தை கூற கேளுங்கள்.இவர் நடிகையாக இருந்தாலும் “பட்டையை கிளப்பியிருபார் என்பதில் சந்தேகம் இல்லை.

நிஜ மூளை காண்பிக்கும் போது ஒரு மாதிரியாக இருந்தாலும் அது இரண்டாக இருப்பதும் அவற்றுக்குள் நிகழும் பல வேறு பரிமாற்றங்களை சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கு.அவருக்கு ஸ்டுரோக் வந்த போதும் அப்போதும் மூளையின் நிகழ்வுகளை அருமையாக சொல்லியிருக்கார்.



18 நிமிட நகர்படம் - கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்கள்.

Thursday, December 17, 2009

பண விரயம்.

ஒரு நாலஞ்சு நாளாகவே வேலைக்கு அலுவலகம் போகும் வழியில் இந்த வேலை கண்ணில் பட்டு வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தது.அதன் காரணம்?

முன்பெல்லாம் சாலை அல்லது பாலம் (Abutment) அங்கிருக்கும் நிலத்தில் இருந்து உயரமாக கட்டும் போது மேலே உள்ள மண் சரியாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மண்ணை சரிப்பார்கள்.இப்படி செய்தால் மழை காலத்தில் கூட சாலைக்கு ஒரு பாதகமும் ஏற்படாது.

1990 களில் எப்போதும் செய்யும் முறையில் தொழிற்நுட்பத்தை புகுத்தி சாலைக்கு(செங்குத்தாக சுவர்) எவ்வளவு இடம் வேண்டுமோ அதை மட்டும் உபயோகிக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.சென்னை தி.நகர் பாலம் போத்தீஸ் பக்கத்தில் எப்படி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.இது பல விதங்களில் குத்தகைக்காரர்களுக்கும் அரசாங்கத்தும் சௌகரியமாக இருந்தது.இடவிரயம் என்பது கட்டுக்குள் வந்தது.இதே முறையை தான் பல நாடுகளிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.மஸ்கட்டிலும் பெரும்பாலான சாலைகள் சம தளத்தில் இருந்து உயரமாக வைத்து கீழே போக்குவரத்து வரும் இடங்களில் பாலங்களை வைத்துள்ளார்கள்.

நன்றாகத்தான் செய்துள்ளார்கள் ஆனால் திடிரென்று என்னவாயிற்று என்று தெரியவில்லை அந்த செங்குத்து சுவருக்கு முட்டு கொடுப்பது போல் மண்ணை கொட்டி முட்டு கொடுக்கிறார்கள்.இது அப்படியே பழைய முறையை கையாளுவது போல் இருக்கிறது.இவர்களுக்கு இடம் இருக்கு செய்துட்டு போகட்டுமே எங்கிறீர்களா?அப்ப அந்த செங்குத்து சுவர் கட்ட ஆன செலவு?

அதைத் தான் மண் போட்டு மூடிவிடுகிறார்களே?? கீழுள்ள படத்தில் வலதுபக்கம்- அதன் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.



வண்டியில் போகும் போது எடுத்த சில சாலைப்படங்கள்.




Wednesday, December 16, 2009

இதுக்கு காரணம் இருக்கும்?

எனக்கும் என் பையனுக்கும் வான்வெளி அதன் அமைப்புகள் மற்றும் இரவில் வானத்தையும் அதன் ஊடே தெரியும் நட்சத்திரங்களும் அதன் இருப்பிடங்களும் என்ற எண்ணங்கள் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு போனால் வரும்.மனைவிக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை அதன் தொடர்பில் வரும் படங்கள் பார்ப்பதிலும் எனக்கு தெரிந்து ஆர்வம் காட்டியதில்லை.

என்னுடைய தாத்தா எனக்கு 12 வயது இருக்கும் போது வீட்டு முற்றத்தில் உட்காந்துகொண்டு தனக்கு தெரிந்தததெல்லாம் என்னிடம் கொட்டிவிட்டு போனார்.விஷயங்களை சொல்லும் போதே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன் என்று என் ஆர்வத்தை தூண்டிவிட்டார்.ஒரு தலைமுறை மற்ற தலைமுறைக்கு தனக்கு தெரிந்ததை சொல்லி தகவல்கள் அழியாமல் காக்க வேண்டும் என்று நினைப்பவர்.இக்காலத்தில் இது அனைத்தையும் வட்டில்/இணையத்தில் போட்டு வைத்துவிடுவதால் அவர்கள் பேசுவதை கேட்க கூட யாருக்கும் நேரம் இருப்பதில்லை.என்னுடைய வயதான காலத்திலும் இதைத்தான் அனுபவிக்கப்போகிறேன் என்பது இப்போதே நன்றாக தெரிகிறது ஏனென்றால் நான் என்னுடைய அப்பாவிடம் பேசுவது சில வினாடிகளே,அதற்குள் மெல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் வெற்றிடம் உருவாகிவிடுகிறது.என் மனைவியிடமே அவ்வளவாக பேசுவதில்லை என்ற குறை அவ்வப்போது எழுகிறது அது என்னுடைய சுபாவமாக இருப்பதால் அப்பாவிடம் பேச விஷயம் இல்லை என்பது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.அவசியம் இல்லாத போது பேசுவதால் தான் பிரச்சனை எழுகிறது.

நான் பேசுவதே இல்லை என்ற மனக்குறையை போக்க தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு நானும் என் மனைவியும் போய்விடுவோம். நான் பேசுவதையோ அல்லது அவர்கள் பேசுவதையே கேட்டுவிட்டு கொசு தன் வேலையை ஆரம்பிக்கும் போது கீழே வந்துவிடுவோம். அப்படி ஒரு நாள் பேசிக்கொன்டு இருக்கும் போது என்னுடைய இருகுழல் நோக்கி மூலம் சில நட்சத்திரங்களை பார்த்து விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தேன்.அப்போது தான் ஞாபகம் வந்தது போல் "ஏங்க நான் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்" என்று மனைவி ஏதோ சொல்ல வந்தார்.
சொல்லு என்றேன்.

4 வருடத்துக்கு முன்பு ஒரு நாள் இரவு 9.30 மணி இருக்கும் இங்கு உட்கார்ந்துகொண்டு இருக்கும் போது எதேச்சையாக மேலே பார்த்தேன் ஒரு பெரிய Space Ship மாதிரி ஒன்றை பார்த்தேன் என்றார்.எனக்கு தூக்கிவாரி போட்டது.

மேலும் தொடர்ந்தார்.

சரி நமக்கு தான் ஏதோ என்று கண்ணை கசக்கிவிட்டு தலையை தடவிக்கொண்டு திரும்ப மேலே பார்த்தேன் ஒன்றுமே இல்லை என்றார்.இந்த விபரங்களை வைத்து சன் டிவிக்கா விபரம் கொடுக்க முடியும்.என் மனைவி Space Ship பார்த்ததாக எனக்குத்தான் சொல்லமுடியுமே தவிர வேறு பிரயோஜனம் இல்லை அதுவும் 4 வருடங்களுக்கு முன்பு.

அது ஒரு புறம் மறந்து போய் கிடக்க,சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நானும் மனைவியும் மாடியில் அதே சமயம்(9.30 மணி) எதிரும் புதிருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி என்றால் அவள் மீனம்பாக்கத்தை நோக்கி.திடிரென்று ஒரு ஒளி Trapezoidal Shape யில் சிறிய அளவில கட்டிட ஓரமாக மேலெழும்பி போனது.இப்போதெல்லாம் சில நேரம் கண்ணில் வெள்ளை ஒளி வந்து போவதால் அந்த மாதிரி இதுவும் போல என்று நான் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.பார்த்த சிறிது நேரத்தில் அவள் என்னிடம் கேட்டாள் நான் அந்த ஒளியை பார்த்தேனா? என்று.சரி ஏதோ நடக்குது என்று மட்டும் புரிந்தது.இந்த மாதிரி சிறிய ஒளி நகர்ந்து போவதை பார்ப்பது எனக்கு முதன் முறை அல்ல.அந்த முதல் முறை எப்போது என்று தெரிஞ்சுக்கனுமா?பதிவு பெரிசாயிடுமோ!!

பம்பாய் ஆமாம் அப்போது பம்பாய் தான். எனக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும்.அப்போது அங்கிருந்த மாமா வீட்டுக்கு ஒரு 3 நாள் விடுமுறைக்காக போயிருந்தேன்.மாமா வேலைக்கு கிளம்பும் முன் மணியடித்து பூஜை புணஸ்காரங்கள் முடித்து தான் அலுவலகம் போவார் அதனால் முன்னமே எழுந்து அதற்கான வேலையில் ஈடுபடுவார்.நான் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன வேலைக்கா போகப்போகிறேன் என்ற நினைப்பில் ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தேன்.மணி ஓசை கொஞ்சம் அதிகமானதும் இதற்கு மேல் வழியில் தூங்குவது நன்றாக இருக்காது என்று நினைத்து படுக்கையிலேயே உட்கார்ந்து கண்ணை விழிக்கலாமா வேண்டாமா என்ற யோஜனையுடன் இருந்தேன்.அப்போது ஒரு வெள்ளை நிற ஒளி வீட்டின் உள் இருந்து அப்படியே ஹாலை கடந்து வெளியில் போனது தெரிந்தது.ஆச்சரியமாக இருந்தாலும் யாரிடமும் அதைப்பற்றி கேட்கவில்லை.ஏதோ ஒன்று நம் அறிவிக்கு புலப்படாதது இருக்கிறது என்று தெரிந்தது.

இப்படிப்பட்ட எண்ணங்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்குமோ என்னவோ,இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலக கணினியில் Google Earth யில் மேய்ந்துகொண்டிருக்கும் போது 22" மானிடரில் பளிச் என்று ஒன்று வித்தியாசமாக தெரிந்தது.நீங்களே பாருங்கள்.

வெளிக்கிரக மக்களை அழைக்க அல்லது அவர்கள் கவனத்தை கவர பல்வேறு கட்டிடங்களை கட்டினார்கள் என்ற பேச்சு இருக்கும் நிலையில் வித்தியாசமான அமைப்பில் இருக்கும் கட்டிடங்கள் அவர்களை கவர்கிறதா?இதன் பின்னனி என்ன?வெளிகிரகத்தில் இருப்பவர்கள் இங்கு வருகிறார்களா? ஏன் காலையில் வருவதில்லை(பெரும்பாலும்)?

உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முழுவதுமாக ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

இது கொஞ்சம் தூரத்தில் இருந்து...



கொஞ்சம் அருகில் கட்டம் கட்டி காண்பித்திருக்கேன்.ஏதாவது வித்தியாசமாக இருக்கா?



கையை அசைப்பது போல் ஒரு உருவம்...



படத்தின் மீது சொடுக்கி பாருங்கள்.

என்ன விஜய் தொலைக்காட்சியில் வரும் "நடந்தது என்ன?" மாதிரி இருக்கா?

Friday, December 11, 2009

சற்று முன்...

மஸகட் வந்த புதிதில் இங்குள்ள பொது ஜன அதிகாரியிடம் ”இங்கு எப்போது மழை பெய்யும்?” என்றேன்.அதெல்லாம் சொல்ல முடியாது 3 அல்லது 4 வருடங்களாக மழை பெய்யாமல் கூட இருக்கும் என்றார்.

இன்று மாலை வீட்டை விட்டு வண்டியில் வெளியே போகும் போதே மழை வரக்கூடிய அறிகுறியாக கருப்பு மேகங்கள் சூழ்ந்திருந்தன ஆனால் நாங்கள் வீட்டுக்கு வரும் வரை மழை பெய்யவில்லை.

இரவு சாப்பாட்டுக்காக சப்பாத்தி போட்டுக்கொண்டிருக்கும் போது சொட்டு சொட்டு என்று தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.சரி குளிர்சாதன பெட்டியில் இருந்து தான் தண்ணீர் சொட்டுகிறது போலும் என்று நினைத்துக்கொண்டு வேலையை பார்த்தேன்.சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக அதுவும் சத்தம் அதிகமாக கேட்ட போது தெரிந்தது வெளியில் மழை பெய்துகொண்டிருப்பது.நம்மூரில் மழை வருவதற்கு முன்பு கொஞ்சம் வெக்கையாக இருக்கும் அல்லது குளிர்ந்த காற்று அடிக்கும் இங்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு 20 நிமிடத்துக்கு மழை பெய்தது.

Thursday, December 10, 2009

கோணல் ஆனாலும் என்னுடையது.

போன வாரம் கடற்கரை சாலையை நோக்கி நடந்து போய் கொண்டிருக்கும் போது Wadi என்று சொல்லக்கூடிய கடல் தண்ணீர் உள்வாங்கும் இடத்தில் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள் அவர்களின் ஒருவருடைய தூண்டிலை பார்த்ததும் நம்மூர் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வருமே அது தான் ஞாபகம் வந்தது.



பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது சொடுக்குங்கள்.