Wednesday, October 21, 2009

ஸ்ரீபுரம்

இப்படி ஒரு ஊர் அதுவும் வேலூருக்கு மிக அருகில் இருப்பது இது நாள் வரை தெரியாமல் இருந்தேன்.மச்சினரும் மற்றொருவரின் மகிழுந்துவும் கிடைத்த போது வண்டி ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர் மச்சினர், ஓட்டுனராக இருந்து என்னை அழைத்துப்போன இடம் இது தான்.

காலை வளசரவாக்கத்தில் இருந்து 7 மணிக்கு கிளம்பினோம்.காஞ்சி கிளை சாலை பிரியும் இடம் வந்த போது மணி 8,கூட வந்தவர்கள் வயிறு பசிக்க ஆரம்பித்தது போல் அதற்கு ஏற்றாற் போல் ஒரு குளிர் வசதி என்று பலகை போட்ட உணவு விடுதி தெரிந்தது,வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனோம்.குளிரூட்டப்படவில்லை.இருக்கையை அசைக்க ஸ்பெஷல் தெம்பு வேணும்.சிறு நீர் கழிக்கும் இடம் நன்றாக இருப்பதாக சொன்னர் மச்சினர் ஆனால் சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஏதோ ஒரு விளம்பர பலகையை வைத்து மறைத்து கழிவரையையே எல்லாவற்றுக்கும் உபயோகபடுத்தும்படி வைத்திருந்தார்கள்.இதைவிட மோசமான நிலமையை என் மச்சினர் பார்த்திருக்கக்கூடும் போலும் இதை நன்றாக இருக்கிறது என்று சொல்லியுள்ளார்.



காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு 8.40 க்கு புறப்பட்டு 9.15 க்கு வேலூரை அடைந்தோம்.வெளியேறும் வழியில் சிறிது கவனபிசகாகி அடுத்த வழியில் வெளியேறி சிலரை கேட்டு ஸ்ரீபுரம் நோக்கி பயணப்பட்டோம்.ஒவ்வொரு சாலை வழி விளக்கு கம்பங்களில் “Golden Temple" போகும் வழி என்று போட்டு இருந்ததால் வேறு எந்த தவறும் செய்யாமல் 9.45 க்கு கோவிலுக்குள் வண்டியை நிறுத்தினோம்.திரும்பிய இடங்களில் எல்லாம் கேமிரா மற்றும் செல் போன்கள் அனுமதி மறுக்கப்பட்ட செய்தி கொண்ட பலகைகள் தொங்கவிட்டிருக்கார்கள்.முதல் அதிசியமே இக்கோவிலுக்குள் போவதற்கு நுழைவுக்கட்டணம் என்று எதுவும் இல்லை இதுவே பெரும்பாலான பொது ஜனங்களை இங்கு ஈர்க்கிறது.இல்லை,நான் பணம் கொடுத்து பார்ப்பேன் என்பவர்களுக்காக சேவாதி தரிசனம் என்று போட்டு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள்.பணம் அதிகம் இருப்பவர்கள்,அதிக நேரம் காத்திருக்கமுடியாதவர்கள் இவ்வழியே போகலாம்.அம்மன் சன்னிதியில் சிறிது நேரம் உட்கார்ந்து நிம்மதியாக தரிசித்து கிளம்பலாம்.



தங்க கோபுர ஆலயம் பற்றி அவ்வளவாக கேள்விப்படாத நான் பொது நுழைவு மூலம் போய் திருப்பதியில் உள்ள மாதிரியே ஒரு கொட்டடியில் உட்காரவைக்கப்பட்டேன்.எனக்கு நேரே LCD திரையில் யாரோ ஒருவர் எதையோ தொட்டு தொட்டு கொடுக்க அதை அக்னியில் போட்டுக்கொண்டிருந்தார்கள் அதில் ஒரு பட்டுப்புடவையும் அடங்கும்.அந்த புடவையை நெய்தவர் பார்த்தால் நொந்திருப்பார்.என் மனைவிக்கு இந்த இடம் பற்றி ஏதும் தெரிந்திருக்குமோ என்ற எண்ணத்தில் அவ்விடம் பற்றியும் அந்த பெரியவரையும் பற்றி கேட்டேன்.இவர் தான் இக்கோவிலை நிர்வகிப்பவர் என்ற விபரம் மட்டுமே தெரியவந்தது.சில வினாடிகள் கடந்ததும் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.நட்சத்திர வடிவில் இருந்த பாதை கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு அங்கங்கே நல்வாக்கியங்களை பொறித்துவைத்துள்ளார்கள்.நடப்பவர்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க மூலைக்கு மூலை பானங்களும் & சிற்றுண்டிகளும் வைத்து விலைக்கு கொடுக்கிறார்கள்.வெளியில் வெய்யில் கொளுத்தினாலும் நடக்கும் இடம் குளுமையாக இருந்தது.



ஆலயத்தின் உள்பக்கமும் & வெளி கோபுரமும் தங்கத்தினால் ஜொலிக்கிறது.கோவிலை சுற்றி சிறிய அகழிமாதிரி தோண்டி தண்ணீர் நிரப்பியுள்ளார்கள்.கோவிலின் உள் நுழையும் போதும் அங்கிருந்து திரும்பும் வரை அம்மனை(நாரயணி) தீர்க்கமாக பார்க்கும் படி அமைத்துள்ளார்கள்.தரிசனம் முடிந்து வெளியேரும் முன்பு பிரசாதம் கொடுத்து அனுப்புகிறார்கள்.

கோவிலை விட்டு வெளியேரும் முன்பு காலியாக கிடந்த கார் பார்க்கிங் முழுவதும் சுற்றுலா பயணிகள் பேருந்துகள் நிரம்பிக்கிடந்தன.

No comments: