சில மாதங்களுக்கு முன்பு வெப் கேமை பிரித்ததை இங்கு போட்டிருந்தேன்,அப்பதிவில் அடுத்தது DVD Recorder என்று சொல்லியிருந்தேன் அதற்கு இன்னும் நேரம் வராததால் வேறு ஒன்றை முயற்சிக்க வாய்ப்பு இப்படி கிடைத்தது.
ஒரு 8 மாதம் பின்னோக்கி போவாம்.அப்போது சிங்கையில் இருந்தேன்.
மச்சினர் தனக்கு ஒரு டிஜிடல் கேமிரா வேண்டும் என்றும் அதன் விலை 5000 ~ 6000 வரைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் என்றார்.எனக்கு தெரிந்த சிம் லிம் ஸ்கொயர்,முஸ்தாபா மற்றும் நரேந்திரன் (சிங் கடை) யில் முதல் சுற்று பார்த்துவிட்டு கடைசியில் சிங் கடையில் 200 வெள்ளிக்கு Samsung S630 என்ற மாடலை வாங்கினேன்.சிங் கடை பொருட்களில் மீது பொதுவான குற்றச்சாட்டையும் மீறி வாங்கினேன் ஏனென்றால் எனக்கு அவர்கள் சொன்ன மாதிரி தரக்குறைவு ஏற்படவில்லை.ஊருக்கு வந்து மச்சினரிடம் கொடுத்து அவர்கள் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்,எவ்வித சோதனையும் வரவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஊருக்கு போயிருந்த போது மச்சினர் போன் செய்து நான் வாங்கிக்கொடுத்த காமிராவில் LCD மட்டும் வேலை செய்யவில்லை அதை மாற்ற இங்கு 2500 கேட்கிறார்கள் என்றார்.கேமிராவை ரிப்பேர் செய்யாதீர்கள் அதற்கு பதில் புதிதாக கொஞ்சம் பணம் போட்டு வாங்கிவிடலாம் என்றேன் அதற்கு அவரும் சரி என்று ஒப்புக்கொண்டு மீண்டும் என்னிடமே வேறு ஒரு கேமிரா வாங்கச்சொன்னார்.நான் மஸ்கட் போவதால் அங்கிருந்து வாங்கி வருவதாக சொல்லியிருந்தேன் அதே மாதிரி வேறு ஒரு புதிய கேமிராவையும் வாங்கிக்கொடுத்தேன்.
போன வாரம் அவரை ஒரு விழாவில் சந்தித்த போது அந்த பழைய கேமிராவை என்னிடம் காட்டி மஸ்கட்டில் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள் அல்லது தூக்கிப்போட்டு விடுங்கள் என்று சொன்னார்.அதை வாங்கி வந்து நானும் இயக்கி பார்த்த போது,உதட்டை பிதுக்கி தூக்கி போட வேண்டியது தான் போல் இருக்கு என்று நினைத்து அதற்கு முன்பு அதை பிரித்து அதனுள் எப்படி உள்ளது என்று பார்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அதை மறு நாளுக்கு ஒத்திப்போட்டேன்.இதற்கிடையில் அதன் மின்கலத்தை கொஞ்சம் மினேற்றம் செய்து அதனால் எதுவும் பலன் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று மின்னேற்றினேன்.
மறு நாள் காலை மின்னேற்றிய கலங்களுடன் கேமிராவை இயக்கிய போது LCD யில் மிக மிக மெலிதாக படம் தெரியந்தது ஆனால் அதை வைத்து பெரிதாக ஏதும் செய்ய முடியாது என்று தோனியது.சில Shot எடுத்த போது Flash & Camera ஷாட் எடுப்பது நிச்சயமானது.LCD இல்லை என்றால் இந்த கேமிரா வேஸ்ட் என்பது புரிந்தது.கேமிராவை கழற்றலாம் என்று என்னிடம் இருந்த சிறிய மற்றும் பெரிய Screw driver அனைத்தையும் முயற்சித்தும் முடியவில்லை.இங்குள்ள பல கடைகள் ஏறி இறங்கி வெறும் கையுடன் தான் திரும்பினேன்.சில கடைக்காரர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்.வெளியில் போன மனைவியிடம் சொல்லி வடபழனியில் உள்ள மெர்சி எலக்டானிக்ஸில் கேட்கச்சொன்னேன் அதிலும் தோல்வி தான். கடைசியாக முயற்சிக்க வேண்டிய ஒரே இடம் ரிட்சி தெரு மட்டுமே என்ற நினைப்பில் ஒரு நாள் இடைவெளி விட்டேன்.நான் எவ்வப்போது தோல்வியின் விளிம்பில் நிற்கும் போது நடுவில் கிடைக்கும் ஒரு நாள் அதன் போக்கை மாற்றிவிடுவதை பல முறை கண்டிருக்கிறேன் அது இம்முறை பலன் அளிக்குமா என்று தெரியவில்லை.
மறு நாள் சாயங்காலம் தேடுதல் வேட்டையின் நடுவில் ஒரு பேன்ஸி ஸ்டோரில் நுழைந்து இந்த கேமிராவை காண்பித்து இதற்கு தகுந்த ஸ்குரு டிரைவர் இருக்கா என்ற அங்கிருந்தவர்களிடம் கேட்ட போது இல்லை என்றே பதில் வந்தது,கடைசியாக கடை முதலாளியிடமே கேட்போம் என்று கேட்ட போது அவர் மற்றவரிடம் சொல்லி தேடி பார்க்கச்சொன்னார்.அந்த மற்றொருவர் கொண்டு வந்த செட்டில் ஒரு ஸ்குரு டிரைவர் இல்லை இருந்தாலும் எனக்கு தேவையானது கிடைத்தது. நாற்பது ரூபாய் மதிப்புள்ளது ஒரு டிரைவர் இல்லாத்தால் முப்பது ரூபாய்க்கு கைமாறியது.
கேமிராவை பிரிப்பதற்கு முன்பு இந்த மாதிரி யாருக்காவது நேர்ந்துள்ளதா அதை எப்படி தீர்த்தார்கள் என்ற தீர்வு அகப்படுதா என்று இணையத்தில் தேடியதில் பல விபரங்கள் கிடைத்தது,மிக முக்கியமாக எப்படி கேமிராவை பிரிக்க வேண்டும் என்பது.பார்தத பதிவுகளை மனதில் நிறுத்தி மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு ஸ்குருவாக பிரித்து LCD ஐ தனியாக பிரித்து பார்த்தேன் அதற்கு கீழ் உள்ள PCB Board யில் ஏதாவது எரிந்துள்ள வடு இருக்கிறதா என்று,அப்படி ஒன்றும் தென்படவில்லை.இனி இந்த LCD ஐ ரிட்சி தெருவில் உள்ள கடையில் கொடுத்து புதிதாக ஒன்று வாங்கி பொருத்த வேண்டும் என்று நினைத்து அதை அப்படி இப்படி என்று திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.இதை எப்படி கழற்றினோமோ அப்படியே மீண்டும் பொருத்திப்பார்த்தால் என்ற குயுகுத்தி தோன்ற அந்த சிறிய/மெலிதான கேபிளை அந்த PCB போர்டில் உள்ள லாக்கரில் திணித்து கேமிராவை இயக்கினேன் ”வாவ்” இப்போது LCD ஒளிந்தது ஆனால் எல்லாமே வெள்ளையாக.புஸ் என்றானது என் ஆர்வம்.கேமிரா இயக்கத்தில் இருக்கும் போது கேமிரா எதை பார்க்கிறதோ அது தானே LCDயில் வரவேண்டும்?
என்னடா இப்படியாகிவிட்டதே என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் அந்த ரிப்பன் கேபிளை எடுத்துவிட்டு மறுபடியும் நன்றாக பொறுத்திவிட்டு மின்கலங்களை போட்டு கேமிராவை உயிர்ப்பித்தேன்.
கேமிராவுக்கு உயிர் வந்தது. LCD யில் அழகாக கேமிரா கோணங்கள் வந்தது.ஏற்கனவே எடுத்திருந்த படங்களை அதில் பார்க்க முடிந்தது.இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மனைவி “ஏங்க அந்த வீடியோ கேமிராவையும் “ கொஞ்சம் பாருங்களேன் என்றார்.
அதை கதியை நீங்களே பாருங்க கீழே.உயிர்பித்தாலும் நடக்கமுடியாத அளவுக்கு ரோபாவாக கிடக்கிறது,ஆனா இன்னொரு முறை இந்த அனுபவம் தேவைப்படும் இம்மாதிரியான தவறு நடக்காது என்று நினைக்கிறேன்.ஏற்கனவே கிழவனாகிப்போன இந்த வீடியோ கேமிரா போனாலும் போகிறது என்ற மனநிலையில் செய்ததால் அவ்வளவு இழப்பை உணரவில்லை.
சோனியின் கைத்திறன் நிஜமாகவே வியக்கவைக்கிறது.