நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இங்கு பொது விடுமுறை.எப்போதும் போல் சிறிது காலதாமதமாக எழுந்திருக்கலாம் என்றாலும் சீக்கிரமே கண் முழித்துவிட்டது.காலை 7 மணிக்குள் தொலைப்பேசினால் கட்டணம் குறைவு என்பதால் பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் பேசி முடித்துவிட்டு, துணி துவைத்து குளித்து முடித்துவிட்டு கணினி பக்கம் வந்தேன்.
பார்க்கவேண்டிய படத்தின் ஒரு பகுதியை பார்த்துவிட்டு,தெய்வத்தின் குரல் - மென்நூலில் சில பக்கங்களை படித்துமுடித்தேன்.சுமார் 4000 பக்கங்களை கொண்ட புத்தகத்தில் தினம் எந்த பக்கத்தில் முடிக்கிறேன் என்பதை மறுமுறை திறக்கும் போது லினக்ஸ் அழகாக ஞாபகம் வைத்துக்கொள்கிறது.வெளியே கிளம்பும் நேரம் என்பதால் ஸ்போர்ஸ் காலனிகளை அணிந்துகொண்டு பக்கத்தில் உள்ள கடைக்கு போய் காலை சிற்றுண்டிக்கு சில கேக் வகைகளை வாங்கிக்கொண்டு அதற்கு பக்கத்தில் உள்ள தேநீர் கடைக்கு போய் 1 திராம் கொடுத்து,தேநீர் வாங்கி பருகினேன்.எப்போதும் போல் அருகில் உள்ள மைதானத்துக்கு போய் கிரிக்கெட்/வாலிபால் விளையாடும் குழுக்களை பார்த்துவிட்டு மதினா பார்க்கில் உட்கார்ந்துவிட்டு வீடு திரும்பினேன்.
வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள உணவருந்தும் இடங்கள் காலை 11 மணிக்கு மூடி மதியம் 1.30 மனிக்கு தான் திறப்பார்கள் எனபதால் என்னுடைய மதிய உணவை 1.30 க்கு தள்ளிப்போட்டேன்.அந்த நேரம் வந்தவுடன் கிளம்பி பக்கத்தில் உள்ள சரவணபவனுக்கு போனேன்.கீழ்தளம் வெறுமையாக இருந்ததை பார்த்து இன்று மதிய உணவு அவ்வளவு தான் போல் என்று நினைத்தேன் ஆனால் நல்ல வேளையாக அது மேல் மாடியில் இருந்தது.அளவு சாப்பாடு இல்லாததால் எல்லோரும் முழுச்சாப்பாட்டை சாப்பிடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.பூரியுடன் ஆரம்பித்து வாழைப்பழமுடன் முடிந்தது.பொறித்த அப்பளத்தில் கவிச்சி வாசம் வந்தது - பொறித்த எண்ணெயில் பிரச்சனை என்று நினைக்கிறேன்.
15+1 திராம் கொடுத்துவிட்டு எழுந்திருந்தால் வயிற்றில் ஒரு இழுப்பு,கையை கூட அலம்ப போகமுடியவில்லை.என்ன பிரச்சனை?காலை சாப்பிட்ட கேக் பிரச்சனையா அல்லது சற்று முன் அளவில்லாமல் சாப்பிட்டதா? புரியாத நிலையில் மெதுவாக வெளியில் வந்து சற்று நேரம் உட்கார்ந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த 3 தமிழ் இளைஞர்கள் அறை வாடகை பிரச்சனையை பற்றி விவாதிக்கொண்டிருந்தார்கள்.ஒரு 15 நிமிடம் உட்கார்ந்தபிறகு அங்கிருந்து கிளம்பினேன் அதற்குள் வலியும் குறைந்திருந்தது.
இன்று போக நினைத்த இடம்
பர் துபாய்,இவ்விடத்தை பேருந்து மூலம் அடைய முடியும் என்பதை சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன்,அதுவும் எதேச்சையாக.என்னுடைய மடிக்கணினியின் வன் தட்டில் இருந்து வரும் சத்தம் வித்தியாசமாக இருப்பதை அது சாகப்போவதை சொல்லாமல் சொல்வதாக எடுத்துக்கொண்டு அது கண் மூடும் முன்பு அதில் இருந்து எடுப்பதை எல்லாம் எடுத்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்,அதே சமயத்தில்வேறு புதிய டிஸ்க் வாங்கலாம் என்று முயலும் போது சிங்கையில் இருக்கும் சிம் லிம் ஸ்கொயர் மாதிரி இங்கும் கம்யூடர் பிளாசா என்ற இடம் இருப்பதாக கேள்விப்பட்டு ஒரு நாள் அங்கு சென்ற போது தான் பர் துபாயும் அங்குள்ள கோவில் மற்றும் கிரீக் என்று சொல்லப்டுகிற நீர்வழியையும் கண்டுகொண்டேன்.ஏற்கனவே மகிழுந்து மூலம் ஒரு முறை வந்திருந்தாலும் பேருந்து முறை கண்டுகொண்டதாலும் இன்றைய பொழுதை அங்கு கழிக்கலாம் என்று சென்றேன்.
நான் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து C1 என்ற பேருந்தை எடுத்தால் இங்கு செல்லலாம்.பர் துபாயில் இறங்கி சிறிது தூரம் நடந்தால் கோவிலுக்கு பக்கத்திலேயே இருக்கு இந்த கிரீக்.கிட்டத்தட்ட சிங்கை ஆற்றை ஒட்டி எப்படி இருக்கிறதோ அது போலவே உள்ளது ஆனால் கிரீக்கின் தண்ணீரின் நிறம் பச்சை-நீலம் கலந்து காணப்படுகிறது.இனி படங்களுடன் பயணிப்போம்..
இரண்டு படகையும் இணைத்து ஒரே படகாக.

கடற்பறவைகளின் கூட்டம்.போடுகிற பாப்கார்ணுக்காக அலைபாய்கின்றன.

கரையில் அணைந்திருக்கும் படகு.

போய் வந்துகொண்டிருக்கும் படகுகள்.

எதிர்கரையில் இருக்கும் எமிரேட் வங்கியின் முகப்பில் இருக்கும் தங்கமுலாம் பூச்சின் பிரதிபலிப்பு தண்ணீரில் பட்டு தண்ணீரும் தங்கமாக ஒளிருவதை படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்.

இன்னும் சில படங்கள் உங்கள் பார்வைக்காக.
ஆமாம்,இந்த முக்கோண வடிவ கூரை எதுக்கு?

சீக்கிரம் ஸ்குரோல் பண்ண வசதியாக மேலும் சில படங்கள்.


இவுங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்காங்களாம்.

ஆற்றில் ஓடும் பேருந்தும் படகும்.

இரவு நேர அங்காடி ஆரம்பிக்கும் நேரம் நெருங்குகிறது

சூரியன் விடைபெறுகிறார்.கைத்தொலைப் பேசியை ஓரளவு சாய்வாக பிடிப்பதால் இப்படியும் எடுக்க முடிகிறது.நேராக பிடித்தால் அதிக வெளிச்சமாகி சூரியன் இருப்பதே விழமாட்டேன் என்கிறது.இந்த மசூதியின் வெகு அருகில் சிவா & கிருஷ்ணர் கோவில் இருக்கிறது.

அரபிகளின் கொண்டாடங்களுடன் ஒரு படகு.

இதெல்லாம் நான் தான் எடுத்தேன் என்று எப்படி நிரூபிப்பது? என்னை நானே எடுக்கும் போது.

நேற்றைய மாலை(மட்டும்) பொழுது இனிமையாக கழிந்தது.