Tuesday, December 30, 2014

மடிக்கேரி (2) - சுற்றுலா

21 ம் தேதி டிசம்பர் Hilltown விடுதியில் தங்க ஏற்பாடு ஆகியிருந்தது.உள்ளே நுழைந்ததுமே ஏதோ ஒரு வாடை மூக்கை துளைத்தது.தேவையான விபரங்களை கொடுத்ததும் அறை முடிவானது.நல்ல வேளை அந்த அறையில் அந்த வாசம் இல்லை.சுமாராக பராமரிக்கப்படுகிறது. பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லாததால் அந்த அறையே போதும் என்று முடிவு செய்தோம்.மதிய நேரம் மட்டுமே இருப்பதால் அதற்குள் என்னென்ன இடங்கள் செல்ல முடியும் என்று விடுதி முகவரிடம் கேட்டதற்கு அவர் ஒரு எண் கொடுத்து அவரிடம் பேசிக்கொள்ளுமாறு சொன்னர். பேசிய நபருக்கு குறைவான தமிழ்/ஆங்கிலம் தெரிவதால் அவர் ஆலோசனையின் படி இன்று மதியம் உள்ளூரை சுற்றிவிடுவோம் மறுநாள் வெளியில் உள்ள இடங்களை பார்க்கலாம் என்றார். அரை நாளுக்கு டாடா இண்டிகா ரூ 600 என்று பேசி முடித்தோம்.

முதலில் அப்பி நீர் வீழ்ச்சி.

குற்றாலத்தின் பாதி உயரம் மட்டுமே.பேருந்துவில் போனால் கொஞ்சம் தூரம் நடக்கவேண்டும்.காரில் போனால் அவ்வளவு தூரம் நடக்கவேண்டியது இல்லை.



இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட ஒரு தொங்குபாலமும் இருக்கு.மழைக்காலத்தில் இன்னும் நிறைய நீர் கொட்டும் என்று நினைக்கிறேன்,


இங்கு சுமார் 1 மணி நேரம் கழித்த பிறகு Raja Tomb என்ற இடத்துக்கு சென்றோம்.உச்சியில் தாஜ்மஹால் மாதிரி அமைப்பு இருந்தாலும் முகப்பில் இந்து கோவிலுக்கு உரிய சின்னங்கள் இருந்தன.இங்கு பெரிதாக பார்க்க ஏதும் இல்லை,




அடுத்ததாக போன இடம் கோட்டையும் அதனருகே இருக்கும் கலை பொருட்காட்சியகமும்.பெரியதாக ஈர்கக்கூடிய சமாச்சாரங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.




இது முடிந்த பிறகு இருக்கும் ஒரே கோவிலுக்கு போனோம்.வித்தியாசமான அமைப்பில் உள்ள கோவில் இது.



கடைசியாக ராஜா சீட் - சூரிய அஸ்தமனத்தையும் மடிகேரியின் ஒரு பகுதி அழகையும் மேலிருந்து பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது இந்த இடம்.



பள்ளிக்குழந்தைகள்




மாலையானதுமே நல்ல குளீர் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது.மரக்கறி உணவகங்கள் நிறைய இருப்பதால் சாப்பாட்டுக்கு அவ்வளவு பிரச்சனை வரவில்லை.

அடுத்தது தலைக்காவிரி...

Saturday, December 27, 2014

மடிகரி (1) - சுற்றுலா

இரண்டரை மாதத்துக்கு முன்பே “எனக்கு 60 கல்யாணம்,நீங்களெல்லாம் நிச்சயமாக வரனும்” என்று வேண்டுகோள் விடுத்த மும்பாய் உறவினர் தவறாமல் டிக்கெட் போடுவதென்றால் முன்னமே செய்துவிடவும் என்று சொல்லியிருந்தார்.அதை ஞாபகம் வைத்துக்கொண்டு IRCTC இணைய பக்கத்தில் சரியாக இரண்டு மாதம் வந்தவுடன் முயற்சித்தேன்.இரவு 12 மணி தாண்டியவுடன் தான் செய்யமுடியும் என்பதை மறுநாள் தான் தெரிந்துகொண்டேன் ஏனென்றால் காலை முயற்சிக்கும் போதே காத்திருப்பு பட்டியலில் இருந்தது.ஆவது ஆகட்டும் என்று 2AC யில் காத்திருக்கும் பட்டியலில் போட்டுவைத்தேன்.கிருஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் காத்திருப்பு பட்டியலில் முன்னேற்றமே இல்லாததால் கிளம்புவதற்கு சில நாட்கள் முன்பு கேன்சல் செய்துவிட்டோம்.

போட்ட லீவு வீணாக போகாமல் இருக்க வேறு எங்காவது போகலாம் என்ற போது கூர்க் போகலாம் என்று முடிவு செய்து தேவையான விபரங்களை இணையத்தில் இருந்து பெற்று சென்னை - மைசூர் - மடிகரி என்று முடிவு செய்தோம். மைசூர் வரை இரயிலில் அங்கிருந்து பஸ்ஸில் மடிகரி போவது என்று முடிவு செய்து காவேரி விரைவு ரயிலில் இரவு 9 மணிக்கு சென்னையில் கிளம்பி காலை 7 மணிக்கு மைசூர் சென்று சேர்ந்தோம்.KSRTC பேருந்துவில் முன்பதிவு செய்திருந்தோம்.காலை 10.15 மணிக்கு உள்ள பேருந்துவில் முன் பதிவு செய்திருந்தோம் ஆனால் அதற்கு முன்பே பல பேருந்துகள் இருப்பது அங்கு போனதும் தெரிந்தது. மடிகரிக்கு இல்லாவிட்டால் குஷால் நகர் (86 கி.மீ) வரை சென்று அங்கிருந்தும் செல்லமுடியும்.

மடிகரியில் தங்குவதற்கு விடுதி முன்பதிவு செய்யலாம் என்று இணையத்தில் தேடிய பல விடுதிகளில் என்னுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஒரு இடத்தை “Travelguru" மூலம் புக் செய்தேன்.கிளம்பும் நாளான்று இந்த ஹோட்டலுக்கு ஒரு முறை கூப்பிட்டு சரி செய்துகொள்ளலாம் என்று கேட்டால்,அப்படி ஒரு புக்கிங்கே இல்லை என்று சத்தியம் செய்தார்கள்.இதென்னடா கொடுமை என்று நினைத்து டிராவல் குருவுக்கு மும்பைக்கு போன் போட்டா அங்கு இங்கு என்று இழுத்து கடைசியில் வேறு ஒரு விடுதிக்கு மாற்றிக் கொடுத்தார்கள்.இனிமேல் இந்த இணைய முகவரை அனுகக்கூடாது என்று முடிவு செய்தேன்.

மைசூருக்கு சென்று சேர வேண்டிய ரயில் சரியாக செல்ல, Pre-Paid ஆட்டோவுக்கு ஒரு ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துகொண்டால் சேர வேண்டிய இடத்தை கேட்டு அதற்கான தொகையையும் அதிலேயே பிரிண்ட் செய்து கொடுத்துவிடுகிறார்கள்.நன்றாக இருக்கு. 25 ரூபாய் கொடுத்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள KSRTC முனையத்துக்கு சென்றோம்.மைசூரில் உள்ளூர் பேருந்துகளுக்கு தனி முனையம் உள்ளது அதனால் சரியாக சொல்லி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

KSRTC முனையத்துக்கு ஸ்டேஷனில் இருந்து 15 நிமிடம் தான் ஆனது.நான் முன்பதிவு செய்திருந்த வண்டி வர இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருவேண்டும் என்பதால் முணையத்தில் உள்ள உணவகத்திலேயே காலை சிற்றுண்டியை முடித்தோம்.10.15 மணி வண்டிக்கு சுமார் 9.45 க்கு பேருந்துவின் நடத்துனரிடம் இருந்து அழைப்பு வந்தது.வண்டியின் எண் , இருக்கும் இடம் எல்லாம் சொல்லி அங்கு வருமாறு அழைத்தார்.முடிந்தவரை ஆங்கிலத்தில் பேசினார்.

சரியாக 3 மணி நேர பயணம். 126 கி.மீ தூரம். மடிகரி வந்து சேர்ந்தோம். மற்றவரை அடுத்த பதிவில்.

Sunday, December 14, 2014

திரைச்சீலை (DIY)

 வீட்டு ஜன்னல்களுக்கு திரைச்சீலை போடலாம் என்ற எண்ணம் வந்த போது அது கிடைக்கும் இடம்,தற்போது கிடைக்கும் விலை விபரங்களை நோண்டிக்கொண்டிருந்தேன்.கூகிளில் தேடிய போது பெரும்பாலும் வெளிநாடுகளில் கிடைக்கும் உபகரணங்களும் விலைகளுமே கண்ணில் பட்டது.உள்ளூரில் ரெடிமேடாக கிடைப்பவையே கண்ணில் பட்டது.

எப்போதோ வாங்கிப்போட்ட திரைச்சீலை வீட்டில்சும்மா இருப்பதை பார்த்தவுடன் அதையே உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வழிமுறைகளை பார்த்த போது நான் முயற்சித்த வழிகள் அவ்வளவாக திருப்தியாக இல்லாத்தால் அதை பைப் போட்டு Eyelet போட்டு உபயோகிக்கலாம் என்று முடிவு செய்தேன். பக்கத்தில் உள்ள திரைச்சீலை /மெத்தை விற்கும்கடைகளை கேட்டபோது 4’ அடிக்கு முறையே ரூபாய் 200/100 கேட்டார்கள்.

சரி நாமாகவே செய்தால் எவ்வளவு ஆகும் என்று மனது அசைப்போட ஆரம்பித்தது.முதலில் இந்த Eyelet எங்கு கிடைக்கிறது என்று இணையத்தில் தேடியதில் அவ்வளவு விபரம் கிடைக்கவில்லை.Parrys இல்லாத சாமான் இருக்குமா என்று தேடியதில் கோவிந்த நாயக்கன் தெருவில் இதை விற்கும் பல கடைகள் கண்ணில் பட்டது.

ஒரு நாள் வேறு வேலையாக தி.நகர் சரவணா ஸ்டோர் போன போது அங்கும் திரைச்சீலை இருப்பதை பார்த்தேன்,விலை 275-650 வரை இருந்தது.இது அனைத்தும் 4’ அகலம் 7’ உயரம் கொண்டவை.4’ ஜன்னலுக்கு இது மாதிரி 2 வாங்கினால் தான் நன்றாக இருக்கும்.விலைகளை மனதில் நிறுத்திக்கொண்டேன்.

நானே செய்வது என்று முடிவெடுத்த பிறகு 2 நாட்களுக்கு முன்பு Parrys சென்று இதற்கு தேவையான சாமான்களை கடையில் கேட்டுக்கொண்டிருக்கும் போது வேறு இருவர் என்னை மாதிரியே வந்து விபரம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அங்கு இருந்த சாமான்களை வைத்தே இதை எப்படி உருவாக்கவேண்டும் என்ற யோஜனை பிறந்தது.

தேவையான சாமான்கள்:

Eyelet
Locking Cap
Template Cloth
Curtain

கீழே உள்ள படத்தில் Eyelet ம் Locking Cap. இதன் விலை ரூபாய் 5 +1 (ஒன்றுக்கு)





Template Cloth ம் Curtain ம். இந்த டெம்பிளேட் துணியை வைத்து Curtain மேல் வைத்து தேவையான துளை துவாரங்களை வரைந்து வெட்டிக்கொள்ள வேண்டும்.இந்த துணியின் விலை மீட்டருக்கு 15 ரூபாய்.


Eyelet மற்றும் Locking Cap ம் இணைந்த நிலையில்.


Curtain உடன் இணைந்த நிலையில்.




மிக முக்கியமாக இந்த Eyelet எண்ணிக்கை இரட்டைபடையில் இருக்க வேண்டும் அப்போது இரு முனைகளும் சுவர் பக்கம் திரும்பிய நிலையில் இருக்கும். 4’ ஜன்னலுக்கு திரைச்சீலை சுமார் 86” அகலம் இருக்கவேண்டும்.

திரைச்சீலை போட்ட நிலையில்.


Eyelet Fixed, Template கிளாத்தும் கிடைக்கிறது அது மீட்டர் ரூபாய் 35.

Parrys கடைகளில் கடைகளுக்கிடையே விலை வித்தியாசம் இருக்கு அதனால் சில கடைகள் ஏறி இறங்கினால் நியாமான விலையில் பொருட்களை வாங்கலாம்.

Saturday, October 18, 2014

மின் இணைப்பு- சும்மா தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

நமக்கு தொழில் என்னவோ கட்டுமானம் என்றாலும் கைத்தொழில் அதுவும் வீட்டுக்கு வேண்டிய சின்னச்சின்ன வேலைகளை நானே செய்து அதில் வெற்றி அடைந்தால் அதைப்போல் மகிழ்வான நேரம் எதுவும் இல்லை.இப்படிப்பட்ட வேலைகளை பல இங்கு எழுதியுள்ளேன் அதன் தொடர்சியில் இது மற்றொன்று.
எச்சரிக்கை: இது என் அனுபவம் இதை பார்த்து நீங்கள் முயற்சிப்பது உங்கள் இஷ்டம் அதற்கு நான் பொருப்பல்ல.

பெற்றோர் வீட்டில் சுமார் 15 வருடத்துக்கு முன்பு வாங்கிய வோல்டேஜ் ஸ்டெபிலைசர் சும்மாகவே கிடந்தது.AC வாங்கிய போது வாங்கியது.இப்போது பூஸ்டர் நிறுவிய பிறகு ஸ்டெபிலைசருக்கு வேலை இல்லாமல் போனது.இப்போதெல்லாம் அதை யாரும் உபயோகிப்பதில்லை என்பதால் அதை வாங்க போட்டி இருப்பதில்லை.அதனுள் இருக்கும் காயிலுக்கு தான் மதிப்பு.சரி தூக்கிப்போடுவிடலாம் அல்லது பேப்பர் எடுப்பவர் கேட்டால் கொடுத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன்.நல்ல நிலையில் இருக்கும் ஒரு பொருளை தூக்கிப்போடுவதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.எப்படியாவது எங்காவது உபயோகிக்க முடியுமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது சட்டென்று ஒரு யோஜனை தோன்றியது.வோல்டேஜ் பிரச்சனையில் அடிக்கடி பழுதாவது இந்த டிவியும் ஒன்று.அதற்கு கொடுக்கும் மின் இணைப்பை இதன் மூலம் கொடுத்தால் கொஞ்சம் பத்திரமாக இருக்குமே என்று நினைத்தேன்.

ஸ்டெபிலைசர் இணைப்பை பார்த்த போது ஒரு inlet ஒரு outlet அவ்வளவு தான்.மின் இணைப்பு வழங்கியில் பிரச்சனையில்லை.கரண்ட் வெளியில் வரும் இடத்தில் ஒரு Extension Point இருந்தால் அதிலிருந்து டிவி/டிவிடி க்கு இணைப்பு கொடுக்கலாம்.இந்த எண்ணத்துடன் கடைக்கு சென்றேன். நான் சென்ற கடையில் உதவியாளர் மட்டுமே இருந்ததால் நான் சொல்வதை அவரல் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் அடுத்த கடைக்கு சென்றேன்.இரண்டு பிளக் பாயிண்ட் உள்ள Extension Cable இருக்கா என்றேன்.நான்கு உள்ளது தான் இருக்கு என்றார் .அதிகமாக இருந்தாலும் அதன் பிளக் மோல்ட் செய்யப்பட்டிருந்தது அதோடு விலையும் அதிகமாக இருந்தது.வேண்டியது இரண்டு ஆனால் இருப்பதோ நான்கு அதுவும் அதிக விலையில்!! சரி இது வேலைக்கு ஆகாது என்று அவரிடமே தனியாக பாக்ஸ் உள்ளதா என்றேன். அட்டகாசமாக இரு பிளக் உள்ள பெட்டி மற்றும் அதற்கு தேவையான பிளக் மற்றும் சுவிச்சுகளையும் கொடுத்தார்.3 Phase கேபிள் ஒரு 2 மீட்டர் வாங்கினேன்.இதையெல்லாம் எப்படி இணைப்பது? எனக்கு முன் அனுபவம் இல்லாத்தால் கடைக்காரரிடமே செய்துகொடுக்க முடியுமா என்றேன். முடியும் ஆனால் எலக்ரீஷியன் வரணும் அதற்கு நேரமாகும் என்றார் கூடவே அவருக்கு ஒரு 50 ரூபாய் ஆகும் என்றார்.வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து இணையத்தில் தேடினால் ஒரு அழகான வீடியோ கிடைத்தது அதில் எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கியிருந்தார்கள்.

அதை உள்வாங்கி நான் செய்தது கீழே...

எனக்கு தேவைப்பட்ட எக்ஸ்டென்ஷன்.




Standard Connection. Red Color: Phase, Green : Neutral



மெயின் கேபிள் மற்றும் எர்த் இணைக்கப்பட்டுள்ள படம் கீழே.


எல்லாம் முடிந்து மெயின் பவர் சப்ளையில் இணைத்து செக் பண்ணி பார்த்தேன் எல்லாம் சரியாக இருந்தது.

இந்த பால பாடம் இனி எப்போதும் மறக்காது ஏனென்றால் என் கையால் செய்தது அல்லவா?

Sunday, February 23, 2014

ஸ்டென்சில்

எனக்கு இதில் ஆர்வம் எப்படி வந்தது என்று யோசித்து பார்த்த போது L&T-ECC யில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது வேலை பார்க்கும் இடத்தில் தேவைப்படும் விளம்பரங்களுக்கு அங்குள்ளவர்கள் மெலிதான ஷீட்டில் எழுதி வெட்டி அதன் மீது ஸ்பிரே பெயிண்ட் மூலம் தேவையான இடங்களில் விளம்பரம் செய்வார்கள்.இதை எதேச்சையாக பார்த்த போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை ஆனால் சிங்கையில் வீடு வாங்கிய போது அதன் தரை வெருமையாக இருந்த போது ஏதாவது செய்யலாம் என்று  முடிவு செய்த போது தான் இந்த யுக்தி மண்டையில் உதித்தது.அப்படி செய்தேன்,அது சுமார் 15 வருடமாகிவிட்டது.

சமீபத்தில் நிறைய நேரம் இருந்தபோது என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கண்ணெதிரே தோன்றியது இந்த சுவர் தான்.



முதல் டிசைன்.

Washable Paint என்று விளம்பரம் வந்த போது முயற்சிக்கலாம் என்று பட்டி பார்த்து அதன் மீது இப்பெயிண்ட் அடித்தோம்.இச்சுவரும் வெருமையாக இருந்ததால் இதன் மீதும் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்த போது பல வித டிசைகளை பார்த்து நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்த்து இந்த டிசைனை தேர்ந்தெடுத்தேன்.

முதலில் சாதாரண பேபரில் பிரிண்ட் எடுத்துவைத்தேன் ஆனால் மறுநாள் ஏதோ தேடிக்கொண்டிருக்கும் போது பழைய போடோ பிரிண்ட் எடுக்கக்கூடிய பளபளப்பான தாள் இருப்பதை பார்த்ததும் ஐடியா மாறி இதன் மீது பிரிண்ட் எடுத்தால் பெயிண்ட் அடிப்பது இலகுவாக இருக்கும் என்று எண்ணி மேலும் ஒரு பிரிண்ட் எடுத்தேன்.பிறகு தேவையான இடத்தில் வெட்டினேன்.இதற்கு தான் 3 மணி நேரம் ஆனது.

பழைய பேனாவில் கொஞ்சம் ஸ்பான்ச் வைத்து அதன் மீது பெயிண்ட் ஒட்டி அதன் மூலம் சுவற்றில் பிரதி எடுத்தேன்.நடுவில் வேலை வந்துவிட்டதால் தொடரமுடியாமல் அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரதி எடுத்து இன்று தான் முடிந்தது.

இதுவே கொஞ்சம் பெரிய தாளாக இருந்தால் ரோலர் பிரஸ் மூலம் இன்னும் வேகமாக செய்யமுடியும்.அமேசான்.in கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.கொஞ்சம் விலை அதிகமாக இருக்கிறது,

பாதி வேலை முடிந்தபோது..




முழு வேலை இன்று தான் முடிந்தது,அது கீழே.





நேரம் கிடைக்கும் போது ஹாலில் உள்ள சுவருக்கு ஏதாவது செய்யவேண்டும்,பார்ப்போம்.

Friday, January 03, 2014

DVD Tray திறக்கவில்லையா?

நான் ஒரு DIY (Do It Yourself) ஆசாமி என்று ஒரு சில பதிவுகளில் சொல்லியுள்ளேன் அப்படி முயற்சித்து வெற்றிகண்ட ஒரு நிகழ்வைதான் இப்போது சொல்லப்போகிறேன்.இதற்கு முன்பு முயற்சித்தது இங்கே.

நான் முயற்சித்த பல விஷயங்கள் வெற்றி/ தோல்வியில் முடிந்திருந்தாலும் வெற்றி அடையும் போது கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி அளப்பரில்லாதது தான்.

வீட்டில் ஒரு டிவிடி ரெக்கார்டர்-பிலிப்ஸ் மாடல் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு வாங்கியது இருக்கிறது.இதை வாங்கும் போது ரெக்கார்டிங் கட்டுப்பாடு எதுவும் இல்லாதிருந்த காரணத்தினாலும் மற்றும் VHS Tapes வழக்கொழிந்து போகும் நிலையில் இருந்ததால் அதற்கு மாற்றாக இருக்கட்டுமே என்று வாங்கினேன்.ஆனால் சமீபகாலத்தில் ரெக்கார்டிங்(கேபிள்) மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாலும்,நிகழ்வுகளை சேமித்து பிறகு பார்க்ககூடிய அளவில் கால அவகாசம் இல்லாத்தால் இதை உபயோகிப்பதும் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் இதை DVD Player ஆக உபயோகித்து வந்தேன். சமீபகாலங்களில் DVD மூலம் படம்/நிகழ்வுகள் பார்பதும் அரிதாகிவிட்டதால் ஆண்டுக்கு ஒரு சில முறைகளே உபயோகித்துவந்தேன்.இப்படிப்பட்ட நிலையில் திடிரென்று DVD Tray வெளியே வருவதில் பிரச்சனை வந்தது.

கூகிளாரிடம் தேடிய போது யுரோப்பில் உள்ள பலருக்கும் இப்பிரச்சனை இருப்பதும் அதற்காக Hard Reset செய்தும் வேறு சில ஆலோசனைகளையும் முன் வைத்தார்கள் அதில் ஒன்றிரண்டை உபயோகித்து சில நாட்கள் வரை உபயோகித்துவந்தேன்.சில முறை பேபர் கட்டர் பிளேடை Tray க்கு கீழே உள்ள இடைவெளியில் விட்டு உள்ளே உள்ள லாகை விடுவித்து Tray ஐ வெளியே கொண்டுவந்தேன்.Tray க்கு கயறையெல்லாம் கட்டி இழுத்து ஓட்டிக்கொண்டிருந்தேன்.:-)

DVD Recorder யின் உள் அமைப்பு.



இப்பிரச்சனை முதல் முறையாக தலைகாட்டிய போதே DVD Recorder ஐ முழுவதுமாக பிரிக்க முயற்சித்தேன்.சரியான Screw Driver கிடைக்காமல் பிறகு கிடைத்து எல்லாம் பிரித்து பார்த்த போது DVD Player Set ஐ வெளியே எடுக்கமுடியாத படி Tray முகப்பு மாட்டப்பட்டிருந்தது. தோல்வியில் முடிந்த இந்த முயற்சிக்கு பிறகு அப்படியே திறந்த ஸ்குருவை போட்டு மூடிவைத்துவிட்டேன்.இப்படி திறந்த போதே இதன் ஸ்விச் மற்றும் இயக்கமுறையை ஓரளவு மனதில் நிருத்தியிருந்தேன் அதனால் இப்போது திறந்த போது அவ்வளவு பிரச்சனை வரவில்லை ஆனாலும் டிரேயின் முகப்பு மட்டும் எப்படி கழ்ற்றுவது என்பது பிடிபடாமல் இருந்தது.இதற்கிடையில் இந்த DVD Tray வரக்கூடிய பிரச்சனை அதனை எப்படி சமாளிப்பது போன்ற முறைகளை இணையத்தில் இருந்து தெரிந்துகொண்டேன் அதில் ஒவ்வொன்றாக செயல்படுத்தி பார்ப்போம் என்று தொடர்ந்தேன்.Tray யின் முகப்பு கீழிருந்து மேல் தூக்கினால் வெளியே வந்துவிடுக்கிறது அது கூட அகஸ்மாத்தாகத்தான் கண்டுபிடித்தேன்.

லென்ஸ் & டிரே.



DVD Recorder யின் பின் தோற்றம்.




வட்டை படிப்பதில் பிரச்ச்னையில்லை என்பதால் உள்ளிருக்கும் லென்ஸும் அதை சார்ந்த வன்/மென்பொருள் பக்கம் போகவேண்டியதில்லை என்பதை முடிவுசெய்தேன்,அப்படியென்றால் டிரே வெளியே தள்ளக்கூடிய இரு சமாச்சாரங்கள் மட்டுமே இதற்கு பிரச்சனை கொடுக்கிறது என்றும் அது இதற்குரிய மோட்டார் அல்லது இதை நகர்தக்கூடிய பெல்ட்.மோட்டர் போயிருந்தால் என்னால் அதை சரிசெய்ய முடியாது ஏனென்றால் அதற்கான அறிவு என்னிடம் இல்லை மற்றது இந்த பெல்ட்.இந்த பெல்ட் பல காலம் உபயோகத்தில் இல்லாவிட்டால் அதன் விரைப்புத் தன்மை போய் இளகிவிடும்.பழைய டேப் ரெக்கார்டரில் அவ்வப்போது இப்பிரச்சனையை பார்த்திருந்தால் இதை மாற்றிப்பார்பது என்று முடிவு செய்தேன்.

Belt Close up picture below.



வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் போய் அந்த பெல்டை காண்பித்து கேட்ட போது அது இங்கு கிடைக்காது என்றும் விருகம்பாகம் மார்கெட் அல்லது மெர்சி-வடபழனி கடையில் கேட்கவும் என்றார்கள்.மெர்சி கடை வடபழனியில் பிரபலம் என்றாலும் எனக்கு தேவையான விபரங்கள் கிடைக்கவில்லை,திரும்பும் வழியில் விருகம்பாக்கம் மார்கெட் பக்கத்தில் உள்ள கடையில் கேட்ட போதும் அவர்களிடமும் “இல்லை” என்று பதில் வந்தது.வேறு எங்காவது கிடைக்குமா என்று கேட்ட போது,ஆழ்வார்திருநகரில் ICICI வங்கிக்கு அருகில் உள்ள கடையில் கிடைக்கும் என்றார்கள்.அந்த கடைக்கு போய் கேட்ட போது,இதை முயற்சித்து பாருங்கள் சரியாக இருக்கும் என்றார்கள். விலை???- பதிவின் கடைசியில்.

இந்த பெல்டை போடுவது கொஞ்சம் சிரமான வேலை.சில முறை முயற்சித்து போட்டு உள்ளே பொருத்தினேன்.எல்லாம் முடிந்த பிறகு Eject Button ஐ அழுத்திய போது அழகாக திறந்தது.இதையே கடைகளில் கொடுத்திருந்தால் நிச்சயம் Rs 1000 தீட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன்.நேரமும்,ஆராயனும் என்ற முயற்சி இருந்ததால் இதை என்னால் புரிந்துகொண்டு சரி செய்யமுடிந்தது.

இவ்வளவு பெரிய கம்பெனி சாமான்,அதுவும் இந்த மாதிரி டிரே மாட்டிக்கிட்டா உள்ளே திறக்கிற மாதிரியா வைப்பார்கள்? நிச்சயமாக இல்லை, ஆனால் இதற்கான எளிமையான வழியை எங்கும் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள்.பிளேயரின் கீழே சிறிய நீள்வட்ட ஓட்டை உள்ளது அதனுள் வெள்ளை நிற பிளாடிக் லீவர் போல் ஒன்று உள்ளது அதை ஒருபக்கமாக நகர்த்தினால் டிரே வெளியே வந்துவிடும்.இது கிட்டத்தட்ட நமது கணினியில் இருக்கும் DVD/CD Player பக்கத்தில் இருக்கும் சிறு துளை இருக்கும் அதன் பணி போன்றதே.படம் கீழே.






வெற்றி வெற்றி...

ஆமாம், அந்த பெல்டின் விலை? - ரூபாய் மூன்று மட்டுமே.

பின்குறிப்பு:இது என்னுடைய அறிவு சார்ந்த அனுபவும்,இதைவைத்து எங்காவது எதையாவது விட்டு ஷாக் வாங்காதீர்கள்.அதற்கு நான் பொருப்பல்ல.

Tuesday, December 31, 2013

பஹாய் கோவிலின் கதை

டெல்லி சுற்றிப்பார்க்க போன பெரும்பாலனவர்கள் இக்கோவிலை சுற்றுலா தளம் போல் பார்த்துவருகிறார்கள்.இதன் கட்டுமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அதை எப்படி முறியடித்து கட்டிமுடித்தார்கள் என்பதை லார்சன் & டூப்ரோ நிருவனம் அவர்கள் நிருவன புத்தகத்தில் போட்டிருந்தார்கள்.அவை கீழே.
படங்களின் மேல் சொடுக்கி பெரிதுபடுத்தி பாருங்கள்.









 நன்றி: லார்சன் & டூப்ரோ லிமிடடு.

Monday, December 16, 2013

அப்பெல்லாம்...இவ்வளவு தான் ஏறியது.




வேலையில்லாத நேரத்தில் ஏதாவது செய்தாகவேண்டுமே அப்படி ஒரு வேலை செய்துகொண்டிருக்கும் போது இது மாட்டியது.

முதல் அரை மாத சம்பளம் L&T ECC யில் - ரூ 325 (1982 - பிப்ரவரி)

அடுத்த மாத முழு சம்பளம் : ரூ 700- (1982 - மார்ச்)

12 வருடங்களுக்கு பிறகு வெளியே வரும் போது : ரூ 6705.(1984 -டிசம்பர்)

12 வருடங்களில் சுமார் 10 மடங்குக்கு குறைவானவான ஏற்றமே ஏற்பட்டுள்ளது.


Wednesday, November 27, 2013

இது என் முயற்சி.

ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் இணைந்த பிறகு இங்கு கிடைத்த விபரங்கள்,அவரவர் முயற்சிகள் எல்லாம் படித்த போது எனக்கு இருந்த ஒரே பிரச்சனைக்கு இயற்கையான முறையில் முடிவு கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சாடின் மருத்தின் மூலம் வரும் பக்க விளைவுகளை செல்வன் பதிவுகள் மூலமும் அவர் கொடுத்திருந்த இணைப்புகள் மூலம் தெரிந்துகொண்டேன்.மேலே தொடர்வதற்கு முன்பு என்னுடைய பிரச்சனை என்று சொல்லிவிடுகிறேன்.

High Cholesterol தான் என்னுடைய ஒரே பிரச்சனை.இதை முதலில் தெரிந்துகொண்டது சிங்கையில் தான்.என்னுடைய கொலஸ்ரால் அளவை அவர்கள் லேப் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை (அவ்வளவு அதிகமாக இருந்தது போலும்).அதன் பிறகு சென்னை வந்த போது இங்குள்ள பரிசோதனை நிலையத்தில் சோதித்த போது மொத்த அளவு 348 வந்தது.தேவையான மருந்துகளை மருத்துவரிடம் பெற்றுக்கொண்டு அதன் விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன்.இருக்கும் போது மருந்து சாப்பிடுவேன் முடிந்தவுடன் விட்டுவிடுவேன் அதற்கு பிறகு எப்போது ஊருக்கு வருவனோ அப்போது தான் மருந்து.

சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் ஸ்ரிக்ட்.அளவான சாப்பாடு மட்டுமே அதுவும் வெளியிட சாப்பாடு வெகு குறைவே.பிட்சா மாதிரி சமாச்சாரங்கள் வருடத்துக்கு ஓரிரு முறையே.வீட்டடை விட்டு வெளியில் இருக்கும் போது கை சமையலே.

கொலஸ்டிராலை கட்டுப்படுத்தும் மருந்து ஒரு மாதத்துக்கு சுமார் ரூ 1200 யில் இருந்து 1400 வரை போய்கொண்டிருந்தது.இந்நிலையில் தான் செல்வனின் கட்டுரையை படிக்க நேர்ந்தது.சரி இப்படி ஒரு வழி இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அதை முயற்சிக்க கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன் அதோடு முட்டை சாப்பிட்டு திரும்பவும் கொலஸ்டிராலை(நல்ல) கூட்டவேண்டும் என்பது தான் நெருடிக்கொண்டு இருந்தது.நான் முட்டை சாப்பிடுவதை 1994 யில் விட்டுவிட்டேன் அதனால் திரும்பவும் ஆரம்பிப்பதில் கொஞ்சம் சுணக்கம்.

இந்நிலையில் வீட்டுக்கு பக்கத்தில் என்னுடன் ஒன்றாக வேலைசெய்த ஒரு நண்பரிடம் இதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.அவரும் முழுவதுமாக கேட்டுவிட்டு தான் ஒரு முறையை கடைபிடிப்பதாகவும் அதன் மூலம் நம் இன்றைய உணவு முறையை அவ்வளவாக மாற்றிக்கொள்ளாமல் அதே சமயத்தில் கொலாஸ்டிராலையும் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றார்.அவருடைய முறைபடி காலை(10 ~ 11) நேரடியாக அரிசி உணவு,அதன் பிறகு பசிக்கும் போது பச்சையாக காய்கறிகள்,இரவு பழம் மட்டும். அவ்வளவு தான்.நானும் மனைவியும் கொஞ்ச நாட்களுக்கு இதை பின்பற்றுவோம் விளைவுகளுக்கு தகுந்த மாதிரி மேல்முடிவு எடுக்கலாம் என்று அக்டோபர் முதல் தேதியில் இருந்து ஆரம்பிதோம்.
காலை : கஞ்சி 1 டம்ளர் (கேழ்வரகு,கோதுமை கொண்டது)

மதியம்: அரிசி சாப்பாடு

இடையில் பசிக்கும் போது பச்சையாக கேரட்,வெள்ளரிக்காய்,தக்காளி,சிறிதளவு ஸ்வீட்ஸ்.

இரவு: பழங்கள்.

ஆரம்பிக்கும் போது என்னுடைய எடை 69.6 Kg

ஒரு மாதம் கழித்து : 66 கிலோ

நேற்று : 65.3 கிலோ.

தானிய அரிசியை இரவில் குறைத்ததாலும் இலகுவாக செரிமானம் ஆகும் பழங்களை சாப்பிட்டதாலும் எடை இழந்தேன்.இதனால் எந்த ஒரு பிரச்சனையும் முதல் மாதத்தில் எழவில்லை.இந்த டயட் ஆரம்பித்த நாளில் இருந்து கொலஸ்டிரால் மாத்திரைகளை நிருத்திவிட்டேன்.

டயட்டில் இருந்து 40 ஆவது நாளில் இருந்து பிரச்சனை ஆரம்பம் ஆனது ஆதாவது மூச்சுவிடுவதில்,ஒரு மாதிரியான Heavy Breathing இருப்பதாக தோன்றியது.இதே மாதிரியான நிலை நான் மாத்திரை எடுக்கும் போதும் அவ்வப்போது தோன்றியதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் நாள் ஆக ஆக வெவ்வேறு விதமான வலிகள் இருதயம்,முதுகு பக்கம்,தோள்பட்டை போன்ற இடங்களில் வர ஆரம்பித்தது.இதயத்துக்கு நேர் பின் பக்கம் முதுகில் வந்த வலி தினசரி நீடிப்பதை பார்த்ததும் இது அசாதரணமானது என்று புரிந்தது.

61ம் நாள் ஒரு மாதிரியான இறுக்க நிலை கண்கள் தானாக மூடிக்கொள்ளும் நிலையை உணர்ந்த போது என்னுடைய டயட் சரியில்லை என்று புரிபட்டது.அன்றே உடனடியாக பரிசோதனை நிலையத்துக்கு போய் கொலஸ்டிராலுக்கும் ECG க்கும் பரிசோதனை செய்துகொண்டேன். ECG இல் பெரிய மாற்றம் ஒன்றும் தென்படவில்லை ஆனால் கொலஸ்டிரால் எல்லாம் மிக அதிகமாக போயிருந்ததை கண்டுகொண்டேன். பரிசோதனை முடிந்த உடனேயே வழக்கமாக சாப்பிடும் கொலஸ்டிரால் மாத்திரைகளை சாப்பிட்டேன் அதை சாப்பிட்ட மறுநாள் நிலமை சற்று மேம்பட ஆரம்பித்தது.

இன்று நிலமை தேவலை என்றாலும் அந்த அழுத்தமான உணர்வு அவ்வப்போது வந்து போகிறது.இன்னும் கொஞ்ச நாட்கள் மாத்திரைகள் சாப்பிட்டவுடன் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

முதல் பரிசோதனை தோல்வி இனி அடுத்தது செல்வன் பரிந்துரைத்தது தான்.என்ன வீட்டுக்காரமாவுக்கு சமைப்பதில் தான் கொஞ்சம் கஷ்டம்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


Cholestral Lvl before diet (06 Jun 13)
Cholesterol Lvl on diet(24 Nov 13)
Cholesterol
198 mg/dl
286 mg/dl
HDL Cholestral
46
45
Triglycerides
226
337
LDL Cholesterol
132
194
VLDL Cholesterol
45.2
67.4
Total CHO/HDL ratio
4.3
6.4


Sunday, October 27, 2013

பெரிய இடைவெளி

இப்ப உலகம் சுருங்கின மாதிரி 1980களில் இல்லை, படித்த நண்பர்களையோ/இள வயதில் ஒன்றாக விளையாடிய நண்பர்களை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் கண்டுபிடிக்கவே முடியாத அளவில் இருக்கும் ஏனென்றால் வீட்டு முகவரியை தவிர வேறு எதுவும் எங்களிடம் கிடையாது.பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் போது நெருக்கமான சிலர் இருந்தனர் அதில் புகைபடம் எடுத்துக்கொண்ட இந்த மூவர் நினைவும் மட்டும் பசுமையாக இருந்தது இதில் ஒருவர் பெற்றோர் வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்ததால் எப்போதும் தொடர்பில் இருந்தார் மற்ற இருவரைப்பற்றிய செய்தி எதுவே கிடைக்கவில்லை.பழைய நிருவனம் மற்றும் வேறு சில நண்பர்களிடம் கேட்ட போதும் சரியான விபரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் நாகப்பட்டினம் போன போது இந்த நண்பர்களை பற்றிய ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று என்னுடன் படித்த நண்பர்கள் சிலரிடம் கேட்டேன்,உதடு பிதிக்கினார்கள்.சரி அவர்கள் வீடாவது இருக்கா என்று போய் பார்த்தால் முகப்பு எல்லாம் மாறி கடையும் பிளாட்டாக மாறியிருந்தது.கீழே உள்ள கடைக்காரடிடம் கேட்ட போது அவர்கள் வீட்டை விற்று விட்டு சென்னைக்கு போய்விட்டார்களே என்றார்.சரி, சென்னை முகவரியாவது இருக்கா என்றால் "இல்லை" என்றார்.பிறகு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகை மார்கெட்டில் அவர்கள் அண்ணா கடை வைத்திருக்கார் என்று விபரம் கொடுத்தார்.அதை தேடி கண்டுபிடித்தவுடன் அவர்களிடம் இருந்து நண்பன் எண் கிடைத்தது அதன் மூலம் மற்றவர் எண்ணும் கிடைத்தது.எல்லோரிடமும் மீண்டும் தொடர்பு கிடைத்த சந்தோஷத்தை நான்கவரிடமும் பகிர்ந்துகொண்டோம்.

இவ்வளவு நாள் தான் பார்க்கமுடியவில்லையே இப்போதாவது பார்க்கலாம் என்று மதியம் மடிப்பாக்கத்தில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கு சந்தித்து அளவளாவினோம்.

33 ஆண்டுகள் இடைவெளியில் இயற்கை விளையாடிய விளையாட்டை படங்களில் பார்க்கலாம்.



மனைவிமார்களை பேசவிட்டுவிட்டு எங்கள் பழைய கதைகளை ஓரளவு பேசிவிட்டு வீடு திரும்பினோம்.

இம்மூவரை தவிர நானே எதிர் பார்க்காத இன்னொரு நண்பரையும் சந்திக்க முடிந்தது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

Wednesday, August 14, 2013

நாங்களெல்லாம் யாரு??

வீட்டில் ஏர் டெல் அகலக்கட்டை இணையம் சுமார் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கியது, அப்போது கம்பில்லா சேவை அவ்வளவாக பிரபலம் இல்லாததால் வெறும் DSL modem கொடுத்திருந்தார்கள்.

Smart Phone வந்த பிறகு கைக்குள்ளேயே கணிணி பயண்பாட்டுக்கு வந்த பிறகு ஆளுக்கு  ஏற்ற மாதிரி பல வித  டேட்டா பிளான்கள் போட்டு பாக்கெட்டைஓட்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். என்னுடைய தேவை கொஞ்சம் என்பதாலும் வீட்டில் இருக்கும் தொலைப்பேசிகள் அவ்வளவுக்கும் டேட்டா பிளான் போட்டால் நிறைய இழக்க வேண்டி வரும் என்பதால் இப்போதிருக்கும் இணைப்பையே கைப்பேசிக்கும் உபயோகிக்க உண்டான வழிகளை தேடினேன்.

எல்லா வழிகளிலும் தேடியபிறகு, இருக்கும் மோடத்துடன் Wireless
Router இணைத்தால் காரியம் முடிந்துவிடும் போல் இருந்தது. வின்டோஸ் கணிணி என்றால் இறங்கிவிடலாம் ஆனால் என்னிடம் இருப்பது லினக்ஸ் அதுவும் மேம்பாடு செய்ய முடியாத நிலையில். இணையம் முழுவதும் தேடினேன் அதன் பிறகு குறைந்த விலையில் என்காவது கிடைக்குமா என்று தேடியதில் FB-Moore Market இல் போட்டிருப்பது தெரிந்தது.என்னுடைய தேவைக்கு ஏற்ற மோடத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் வீட்டுக்கு வந்த மச்சினர் இங்கு கம்பியில்லா இணைய தொடர்பு இருக்கா என்றார்? அதற்கான மோடத்தை தேடும் கதையை அவரிடம் சொன்ன போது தன்னிடம் ஒரு பழைய Router இருப்பதாகவும் தேவை என்றால் கொடுக்கிறேன் என்றார்.ஆராய்சி செய்ய என்ன கஷ்டமா என்ன? கொடுங்கள் என்றார்.

வந்தது, தேவையான இணைப்புகளை கொடுத்த போது சமிக்கை விளக்குகள் சரியாக காண்பித்தன.சரி உயிர் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். ஏற்கனவே இருந்த செட்டிங்கில் மடிக்கணினியை இணைத்த போது வேலை செய்தது ஆனால் தொலைப்பேசியில் இணைய இணைப்பை Open என்று காண்பித்தது. இப்படி இருந்தால் யார் வேண்டுமென்றால் என்னுடைய இணைப்பு மூலம் இணையத்தில் உலா வரமுடியும். இதை நிவர்தி செய்ய கூகிளிடம் தேடி Router செட்டிங்கை மாற்ற போய் எல்லாம் குழப்படியாகி எதுவுமே சரியாக வேலை செய்யவில்லை. இரவு மணி 10.30 ஆகிவிட்டதால் அப்படியே மூடிவிட்டு தூங்க போய்விட்டேன்.

இன்று காலை மறுபடியும் அதோனோடு போராட ஆரம்பித்தேன்.இணையத்தில் சொல்லியிருந்த வழிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி தோல்வி கண்டுகொண்டிருந்தேன்.இவ்வேளையில் நாம் ஏன் ஏர்டெல் சேவைமைய அதிகாரியை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்ககூடாது என்று தோனியதில் 121 ஐ கூப்பிட்டேன். மவராசி எடுத்தாங்க,எனக்கு  தேவையான விபரங்களை கேட்டேன்  அவர்களுக்கு வேண்டிய விபரங்களையும் கொடுத்தேன்,கடைசியாக அவர்களிடம் நான் Linux யில் உள்ளேன் உங்களால் முடியுமா என்றேன். மோடம் கேபிளை கணிணியில் இணையுங்கள் அதன் பிறகு உங்களுக்கு தேவையான விபரங்களை சொல்லிவிட்டு பாட்டு போட்டு போய்விட்டார்கள். சில நிமிடங்கள் கழித்து பார்க்கும் போதும் பாட்டு தான் ஓடிக்கொண்டிருந்தது, இது வேலைக்கு ஆகாது என்று கூகிளில் வேறு மாதிரி தேடிய போது கீழே சொன்ன மாதிரி செய்தவுடன் எல்லாம் சரியாக வேலை செய்தது. இதில் முக்கியமானது மோடம் மற்றும் router கேபிளை LAN யில் இணைக்க வேண்டும்.இது தெரியாமல் ஒரு மணி நேரம் அவஸ்தைப்பட்டேன்.

 1. Connect PC directly to modem and open the config url.

2. Go to Advanced Setup>LAN, enter the DHCP start ip as 192.168.1.4 and end .100, save & reboot.

3. Connect PC directly to Wireless Router. Open the web-based setup page.

4. Under Setup>Internet, select Obtain IP automatically and leave the fields blank.

 5. Under Network Setup, enter the Router IP as 192.168.1.3, disable DHCP server and save settings.

6. Configure the Wireless settings (SSID and authentication) to your liking, save settings and reboot the router.

7. Connect the modem and router with the router end of the cable connected to one of the 4 LAN ports (NOT the INTERNET port).

8. Connect your PC's to the routers remaining 3 LAN ports and laptops via wifi and you should be good to go.

மோடம்/ router க்கு தேவையான Configuration ஐ http:// 192.168.1.1 or 3 யில்  பார்க்கலாம். 

   

Saturday, June 15, 2013

சும்மா இருக்க விடுதா?

நான் சில விஷயங்களை வராவிட்டால் அப்படியே விட்டு விடுவதில்லை,நடுவில் கொஞ்சம் இடைவெளிவிட்டு,தேடி பிறகு முயற்சி செய்யும் ஆள். சமீபத்தில் என் மண்டையை குடைந்த விஷயம் இந்த Reverse Tethering.
கைப்பேசியில் உள்ள இணைய இணைப்பை மடிக்கணினி அல்லது கணினியில் உபயோகித்தால் அதற்கு பெயர் Tethering. இந்த முறை ஒரு 8 வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டது இன்றும் சில இடங்களில் இப்படி உபயோகப்படுத்துகிறார்கள்.சென்னை மாதிரி பெரு நகரங்களில் பல இடங்களில் கம்பி வடமும்,கம்பியில்லா இணையமும் வந்துவிட்டதால் Tethering செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளது.

என் வீட்டில் கம்பி வடம் மூலம் இணைய இணைப்பு மடிக்கணினிக்கு இருக்கு.கை தொலைப்பேசி மூலம் 3G/2G மூலம் உலாவினால் நம்முடைய உபயோகத்துக்கு ஏற்ப பணம் கழிக்கப்படும் இதோடில்லாமல் பல வித Packages உள்ளது.இப்படி செய்வது மூலம் நிறைய பணம் செலவாகும்.வீட்டில் இருக்கும் இணைய இணைப்புக்கு ஏற்கனவே பணம் கட்டுகிறோம் இருந்தும் அவர்கள் கொடுக்கும் அளவு எப்போதும் மீறுவதில்லை அப்படி இருக்கும் போது கைப்பேசிக்கும் தனியாக பணம் கட்டுவது அநியாயமாக தெரிந்தது அதுவும் இந்த நேரத்தில்.வீட்டு இணைய இணைப்பை எப்படி கைப்பேசியில் உபயோகப்படுத்துவது என்று பல நாட்கள் படித்தேன் சிலது புரிந்தது இருந்தாலும் ஏதோ Root செய்யனும் என்று சொல்லி அப்படி செய்தால் கைப்பேசியின் Warranty போய்விடும் என்றும் சொல்லியிருந்தார்கள்.சமீபத்தில் வாங்கிய கைப்பேசி என்பதால் கொஞ்ச நாள் இந்த யோஜனையை தள்ளிப்போட்டேன்.

Root என்று எதோசொன்னார்களே, அது என்ன என்று பார்த்துவிடலாம் என்று மேல்விபரங்களை தேடிய போது கைப்பேசியில் தேவையான கோப்பை வைத்து அதன் மூலம் கைப்பேசியை நம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய வழியை சொல்லியிருந்தார்கள். என்னுடைய சாம்சங் கேலக்ஸி க்கு தேவையான கோப்பை இறக்கி கைப்பேசிகுள் வைத்து அவர்கள் சொல்லியமாதிரியே செய்த போது, எல்லாம் சரியாக வந்தது.

USB Cable மூலம் கைப்பேசியை மடிக்கணினி மூலம் இணைத்தேன்.Mass Storage க்கு வேண்டிய ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவில்லை.கைப்பேசியில் USB Tunnel என்னும் அப்ளிகேஷனை இயக்க வேண்டும்.மடிக்கணினியில் Android Tool என்ற மென்பொருளை இயக்க வேண்டும். முதலில் Refresh செய்தால் சேர்ந்துள்ள கைப்பேசிகளின் எண் வரும் அதில் தேவையானதை தேர்ந்தெடுத்து Connect பட்டனை அழுத்தினால் எல்லாம் தயார்.

முதலில் உலாவி மூலம் இணையத்தை பார்க்க முடிந்தாலும் கூகிள் பிளே மூலம் எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்க முடியவில்லை இதற்கான காரணத்தை இரண்டு வாரமாக தேடினாலும் கிடைக்காமல் இன்று ஒரு பக்கத்தில் இதற்கான விடை கிடைத்தது ஆதாவது இந்த Reverse Tethering ஆரம்பிக்கும் முன்பு

Settings-----Wireless & Networks------Mobile Networks----Use Packet Data வை கிளிக் செய்துவிடவும் அதற்கு பிறகு reverse tethering ஐ ஆரம்பிக்கவும்.இப்படி செய்வதனால் கைப்பேசியில் உள்ள 3G/2G  இணைய இணைப்பு பயன் படுத்தப்படமாட்டாது.கிட்டத்தட்ட 30 MB க்கு 3 பைசா தான்.


 கூகிள் பிளேயில் யுடூபில் மேம்பாடு தரவிறக்கம்.

 யூடிபில் இளையராஜா பாடல்கள்- கைப்பேசியில் ஓட அதன் இறக்கம் கணினி இணையத்தில்
அடுத்து எதை யோசிப்பது என்று இப்போதே மூளை பிராண்ட ஆரம்பித்துவிட்டது. :-)

Saturday, February 23, 2013

தன் கையே தனக்கு உதவி (DIY)

சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெய்யில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.இந்த வருடம் சென்னையில் எனக்கு 3வது வருடம். போன இரண்டு வருடங்கள் எப்படி சமாளித்தனோ அதே போல் இந்த வருடமும் சமாளிக்க வேண்டும்.மின்சார வினியோகம் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.

இப்போது நான் இருக்கும் வீடு மொட்டை மாடிக்கு அருகில் என்றாலும் சுற்றிலும் திறந்த இடைவெளியுடன் கூடிய மரங்கள் இருப்பதால் வெப்பம் அவ்வளவாக தெரியாது ஆனால் பெற்றோர்கள் இருக்கும் இடம் அப்படியே நேர் எதிர்.இடவாகோ அல்லது சிமிண்ட் சாலையோ தெரியாது,இரவில் வீட்டின் உள்ளே தகிக்கும்.மின் விசிறி ஓடினாலும் உள்ளே படுக்கமுடியாது.பல முறை சொல்லிச்சொல்லி இப்போது தான் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் ஏதாவது பயன் இருக்குமா என்று தெரியவில்லை.அழுத்தமில்லாத மின்சாரத்தை மும்முனையில் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? வினியோக பணம் குறைவாக வசூலிக்கப்போவதில்லை.சரி அந்த இடத்தை விட்டு வேறு இடம் போகலாம் என்றால் வங்கி,அஞ்சல் நிலைய கணக்கு,பொது வினியோக முறை மாற்று விலாசம்,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஒரு பெரிய பிரச்சனை போன்ற எண்ணம் மூலம் தள்ளிப்போட்டுக் கொண்டு போனது.ஒரு நிலையில் இதெல்லாம் சரிபடாது அவர்கள் இருக்கும் இடத்தையே ஓரளவுக்கு குளுமைபடுத்தலாம் என்று முடிவுக்கு வந்தேன்.

முதலில் இந்த False Ceiling - இது வெப்பத்தை மாடியில் இருந்து கடத்தாமல் இருக்க போட்டது ஆனால் அதைவிட அது மின்விசிறி மூலம் எழுப்பும் சத்தம் வாசலில் யாராவது நின்று கதவை தட்டினால் காதில் விழாத அளவுக்கு இருந்தது.இதன் சத்தம் எங்கிருந்து வருகிறது அதன் காரணமும் பிடிபட்ட பின் அதை நிவர்த்தி செய்ய பல செய்முறைகளை யோசித்து வைத்திருந்தேன்.கடைசியாக மின்விறிக்கும் அந்த False Ceiling க்கும் இடைப்பட்ட தூரத்தை அதிகப்படுத்தினால் காற்று சுழற்சி நன்றாக இருக்கும் அதனால் காற்றால் வரும் அதிர்வு False Ceiling Frame ஐ பாதிக்காது என்று முடிவு செய்து அதோடு அதை நானே செய்துவிடலாம் என்று எண்ணினேன்.

மேலே சொன்ன வேலையை குத்தகைக்காரரிடம் கொடுத்திருக்கலாம்,நான் செலவு செய்ததை விட 10 மடங்காவது கூலி கேட்டிருப்பார் ஏனென்றால் சிறிய வேலை முதல் பல காரணங்கள் சொல்லப்படும்.போன நவம்பர் மாதம் வரை அலுவலக வேலை அதிகமாக இருந்ததால் எப்போது செய்யலாம் என்று யோசித்தே பார்க்கவில்லை. வெறும் 3 மணி நேரம் கொடுத்து நாளையில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிய நிருவனத்துக்கு “மிக்க நன்றி” சொல்லிவிட்டு இந்த வேலையை ஆரம்பித்துவிட்டேன்.மகனை உதவிக்கு வைத்துக்கொண்டு மொத்த Frame ஐ இரண்டு நாட்களுக்குள் ஒரு 3 அங்குலம் உயர்த்திவிட்டேன் அதோடு மின்விசிறி சுற்றும் இடத்துக்கு பக்கத்தில் கொஞ்சம் தண்ணீர் நிரப்பிய பாட்டிலை நான்கு பக்கமும் வைத்து அதிராமல் பார்த்துக்கொண்டேன்.இப்போது முதலில் இருந்த சத்தம் இல்லை.

அடுத்து,வீட்டுக்குள் வெப்பம் வரும் வழி மேற்கு நோக்கி இருக்கும் ஒரு பக்க சுவர்.இரண்டு படுக்கை அறை,சமையல் அறை மற்றும் குளியலறை எல்லா அறைகளுக்கும் இச்சுவர் மூலம் வெப்பம் பரவுகிறது என்று நினைத்து அதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்று பட்டியலிட்டேன் அதில் ஒரு வழியை தேர்ந்தெடுத்து அதற்கான வேலையில் இறங்கினேன்.

இது தான் மேற்கு பக்கம் பார்த்த சுவர்.மதியம் முதல் மாலை வரை வெய்யில் சூட்டை வாங்கி இரவு முழுவதும் வீட்டுக்குள் விடுகிறது.


கீழே உள்ள கைப்பிடி சுவரில் இந்த மாதிரி Anchor Bolt ஐ 10 MM dia Bolt ஐ நிறுவினேன்.இந்த போல்ட் ரூ 10/No.ஆனால் தரமானதாக தெரியவில்லை.இதற்கு பதிலாக ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஹூக் எவ்வளவோ தேவலை என்று நினைக்கிறேன்.இவ்வித போல்டுகளை 1 மீட்டர் இடைவெளியில் நிறுவிக்கொண்டேன்.



அடுத்து Shade Net என்ற வலை பல கடைகளில் கிடைக்கிறது. 50x3 Meter, 50x5,50x6 என்ற பல அளவுகளில் கிடைக்கிறது.சென்னை சென்ரல் பக்கத்தில் இருக்கும் சாலையில் சுமார் 1 கி.மீ உள்ளே சென்றால் வால்டேக்ஸ் சாலையில் டார்பாலின் விற்கும் கடைகளில் கிடைக்கிறது.சில கடைகளில் மொத்தமாகத்தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.முதல் தடவை வாங்கியதால் நான் கொடுத்தது தான் சரியான விலையா என்று தெரியவில்லை ஏனென்றால் சுமார் 30% சொன்ன விலையில் தள்ளுபடி செய்து கொடுத்தார்கள்.

இந்த வலை மெல்லியதாக இருப்பதால் தொங்கவிடும் போது கிழிந்துவிடும் அபாயம் இருக்கும் அதற்கு ஏற்றாற் போல் தொங்கவிடும் பகுதியை மடித்து அதனுள் கொடிகட்டும் கம்பியை நுழைத்தேன்.

எல்லாம் முடிந்த பிறகு வலையை வெளிப்பக்கம் தொங்கவிட்டேன்.இப்போது சுவர் முழுவதும் மதிய மாலை வெய்யிலில் இருந்து தப்பிக்க கூடும்.மே/ஜூன் மாதங்களில் இதன் பலன் தெரியக்கூடும்.செலவு விபரங்கள் கீழே கொடுத்துள்ளேன்.
வலை - 25x3 Meter - Rs 1500 (நான் உபயோகப்படுத்தியது இதில் பாதி தான்) போல்ட் -15x10 -       Rs 150
கொடிக் கயறு          Rs 60
மடிச்சு தைக்க-ஒயர் Rs 30
தொழிலாளர் கூலி எல்லாம் நானும் எங்கப்பாவும் பகிந்துகொண்டோம்.வண்டிச்சத்தம் இதில் அடங்கவில்லை. :-)
இந்த வலையில் 75%, 50% சூரிய வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் என்ற வகையில் கிடைக்கிறது, உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.