Friday, February 18, 2011

Exercise- உடல் நலம்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.

தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.

விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.

சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.






துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.






வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.

Friday, February 11, 2011

பேருந்து நாள்!!

வயசுப்பையனாக நான் இருந்த போதே இந்த கூத்தை கேட்டிருந்தாலும் நேரிடையாக பார்த்ததில்லை அதை சில நாட்களுக்கு முன்பு நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு கல்லூரி மாணவர்கள் அவர்கள் கல்லூரி முன் செய்த அட்டகாசத்தை பார்க்கவும்.

ஒரு பேருந்தை கடத்தி அதனை அவர்கள் கல்லூரிக்குள் எடுத்துச்செல்வது போல் இருந்தது.






அன்று அண்ணா சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் வருங்கால சந்ததிக்கு ஒரு மோசமான நிகழ்வை நிகழ்த்திக்காட்டி விட்டிருந்தார்கள்.

என்ன பொது அறிவு!!! படம் கீழே.

Wednesday, February 09, 2011

எப்போது ஓடும்?

கோயம்பேடுவில் இருந்து பில்லர் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி போகும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக தொல்லையில் இருந்து தப்பிக்க இப்போது வழியில்லை,அதாங்க இந்த மெட்ரோ வேலையினால் இருந்த 3 வழிப்பாதை இரண்டாகி எந்த வண்டி எதன் மேல் உரசும்,மோதும் என்ற பயத்துடன் தினமும் பயணிக்கவேண்டியுள்ளது.கொஞ்ச நாட்களுக்கு முன்பு விடியற்காலை இவ்விடங்களுக்கு போய் அவர் மூலம் போக்குவரத்து பாதிக்காமல் பார்த்துக்கொண்டுள்ளார் நம் துணை முதல்வர், மேலும் 2013 யில் மெட்ரோ பயணிக்க ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருக்கார் அதற்கேற்ப்ப வேலைகளும் மிக ஜரூராக நடந்துகொண்டிருக்கு.கோயம்பேடு மற்றும் வடபழனி பகுதிகளில் வேலை வேகமாக நடந்துவருகிறது.




அந்த மேம்பாலத்தின் மேற்பகுதி இப்போதைக்கு இப்படி இருக்கும்.நடுவில் இருக்கும் கம்பி இருக்கும் பகுதியில் தான் ரயில் ஓடும்,அத்தோடு இருபக்கமும் கைப்பிடி சுவர் மாதிரி கான்கிரீட் சுவர்கள் வரும் அதனுள் தேவையான மின்சார கேபிள்கள் போக வழி உண்டாக்கப்படும்.




ஒரு பில்லரில் இருந்து மறுபில்லர்கள் வரை உள்ள கான்கிரீட் துண்டுகளால் ஆனது அதை தகுந்த கெமிக்கல் மூலம் ஒட்டவைத்து பிறகு அவ்வளவு துண்டுகளையும் ஒருங்கினைத்து “Post Tensioning" முறைப்படி இழுத்துவைத்துவிடுவார்கள்.

மேலும் மேலும் அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்வுகளை படம் கிடைத்தால் போடுகிறேன்.

Thursday, February 03, 2011

Pre-Cast Girder

இத்தொழிற்நுட்பம் பற்றி பல இடங்களில் எழுதியிருந்தாலும் சமீபத்தில் சென்ற ஒரு வேலை இடத்தில் எடுத்த படம் கிடைத்தது.அதன் விபரம் மற்றும் அனுகூலங்கள் கீழே.



இதை தரையில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் குறைவான செலவில் கால தாமதமின்றி தேவைக்காலத்துக்கு முன்பே செய்துவிடலாம்.இத்துடன் அதன் தொடர்புடைய மற்றொரு தொழிற்நுட்பமான போஸ்ட் டென்ஷன் (Post Tension) ஐ புகுத்தி நம் தேவைக்கு ஏற்ப பீம்களை கான்கிரீட் போடலாம்.மேலே உள்ள படத்தில் கீழே உள்ள இரண்டு கான்கிரீட் குமிழ்கள் ஏற்கனவே அவ்விடத்தில் உள்ள கேபிள்களை இழுப்பு விசைக்கொண்டு நிலை நிறுத்தி அதன் பிரத்யோக அமைப்பின் மூலம் Lock செய்தவுடன் அதனை இம்மாதிரி கான்கிரீட் கொண்டு பூசிவிடுவார்கள்.இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தில் அந்த கம்பிகள் லூஸ் ஆனால் அதை பிடித்திருக்கும் நட் மாதிரியான அமைப்பு புல்லட் மாதிரி வெளியேற வாய்புள்ளது.அந்த வாய்ப்பை தவிர்க்கவே இந்த மாதிரி கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.



மேலே உள்ள படத்தில் கீழிருந்து 3 வது ஓட்டையில் ஒரு நெகிழி வைத்திருக்கார்களே அது இந்த பீம் கான்கிரீட் போடும் போது வளைந்து போகாமல் தடுக்க அதன் உள் அளவுக்கு தகுந்த நெகிழியை வைத்துவிடுவார்கள்.இந்த கேபிள் போகும் பாதை மெலிதான் தகடு பைப் ஒன்று இந்த முனையில் இருந்த அடுத்த முனை வரை போகக்கூடியதாக இருக்கும்.
கீழே உள்ள இரு பைப்புகளில் உள்ள ஒயர்களை Strands என்று சொல்வார்கள் இதன் மூலம் தேவையான இழுப்புவிசையை ஏற்படுத்தி கான்கிரீட் பீமை தகுந்த Load தாங்கக்கூடிய நிலைக்கு எடுத்துவருவார்கள்.மேலே உள்ள இரண்டு ஓட்டைகளையும் இதே முறையில் நிலை நிறுத்துவார்கள் அது இப்பீமை கிரேன் மூலம் தேவையான இடத்தில் வைத்த பிறகு செய்வார்கள்.இம்முறை இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால் இது தான் முழுவேலை என்று சொல்லமுடியாது.



மேலே உள்ள படத்தில் ஒரு சிறிய Shutter ஐ எடுக்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள்.என்ன தான் அளவில் சிறியதாக இருந்தாலும் கான்கிரீட்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் இவ்வேலை நிறைய நேரம் எடுக்கும்.இப்படிப்பட்ட பல அனுகூலங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட கஷ்டங்களும் இருக்கும்.

Sunday, January 30, 2011

சோலிங்கர்

ஜனவரி 26 - குடியரசு தினம் மிக முக்கியமாக அது விடுமுறை நாள்.இந்தியா வந்த பிறகு இந்த சனிக்கிழமை வேலை பல காரியங்களை அலுவலக நேரத்திலேயே பார்க்கவேண்டிய கட்டாயத்துக்கும் அதோடு ஞாயிறு நாளை மிகவும் திட்டமிடவேண்டிய நிலமைக்கு தள்ளுகிறது.இச்சூழ்நிலையில் தேர்ந்தடுத்தது தான் சோலிங்கர் பயணம்.
முதல் நாள் இரவே கூகிளில் தேடிய போது அரகோணம் போய் அங்கிருந்து போவது தான் சுலபம் என்று போட்டிருந்தார்கள்.என்னுடைய புரிதல் படி திருப்பதி திருப்பத்தில் போய் அதன் வழியே அரக்கோணம் போவது தான் சரி என்ற நிலையில் இருந்தேன்.மகிழுந்து வாங்கி என்னுடைய நெடுஞ்சாலை பயணத்தை முதலில் காஞ்சிபுரம் போய் தயார்படுத்திக்கொண்ட பிறகு இது இரண்டாவது பயணம்.
கோயம்பேடு வழியாக “அண்ணா நகர்” என்று போட்டிருக்கும் திருப்பத்தில் திரும்பினால் பெங்களூர் நெடுஞ்சாலை வரும்.நம்மூர் சாலை வழிகாட்டிகள் ஆட்டோ ஓட்டுனரும் சாலை ஓரத்தில் நிற்கும் மனிதர்கள் தான்.இந்த அண்ணா நகர் திருப்பத்தில் பெங்களூர் நெடுஞ்சாலை என்று போட்டிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருந்திருக்கும்!! முதல் கொடுமையை விட்டுத்தள்ளிவிட்டு திருப்பதி சாலையை நோக்கி பயணித்தோம்,ஓரளவு முன்பே தெரிந்திருந்தாலும் திருப்பதி சாலை திருப்பத்தை காண்பிக்கும் அறிவிப்பு பலகையில் பாதியை காணோம், “திருப்” மட்டுமே இருந்தது.ஏற்கனவே திருத்தணி போயிருந்த மணைவி இவ்வழியை காட்டிலும் காஞ்சிபூரம் தாண்டி வலது கை பக்கம் திரும்பினால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றார்,உடனே வழியை மாற்றி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வண்டியைவிட்டேன்.பாதிவழி போகும் போது அவருக்கும் சந்தேகம் வர அங்கு சாலை ஓரம் நிற்பவர்களிடம் வழி கேட்டோம். வருகிற வலது திருப்பத்தில் திரும்பி மறுபடி வரும் சாலையில் இடது பக்கம் திரும்பி போனால் அரக்கோணம் சாலை வரும் என்றார்கள். மோசமான சாலை 40 கி.மீட்டருக்கு மேல் போகவிடாமல் செய்தது.வந்த ஒரே பெரிய ஊர் சாலை ஓர டிக்கடையில் டீ சாப்பிட்ட படியே கடை முதலாளியிடம் பேச்சு கொடுத்தோம்.எங்களுக்கு சரியான வழியை சொல்லிவிட்டு திரும்ப வரும் போது பானாவரம் மற்றும் காவேரிபட்டினம் வழியாக வந்தால் நெடுஞ்சாலை வந்துவிட்டும் என்றார். மனதில் குறித்துக்கொண்டேன்.
காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி 9.50 க்கு சோலிங்கர் வந்து சேர்ந்தோம்.பெரிய மலை யில் இருக்கும் நரசிம்மர் மற்றும் சின்ன மலையில் இருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிகளை தரிசித்தோம்.1305 + 400 படிகளை ஏறி இறங்கினோம்.மொத்தம் 2.30 மணி நேரம் ஆனது.





கீழே உள்ள கோவிலை ஏன் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.



கையில் கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மதியம் 1 மணிக்கு கிளம்பினோம்.வழியை விஜாரித்துக்கொண்டு பானாவரம் மற்றும் காவேரிப்பட்டினம் வழியாக நெடுஞ்சாலைக்கு 1.30 மணிக்கு வந்தோம்,அருமையான சாலை அவ்வளவு போக்கு வரத்தும் இல்லை.நெடுஞ்சாலை பிடித்த பிறகு 80 ~ 90 என்று வந்து வீட்டுக்குள் வரும் போது 3.15 PM.என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் சாலை ஓரத்தில் நிற்கும் இந்த கண்டெய்னர் லாரிகள் ஒருவித சிக்னலும் கொடுக்காமல் சாலைக்குள் வந்து விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள் அப்படி ஒரு நிகழ்வு எனக்கும் ஏற்பட்டது நல்ல வேளையாக சரியான நேரத்தில் பிரேக் போட்டு சமாளித்தேன்.
போகும் போது 99 கிமீ ஆனது வரும் போது 115 கிமீட்டர் ஆனது.

எல்லை பிரச்சனை


கைபையை சோதனை போடும் குரங்கு

Sunday, January 23, 2011

இது தான் தலைமை பண்பு.

இயக்குனர்களின் 40 ஆண்டு கால விழாவில் திரு ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று

உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?

யோசிக்க கூட நேரமில்லாமல் சொன்ன பதில் “ லி குவான் யு” சிங்கப்பூரின் மதியுரை அமைச்சர்.

அப்படியே கீழே உள்ள லிங்கில் போய் மேற்கொண்டு படிங்க.

http://news.asiaone.com/News/AsiaOne%2BNews/Singapore/Story/A1Story20110122-259636.html

என்ன ஒரு நிதர்சன அறிவு அதோடு தன் நாடு என்ற நிலைப்பாடு. You are simply GREAT Mr Lee Kuwan Yew.

இப்படி ஒரு தலைவர் நம் நாட்டுக்கு வேண்டிய கட்டாயம் ரொம்பவுமே கட்டாயப்படுத்த வேண்டிய நிலமையில் உள்ளோம்.

Sunday, January 16, 2011

சுதந்திரம்.

கோவா போன போது கண்ணில் பட்ட கொடி "சுதந்திரம்"


Sunday, December 26, 2010

விளக்கில்லா விமான நிலையம்.

கடந்த 21ம் தேதி வேலை விஷயமாக பெங்களூரு வழியாக கோவா செல்லவேண்டியிருந்தது. தலையும் நானும் ஒரே விமானத்தில் பயணம் செய்தாலும் கூடிய வரை அவர் கண்ணில் படாமல் இருக்கவே முயற்சித்தேன், காரணம் பயமில்லை தேவையில்லாமல் பேசவேண்டிவ்ருமே என்பது தான்.
சென்னையில் இருந்து 50 நிமிடங்களில் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது ஜெட் ஏர்வேய்ஸ்.புது விமான நிலையம் வெளிப்பார்வைக்கு ஓடு பாதையில் இருந்து அவ்வளவு வசீகரமாக இல்லை ஆனால் உள்ளே நுழைந்ததும் சர்வதேச தரத்துக்கு இழைத்து வைத்திருக்கிறார்கள் மிக முக்கியமாக வழுக்கும் தரையில்லை.மின்சாரத்தை சேமிக்கும் விதமாக North Light முறையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஜன்னல் மூலம் நிலையத்துக்கு தேவையான வெளிச்சம் உள் வரும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.நான் இருக்கும் வரை ஒரு விளக்கு கூட எரியவில்லை அதனல் எவ்வித குறைபாடும் தெரியவில்லை.



இவ்வேலை L&T- ECC நிறுவனம் செய்ததாக என் தலைவர் சொன்னார்.Folded Plate என்னும் முறைப்படி அமைத்திருப்பதாகவும் சொன்னார்.தரமும் நன்றாகவே இருந்தது. என்ன தான் அத்தனை வேலைகளையும் அருமையாக செய்திருந்தாலும் மழை நீர் செல்லும் குழாயை வெளியே தெரியும் படி செய்து ஒரு திருஷ்டி வைத்திருக்கிறார்கள்.இத்தனை வேலை செய்து அதை எப்படி கடைசியில் இப்படி வைத்துவிட மனது வந்தது என்று தெரியவில்லை.



மரக்கறி உணவு கிடைக்கும் இடம் நன்றாக இருந்தாலும் மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை சாப்பிட சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு போன சிட்டுக்குருவிகள் அவ்விடத்தை இருப்பிடமாக மாற்றிக்கொண்டுவிட்டன. செல்போன் டவரினால் குருவி காணாமல் போகும் என்ற கொஞ்ச நாளுக்கும் முன்பு வந்த தியரி இங்கு அடிப்பட்டு போகிறதே??

Monday, November 29, 2010

இது சாயுமா?

நேற்று போரூர் பக்கம் போய்விட்டு அப்படியே மனப்பாக்கம் வழியே கட்டுமான பொருட்காட்சி பார்க்க போகலாம் என்று விரைவுச்சாலை உபயோகித்துக்கொண்டிருந்தேன்.



தவறுகளை கண்டுபிடித்தே கண்களுக்கு பழக்கமாகிப்போனதால் இக்கட்டிடம் நின்ற நிலை தடாலடியாக நிற்கவைத்து அப்படியே புகைப்படம் எடுக்க வைத்தது.இப்பதிவை போடுவதற்கு முன்பு ஒரு சந்தேகம்,என்னுடைய கணிப்பு சரியா? போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு படத்தை Zoom செய்த போது ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் வழிந்து கறை உள்ளதை பார்த்தது இதுவும் பைசா கோபுரம் போல் சாய்ந்துகொண்டிருப்பது உறுதியானது. யாராவது தூக்கு குண்டு போட்டுப்பார்த்து தகுந்த அதிகாரிகளிடம் சொன்னால் பொது ஜனத்தை காப்பாற்றலாம்.

படத்தை Zoom செய்து பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

Sunday, November 28, 2010

சென்னை விமான நிலையம்.

விமான நிலையத்துக்கு போகிறவர்கள்/வருபவர்களுக்கு இக்கட்டுமானப்பணி கண்ணில் படாமல் தப்பிப்பது முடியாத காரியம்.இருக்கிற நிலயத்தை மேம்படுத்தும் பணிகளுடன் புதிய வரவேற்று மற்றும் புறப்படும் நிலையங்கள் புதுப்பொலிவு பெற வேலைகள் நடந்துவருகின்றன.இன்றைக்கு இருக்கும் இந்த நிலையை பார்க்கும் போது வேலை முடிய இன்னும் 1 வருட காலம் காத்திருக்க வேண்டும் போல் தோனுகிறது.இரு விமான முனையங்களை இணைக்கும் ஒரு பாலம் பணியும் நடந்துவருகிறது இதன் மூலம் மகிழுந்துகள் விமான நிலைய வாசலுக்கே வரமுடியும் போல் தோனுகிறது.
நேற்று அங்கு போக நேர்ந்த போது கண்ணில் பட்ட சில காட்சிகள் கீழே.

உள்நாட்டு முனையம்


வெளி நாட்டு முனையம்.



சாலை போன்று இணைக்கும் பாலத்தின் Beam ஐ தூக்கி பொருத்துகிறார்கள்.





படமெல்லாம் இருக்கட்டும்...எப்ப முடியும்? நான் கேட்கலை பையன் கேட்கிறான்.

Wednesday, November 17, 2010

அரசாங்க வருவாயை எப்படி பெருக்குவது?

மழை பெய்த பிறகும் தலைப்பில் உள்ள எண்ணம் மழை நீர் போல் பெருக்கெடுத்து அப்படியே ஓடிவிடாமல் நம்மூர் சாலை போல் அப்படியே தேக்கிவைத்துவிட்டது.
டாஸ்மார்க் மூலம் அரசாங்கத்துக்கு 12000 கோடிக்கு மேல் வருமானம் வருவதாக கூகிள் சொல்கிறார்.இவ்வளவு வருவாயை எந்த அரசாங்கமும் இப்போதும் எப்போதும் இழக்கப்போவதில்லை என்பது திண்ணம்.விருகம்பாக்கம் மார்க்கெட்டுக்கு பக்கத்தில் ஒரு நாளிரவு மழை பெய்து சுற்றிலும் தண்ணீர் இருக்கும் இடத்தில் சாலை நடுவே ஒரு பொது ஜனம் போதையில் சுற்றிலும் நடப்பது ஏதும் அறியாமல் உட்கார்ந்து இருந்தார்,வேகத்துடன் வரும் பைக் எப்போது வழிமோதப்படுவார் என்ற நிலையில் இருந்தார்.திறந்துவிட்ட தண்ணீரின் பாதிப்பு இது.இதே மாதிரி பல கதைகள் இந்தியாவை சுற்றி எல்லா இடத்திலும் நடக்கும் நடந்துகொண்டிருக்கும்.இப்படி திறந்துவிட்டு தான் அரசாங்கம் சம்பாதிக்க வேண்டுமா? தேவையே இல்லை என்பது என் கருத்து.
நான் பைக்கில் பிரயாணிக்கும் 9 கி.மீட்டர் தூரத்தில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் தண்டனை போட்டு அதே போல் பல இடங்களில் வசூலித்தால் போதும், டாஸ்மார்க் வருமானம் எல்லாம் ஜுஜூபி.

வீட்டில் இருந்து கிளம்புகிறேன்..போகும் வழி எதிர் திசையில் பயணிக்க வேண்டும் என்பதால் போக்குவரத்து விதியை மீறி அப்படியே சாலை கடக்கிறேன். போடு அபராதம் ரூபாய் 50.

போகும் போது நிறைய வாகனங்கள் இருந்தால் எதிர் திசையில் வரும் "வாகனத்துக்கான வழி" என்பதை கூட யோசிக்காமல் எதிர் வழியையும் அடைத்துக்கொண்டு ஓட்டி அவ்வழியையும் அடைத்துவிடுவேன். போடு அபராதம் ரூபாய் 50.

தேவையில்லாமல் பள்ளிகள்/மருத்துவனமனைகள் அருகே ஹாரனை உபயோகப்படுத்துவதால் போடு அபராதம் ரூபாய் 15. குறைந்த அளவு 10 முறையாவது இருக்கும் என்பதால் அதிலிருந்து 150 கிடைக்கும்.

திரும்பும் போதெல்லாம் ஒளிப்பான் மூலம் சமிக்கை செய்யாத்தாற்கு ரூபாய் 10 - 5 முறைக்கு 50 ரூபாய்.

சிக்னலை மதிக்காமல் செல்வதற்காக ரூபாய் 200.

இரவு நேரங்களில் ஒருவழிச்சாலை என்பதை மதித்து Full Headlight ஐ போட்டுக்கொண்டு வரும் நபர்களுக்காக ஒரு 100 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

இடது /வலது புறம் Free Turn இல்லாத இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டியதற்கு ரூபாய் 200.

இப்படியே போய்கொண்டிருக்கலாம் ஆனால் போரடித்துவிடும் இதுவே ஒரு வழிக்கு 800 ரூபாய் ஆகிறது திருமப் வரும் போது கொஞ்சம் பட்டறிவு வரும் என்பதால் ரூபாய் 500 வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 800+500=1300 ரூபாய்க்கு மேல் டாஸ்மார்க்கில் செலவு செய்பவர்கள் என்றால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

இப்படியெல்லாம் தண்டனை கொடுக்க கேமிராவுக்கு பதில் ஆட்களை வேலைக்கு அமர்த்தினால் வேலையில்லா பிரச்சனையை ஓரளவு சமாளிக்கலாம்.போட்ட உடனே கொடுத்துவிட நம் ஆட்கள் அவ்வளவு ஏமாந்தவர்களா என்ன? அதை வசூலிக்க ஒரு படையை அமர்த்தி வசூலித்த காசில் இருந்தே அவர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆரம்பித்தால் பல வேலைகளை உருவாக்க முடியும்
.
என்ன இந்த யோஜனை கிறுக்கு தனமாக இருக்கா? இல்லை என்றே எனக்கு தோனுது.எததனை நாட்களுக்கு இப்படி பலர் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.ஒரு முறை தண்டம் அழுதபிறகு ஜாக்கிரதையாக இருந்து தண்டனையில் இருந்து தப்பிக்கவே முயற்சிப்போம் அல்லவா?அப்போது இவ்வளவு வசூல் இருக்காதே அதற்கு என்ன பண்ணுவது?இதற்காக வேலையில் சேர்த்தவர்களை பிறகு என்ன செய்வது? கவலையே வேண்டும் தினமும் புது புது ஆட்கள் சாலையில் இறங்குகிறார்கள் அவர்களை கண்ணம் வைத்தாலே போதும்.ஆட்டோ இருக்கும் போது இந்த கவலையே வேண்டாம் வசூலிப்பவர்களுக்கு இவர்களுக்கு தான் அட்சயபாத்திரம்.

இதுவரை சொன்னது நாணயத்தின் ஒரு பக்கம், மறுபக்கத்தை பார்க்கலாமா?

இங்கு பைக்கில் இதுவரை 1100 கி.மீட்டருக்கு மேல் ஓட்டிய பிறகு எனக்கு ஒரு ஆசை வந்துள்ளது ஆதாவது நமது சாலைகளை நிர்வகிக்கும் அமைச்சரை முறையே சைக்கிள்,பைக் மற்றும் காரில் ஒரு முறையாவது எங்கள் சாலை வழியே அழைத்துச்செல்ல வேண்டும் என்று.நடத்தி அழைத்து போக முடியுமா என்று தெரியவில்லை ஏனென்றால் நடப்பவர்களுக்கு மரியாதையும் இல்லை அவர்களை நடக்கவும் விடுவதில்லை நாங்கள்.

நம் சாலைகளைப்பற்றி இதுவரை பலர் எழுதியுள்ளார்கள் அதிலும் ஜாக்கி சேகர் பதிவுகளில் சமூக அக்கறையுடன் மெலிதான கிண்டலும் இருக்கும்.

இவ்வளவு தவறுகள் செய்ய நாம் மட்டும் தான் காரணமா? கொஞ்சம் அலசலாமா?

முதல் காரணத்தில் "சாலையை குறுக்கே கடப்பது" - நான் இப்படி தவறாக நடக்கமாட்டேன் என்று சொல்லி வண்டியை போகும் பாதையில் விட்டு ஒரு U அடிக்க இடம் தேடினால் அது மற்றொரு சந்து முடியும் இடமாக இருக்கும் அதிலும் அவ்வளவு சுலபமாக அடிக்க முடியாது.எதிர்திசையில் வரும் வாகனங்கள் ஹாரன் அடித்தே காதை செவிடாக்கிவிடுவார்கள்.இதெல்லாம் யோசிக்காமல் அப்படியே கிராஸ் செய்வது தான் உத்தமம் என்ற நிலைக்கு நம் சாலைகள் நம்மை தள்ளுகின்றன.

எதிர் திசையில் வரும் வாகனவழியை அடைப்பது.இதில் நம் ஆட்களின் பொது அறிவு எப்படி யோசித்தாலும் வியக்கவைக்கிறது.அனுபவித்தால இதை முழுவதும் உணரமுடியும்.

சும்மா போனா கூட ஹாரன் அடித்துக்கொண்டு போகும் Culture எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை அதுவும் முன்னால் பெரிய பெரிய வண்டி சிக்னலுக்காக நின்றாலும் அதன் பின்னாலும் ஹாரன் அடிப்பது எதற்கு என்று புரியவில்லை.சரி இது இருசக்கர வாகனங்களின் பழக்கமென்றால் அது இப்போது 4 சக்கரவாகனத்துக்கும் வந்துவிட்டது ஏனென்றால் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் காருக்கு மாறிவிட்டார்கள் போலும்...பழக்கத்தை விடமுடியவில்லை.அரசாங்கம் இந்த பிரச்சனையை உணர்ந்து அடுத்த தேர்தலில் காதுக்கான சோதனை மற்றும் செலவை இலவசமாக கொடுப்போம் என்ற உறுதிமொழியை கொடுக்கவேண்டும்.

வலது/இடது பக்கம் திரும்பனும் என்றால் எந்த கவலையும் பட தேவையில்லை,விளக்கு சமிக்கை இருந்தாலும் அதை உபயோகப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாத ஆட்களை தினசரி சந்திக்கலாம். இப்படி ஒரு கொடுமை இருந்தால் விளக்கு சமிக்கை இருக்கும் இடத்தில் free left/right அறிவிப்பு இருக்காது,எதிரே தெரியும் விளக்குகளின் அமைப்பை பார்த்து இடது/வலது பக்க விளக்கு இல்லை என்றால் அங்கு அது Free என்று புரிந்துகொள்ளவேண்டும்.கொஞ்ச நாள் சென்னையில் ஓட்டினால் தன்னால் புரிந்துகொள்வீர்கள்.அப்படி இருக்கும் பட்சத்திலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் போகும் வண்டிகளும் இருக்கும்.பொது விதியை கடைப்பிடிக்கவேண்டும் என்றாலும் பின்னால் ஹாரன் அடித்து நம்மை துரத்துவார்கள்.பல முறை ஆட்டோ மற்றும் பைக்காரர்களால் துரத்தப்பட்டிருக்கேன்.இதெல்லாம் விட சமிக்கைகள் எப்போது வேலை செய்யும் என்பது யாராலும் சொல்ல முடியாத புதிர்.வடபழனி சிக்னலில் இந்த கொடுமை அதிகம்.

இந்த ஒருவழிச்சாலையில் விளக்குகளை போட்டுக்கொண்டு எதிர்திசையில் வரும் வண்டிகள்- இவர்கள் இருவிதம்,சுற்றுவழியில் போனால் பெட்ரோல் விரயம் மற்றவர்கள் சோம்பேறிகளின் மறு அவதாரம்.

இதெல்லாம் விட மகா கொடுமை, சாலைகள் மூலம் மழை நீர் சேகரிக்கும் திட்டம்.திருமதி ஜெயலலிதா வீடுகளில் செய்யச்சொன்ன திட்டத்தால் நில நீர்மட்டம் உயர்ந்தது சந்தோசஷம் தான் ஆனால் அதையே சாலைகளிலும் செய்த ஆர்வக்கோளாறு ஆசாமிகளை என்னவென்று சொல்வது??

சாலை மத்தியில் திடிரென்று ஒரு குன்று வரும்....ஹி ஹி Manhole Clean பண்ணி போட்ட மண் எடுக்க மறந்துவிட்டதால் வந்தது.

Manhole கவர் போய்விட்டால் யாராவது புண்ணியவான் அதில் ஒரு குச்சியை நட்டு வரப்போகும் ஆபத்தை மற்றவர்களுக்கு உணர்த்துவார்கள்.

மிகச்சிறந்த சாலை போட்டவர்கள் என்ற கின்னஸ் சாதனை யாருக்காவது கொடுக்கனும் என்றால் சென்னை தான் முதலிடதில் இருக்கும் சந்தேகம் இருந்தால் கோயம்பேடு - விருகம்பாக்கம் சாலையை முன்னுரைக்கலாம்.இச்சாலைகளில் பயணிப்பதால் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முதுகு வலி நிச்சயம் அதற்கான இலவச பேகேஜ் தேவைப்படும் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். :-))

Wednesday, November 10, 2010

இது நிஜமானால்!!

கோயம்பேடு சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நெருங்கும் சமயத்தில் வேகமாக போய்கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்து இப்படத்தை பார்த்தால் நிஜமாகவே கட்டிய வீடுதான் இந்த நிலையில் இருக்கிறது என்ற எண்ணத்தோனும்.முதல் முறை கையில் கேமிரா இல்லாததால் எடுக்கமுடியவில்லை ஆனால் மறுமுறை போகும் போது நின்று படம் எடுத்த போது தான் சினிமா செட்டிங்காக போடப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.தூரத்தில் இருக்கும் பார்க்கும் போது கட்டினவனை திட்டுகிற அளவுக்கு தத்ரூபமாக செய்திருப்பவர்களை பாராட்டவேண்டும்.

Sunday, October 31, 2010

தேவர் திருவிழா

ஏற்கனவே இடைவிடாத மவுண்ட் ரோடின் ஹாரன் ஒலி அலுவலக கண்ணாடி தடுப்பையும் மீறி நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும்,நேற்று அந்த சத்ததையும் மீறி வெடி சத்தமும் தப்பு சத்தமும் ஒலிக்க ஆரம்பித்தது.சரி யாரோ மண்டையை போட்டுவிட்டார்கள் போலும் என்று நினைத்திருந்தேன்.வெளியே சென்று பார்க்க அலுப்பு.கலவையான இச்சத்தங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது தான் இது ஏதோ விழா போல் நடக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது அதே சமயத்தில் மவுண்ட் சாலையில் இருக்கும் நெருக்கடிக்கு இடையே எப்படி என்ற எண்ணமும் எழுந்தது.

வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்க்கும் போது,முதல் குழு ஆண்களுக்கு; தப்பும் ஆட்டமும் போட்டுக்கொண்டு தேவர் சிலை வரை போனார்கள் அடுத்து பெண்கள் தலையில் குடம் வைத்து (நேர்த்திக்கடனா?)அவர்களும் அச்சிலை வரை போய்விட்டு ஒரு வண்டியில் குடங்களை அடுக்கிவைத்தார்கள்,அதற்கு மேல் எனக்கு நேரம் இல்லாத்தால் இரண்டு படங்கள் மட்டும் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

ஒரு வண்டியில் கோயம்பேடு யில் இருந்து தேவர் சிலை வரை நடைப்பயணம் என்று போட்டு ஏதோ விழா என்று எழுதியிருந்தார்கள்.இன்று காலை செய்தித்தாளை பார்த்தவுடன் தான் நேற்றைய விழாவுக்கு அர்த்தம் தெரிந்தது.




Tuesday, October 19, 2010

மத்தியான சிரிப்பு

அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடித்துவிட்டு மிச்சம் இருக்கும் 10 நிமிடத்தை வீணாக்க விரும்பாமல் தினமும் சிறிது நேரம் மவுன்ட் ரோடு பக்கம் உலாத்தல் போவேன் அப்படி போகும் போது இன்று பார்த்த ஒரு காட்சி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

கீழே பாருங்கள்..



ஒரு காலத்தில் நெட்டில் இதே மாதிரியான கோட்டை வெள்ளை கலரில் ஒருவர் சாலையில் போட்டிருப்பார் அப்போது வழியில் இருக்கும் ஒரு இலைக்காக கோட்டை வளைத்துப்போட்டிருப்பார்.இக்கோடு சாலை விவர பலகைக்காக வளைக்கப்பட்டிருக்கு.

Saturday, October 16, 2010

யோகா

சில நாட்களுக்கு முன்பு யாகூ முதல் பக்கத்தில் மோசமான சுற்றுச்சூழல் உள்ள 20 நகரங்களில் பட்டியல் போட்டிருந்தார்கள் அதில் சென்னைக்கு 8வது இடம்,முதல் இடத்தில் குஜராத்தில் உள்ள அன்கலேஷ்வர்.இந்த அனகலேஷ்வர் பகுதியில் 1992களில் சில மாதங்கள் வேலை செய்துள்ளேன் அப்போதே காற்றில் ஒரு வித நெடி இருக்கும்.வெளியிடங்களில் இருந்து வரும் ரயிலில் வரும் போது இந்த நெடியே அன்கலேஷ்வர் வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்தும்.
உடல் நலம் அதுவும் வெட்டவெளியில் பணியில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய பழைய பதிவுகளில் அவ்வப்போது எழுதிவந்துள்ளேன்.ஒல்லியாக இருந்து சின்ன தூசிகளுக்கு எல்லாம் பல முறை பென்சிலின் ஊசி போட்டு வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருந்த நான் அதிலிருந்து விடுபட்டு ஓரளவு வியாதியில்லா வாழ்கைக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள பல உடற்பயிற்சிகள் உதவினாலும் அதையும் மீறி "யோகா" பக்கம் என்னை தள்ளியது 1990 களில் ஆனந்த விகடனில் வந்த யோகா பற்றிய கேள்வி பதில்கள் தான்.என்னை நான் தள்ளிக்கொண்ட பல நிகழ்வுகள் ஏனோ தானோ என்று புரிதல் முறையில் தான் நடந்திருக்கின்றன,அதே முறையில் இந்த யோகா கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருந்தேன்.திரு தேசிக்காச்சாரி என்பவர் அவர் தந்தை பெயரில் "கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திரம்" மூலம் பலருக்கு யோகா கலையை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்தேன்.உடலை ஓரளவு Tone Up செய்தாகிவிட்டது இனிமேல் அதில் அவ்வளவு முன்னேற்றம் காணமுடியாது என்ற நிலையில் யோகா பக்கம் முயற்சிக்கலாம் என்று அவர்களிடம் சில காலம் யோகா கற்றுக்கொண்டேன்.முதல் முறை அவர்கள் மந்திரம் போன போது அவர் என்னிடம் எதற்கு யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றார்.இந்தியனாக இருக்கின்ற எனக்கு இக்கலை தெரியவில்லை என்பது கஷ்டமாக இருப்பதால் வந்தேன் என்றேன்.உடல் நிலை பற்றிய பேச்சு வந்த போது பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்ற போது "திரு ஆன்ந்த்" என்பவரை எனக்கு ஆசிரியராக போட்டார்கள்.அவர் மூச்சு எடுக்கும் போது விடும் போதும் ஏதோ பிளாஸ்டிக் குழாய் மூலம் காற்று போய் வருவதைப்போன்று ஒரு சத்தம்,அவ்வளவு சுத்தமான மூச்சுக்குழாய் போலும்! ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.






யோகாவின் முக்கிய அங்கங்களில் முச்சுக்காற்று.ஏற்றுவது இறக்குவது என்ற கணக்கில் ஓடும்.எவ்வளவு வருடம் செய்தேன் என்ற நினைவில் இல்லை ஆனால் அதை செய்வதற்கால கால அளவு நிறையவே காலை நேரத்தை விழுங்கியது அதோடு சாயங்காலம் சரியாக வரவில்லை.யோகா செய்ததால் எவ்வளவு பலன் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ இருக்கு என்பதை மட்டும் உடல் நலம் காண்பிக்கிறது.இப்போதெல்லாம் யோகா பண்ணுவதில்லை என்றாலும் மூச்சுப்பயிற்சி மட்டும் தொடர்கிறது.

இனி சென்னை காற்றை தான் சுவாசிக்கவேண்டும் என்பதால் இது வரை செய்துவந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை அப்படி முடியவில்லை என்றால் திரும்பவும் யோகா பக்கம் கண்ணைப்பதிக்கவேண்டும்.

Sunday, October 10, 2010

Employment Card

நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலை தேடுகிறோமோ இல்லையே முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிடுவோம்,அப்படி செய்வதால் அப்பா/அம்மா ஏச்சுக்களில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளலாம் என்பது வேறு கதை.முதன் முதலில் நாகையில் படித்துமுடிந்தவுடன் அங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்துக்கொண்டிருந்தேன் பிறகு தான் முன் அனுபவம் உள்ளவர்கள் பலரும் சொல்லிய படி சென்னைக்கு மாற்றிக்கொண்டேன்.அவ்வப்போது அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேலையில்லாததோர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அது உணர்த்திக்கொண்டிருக்கும்.

இன்று ஏதோ பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கும் போது இவ்வட்டை கையில் கிடைத்தது.கொஞ்சம் கொசுவற்றி சுற்றி பார்த்த போது அன்றிருந்த நிலமை இன்றிருக்கும் நிலமை - வேடிக்கையாக இருக்கு வாழ்கை.

Saturday, October 09, 2010

சென்னை மெட்ரோ

கோயம்பேடு மற்றும் வடபழனி பக்க சாலைகளை வழிப்பறி செய்து சென்னை மெட்ரோ வேலைக்காக ஆட்கள் உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.தூண்கள் மண்ணைவிட்டு வெளியே வந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் ஆனால் 20 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு ஸ்டீல் Girder ஐ தூக்கி வைத்ததும் பத்திரிக்கைகள் புகைப்படம் போட்டு ஒரு சில பக்கங்களை நிரப்பிவிட்டன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதி வழியே போன போது அலைபேசி மூலம் எடுத்தேன்.



கோயம்பேடு,CMBT,வடபழனி,அரும்பாக்கம் மற்றும் அசோக் நகர் பக்கம் வண்டி ஓட 2013 ஆகிவிடும் போல் தோனுகிறது.

Wednesday, September 22, 2010

சென்னை ரயிலில்...

வெளியே Track யில்நடப்பவனுக்கு புரியவில்லை உள்ளே தூங்குபவனுக்கும்.....

இப்படம் சென்னை மின்சார ரயிலில் எடுத்தது.

Sunday, September 12, 2010

நிலவும் வீனஸும்.

மஸ்கட் எப்போதுமே வானவியலுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நகர வெளிச்சத்தை தாண்டிப்போனால் வெரும் கண்களுக்கு வானத்தில் இருக்கும் நட்சத்திரம் விருந்தே படைக்கும்.

கீழ்கண்ட படங்களை பாருங்கள்...அலைபேசியில் பேசியில் எடுத்தது.நிலவும் வீனஸும் அருகருகே!!
முதல் படம் குரூம் பூங்காவிற்கு முன் எடுத்தது.




Friday, September 10, 2010

புதிய தொழிற்நுட்பம்-Hollw Core Slab.

போன பதிவில் ஆசிய கடற்கரை விளையாட்டு கட்டிடங்களை பற்றிய விளகங்களை சொல்கிறேன் சொல்லியிருந்தேன்.

மிக அதிக உயரமான கட்டிடமே ஐந்து மாடி தான்.ஒரு ஹோட்டல்,விளையாட்டாளர்கள் தங்கும் இடம்,பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடம் மற்றொரு கட்டிடத்தில் உணவகம் மற்றும் கடைத்தொகுதி இருக்கிறது.வரும் நவம்பரில் விளையாட்டுகள் தொடங்கக்கூடும்.

விளையாட்டாளர்கள் தங்கும் கட்டிடத்தை தான் முதலில் பார்த்தேன்,நண்பர் அதில் செய்யப்பட்ட வேலைகளும் அதை எங்கிருந்து வரவழைத்தார்கள் அதன் சாதக பாதகங்களை விவரித்துக்கொண்டு இருக்கும் போது மேற் கூரையை பார்த்தேன்.அதன் Finishing அருமையாக இருக்கிறதே என்றேன்.
ஓ! அதுவா? இது தான் Hollow Core Slab என்றார்.இதை துபாயில் பல நிறுவனங்கள் செங்கல் மாதிரி போட்டு விற்கிறார்கள் என்றார்.ஆச்சரியமாக இருந்தது.நான் பார்த்த கூரை சுமார் 8.50 மீட்டர் நீளம்.இவ்வளவு Span இருக்கும் ஒரு இடத்தில் கான்கிரீட் கூரை போடனும் என்றால் நடுவில் ஒரு Beam வேண்டும் இல்லையென்றால் சிலாப் அதிக கணம் உள்ளதாக போடனும்.அதிக கணம் என்றால் அதற்கு தகுந்த கம்பி போடனும்.எந்த பொறியாளரும் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் ஏனென்றால் செலவு பிடிக்கக்கூடியது அதோடில்லாமல் அது சரியான கட்டுமான வேலையாக இருக்காது.
இவ்வளவு பெரிய Span யில் நடுவே ஒரு Beam கூட இல்லாமல் இருக்கும் இந்த Slab கணம் எவ்வளவு என்று கேட்டேன், அதற்கு 200 மி.மீட்டர் தான் என்றார் அதோடு இதன் உள்ளே வெறும் 8 அல்லது 9 கம்பிகள் மட்டுமே இருக்கிறது என்ற குண்டையும் போட்டார்.என்னால் நம்பவே முடியவில்லை. Slab அளவு 8.50 x1.2x0.2 மீட்டர், இதற்கு கம்பி வெறும் 9 தான்.படத்தை பாருங்கள்.தூணின் இரு பக்கத்திலும் Beam போட்டுவிட்டு அதன் மேல் இந்த Slab ஐ வைத்தால் முடிந்தது கூரை.

சில படங்கள் இணையத்தில் சுட்டவை..



நன்றி: கான்கிரீட் டெக்.



நன்றி:பிரிகாஸ்ட் ஒர்க்ஸ்



இதன் அனுகூலங்கள்.

1.Building கட்டுமானம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த வேலையை ஆரம்பித்துவிடலாம்.(Parellel Working), இதனால் நேரம் மிச்சமாகும்.
2.அருமையான Finishing அதனால் மேற்பூச்சு என்ற வேலையே இல்லை.
3.கம்பி கிடையாது அதனால் கம்பி வேலை என்று சொல்லப்படுகிற Bar Bending வேலை இருக்காது.
4.வேண்டிய அளவுக்கு செய்துகொள்ளலாம் என்பதால் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்கும்.
5.Erection அல்லது பொருத்தும் வேலை மிகவும் சுலபம் அதோடில்லாமல் குறுகிய காலத்தில் விரைவாக முடிக்கமுடியும்.
6.Form Work அல்லது செண்டரிங் என்ற வேலையே கிடையாது.
7.சிலாபின் மத்தியில் ஓட்டை இருப்பதால் மேலும் கீழும் Thermal Insulation கிடைக்கும்.
இன்னும் நிறைய இருக்கு.

பிரதிகூலங்கள்
அனுகூலங்கள் என்று இருந்தால் அதற்கு பிரதி என்று ஒன்று இருக்கும் அல்லவா!
1.இதை மேல் தூக்கிவைக்க பாரம் தூக்கி வேணும்.சென்னை மாதிரி குருகிய சாலையில் பாரம் தூக்கி நிறுத்த முடியாது.Tower Crane மூலம் இவ்வவளவு பாரம் தூக்க முடியுமா என்று தெரியவில்லை.
2.பெரிய பெரிய தொழிற்சாலைகளில் கடைசி நேர வேலையாக சில சமயம் துளை போட வேண்டிவரும் அது இதில் கஷ்டம்.
3.Slab களுக்கு இடையே உள்ள ஜாயிண்டை மூட தனி தொழிற்நுட்பம் தேவை.
4.Slab அளவுகளை நினைத்த நேரத்துக்கு மாற்ற முடியாது.
இன்னும் இருக்கலாம் அவ்விடத்தில் வேலை செய்தால் புரிபடும்.

கீழே உள்ள படங்கள்...முதலில் உள்ள படத்தில் சிகப்பு வட்டம் போட்டு காட்டியிருப்பது தான் கம்பியின் அளவு 4~6 MM இருக்கக்கூடும்.



மற்றொரு படம் அந்த சைட்டில் எடுத்தது.

இதில் சிலாபின் Finish ஐ பார்க்கலாம்,இதில் மேற்பூச்சு இல்லை.அதோடு மின்சார பைப்புகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி போகிறது என்றும் பார்க்கலாம்.



இதன் மூலம் எனக்கும்/உங்களுக்கும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவிய என் நண்பனுக்கு நன்றி.