Friday, May 07, 2021

அமானுஷ்ய நிகழ்வுகள்.

உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில்  எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத  நிலையில் வாழ்க்கையின்  அடுத்த நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருப்போம் . கொஞ்ச நாள் கழித்து அப்படியே அதுவும் மறந்திருக்கும் .காரணங்களை அலசினால் கிடைப்பது என்னவோ குழப்பம் தான் .

எனக்கு நடந்ததை சொல்கிறேன்.

என் நினைவுக்கு முதலில் வருவது என்னுடைய 20வது  வயது காலத்தில் நடந்தது. மும்பை மாமா வீட்டுக்கு போயிருந்தேன் . புது இடம் . இரவு படுக்கும் போது "கழிவறை  இங்கு  இருக்கு,குடி தண்ணீர்  இருக்கு" என்று சொல்லிவிட்டு யாரும் அழைப்புமணி அடித்தால் திறக்காதே என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். நல்ல தூக்கம்,எப்போது என்று நினைவில்லை ஆனால் அழைப்பு மணி அடித்தது போல் இருந்தது. எழுந்து பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன் . காலை சுமார் 5 மணி இருக்கும்,மாமா அலுவலகம் செல்வதற்காக எழுந்து குளித்துவிட்டு சாமிக்கு பூஜை செய்துகொண்டிருந்தார். மணி அடிக்கும் சத்தம் தூக்கத்தை கெடுக்க படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்துகொண்டிருந்தேன். நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உள் அறையில் இருந்து ஒரு வெளிச்சம் படு வேகத்தில் என்னை கடந்து பூட்டி இருக்கும் வாசற்கதவையும் கடந்து வெளியே போனது. நான் நிதானிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

இந்த வெளிச்சம் என்ன?அது எப்படி வந்தது?  .. புரியாத புதிர்.

ஒரு நிகழ்வு நடக்கப்போகும் தினத்துக்கு 2 மாதம் முன்பு , ஒரு மதிய வேளை சுமார் 2.30 இருக்கும் . பெற்றோர் இருக்கும் வீட்டுக்கு போகிறேன்.எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கும் நேரம்.கதவை தட்டியவுடன் அம்மா வந்து திறக்கிறார்.கதவுக்கு நேர் எதிரே ஒரு கழிவறை , கதவு திறந்திருக்கு ,ஏதோ ஒரு வெள்ளை உருவம் கையில் தாங்கு குச்சி வைத்துள்ளது அதே சமயத்தில் வேஷ்டியை சரி செய்துகொள்வது போல் தோன்றி மறைந்தது.அப்பா மற்றொரு அறையில் படுத்துக்கொண்டிருந்தார்.இருவர் மட்டுமே உள்ள வீட்டில் இது யார் புதியவர்? இது வரை யாரிடமும் சொன்னதில்லை, அப்படியே மறந்து போய்விட்டேன்.

நவம்பர்  2018 ,மருத்துவமனையில் அப்பா சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். ICU வில்  இருப்பதால் அவ்வப்போது தேவைப்படும் சமயத்தில் மட்டும் வீட்டுக்கு வந்து அம்மா செய்து  வைத்திருக்கும் உணவை எடுத்துப்போய் கொடுப்பேன். அன்று Discharge செய்யலாம் என்று சொன்ன மருத்துவர் தன் மனைவி (இவரும் ஒரு மருத்துவர் )ஒரு முறை பார்த்த பிறகு முடிவு செய்யலாம் என்றார். அவர் வருகைக்காக காத்திருந்தோம் .இதற்கிடையில் அப்பாவை பார்க்க வந்த மச்சினரிடம் ஓரளவு அடையாளம் கண்டுகொண்டு சைகையில் பதில் சொன்னார். மருத்துவர் வர  நேரமானதால் வீட்டுக்கு போய் இரவு சாப்பாட்டை எடுத்து வரலாம் என்று போனேன். வீடு முதல் மாடியில் . மேலே ஏறுவதற்கு முன்பு படிக்கு கீழே மறுபடியும் ஒரு உருவம் கையில் குச்சியுடன் ஏதோ குழப்பத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. சரியான நிகழ்வாக இல்லையே என்று யோசித்துக்கொண்டே மேலே போய் அம்மாவிடம் கஞ்சி  வாங்ககிக்கொண்டு மருத்துவ மனைக்கு  போனேன் . போகும் போதே பல முறை தொலைப் பேசி அழைப்பு வந்தது , எடுக்காமல் மருத்துவமனை  வாசலில் வண்டியை நிறுத்தினேன். என் அருகில் வந்த ஒருவர் என் அப்பா பெயரை சொல்லி அவருக்கு  நீங்கள்  உதவியாளரா? என்றார்.

"ஆமாம்"  என்றேன்.

"வரவேற்பறையில்  பல முறை கூப்பிட்டார்கள் " என்றார். சரி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு மேலே சென்றேன். காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்த மருத்துவர் அங்கு  நின்றிருந்தார். என்னவென்று கேட்டேன். பக்கத்தில் இருந்த மருத்துவரும் , செவிலியரும் அப்பாவுக்கு CPR செய்துகொண்டிருந்தார்கள். Monitor ஐ பார்த்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது.நெற்றி,வயறு பக்கம் மட்டும் கொஞ்சம் சூடு இருந்தது. ECG எடுத்து உறுதிப்படுத்தினார்கள்.

இப்போது அந்த நிழல் உருவங்கள் என்ன? யார் அது?உயிர் முடிவதற்கு முன்பே உடம்பை விட்டு வெளியே வருகிறதா ? என்னிடம் பதில் இல்லை.



                                                                என் தந்தை 


இதே சமயத்தில் என்னுடைய மனைவி கோயம்பேடுவில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தார் . மாலை 6 மணியாகிவிட்டது கார்த்திகை மாதம் வீட்டு முகப்பில் விளக்கு ஏற்றவேண்டும் ஆனால் ஏதோ அசதியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். TV வுக்கு அருகில் என்னுடைய பெற்றோர் மற்றும் மாமனார் & மாமியார் Photos தனித்தனியாக மாட்டி  இருக்கும் . என்னுடைய பெற்றோர் படத்தில் இருந்து ஏதோ ஒன்று அப்படியே நகர்ந்து போவது போல் தோன்றி  இருக்கு . அதை  அவர் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் நான் 7 மணிவாக்கில் தொலைபேசியில் விஷயத்தை சொன்னவுடன் தான் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கெல்லாம் காரண காரியம் நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை . சாவதற்கு முன்பே பல இடங்களில் பயணப்படுவது  எப்படி ?   


மீண்டும் ஒரு நிழல் உருவம் இம்முறை sofa வில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது . நான் காயவைத்த துணியை மடித்துக்கொண்டிருக்கேன். நன்றாக நிதானித்து பார்க்கிறேன். குனிந்த தலை, கொஞ்சம் நிறம் உள்ள மனிதர் . சுமார் 2 மாதம் கழித்து மற்றொரு மரணம்,நெருங்கிய சொந்தத்தில் இருந்து. வந்தது யார்?

ஒரு சில முறை யாரும் இருக்க மாட்டார்கள் ஆனால் என் மீது மெலிதாக மோதிய மாதிரி இருக்கும். மிக சமீபத்தில் ஒரு சிறிய தலையணையை மெத்தை மீது வீசுகிறேன் , அது நேரடியாக விழாமல் எதன் மீதோ பட்டு வேகம் குறைந்து விழுகிறது. இப்படி பல பல நிகழ்வுகள்.

அப்பா இறந்த மறு நாள்,சுடுகாட்டுக்கு கொண்டு போய் மந்திரம் சொல்லி நெஞ்சில் நெருப்பு வைத்து உள்ளே தள்ளிவிட்டார்கள். அவ்வப்போது கண்ணீர் முட்டினாலும் பெரிதாக தூக்கம் வெடிக்கவில்லை. உள்ளே எரிந்துகொண்டிருக்கிறார்  வெளியே சுவாமிகள் மந்திரம் சொல்லி என்னையும் சொல்லச்சொல்கிறார் . ஒரு சில மந்திரங்களுக்கு பிறகு என்னால் சொல்ல முடியவில்லை. கண்ணீர் கொட்டுகிறது ,என் முகம் என்னுடைய அப்பா போல் மாறுகிறது அதை என்னாலேயே பார்க்க முடிகிறது. நான் எங்கப்பாவாக மாறுகிறேன். வாத்தியார் என் நெஞ்சை தடவிக்கொடுத்து விட்டு கொஞ்ச நேர ஆசுவாசத்திற்கு பிறகு தொடர்ந்தார். திரும்ப திரும்ப யோசிக்கிறேன்,இப்படிப்பட்ட உணர்வு இதுவரை  எங்கும்   படித்ததில்லை, யாரும் சொல்லி கேட்டதில்லை இருந்தாலும் எப்படி வந்தது?

புரியாத புதிர். 








Tuesday, December 22, 2020

LED Backlight Tester.

 # LED Tester

# Backlight Tester

# மின்னனுவியல் 

எச்சரிக்கை : High Voltage. Don't try when you are not sure of . Shocking Hazard prevails.

இந்த மாதிரி ஒரு கருவியை நாமே செய்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் சுமார் 3 வாரங்களாக உள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தேவைப்படும் சாமான்கள் என்னவோ சில  தான் என்றாலும்  அது கை வசம் இல்லாததால் அதை வாங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் YouTube யில்  இருக்கும் பல வீடியோக்களை பார்த்து என்னுடைய புரிதலை மேம்படுத்திக்கொண்டிருந்தேன் . 

இது எதற்கு என்றால் , முக்கியமாக LED Lights (Including LED back light) வேலை செய்கிறதா இல்லையா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம் . இதற்கான Ready Made சாதனம் உள்ளது அது சுமார் ரூ 800 யில் இருந்து இருக்கிறது. பணம் கொடுத்து அப்படியே உபயோகிப்பது என்பது ஒருபுறம் இருந்தாலும் அதை நாமே செய்து அதை பரிசோதிக்கும் போது ஏற்படும் ஆனந்தம் ஒருபுறம் இருந்தாலும் அதன் வேலைத்  தன்மை மேலும் பல புரிதலுக்கு  வழிகளுக்கு வழிவிடக்கூடும் என்பதால் அதன் வழியே போனேன் .   


தேவையான சாமான்களின் பட்டியலுடன் வடபழனி மெர்சிக்கு போனேன் . ஒரு சில சாமான்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு வந்தேன். 

கீழே உள்ள மாதிரி செய்து பரிசோதித்தேன் முதலில் 42 v  கொடுத்தாலும் பிறகு ஏனோ வேலை செய்யவில்லை. பல முறை ஏதோ மாற்றி பார்த்தாலும் வெற்றி கிட்டவில்லை . 

Input 230V (AC) அதுவே Output = input*1.414 (DC) கிடைக்கவேண்டும் ஆனால்  கிடைக்கவில்லை . Input  கொடுத்துவிட்டு Bridge Rectifier இல் கிடைக்கும் வோல்ட்ஜ் பார்த்தால் அங்கு பிரச்சனை இருப்பது தெரிந்தது. ஒரு IN4007 வேலை செய்யவில்லை. அதை மாற்றிய பிறகும் வெற்றி கிட்டவில்லை. Capacitor மாற்றி பார்த்தேன் , ஹுகும் .. எங்கோ தப்பு, என்னவென்று தெரியவில்லை .   



பழைய மாடலை அப்படியே தூக்கி வைத்துவிட்டு புதிதாக செய்ய ஆரம்பித்தேன் . 



Bridge Rectifier வரை செய்துவிட்டு Main  Supply  கொடுத்துவிட்டு வெளிவரும் வோல்ட் ஐ கண்காணித்தேன், இப்போது சரியாக 301 வோல்ட் DC கொடுத்தது . மீதி Circuit முடித்துவிட்டு பல வித எல்சிடி விளக்குகளை சோதனை செய்தேன் . எல்லாம் சரியாக வேலை செய்தது. இது எல்லாவற்றையும் ஒரு பெட்டியில்  போட்டு  அதற்கென்று வாங்கிய உபகரணங்ககளை இணைத்து முழுவதும் செய்துமுடித்துவிட்டேன். இனி 230 v  AC மூலமாகவே எல்லாவித LCD களை பரிசோதித்துவிடலாம். 


இதன் தொடர்பில் பல காணொளிகள் youtube இல் உள்ளது.  

Disclaimer: Don't Try this without adequate knowledge.

Saturday, August 15, 2020

USB Light.

 என்னுடைய கணினியில் Keypad Lighting இல்லை. சில சமயங்களில் அதுவும் அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இக்குறை பெரிதாக தெரிந்தது. சந்தையில் USB light நூறு ரூபாய்க்கு கிடைத்தாலும் அதை வாங்குவது தள்ளிக்கொண்டே போனது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தரையில் ஒரு டப்பாவை பார்த்ததும் பொறி தட்டியது. மனைவியிடம் கேட்ட போது , தூக்கி போடவேண்டியது தான் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அடுத்து Big Shopper உடைந்த கைப்பிடி ,இதுவும் குப்பைக்கு என்று கிடந்ததை எடுத்துக்கொண்டேன். 

எப்போதோ வாங்கிய 4 V LED, அதையும் எடுத்துக்கொண்டேன். மடிக்கணினி USB யில் இருந்து ஏறக்குறைய 5 V கிடைக்கும் , மீதி ஒரு வோல்ட்யை குறைக்க தகுந்த Resister போட்டால் முடிந்தது. ஆனால் இதன் பயன்பாடு சில வினாடிகள் என்பதால் Resister இல்லாமல் அப்படியே இணைத்தேன். வேலை முடிந்தது. தேவைக்கு ஏற்ற USB விளக்கு தயராகிவிட்டது. 

ஒரு Slide Switch சும்மா கிடந்ததையும் உபயோகப் படுத்திக்கொண்டேன்.   

அழகாக இல்லாவிட்டாலும் அதன் பணியை செய்கிறது. 


Tuesday, March 17, 2020

Voltage Stabilizer.

எச்சரிக்கை: அனுபவம் மற்றும் தொழிற்சார் அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே.

இந்த ஸ்டிபிலைசேர் வாங்கி சுமார் 10~15 வருடம் இருக்கலாம்.மிகவும் நியாயமாகவே உழைத்து இருக்கிறது.அப்பொது வாங்கியபோது ரூ 600 என்று நினைவு.

கடந்த  சில நாட்களாக அதில் இருந்து " கொர்  கொர்" என்று சத்தம் வர ஆரம்பித்தது இருந்தது. நமக்கு தான் பிரித்து மேய்வது இஷ்டமான வேலை என்பதால் திறந்து பார்த்தேன், எரிந்த பாகங்கள் எதுவும் கண்ணில்படவில்லை . ரிப்பேர் என்று செய்யக்கூடிய எதுவும் இல்லாமல் இருந்தது. திறந்த மாதிரியே மூடி வைத்துவிட்டேன் . சரி, வோல்டேஜ் ஏற்ற இறக்கத்தில் தான் சத்தம் வருகிறதோ என்று விட்டுவிட்டேன்.இடையில் சத்தம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருந்தது.


இரண்டு நாட்களுக்கு முன்பு சுத்தமாக படுததுவிட்டது.இதற்கு மேலும் இதை உபயோகப்படுத்துவது உசிதமில்லை என்று முடிவெடுத்து புதிதாக வாங்க தேடிக்கொண்டிருந்தேன். YouTube இல் ஏதோ பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு வீடியோ கண்ணில் பட்டது . பல ஸ்டெபிலைசர்கள் வேலை செய்யாமல் போவதற்கு இந்த கேபிள் இணைப்புதான் காரணம் என்று சொல்லியிருந்தார்கள். நான் பிரித்து பார்த்தபோது அந்த கேபிளை வெளியே எடுக்க முடியும் என்றே தெரியாது.தெரிந்த போது எப்படி சும்மா இருப்பது ,திற  மறுபடியும் , பார்த்தால் அந்த இணைப்பு சரியாக இருந்தது. படம் கீழே .



மறுபடியும் புதிதாக வாங்க தேடுதல் தொடங்கியது. இடையில் வார இறுதி நாட்களாகிவிட்டது .

உள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம் திரும்ப உந்த மறுபடியும் பிரித்தேன். எல்லாம் சரி ஆனால் வேலை செய்யவில்லை .. என்ன என்ன என்று பார்க்கும் போது இருக்கும் 3 Relay இல் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே கண்ணில் பட்டிருந்தாலும் அதன் மேல் எனக்கு சந்தேகம் வரவில்லை. இந்த முறை பார்க்கும் போது அது மட்டும் ஏன்  வீங்கியிருக்கு என்று யோசித்த போது இவன் தான் கள்ளனாக இருக்க வேண்டும் என்று உள் மனது சொல்லியது.

அதை வெளியே எடுத்து மல்டி மீட்டரில் பரிசோதித்தபோது அது நிரூபணம் ஆனது. விலை என்னவென்று தேடியபோது ரூ  165 என்று ஒரு தளம் காட்டியது, இதுவே ஆக அதிகமானது. வாங்கி அது பிரச்சனை இல்லை என்றால் அது வேறு தெண்டம் . இப்படி பல கணக்குகள் போட்டு வாங்கி பார்த்துவிடலாம் என்று ரீச்சி தெருக்கு போய் விலை கேட்டால் ரூ 15 மட்டுமே .



சற்று முன் எல்லா வேலைகளையும் முடித்து மின் இணைப்பு கொடுத்தேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது,இது எத்தனை நாள் என்று பார்ப்போம்.

Thursday, August 15, 2019

பசு மஞ்சள் வைத்தியம்

# பசு மஞ்சள்
# தூக்கம்

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரிந்தது.அதன் பிறகு அதற்கு தேவையான மருந்துகள் விட்டு விட்டு எடுத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அதை பற்றி பெரிய கவலை எதுவும் கொள்ளாமல்.

2013 யில் நியாண்டர் செல்வன் உடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு முயற்சியில் இறங்கினேன்.நல்ல முன்னேற்றம் தெரிய அப்படியே உணவு வழக்கமும் மாறிவிட்டது.இதன் தொடர்சியில் வைட்டமின் டி குறைவாக இருந்தது, தெரிந்து அதற்கான முயற்சியில் இறங்கினேன் ஆனால் ஏறுவதுக்கு பதில் அளவுகள் இறங்கியது.அதன் காரணம் ஆராயப்பட்ட போது உடல் வைட்டமினை கிரகிக்கும் தன்மையை குறைவாக இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படும் என்றும் அதற்கு பசு மஞ்சள் தெரபி எடுத்தால் ஓரளவு முன்னேற்றம் தெரியலாம் என்று சொல்லப்பட்டது.பசு மஞ்சள் கிடைப்பதில் இருந்த கஷ்டத்தில் அது தள்ளிக்கொண்டே போனது.

கொஞ்ச நாட்களாகவே என் மனைவிக்கு திடிரென்று தூக்க பிரச்சனை .நான் நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கும் போது இவர் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு தூக்கம் வரும் வரை காத்திருப்பார்.என்னென்னவோ வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் இருந்தது.என்னுடைய பேலியோவுக்கு தகுந்த மாதிரி சமைத்து கொடுத்திருந்தாலும் அவருக்கு அதில் ஆர்வம் இல்லை.

திரு திருமூர்த்தி சத்தியமங்கலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருபவர். முகநூலில்  அதில் வரும் பிரச்சனைகள் மற்றும் பல மேம்பாடுகளை அழகாக சொல்லி வருகிறார்.சமீபகாலமாக சந்தைபடுத்துவதிலிலும் வெற்றி கண்டுவருகிறார்.அவரிடம் பசு மஞ்சள் விறபனைக்கு இருக்கிறது என்ற விபரம் தெரிந்தவுடன் பேசி ஒரு 2 கிலோ வாங்கினேன்.

முதலில் ஒரு வாரத்துக்கு தேவையான கிழங்கை மாத்திரம் எடுத்து தோல் உரித்து பேஸ்ட் செய்து சாப்பிட்டோம்.நான் மட்டுமே சாப்பிட என் மனைவியிடம் நீயும் சாப்பிட்டுப்பார் ஒரு வேளை தலைவலி / தூக்கம் போனாலும் போகும் என்றேன்.அதிசியமாக சாப்பிட்ட முதல் வாரத்திலேயே நல்ல ஆழ்நத தூக்கம் தூங்க ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது.ஆனால் தலைவலிக்கு இது மருந்தாகவில்லை.வாங்கிய 2 கிலோ கிழங்கை பிரிஜ்யில் வைத்து உபயோகப்படுத்தி வருகிறோம்.வேறு ஒரு இடத்தில் வாங்கிய பசு மஞ்சள் சிறிது நாளிலே தண்ணீர் சத்தை இழந்து வீணாகிவிட்டது ஆனால் திருமூர்த்தியிடம் வாங்கிய கிழங்கு சும்மா "கின்" என்று இருந்தது.

பசு மஞ்சள் தெரபி எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கவும்.

தூக்க பிரச்சனை உள்ளவர்கள் முயலலாம்.

Sunday, August 11, 2019

வாரிசு சான்றிதழ்.

# வாரிசு சான்றிதழ்
# Legal-heir

இதெற்கெல்லாம் நமக்கு தேவைப்படாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் காலம் போடும் கோலத்துக்கு யாரும் தப்பிக்க முடியாதே?

85 வயதை தாண்டிய தந்தை, 28 வருடங்களாக சர்கரை குறைபாடுடன் மற்றும் சில உபாதைகளுடன் நாட்களை தள்ளிக்கொண்டிருந்தார்.2013-14 காலகட்டத்தில் திரு செல்வன் எழுதிய பேலியோ புத்தகத்தை கொடுத்தேன் ஆனால் அவரை மாற்ற முயற்சிக்கவில்லை ஏனென்றால் அவரைப்பற்றி ஒரளவு தெரியும் என்பதால். படிப்பதில் ஆர்வம் என்பதால் முழு புத்தகத்தையும் படித்தபிறகு “ என்னடா! இவர் மேல்நாட்டு உணவு முறையை சார்ந்து எழுதியிருக்கார், இங்குள்ள நிலமைக்கு இது ஒத்துவராது” என்று ஒதுக்கிவிட்டார். இவ்வளவு வயதுக்கு பிறகு பெரிய முன்னேற்றம் இருக்காது என்பதால் அவரை கட்டாயப்படுத்தவில்லை .எந்த ஒரு விஷயமும் நாம் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு செய்யாவிட்டால் அதனுடன் ஒத்துபோக முடியாது.அதிலிருந்து தப்பிக்கவே மனது முயலும்.

இப்படியே போய்கொண்டிருந்த காலத்தில் போன வருடம் ஜூலை/ ஆகஸ்ட் மாதங்களில் உடல்நிலை ஒத்துழைக்காமல் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதும்  வருவதுமாக இருந்தோம்.நெஞ்சு கிட்ட வலி என்பார், ECG எடுத்து பார்த்தால் ஒன்றும் இருக்காது, இப்படியே பல முறை ஆனால் கடைசி வரை எதனால் அந்த வலி என்பதே தெரியாமல் நவம்பர் மாதம் போய் சேர்ந்துவிட்டார்.போவதற்கு முன்பு வரை நான் பக்கத்திலே இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தவர் சிறிது சிறிதாக நினைவு தப்பி நான் கஞ்சி எடுக்க வீட்டுக்கு போன நேரத்தில் மாரடைப்பு வந்து உயிர் பிரிந்துவிட்டது. நான் மருத்துவமனைக்கு திரும்பும் போது மருத்துவரும்,அங்கிருந்த செவிலியரும் செயற்கை சுவாசத்துக்காக CPR செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் முடியவில்லை. நான் அங்கு போவதற்கு முன்பே உயிர் போயிருக்க கூடும்.

காரியங்கள் ஒவ்வொன்றாக முடிய, மிச்ச நேரத்தில் அவருடைய நிதிநிலையை ஆராய்ந்த போது அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கி புத்தகங்களை  ஆராய்ந்துகொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களாகவே இந்த வேலையெல்லாம் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

முதலில் அவருடைய ஓய்வூதிய ஊதியத்தை மனைவி பெயருக்கு மாற்றவேண்டும் அதற்கான வேலையை ஆரம்பிக்கும் போது தான் போது தான் ஒவ்வொன்றாக புரிந்தது.முதலில் இறப்பு  சான்றிதழ், இதை நான் அவர் இறந்த மருத்துவமனையில் கேட்ட பொது தான் அவர்களே முழித்துகொண்டு தேவையான விவரங்களை கேட்டார்கள்.அது ஒரு 1 வாரத்தில் வந்துவிட்டது.

அஞ்சல் மற்றும் வங்கி கணக்கில் ஒரு கணக்கில் மட்டும் Nominee என்று யாருடைய பெயரும் போடாமல் இருப்பது தெரிந்தது.மற்ற கணக்கில் எல்லாம் nominee இருக்கும் பொது இது மட்டும் எப்படி இல்லாமல் போனது என்பது இதுவரை புரியாத புதிர்.இத்தனைக்கும் பலருக்கும் இது பற்றி ஆலோசனை சொன்னவர் தன் கணக்கில் எப்படி விட்டார் என்று தெரியவில்லை.சரி, அதை வாங்க என்ன செய்ய வேண்டும் என்ற விதிகளை கேட்ட போது முதலில் வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றார்கள்.அதற்கு எப்படி எங்கு செல்ல வேண்டும் என்று கூகிளிடமும் மற்றும் பலரிடமும் கேட்டதில் , முகவர்கள் சுமார் 3௦௦௦ என்று ஆரம்பித்தார்கள்.முகநூலில் ஒரு குழுமத்தில் கேட்ட போதுஒரு சிறிய பொறி கிடைத்தது.ஆதாவது வேண்டிய அனைத்து Documents ஐ எடுத்துக்கொண்டு அரசாங்க E centre க்கு போய் ரூ 60 கொடுத்து அனைத்தையும் Scan செய்து apply செய்ய வேண்டும். இது தான் முதல் படி. அதற்கான எண் கொடுக்கப்படும் .இனி எல்லாமே இணையம் மூலம் என்று சொல்லப்பட்டாலும் நீங்கள் வருடிய அனைத்து documents ஐயும் உங்கள் பகுதி கிராம நிர்வாகியிடம் கொடுக்க வேண்டும்.அவர் ஒரு நாள் குறிப்பிட்டு அன்று வீட்டுக்கு வந்துபார்த்த பிறகு அடுத்த நிலைக்கு அனுப்புவார்.என் நிலையில் VAO Strike மற்றும் தேர்தல் வந்ததால் கிணற்றில் போட்ட கல் போல் இருந்தது.

சில மாதங்கள் கடந்த நிலையில் CM cell க்கு ஒரு விண்ணப்பம் மற்றும் தாசில்தாருக்கு ஒரு கடிதம் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது.எவ்வித பதிலும் இல்லாத நிலையில் ஒரு நாள் அந்த VAO வே அலைபேசியில் கூப்பிட்டார். அனைத்து Documents ஐயும் எடுத்துக்கொண்டு அவர் அலுவலகத்துக்கு வரச்சொன்னார்.எல்லாம் பார்த்த பிறகு அடுத்த நிலைக்கு போனது.ஒரு 10 கழித்து அலைபேசிக்கு ஒரு விவரம் வந்தது ஆதாவது என்னுடைய வாரிசு சான்றிதழ் விண்ணப்பம் ஒரு குறிப்பிட்ட ஆவணம் இல்லாததால் நிராகரிக்கபடுவதாக.என்ன ஆவணம் என்று விசாரித்தால் இறந்த என் அப்பாவின் அம்மா இறப்பு சான்றிதழ் தான் ஆவணம்.முதலிலேயே அந்த ஆவணம் இல்லை என்று சொல்லிவிட்டோம் இருந்தாலும் இப்போது கேட்கிறார்கள்.இறந்தவரின் மனைவி ஒரு உறுதி சான்றிதழ் கொடுத்தால் போதும் என்றார்கள்.அதை கொடுத்து அதை மறுபடியும் அதே E centre க்கு போய் வருடி ஏற்றிவிட்டார்கள்.ஒரு வழியாக எல்லா காரியங்களும் முடிந்தது.

VAO-RI-Thasildhar மூலமாக ஒருவழியாக சான்றிதழ் கிடைத்தது. இந்த வழிமுறைக்காக அரசாங்கம்  நிர்ணயம் செய்திருக்க கால அளவு என்னவோ பதினைத்து நாட்கள் தான் இருந்தாலும் பல தடைகளை தாண்டி கையில் கிடைக்க பல மாதங்களாகிவிடுகிறது.சில ஆவணங்கள் தேவையை முதலிலேயே கட்டாயப்படுத்திவிட்டால் அனாவசிய அலைச்சலை தவிர்க்கலாம்.

எல்லாம் சரி,அந்த CM Cell  மற்றும் தாசில்தாருக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வந்ததா? வந்தது. CM  Cell : சார் உங்க complaint  பல்லாவரம் பகுதிக்கு போய்விட்டது ,உங்களுக்கு வாரிசு சான்றிதழ் கிடைத்துவிட்டதா? என்றார்

நான் : கிடைத்துவிட்டது .

அடுத்து தாசில்தார் அலுவலகத்தில் இருந்து .சான்றிதழ் கிடைத்துவிட்ட விபரத்தை சொன்னேன்.

அரசாங்க நடை முறை வேலை  செய்கிறது ஆனால் பல மாதங்கள் கடந்த பிறகு.

Monday, September 10, 2018

Amplify TV Speakers

தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரியமாக உள்ளது.ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் ஒன்று வாங்கி அதை தூக்கி எரிய வேண்டிய நிலையில் இருந்த வானொலி ஒலிப்பானுடன் இணைத்து இன்றுவரை மடிக்கனினிக்காக உபயோகித்து வருகிறேன்.சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் கவலைப்படும் அளவுக்கு இல்லாததால், ஓடிக்கொண்டு இருக்கிறது.

அந்த Audio Amplifier இது தான். PAM 8403. இதன் விலை ரூ 90.

மின்னணுவியல் தெரிந்தவர்களுக்கு இதில் கொடுக்க வேண்டிய இணைப்புகள் ஜுஜுபி வேலை.அதாவது கிழே வலது புறத்தில் 5 வோல்ட் மின்சாரம் கொடுக்க வேண்டும்.இடது புறம் ஆடியோ பிளஸ்,கிரவுண்ட் மற்றும் மைனஸ்.மேற்புறத்தில் ஸ்பீக்கருக்கான இணைப்புகள்.அதிகபட்சமாக 3W ஸ்பீக்கர் வரை வேலை செய்யுமாம்.

எங்க வீட்டு தொலைகாட்சிக்கு முன்னாடி ஒரு கண்ணாடி கதவு இருக்கு. இது கொஞ்சம் பழைய மாடல் என்றாலும் நிறைய தூசி உள்ளே போகாமல் இருக்கும் என்பதால் அதை கழற்றாமல் விட்டுவிட்டோம்.ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வேறு பிரச்சனை வராமலா இருக்கும்? விட்டுக்கார அம்மணி, சில சேனல்களில் வரும் சத்தம் சரியாகவே இல்லை என்றும்,ஏதாவது வழி இருக்கா என்று பார்க்குமாறு சொல்லியிருந்தார்.ஒரே வழி, கண்ணாடி கதவை தூக்கவேண்டியது தான் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.அதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் அப்படியே ஓடிக்கொண்டு இருந்தது.இதற்கிடையில் பல நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்த Hi-Fi கண்ணை உறுத்திக்கொண்டு இருந்தது.ஓரளவு மனதில் ஓடிய எண்ணங்களை வைத்து வேலையை ஆரம்பித்தேன்.

டிவி யில் இருந்து ஆடியோ வெளியேறும் வழியில் இருந்து ஆடியோ சமிக்கைகளை எடுக்க வேண்டியது அதை இந்த Module  வழியாக பெருக்கி ஸ்பீக்கருக்கு கொடுக்கணும். ஸ்பீக்கரை வெளியில் வைத்துவிடவேண்டும், அவ்வளவு தான்.5 வோல்ட்க்கு ஏதாவது ஒரு கைப்பேசி அடாப்டரை உபயோகித்துக்கொள்ளவேண்டும். முடிந்தது.



முதலில் RCA port இல் இருந்து சமிக்கைகளை எடுத்து ஸ்பீக்கருக்கு கொடுத்து பார்த்தபோது வெறும் "டூர் " என்ற சப்தம் மட்டுமே வந்தது.ஒவ்வொன்றையும் சரி பார்த்த பொது கேபிள் இணைப்பில் ஏதோ பிரச்சனை என்பது புரிந்தது.சரி இதை இப்போது டிவியில் இணைக்கவேண்டாம், முதலில் கைப்பேசியில் இணைப்போம் என்று முடிவு செய்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்தேன்.கைப்பேசியில் போட்ட பாட்டு அட்டகாசமாக ஓடியது.RCA  கேபிளின் இணைப்புகளை இணையத்தில் தேடி படித்த பொது நான் செய்த தவறு தெரிந்தது.கிழே உள்ள படத்தில் இருக்கும் கேபிள் என்னிடம் இருந்ததால் வேலை சுலபமாக முடிந்தது.

இந்த பெட்டி சும்மாக கிடந்ததால் அதனுள் Module ஐ வைத்து மூடிவிட்டேன்.வெப்பம் வரக்கூடிய சாத்திய கூறுகள் இல்லாததால் பெட்டி ஒரு பிரச்சனையாக இருக்காது.

எல்லாம் முடிந்து இணைப்புகளை கொடுத்து டிவி செட்டிங்கில் ஆடியோவை வெளி கனெக்ஷனுக்கு மாற்றிவிட்டால் முடிந்தது வேலை.

ஆடியோ இப்போது சும்மா "கும்" என்று இருக்கு.